Thursday, October 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

10 ரூபாய் நாணயங்கள் செல்லும்!; ஆர்பிஐ அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 14 வகையான பத்து ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும் என்றும், வங்கிகள் அவற்றை வாங்காமல் புறக்கணிக்கக்கூடாது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய பணச்சந்தையில் 5 ரூபாய், 10 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் நாணயங்கள் பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிடப்பட்டன. இவற்றில், 10 ரூபாய் மதிப்பில் போலி நாணயங்கள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று வதந்தி பரவியது. பாகிஸ்தான் நாட்டில் இருந்து இவ்வாறு போலி நாணயங்கள் அச்சிட்டு, இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.

இதை இந்திய அரசும் பலமுறை மறுத்துள்ளது. எனினும், சாலையோர வியாபாரிகள், சாமானியர்கள் முதல் வங்கியாளர்கள் வரை பத்து ரூபாய் நாணயங்களை பட்டுவாடாவுக்கு ஏற்க மறுத்தனர். பத்து ரூபாய் நாணயங்களை யாரும் வாங்காமல் மறுக்கக்கூடாது என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அவ்வப்போது சுற்றறிக்கை வெளியிடப்பட்டாலும்கூட, வங்கிகளே 10 ரூபாய் நாணயங்களை ஏற்காததால் மக்களிடமும் அதன் மீதான நம்பகத்தன்மை ஏற்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி நேற்று (ஜனவரி 17, 2018) ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள பத்து ரூபாய் நாணயங்கள் அனைத்தும் இந்திய நாணய அச்சுக்கூடத்தில் தயாரிக்கப்பட்டவைதான். பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு காலக்கட்டத்தில் 14 டிசைன்களில் 10 ரூபாய் நாணயங்கள் தயாரிக்கப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்டு உள்ளன.

பொதுமக்கள், வணிகள் அந்த நாணயங்களை தாராளமாக பயன்படுத்தலாம். அதேபோல், அனைத்து வங்கிகளும் பத்து ரூபாய் நாணயங்களை அன்றாட பட்டுவாடா பணிகளுக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.