Monday, February 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘அவள்’ – சினிமா விமர்சனம்

சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி மற்றும் பலரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இன்று (நவம்பர் 3, 2017) வெளியாகி இருக்கிறது ‘அவள்’.

உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இயக்கம்: மிலிந்த் ராவ்; இசை: கிரிஷ்; ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா; எடிட்டிங்: லாரன்ஸ் கிஷோர்; தயாரிப்பு: வயாகாம்18 மோஷன் பிக்சர்ஸ், ஏடாகி எண்டர்டெயின்மென்ட்.

புதுமணத் தம்பதிகளான சித்தார்த்தும், ஆண்ட்ரியாவும் ஒரு தனி வீட்டில் தங்கி இருக்கின்றனர். அவர்களுடைய வீட்டிற்கு அருகில், இன்னொரு குடும்பம் புதிதாக குடி வருகிறது. அந்த வீட்டில் உள்ள ஜென்னி என்ற இளம்பெண்ணுக்கு திடீரென்று பேய் பிடித்து விடுகிறது.

அந்தப் பேய், மெல்ல மெல்ல சித்தார்த் வீட்டுக்குள் நுழைகிறது. அதன்பிறகு நாயகனும், நாயகியும் என்ன ஆனார்கள்? அவர்கள் அந்த பேயை விரட்டினார்களா? பக்கத்து வீட்டு பெண்ணுக்கு பேய் பிடிக்கக் காரணம் என்ன? என்பதை த்ரில் திரைக்கதையுடன் விவரிக்கிறது அவள்.

இருள், திடீரென்று பலமாக வீசும் காற்று, திரைச்சீலைகள் வேகமாக அசைந்தாடுவது, திடீர் திடீரென்று நிழல் உருவங்கள் சுவரில் வந்து மறைவது, கடிகாரம் எதிர்த்திசையில் சுழல்வது, ‘குளோஸ் – அப்’ ஷாட்டில் ஒருவரைக் காண்பிக்கையில் அவர்களின் பின்னால் அமானுஷ்ய உருவங்கள் தோன்றி மறைவது போன்ற ஹாரர் படங்களுக்கே உரிய ‘கிளீசே’க்கள் இந்தப்படத்திலும் மலிந்து கிடக்கின்றன.

ஆனால், காட்சிப்படுத்திய விதமும், அவ்வப்போது வரும் சின்னச்சின்ன முடிச்சுகளும் த்ரில் அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகிறது. வழக்கமான டெம்பிளேட்டுகளில் இருந்து மாறுபட்ட திரைக்கதையுடன் வந்து பெரும் வெற்றி பெற்ற ‘மாயா’ படத்திற்குப் பிறகு, வித்தியாசமான அனுபவத்தை இந்தப்படமும் கொடுக்கும் என நம்பலாம்.

நாயகன், நாயகி தவிர முக்கிய கதாபாத்திரங்கள் எல்லாருமே பரவலாக அறியப்படாத முகங்கள்தான். முதன்மைக் கதாபாத்திரங்கள் மட்டுமின்றி, துணை கதாபாத்திரங்கள் அனைவருமே தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கின்றனர். அறியப்படாத முகங்கள்தான் இந்தப் படத்திற்கு பெரும் பலமும்கூட.

படத்தின் முக்கிய அம்சங்களாக ஒளிப்பதிவு, இசையை சொல்லலாம். இந்தப் படத்திற்கு ஒரு வித்தியாசமான நிறக்கலவையை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. ஒரு ஹாலிவுட் படத்திற்கு நிகரான ஒளிப்பதிவு.

நாயகன், நாயகிக்கு இடையேயான ஒரு பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். ”காரிகை கண்ணே நாணமோ பெண்ணே மூலிகை முத்தம் தரவா தேனூற; மேனியில் மிச்சம் தேடுதே நெஞ்சம் ஏனடி அச்சம் வருவாயோ தேட” என்ற இளமையான வரிகளுடன் கவனம் ஈர்க்கும் பாடலாசிரியர் முத்தமிழ், இன்னொரு தாமரை.

ஹாரர் படம் என்றாலே இரைச்சலான ஒலியின் மூலம் பயத்தை ஏற்படுத்தி விடலாம் என்று அசட்டுத்தனமாக நம்பாமல், தேவையான இடத்தில் மவுனித்து இருக்கிறார் இசையமைப்பாளர் கிரிஷ். அந்த ஓசைகளற்ற ஓசையும்கூட பார்வையாளனுக்கு திகில் அனுபவத்தைக் கொடுத்துவிடுகிறது. லாரன்ஸ் கிஷோரின் எடிட்டிங், பக்கா. நல்லதொரு திகில் அனுபவத்தைப் பார்க்க வேண்டும் என்பவர்கள் நிச்சயமாக இந்தப்படம் நல்லதொரு விருந்துதான்.

 

இந்தப் படத்தில் சித்தார்த் நரம்பியல் மருத்துவராக வருகிறார். அவருக்கும், ஆண்ட்ரியாவுக்குமான ரொமான்ஸ் காட்சிகள் படம் பார்க்கும் இளம் தம்பதிகளை ரொம்பவே ஈர்க்கும் விதமாக இருக்கிறது. அதற்காக ஆண்ட்ரியாவின் இதழ்கள் காயப்படும் அளவுக்கு சித்தார்த் ஒத்தடம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமா என்ன?.

தணிக்கையில், ‘ஏ’ சான்றிதழ்தான் பெற்றிருக்கிறது என்பதால் குழந்தைகளுடன் படம் பார்ப்பதை தவிர்க்கலாம்.

நல்லதொரு திகில் அனுபவத்தை திரையூனூடாகப் பெற வேண்டும் என்பவர்களுக்கு இந்தப்படம் நிச்சயமாக அத்தகைய அனுபவத்தைக் கொடுக்கும்.

 

– வெண்திரையான்.