Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ரூ.6 கோடி ரயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கியது சிபிசிஐடி! #TrainRobbery #Salem

 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயிலில், வங்கிகளில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ரூ.5.78 கோடி ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் நெருங்கிவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுத்துறை வங்கிகளில் சேகரமாகும் பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட இடைவெளியில் திரும்பப் பெற்றுக்கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சில பொதுத்துறை வங்கிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ரூ.342.75 கோடி பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை சேலத்தில் இருந்து சென்னை செல்லும் எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, ரூ.342.75 கோடியை 226 அட்டைப் பெட்டிகளில் பிரித்து கட்டப்பட்டு, அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டு, தனியாக ஒரு ரயில் பெட்டியில் ஏற்றப்பட்டது. இந்தப் பணிகள் அனைத்தும் சம்பவத்தன்று மதியம் 2.30 மணியளவில் முடிவுற்றன. பின்னர் எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9 மணிக்கு சேலம் ஜங்ஷன் வந்து சேர்ந்தது. 18 பெட்டிகளுடன் வந்த அந்த ரயிலில் வங்கிகளின் பணம் அடங்கிய ரயில் பெட்டி நடுவில் இணைக்கப்பட்டது.

 

சேலம் இந்தியன் வங்கியில் இருந்து சேகரிக்கப்பட்ட தொகை 43 பெட்டிகளிலும், ஐஓபி வங்கிக்குச் சொந்தமான பணத்தை 83 பெட்டிகளிலும், ராசிபுரம் எஸ்பிஐ வங்கியில் இருந்து பெறப்பட்ட பணத்தை 42 பெட்டிகளிலும், கிருஷ்ணகிரி இந்தியன் வங்கியில் இருந்து சேகரிக்கப்பட்ட பணத்தை 38 பெட்டிகளிலும், சத்தியமங்கலம் எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான பணம் 20 பெட்டிகளிலும் வைக்கப்பட்டு இருந்தன. டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் துப்பாக்கி ஏந்திய பத்து போலீசாரும் பாதுகாப்புக்கு அந்த ரயிலில் வேறு பெட்டிகளில் பயணம் செய்தனர்.

இந்தளவுக்கு முன்னெச்சரிக்கையாக செயல்பட்ட வங்கியாளர்களும், காவல்துறையினரும் மிகப்பெரும் கொள்ளை நடக்கும் என்பதை அப்போது கொஞ்சமும் யூகித்திருக்கவில்லை. சேலத்தில் புறப்பட்ட இந்த ரயில், மறுநாள் (ஆகஸ்ட் 9ம் தேதி) காலை 9 மணிக்கு எழும்பூர் சென்றடைந்தது. அங்கே சென்றதும் பணப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியை மட்டும் தனியாக பிரித்து யார்டுக்குக் கொண்டு சென்றனர்.

 

அன்று காலை 11 மணியளவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கே சென்றனர். அந்த ரயில் பெட்டியில் ஏறிப்பார்த்தபோது நான்கு அட்டைப் பெட்டிகளின் சீல் உடைக்கப்பட்டு இருப்பதும், பணக்கட்டுகள் சிதறி இருப்பதும் தெரிய வந்தது. பெட்டியின் மேற்கூரையைப் பார்த்தபோது அங்கே இரண்டுக்கு ஒன்றரை அடி அகலத்தில் மர்ம நபர்கள் காஸ் வெல்டிங் மூலம் துளையிட்டு, பெட்டிக்குள் இறங்கி பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

மர்ம நபர்கள் மொத்தம் 5.78 கோடி ரூபாய் கொள்ளையடித்துச் சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அந்தத் தொகை முழுவதும் சேலம் ஐஓபி வங்கியில் இருந்து பெறப்பட்ட தொகையாகும். சினிமாவை விஞ்சும் இந்த சம்பவம் பற்றி அறிந்த ஒட்டுமொத்த காவல்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். தடயவியல் நிபுணர் பஞ்சாட்சரம் தலைமையிலான குழுவினர் கொள்ளை நடந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் பதிவாகி இருந்த விரல்ரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். ஆனாலும் அந்த தடயங்கள் விசாரணைக்கு போதிய அளவில் பலனளிக்கவில்லை.

 

தொடக்கத்தில் இந்த வழக்கை விசாரித்து வந்த சேலம் உள்ளூர் போலீசார், எந்த இடத்தில் இந்த கொள்ளை நடத்திருக்கும் என்பதை கண்டுபிடிக்கவே திணறினர். சேலத்தில் ரயில் பெட்டியில் மதியம் 2.30 மணிக்கு பணப்பெட்டிகள் ஏற்றப்பட்டன. ஆனாலும், எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் இணைப்பதற்காக இரவு 9 மணி வரை 6.30 மணி நேரம் சேலம் சூரமங்கலம் ரயில் நிலையத்திலேயே காத்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சேலத்திலேயே மர்ம நபர்கள் பணத்தைக் கொள்ளை அடித்தார்களா?

சேலம் முதல் விருத்தாசலம் வரையிலான இருப்புப்பாதை மின்சாரப்பாதையாக மாற்றப்படவில்லை. அதனால் விருத்தாசலம் வரை டீசல் என்ஜின் மூலமாகவும், அங்கிருந்து சென்னைக்கு மின்சாரத்திலும் எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். அதனால், சேலத்தில் கிளம்பிய அந்த ரயில் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் நின்று சென்றது. அந்த இடைவெளியில் ஏதும் கொள்ளை கும்பல் கைவரிசை காட்டினார்களா? அல்லது சென்னை சென்றபிறகு, எழும்பூர் யார்டில் பணம் அடங்கிய ரயில் பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது கொள்ளை சம்பவம் அரங்கேறியதா? என பல்வேறு கோணங்களிலும் விசாரித்தனர்.

 

உள்ளூர் போலீசார் விசாரணையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால், இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

 

இந்த சம்பவத்தில் வழக்கு விசாரணை தாமதம் ஆனாலும், கொள்ளையர்களை பிடிப்பதில் தோல்வி கண்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது சிபிசிஐடி. சம்பவத்தன்று சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தில் பதிவான சந்தேகத்திற்குரிய செல்போன் உரையாடல்கள், விருத்தாசலம் & சென்னை வழித்தடத்தில் பேசப்பட்ட சந்தேகத்திற்குரிய செல்போன் உரையாடல்கள் என தனித்தனியாக பிரித்து நுட்பமாக விசாரிக்கத் தொடங்கினர்.

 

குறிப்பிட்ட சில செல்போன் உரையாடல்கள் மீது சிபிசிஐடி தரப்புக்கு சந்தேகம் வலுத்தது. அந்த எண்களை கண்டுபிடித்து விசாரித்தபோது அந்த செல்போன் எண்கள் அனைத்தும் மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது. இதையடுத்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்ஐஏ புலனாய்வு ஏஜன்சி உதவியுடன் சந்தேகத்திற்குரிய செல்போன் எண்களின் உரிமையாளர்களைப் பின்தொடர்ந்தனர். அவர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் நடந்த கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதை சிபிசிஐடி போலீசார் உறுதிப்படுத்தினர்.

இந்த விசாரணையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கும் முக்கிய பங்கு இருப்பதாக சிபிசிஐடி தரப்பில் கூறுகின்றனர். மத்திய அரசு மூலமாக நாசாவிடம் உதவி கோரப்பட்டது. அவர்கள், சேலத்தில் இருந்து எழும்பூர் செல்வதற்கு இடையிலான 350 கி.மீ. தூரத்தில் சம்பவத்தன்று, நூறுக்கும் மேற்பட்ட டவர்களில் இருந்து செல்போன் உரையாடல்கள் பதிவாகி இருப்பதும், அந்த உரையாடல்களை இனம் கண்டுகொள்வதற்கும் நாசா சில தொழில்நுட்ப உதவிகளைச் செய்தது இந்த வழக்கில் பேருதவியாக இருந்ததாக கூறுகின்றனர்.

 

ரயிலில் கொள்ளை அடித்தது தொடர்பாக சந்தேகத்திற்கு உரிய 11 பேர் கொண்ட கும்பலை எந்த நேரத்திலும் சுற்றிவளைக்க தயாராகிவிட்டதாக சிபிசிஐடி தரப்பு கூறுகிறது. விரைவில் ரயில் கொள்ளை வழக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.