Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள்! பட்டமளிப்பு விழாவில் நீதிபதி அறிவுரை!!

 

”உங்களை யாரோடும் ஒப்பிடவோ, யாரைப் போலவும் இருக்க வேண்டும் என்றோ முயற்சிக்க வேண்டாம்; ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்,” என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ச.ஜெகதீசன் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

 

சேலம் பெரியார் பல்கலையில் செவ்வாய்க்கிழமை (நவ. 27, 2018) நடந்த பதினெட்டாவது பட்டமளிப்பு விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.

 

130 பேருக்கு தங்கப்பதக்கம்:

பல்கலை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 130 மாணவ, மாணவிகளுக்கு வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் தங்கப்பதக்கம் வழங்கினார். பல்வேறு துறைகளில் பிஹெச்.டி. ஆய்வை முடித்த 130 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கி, பாராட்டினார்.

 

பெரியார் பல்கலை மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்கலையில் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 49534 பேருக்கு பட்டம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

 

‘ஒயிட் காலர்’ மோகம்:

உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ச.ஜெகதீசன் பட்டமளிப்பு உரையாற்றினார். அவர் பேசியது:

 

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை என்ற பிரச்னை இல்லை. வேலை செய்ய விரும்பாதவர்கள்தான் வேலைவாய்ப்பு இல்லை என்று பேசி வருகின்றனர். எல்லோருமே இங்கே, நிறுவனத்தின் தலைவராக வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றனர்.

 

ஒவ்வொருவரும் ‘ஒயிட் காலர்’ எனப்படும் சட்டை கசங்காமல் செய்யும் வேலைகளையே விரும்புகின்றனர். அந்த எண்ணம்தான், வேலைவாய்ப்பின்மைக்கு முக்கிய காரணம்.

 

வாழ்க்கை முழுவதும் நமக்கு பொறுமை அவசியமாகிறது. நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காதபோது, கிடைத்ததைக் கொண்டு திருப்தி கொள்ளுங்கள். அதற்காக, நீங்கள் உயர்ந்த நிலையை அடைய முயற்சிக்கவே கூடாது என்று சொல்லவில்லை.

 

பல நேரங்களில் நமக்கு உரிய அங்கீகாரம் உரிய காலத்தில் கிடைக்காமல் போகலாம். அதற்காக காத்திருப்பது அவசியம். அதுவரை அந்த குறிப்பிட்ட துறைகளில் நாம் அனுபவங்களையும் நிபுணத்துவத்தையும் வளர்த்துக் கொண்டே இருந்தோமானால், நிச்சயமாக நமக்கான அங்கீகாரம் ஒருநாள் கிடைத்தே தீரும்.

 

நேர்மறை சிந்தனை:

எப்போதும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்படி வளர்த்துக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, ஒருபோதும் எதிர்மறை சிந்தனைகளை ஊக்குவிக்காதீர்கள். நீங்கள் மட்டுமே இந்த உலகத்தில் தோல்விகளைச் சந்திப்பதாக கருதி சோர்ந்து விட வேண்டாம். நம்பிக்கையோடு இருந்தால், எதிர்பார்க்கும் எல்லாமே கிடைத்துவிடும்.

 

வலியும், மகிழ்ச்சியும் உங்களை எப்படி பயன்படுத்திக் கொள்கிறது என்பதற்குப் பதிலாக அவற்றை நீங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது.

 

போலி மதவாதிகள்:

 

இன்று மதத்தலைவர்களாக சொல்லிக்கொள்பவர்களில் பலரும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பதில்லை. சில அரசியல் தலைவர்களும், அவர்களின் தொண்டர்களும் போலி மதவாதிகளை சுய ஆதாயத்திற்காக ஊக்குவிக்கின்றனர். பெரும்பாலானோர் சமூகத்தின் வளர்ச்சி, மேம்பாட்டுக்காக வேலை செய்வதில்லை.

 

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் புதிய இந்தியாவை, லஞ்சம், குற்றங்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கக்கூடிய பொறுப்பு இளைஞர்களாகிய உங்கள் கரங்களில் வழங்கப்பட்டு உள்ளது. சமூக நலன் ஒன்றையே எப்போதும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

 

நல்லது செய்ய எண்ணுவோருக்கு பல தடைகள் உள்ளன. யாராவது நன்மை செய்ய முயற்சித்தாலும்கூட, அவர்களை சமூகத்தை விட்டே ஒதுக்கி விடுகின்றனர். அல்லது, அவர்களை சமூகத்தைக் கெடுக்க வந்த கருப்பு ஆடு என்றோ அல்லது ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்றோ முத்திரை குத்தி விடுவார்கள்.

குற்றங்களற்ற சமுதாயம் வேண்டும்:

 

ஆகையால், இளைஞர்கள் போலி மதவாதிகள், சுயநல அரசியல்வாதிகள், கெடுதல் செய்வோரை புறந்தள்ளிவிட்டு, அச்சமற்ற, குற்றங்களற்ற சமுதாயத்தை படைக்க உழைக்க வேண்டும்.

 

கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும், பயிற்றுவித்த கல்விக்கூடங்களையும் நீங்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. பொருள் தேடி அயல்நாடுகளுக்குச் செல்வோர் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்திலோ அல்லது அவர்களை மூன்றாம் நபர் மூலம் பராமரிக்க விட்டுவிட்டோ செல்லக்கூடும்.

 

தாய், தந்தையரை போற்றுங்கள்:

 

ஒருவேளை, இந்தியாவுக்குள் வேலை செய்ய நேர்ந்தால் உங்கள் தாய், தந்தையரை உங்களுடனே அருகில் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அனுப்பி வைக்கும் பணம் மட்டுமே உங்களின் பெற்றோரை சந்தோஷப்படுத்தி விடும் என்று எண்ணிவிட வேண்டாம். அவர்களுக்குத் தேவையானது எல்லாம் உங்களின் அருகாமை, உங்களின் பாசம், உங்களின் அரவணைப்பு மட்டுமே.

 

இன்னொன்று…

 

ஒருபோதும் நீங்கள் உங்களை யாரோடும் ஒப்பிட்டுக் கொள்ள வேண்டாம். யாரைப்போலவும் இருக்க வேண்டும் என்றுகூட முயற்சிக்க வேண்டாம். ஏனெனில், இங்கே ஒவ்வொருவருமே வித்தியாசமானவர்கள்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. ஆகையால் எப்போதும் உங்களின் தனித்தன்மையை இழந்து விடக்கூடாது.

 

நல்ல குணம் அவசியம்:

அறிவைக் காட்டிலும் நல்ல நடத்தை முக்கியமானது. பல நேரங்களில் அறிவு தோல்வி அடைந்து விடும். ஆனால் நல்ல நடத்தை உங்களை மீட்டுக்கொடுத்து விடும். நல்ல குணங்கள் இல்லாதவரிடத்தில் இருக்கும் அறிவு வீணானது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

 

இவ்வாறு ஓய்வுபெற்ற நீதிபதி ச.ஜெகதீசன் பேசினார்.

 

உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் ஷர்மா, பல்கலை துணை வேந்தர் குழந்தைவேல், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, பயிற்சி ஆட்சியர் வந்தனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

குறளில் எழுத்துப்பிழை:

 

ஓய்வுபெற்ற நீதிபதி ச.ஜெகதீசன் உரை அடங்கிய புத்தகத்தில் 10ம் பக்கத்தில், ”செய்யதக்க / அல்ல / செயக்கெடும் / செய்தக்க / செய்யாமை / யானும் / கெடும்” என்ற ஒரு குறட்பா அச்சிடப்பட்டு உள்ளது.

தெரிந்து செயல்வகை என்ற அதிகாரத்தில் இருந்து கையாளப்பட்டுள்ளது இந்த குறள். ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்தாலும் கெடுவான். செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதானாலும் கெடுவான் என்பது இந்தக் குறளின் பொருள்.

 

ஓய்வுபெற்ற நீதிபதியின் உரை அடங்கிய புத்தகத்தில் உள்ள குறட்பாவில் ‘செய்யதக்க’ என்பதற்கு பதிலாக ‘செய்தக்க’ என்று இருந்திருக்க வேண்டும். ஆனால் பிழையாக ‘செய்யதக்க’ என்று அச்சிடப்பட்டு இருந்தது.

 

உயர்கல்வித்துறை அமைச்சர் காணோம்:

 

பட்டமளிப்பு விழாக்களில் பொதுவாக பல்கலையின் வேந்தர் என்ற அளவில் ஆளுநர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குவது மரபு. உயர்கல்வித்துறை செயலரும், உயர்கல்வித்துறை அமைச்சரும் பங்கேற்பதும் முக்கிய சம்பிரதாயங்களில் ஒன்று.

 

ஆனால், பதினெட்டாவது பட்டமளிப்பு விழாவில் எல்லோரும் ஆஜராகிவிட, உயர்கல்வித்துறை செயலர் கே.பி. அன்பழகன் மட்டும் ஏனோ கலந்து கொள்ளவில்லை.

 

திமுக பற்றிய பேச்சு:

 

”தமிழகத்தில் பகுத்தறிவுச் சிந்தனையை வளர்த்தெடுத்த ‘பெரியார்’ என்று அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி பெயரில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தை, படிப்பை நிறைவு செய்து வெளியேறும் மாணவர்கள் மறந்துவிடக்கூடாது.

 

இன்று திமுகவில் உள்ள ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெரியாரின் தொண்டர்கள்தான்,” என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி ச.ஜெகதீசன் தனது உரையில் குறிப்பிட்டார்.

 

பலத்த பாதுகாப்பு:

 

விமானம் மூலம் சேலம் வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பகல் 12.05 மணிக்கு அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகைக்குச் சென்று, சற்று இளைப்பாறினார். 12.30 மணிக்கு பட்டமளிப்பு விழா தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 12.45 மணியளவில் ஆளுநர் விழா அரங்கத்திற்குள் நுழைந்தார்.

 

அவருடைய வருகையையொட்டி, சேலம் மாநகர ஒட்டுமொத்த காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மாநகர காவல்துறை ஆணையர் சங்கரும் விழாவில் கலந்து கொண்டார்.

 

– செங்கழுநீர்