Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வீரம் என்றால் என்ன தெரியுமா? போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #3

விடிந்தால், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதை இந்நேரத்தில் வாக்காளர்கள் முடிவு செய்திருக்கக் கூடும்.

எனினும்,
தேர்தல் ஜனநாயகத்தின்
பெருமதிப்பிற்குரிய வாக்காளர்களிடம்
கொஞ்சம் உரையாட விரும்பியே
இந்த பதிவை எழுதுகிறேன்.

 

களத்தில் நாம் சந்திக்கும்
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிறம் உண்டு.
எத்தனை நிறங்கள் இருந்தாலும்,
அடிப்படையில் அவை ஒரே
வண்ணத்தின் நிறப்பிரிகைகள்தான்.

 

அதாவது,
99 விழுக்காடு கட்சிகள்
முதலாளிய வர்க்கத்தினருக்கு
ஆதரவானவை. உழைக்கும்
வர்க்கத்திற்காக பேசக்கூடியவை
எப்போதும் பொதுவுடைமைக்
கட்சிகளே.

 

தமிழகத்தைப் பொருத்தவரை
பொதுவுடைமைக் கட்சிகளும்
கூட்டணி விசுவாசம் என்ற பெயரில்
தன் சுயத்தை எப்போதோ தொலைத்துவிட்டு,
முதலாளிய பாதையை நோக்கிச் சென்று
கொண்டிருக்கிறது. பொதுவுடைமைக்
கட்சிகளும் பணம் பெற்றுக்கொண்டு,
வார்டு கவுன்சிலர் சீட் தரும்
கேவலமான நிலை ஏற்பட்டுள்ளது.

 

தேர்தல்களில் எப்போதும்
வாக்குகளை ‘வாங்கும்’ சக்தி கொண்ட
வேட்பாளர்களுக்கே வாய்ப்பு
அளிக்கப்படுகிறது. ஒருபோதும்
குப்பனுக்கோ சுப்பனுக்கோ
சீட் தருவதில்லை. காரணம்,
அவர்களால் ஒருபோதும்
வாக்காளர்களுக்கும் பணம்
கொடுக்க முடியாது.
வாக்குச்சாவடிகளுக்கு வாகனம்
வைத்து அழைத்து வர இயலாது.

 

நாம் நம்முடைய
‘புதிய அகராதி’ வாசகர்களுக்கு
ஏற்கனவே தெளிவுபடுத்தி
இருக்கிறோம்.

 

சுரண்டும் வர்க்கத்திற்கும்,
சுரண்டப்படும் உழைக்கும்
வர்க்கத்தினருக்கும் எதிரான போரில்
எப்போதும் முதலாளிகளே
வெற்றி பெறுகிறார்கள்.
அவர்களின் கைப்பாவைகள்தான்
இந்த அரசாங்கமும், அதன் தன்னாட்சி
அமைப்பு என்று சொல்லிக்கொள்ளும்
நீதிமன்றமும். இவர்களின்
கண்ணசைவுக்கு ஏற்ப ஆடும்
சீருடை குண்டர்கள்தான்
காவல்துறையினரும், சிறைத்துறையினரும்.

 

இப்படியான அதிகார அமைப்பால்
உழைக்கும் மக்களுக்கு ஒருபோதும்
நியாயம் கிடைத்து விட முடியாது.
அவர்கள் தங்களுக்கான அரசை
கட்டமைக்க இன்னும் போராட
வேண்டியதிருக்கிறது.

 

இந்த இயலாமையைத்தான்
முதலாளிய அரசியல் கட்சிகள்
லாவகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.
தேர்தல் காலங்களில் அவர்களை
பணத்தால் அடிக்கத் தொடங்கி விட்டன.

 

நகர்ப்புற உள்ளாட்சித்
தேர்தலிலேயே திமுக, அதிமுக கட்சிகள்
வாக்காளர்களுக்கு 1000 ரூபாய் வரை
பட்டுவாடா செய்கின்றனர்.
ராசிபுரம் நகராட்சியில் சில வார்டுகளில்
திமுக தரப்பில் வாக்காளர்களுக்கு
5000 ரூபாய் பட்டுவாடா
செய்யப்பட்டுள்ளன.

 

ஆளும்கட்சியும், ஆண்ட கட்சியும் போட்டிப்போட்டு பணத்தை வாரி இறைக்கும்போது, சாதாரண கூலிகள் இத்தொகையை பெரிய வருவாயாகப் பார்க்கின்றனர். அவர்கள், அரசியல் கட்சிகளிடம் உரிமையுடன் சண்டை போட்டு வாக்குக்கு பணம் பெறும் அவல நிலையும் உள்ளது.

 

அனைத்து அச்சு ஊடகங்களும் தேர்தல் காலங்களில் ‘பெய்டு நியூஸ்’ முறையை பின்பற்றுகின்றன. விளம்பரங்களாக கொடுத்தால், அவை தேர்தல் செலவுக்கணக்கில் ஏறி விடும் என்பதால் பத்திரிகை நிறுவனங்களே இப்படியான உத்தியை சொல்லிக்கொடுத்து, முடிந்தவரை அரசியல் கட்சிகளிடம் ஆதாயம் பார்த்து விடுகின்றன. காட்சி ஊடகங்களும் இதே உத்தியைப் பின்பற்றுகின்றன.

 

பத்திரிகைகளில் 15க்கு 12 செ.மீ. அளவில் வேட்பாளர்களின் படத்துடன் செய்தி வெளியிட, குறைந்தபட்சம் 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகின்றன.

 

பத்திரிகை விளம்பரங்கள், செய்திகளைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் பெயரளவுக்கு தனிப்பிரிவு செயல்படுகிறது. இதுவரை, வேட்பாளரின் தேர்தல் செலவுக்கணக்கில் ‘பெய்டு நியூஸ்’களுக்கான செலவுகள் கணக்கில் கொள்ளப்பட்டதே இல்லை. கேட்டால், பெய்டு நியூஸ் என்பதற்கான ரசீதுகள் இல்லை என்றும், போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் சொல்வார்கள். கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?.

 

இன்னோர் உண்மையைச் சொன்னால் சிரிப்பீர்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சிகளில் போட்டியிடும் வார்டு கவுன்சிலர் வேட்பாளர் ஒருவர் அதிகபட்சமாக 85 ஆயிரம் (சென்னையாக இருந்தால் 90 ஆயிரம்) மட்டுமே செலவிட முடியும் என்கிறது தேர்தல் ஆணையம். இது, ஆகப்பெரிய நகைப்புக்குரிய அறிவிப்பு.

 

இரண்டாம் நிலை, முதல் நிலை நகராட்சிகளில் அதிகபட்சம் 34 ஆயிரம் வரையிலும், மூன்றாம் நிலை மற்றும் பேரூராட்சிகளில் 17 ஆயிரம் ரூபாய் வரையிலும் செலவிடலாம் என்கிறது மாநிலத் தேர்தல் ஆணையம்.

 

உதாரணமாக,
சேலம் மாநகராட்சியில் போட்டியிடும்
திமுக, அதிமுக வேட்பாளர்கள்
ஒவ்வொரு வார்டிலும் 80 விழுக்காடு
வாக்காளர்களுக்கு பணம்
பட்டுவாடா செய்துள்ளனர்.

 

அதிமுக, எல்லா வார்டிலும்
தலா 500 ரூபாய் கையூட்டு
கொடுத்திருக்கிறது. ஆளுங்கட்சியான
திமுக, 500 ரூபாயும், போட்டி கடுமையாக
இருக்கும் இடங்களில் 1000 ரூபாயும்
கையூட்டு வழங்கி இருக்கிறது.

 

ஒரு கவுன்சிலர் வேட்பாளர்,
15 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட
வார்டில் சுமார் 10 ஆயிரம் வாக்காளர்களுக்கு
தலா 1000 ரூபாய் பட்டுவாடா செய்கிறார்
எனில் அதற்கே அவர் ஒரு கோடி ரூபாய்
செலவு செய்ய நேரிடுகிறது.
இதில் 50 விழுக்காடு பங்களிப்புத்
தொகையை அந்தந்த கட்சித் தலைமையே
கொடுத்து விடுகிறது.

 

தவிர,
பரப்புரை நடந்த ஒவ்வொரு நாளிலும்
வேட்பாளருடன் கொடி பிடித்துச் செல்லும்
தொண்டர்களுக்கு உணவு, குடிநீர்
வழங்கியது போக, தினமும் 300 முதல்
500 வரை கூலி, மதுபானங்கள் செலவு என
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம்
முதல் 50 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.
இவை தவிர, வாக்குச்சாவடி
முகவர்களுக்கான செலவும் உண்டு.

 

ஆக,
சேலம் போன்ற மூன்றாம் நிலை
மாநகராட்சிகளிலேயே கவுன்சிலர் பதவிக்கு
போட்டியிடும் ஒருவர், 30 லட்சம் முதல்
ஒரு கோடி ரூபாய் வரை தேர்தல்
பட்ஜெட் ஒதுக்க வேண்டியதுள்ளது.

 

ஆனால் மாநிலத் தேர்தல் ஆணையமோ,
வேற்று கிரகத்தில் இருந்து வந்தது போல
மாநகராட்சிகளில் போட்டியிடும்
வேட்பாளர்கள் அதிகபட்சம் 85 ஆயிரம்
வரை மட்டுமே செலவு செய்யலாம் என்கிறது.

 

யதார்த்தத்தில் என்ன செலவாகிறது?
எப்படியெல்லாம் செலவிடப்படுகிறது?
என்பதெல்லாம் மாநிலத்
தேர்தல் ஆணையம், தேர்தல்
அதிகாரிகளாக உள்ள
மாவட்ட ஆட்சியர்கள்,
மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள்,
நீதிமன்றங்கள், காவல்துறையினர்
என எல்லோருக்கும் தெரியும்.

 

ஆனால் வெளிப்படையான
நிர்வாகம், தூய்மையான ஆட்சி என்பவர்கள்
இதைப்பற்றி எல்லாம் கிஞ்சித்தும்
கண்டுகொள்ள மாட்டார்கள்.
புனிதர் வேடம் தரிக்கும்
பொதுவுடைமைவாதிகள்,
விசுவாச ஜெபம் செய்யும் சிறுத்தைகள்,
புலிகளைக் கொண்ட கட்சிகள் கூட
வாயைத் திறப்பதில்லை.
காரணம் கட்சிகள் முதல் அரசு,
அதன் அங்கங்கள், நீதிமன்றங்கள் வரை
எல்லோருமே திருடர்கள்தான்.
ரகசிய கூட்டாளிகள்தான்.

 

கடந்த தேர்தல் வரை நடைமுறையில்
இருந்த நோட்டா பொத்தானை
இவிஎம் இயந்திரத்தில் இருந்து
இந்தமுறை அகற்றி இருக்கிறது
தேர்தல் ஆணையம். இதைப்பற்றி
யாரிடம் கருத்து கேட்டு, இந்த
முடிவை எடுத்துள்ளது?

 

அரசுகள் எப்போதும்
அரசு ஊழியர்களின் நலன்களை
காக்கவே முன்னுரிமை அளிக்கின்றன.
உழைக்கும் வர்க்கத்தை ஒப்புக்குத்தான்
கண்டுகொள்கின்றன.

 

பணவீக்கம், விலைவாசி உயர்வுக்காக
அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு
ஒருமுறை டி.ஏ., எனப்படும் பஞ்சப்படியை
உயர்த்தும் அரசுகள், அதே பணவீக்கமும்,
விலைவாசி உயர்வும் சாமானியனையும்
பாதிக்கும் என்று ஏன் சிந்திப்பதில்லை?

 

அரசு சலுகைகள் பெற குடும்பத்தின்
ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய் என்று
அரசு வரையறை செய்திருந்தால்,
அதன் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு
டி.ஏ., உயர்த்தப்படும் போதெல்லாம்
உழைக்கும் வர்க்கத்தினருக்கும்
டி.ஏ., வழங்க வேண்டும்.

 

ஆனால், அரசே குற்றச்செயல்களில்
ஈடுபடும்போது அதில் அரசு ஊழியர்களையும்
ஈடுபடுத்திக் கொள்வதால்,
அதற்கு நன்றிக்கடனாக அவர்களுக்கு
ஜலதோஷம் பிடிக்காமல்
பார்த்துக் கொள்கிறது.

 

தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள்
தேநீர் போட்டும், வடை, பஜ்ஜி சுட்டும்
வாக்கு சேகரிக்கும் கோமாளித்தனங்களும்
அரங்கேறின. சில இடங்களில்
குழந்தைகளை குளிப்பாட்டிவிட்டும் கூட
வாக்கு சேகரித்த கேலிக்கூத்துகளும்
நடந்தன.

 

ஒருவர் பஜ்ஜி சுட்டு எப்படி
வாக்கு சேகரிக்க முடியும்?
அவர் பஜ்ஜி வியாபாரம்தானே
செய்திருக்க முடியும்? ஊடக கோமாளிகளின்
சாட்டைக்கேற்ப இத்தகைய கூத்துகளில்
அரசியல் கட்சியினரும் ஆடத்தொடங்கி
விட்டனர். அதுதான் நடந்திருக்கிறது.

 

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு
அந்த நபர் மீண்டும் கடை கடையாகச் சென்று
பஜ்ஜி சுடுவாரா? வாக்களித்த மக்களின்
கால்களில் விழுவாரா? நன்றி சொல்ல
வருவதே அபூர்வம்.

 

இத்தகைய கேடுகெட்ட, நாடகவாதிகள் மற்றும் சுரண்டல் பேர்வழிகளுக்கா உங்கள் வாக்கு? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

கூட்டணி இல்லாமல், தனித்து களம் காண்பதுதான் உண்மையான வீரமாக இருக்க முடியும்.

 

வாக்காளர்கள், அரசியல் கட்சிகளிடம் கையூட்டு பெற்றிருந்தாலும் பரவாயில்லை; புதிய சித்தாந்தத்தை முன்வைக்கும் தனித்துப் போட்டியிடும் கட்சிகள் அல்லது சுயேச்சைகளுக்கு வாக்கு செலுத்துவதன் மூலமே தேர்தல் ஜனநாயகத்தை ஓரளவுக்கேனும் காப்பாற்ற முடியும்.

 

தேர்தல் ஜனநாயகத்தில் ஊழலை முதலில் கட்டுப்படுத்துவோம். சுயேச்சைகளும், தனித்துக் களம் காணும் கட்சிகளுக்கும் கிடைக்கும் தொடர் வெற்றிகள், காலப்போக்கில் தேர்தல் ஜனநாயகத்தில் நிலவும் ஊழல்களை அடியோடு ஒழித்துக் கட்டி விடும் என நம்புவோம். இதில் உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும்.

 

– பேனாக்காரன்