Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஸ்டாலின் அடித்த சிக்ஸர்!; கன்னி உரையில் கனல் கக்கிய ‘தலைவர்’!! #DMK #MKStalin

 

திமுக தலைவராக பதவியேற்ற பின்னர் நிகழ்த்திய முதல் உரையிலேயே, ‘பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறதா திமுக?’ என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தங்களைக்காக்க தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்து, முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் இன்று ஈர்த்து இருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (ஆகஸ்ட் 28, 2018) அக்கட்சியின் தலைவராக மகுடம் சூடினார். சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்த பொதுக்குழுவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார். இதுவரை ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு, தலைமை நிலையச் செயலாளரான துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

கருணாநிதி மறைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மரணம் அடைந்த 248 பேரின் குடும்பங்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. கட்சி விதிகளில் செயல்தலைவர் பதவிக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த விதி எண் 4ஐ ரத்து செய்து தீர்மானம் இயற்றப்பட்டது. இதன்மூலம் செயல்தலைவர் பதவி முடிவுக்கு வந்துள்ளது.

வாழ்த்துரை படலம் முடிந்ததும் இறுதியாக ஏற்புரை ஆற்றினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். கடந்த 14ம் தேதி நடந்த கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தைப் போலவே, இன்றும் கருணாநிதியின் முத்தாய்ப்பு வரிகளான, ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே…’ என்று சொல்லி, பேசத்தொடங்கினார். அப்போதும் பொதுக்குழுவில் ஏகப்பட்ட கரவொலிகள் எழுந்தன.

 

வழக்கமாக ஸ்டாலின் பேசுகையில், ‘ஆக…’ என்ற வார்த்தையை ஒவ்வொரு வரிக்கும் பயன்படுத்துவார். இன்றைய பேச்சினில் ‘ஆக’ மறைந்து இருந்தது. மிகக்கவனமாக, எழுதி வைத்திருந்த உரையையே வாசித்தார். வழக்கத்தைக் காட்டிலும் இன்றைய உரை, தொண்டர்களை அரவணைப்பதில் புனலும், எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுகையில் கனலும் கலந்தே தயாரிக்கப்பட்டு இருந்ததுடன், சற்றே மாறுபட்ட வடிவத்திலும் இருந்தது.

 

கருணாநிதியைப் போல் வருவாரா ஸ்டாலின்?, திராவிட சித்தாந்தங்களில் ஏற்பட்ட தொய்வு, பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறாரா? போன்ற யூகங்கள் அனைத்திற்கும் இன்றைய உரையில் ‘பளீச்’ என்று முற்றுப்புள்ளி வைத்தார்.

”நான் தலைவர் கலைஞர் இல்லை. அவரைப்போல் எனக்குப் பேசத்தெரியாது. பேசவும் முடியாது. அவரைப்போல் மொழியை ஆளத்தெரியாது. ஆனால் எதையும் தொடர்ந்து முயன்று பார்க்கும் துணிவு பெற்றிருக்கிறேன்,” என தொடக்கத்திலேயே தன் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் தவறான ஒப்பீடுகளை தகர்த்து எறிந்தார், ஸ்டாலின்.

 

”ஒருமுறை தலைவர் கலைஞர், எனக்கு உடன் பிறந்த அண்ணன் கிடையாது. ஆனால் அந்த இடத்தில் பேராசிரியர் அன்பழகன் இருக்கிறார் என்றார். அதேதான் நானும் சொல்கிறேன். என் தந்தை இன்று இல்லை. ஆனால் எனக்கு பெரியப்பாவாக பொதுச்செயலாளர் பேராசிரியர் இருக்கிறார்.

 

தலைவரிடத்தில் பெயர் வாங்குவதே 100 மடங்கு சிரமம் என்றால் பெரியப்பாவிடம் பெயர் எடுப்பது 200 மடங்கு சவாலானது. இந்தக் கட்சியை தலைமைப் பொறுப்பேற்று நடத்தும் தகுதி இருப்பதாக பல ஆண்டுக்கு முன்பே தலைவர் கலைஞரிடம் என்னை முன்மொழிந்தவர் பேராசிரியர்,” என்றார்.

இதன்பிறகு மெதுவாக அவருடைய உரை, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக திரும்பியது. ”பகுத்தறிவு, சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை ஆகிய இந்த நான்கும் திமுகவின் தூண்கள். இன்றைக்கு கல்வித்துறையிலும், நீதித்துறையிலும் மதச்சார்பின்மை குலைந்து வருகிறது. இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா..,” என்று தொண்டர்களுக்கு உற்சாகமாக அறைகூவல் விடுத்தார் மு.க.ஸ்டாலின்.

 

அதன் சூடு குறையாமல், ஆளும் அதிமுக அரசையும் ஒரு பிடிபிடித்தார். சுயமரியாதை எனும் முதுகெலும்பில்லாத மாநில அரசையும், பகுத்தறிவு சிந்தனையையும், சமூக நீதியையும் சிதைக்கிற மத்திய அரசையும் பார்க்கும்போது எனக்கு வேதனை தருகிறது. தமிழகத்தை திருடர்களிடம் இருந்து விடுவிப்பதுதான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்,” என்று டாப் கியரில் எகிறியவர், ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால் தினம் அஞ்சி அஞ்சி சாவார் அவனியிலே,’ என்று மகாகவி பாரதியின் வரிகளைச் சொல்லி அசத்தினார்.

”இந்த இயக்கத்தில் இருப்போர் யாராக இருந்தாலும் தலைமைக்கு ஒன்றுதான். நானும் ஒரு தொண்டன்தான். இங்கு அனைவரும் சமம். உங்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாக நிச்சயமாக தலைமை இயங்கும்,” என்று தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதையும், தொண்டர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் என்பதையும் போகிற போக்கில் கோடிட்டுக் காட்டினார்.

 

”கலைஞர் இல்லாத இந்த மேடையை கனவிலும் நினைத்துப் பார்த்தது இல்லை. எனக்குள் இருக்கும் இதயம் அவர் கொடுத்தது. அண்ணாவிடம் அவர் வாங்கிய இதயம். என் கடைசி மூச்சு உள்ளவரை தமிழினமே உனக்காக போராடுவேன்,” என முத்தாய்ப்பாக முடித்தார் ஸ்டாலின்.

ஏற்புரையின் தொடக்கத்தில் அவரே குறிப்பிட்டதுபோல், இதுவரை நாம் கண்ட மு.க.ஸ்டாலின் அல்ல. இன்று அவர் நிச்சயமாக புதியவராக பிறந்திருக்கிறார் என்பதை உரையின் ஒவ்வொரு வரிகளிலும் உணர முடிந்தது. திமுகவின் அடிப்படை சித்தாநந்தங்களான சமூகநீதி, பகுத்தறிவு சிந்தனைவாதங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், கட்சிக்குள் புதிய ரத்தம் பாய்ச்சுவார் என்ற நம்பிக்கையையும் விதைத்திருப்பதாகவே அக்கட்சியின் முன்னோடிகள் கருதுகின்றனர்.

 

– பேனாக்காரன்.