Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இனி இந்தியாவில் விவசாயமே இருக்காது! ரோடு இருக்கும்; சோறு கிடைக்காது!!

கொரோனா ஊரடங்கு
என்ற பெயரில் மக்களை
வீட்டிற்குள் முடக்கிவிட்டு
நடுவண் பாஜக அரசு,
நாட்டையே தனியாருக்கு
தாரை வார்க்கும் திட்டங்களை
எவ்வித விவாதத்திற்கும்
உட்படுத்தாமல் அடுத்தடுத்து
நிறைவேற்றி வருகிறது.
இது, அரசியல் கட்சிகளிடம்
மட்டுமின்றி பலமட்டங்களிலும்
அதிர்வலைகளை உருவாக்கி
இருக்கிறது.

நடுவண் நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் அண்மையில்,
ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி,
மின் விநியோகம்,
அணுசக்தி தயாரித்தல்,
விமான போக்குவரத்து,
கனிமச்சுரங்கம் உள்ளிட்ட
முக்கிய துறைகளில் தனியார்
பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்
என்று அறிவித்தார்.
இத்தகைய அதிரடியான
முடிவுகள் எல்லாமே,
தேசிய கட்டமைப்பு மேம்பாடு
வரைவுத் திட்டத்திலேயே
மறைமுகமாக கோடிட்டு
காட்டியிருப்பது இப்போது
வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

தேசிய கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட (National Infrastructure Pipeline – 2019-2025) வரைவு – 2019-2025 அறிக்கையைக்கூட நிர்மலா சீதாராமன் கடந்த ஏப்ரல் 29, 2020ம் தேதியன்று ஓசையின்றி பிரதமரிடம் சமர்ப்பித்திருக்கிறார். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், 2025ல் இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர்களாக உயர்த்துவது. அதற்காக, ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கைத் தரத்தையும் உலகத்தரத்தில் மேம்படுத்துவதுதான் திட்டத்தின குறிக்கோள் என்கிறது பாஜக அரசு.

 

சாகர்மாலா (கடல்வழி), பாரத்மாலா (தரைவழிப் போக்குவரத்து) திட்டங்களுக்கு பாஜக அரசு ஏன் தமிழ்நாட்டையே மையம் கொண்டு காய்களை நகர்த்தி வருகிறது என்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. தேசிய மேம்பாட்டு வரைவுத் திட்டத்தில் ஐந்து மாநிலங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு, அதில் முதலிடத்தில் இருக்கிறது. மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, பஞ்சாப் ஆகியவை மற்ற நான்கு மாநிலங்கள்.

 

ஆக,
இனி எல்லா காலத்திலும்
நடுவண் அரசின் இலக்கில்
இருந்து தமிழ்நாடு தப்பிக்கவே
முடியாது. ராணுவத் தளவாடத்
தொழிற்சாலைகள் அமைப்பது,
எட்டுவழிச்சாலை என்ற பெயரில்
விவசாயிகளை சுரண்டுவது,
கனிம வளங்களை தனியார்
மூலம் சூறையாடுவது என
எல்லாமே தமிழ்நாட்டை
மையப்படுத்திய திட்டங்களாக
அமையும்.

 

தேசிய உள்கட்டமைப்பு
மேம்பாட்டிற்காக 111 லட்சம்
கோடி ரூபாயில் வரைவுத்
திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதில் விரைவுச்சாலைகள்
அமைத்தல், வான்வழி, கடல்வழி,
இருப்புப் பாதை போக்குவரத்தை
மேம்படுத்தல், தடையற்ற
மின்சாரம், கட்டுமானத்
துறைகளுக்கு முக்கியத்துவம்
அளிக்கப்பட்டு உள்ளன.
விவசாயிகளின் வருமானத்தை
இரட்டிப்பாக்குவது உள்ளிட்ட
பிரதமர் நரேந்திர மோடியின்
‘ஜூம்லா’க்கள் இந்த வரைவிலும்
ஆங்காங்கே தொட்டுக்காட்டப்பட்டு
உள்ளது.

இத்திட்டத்துக்கான நிதியை
எப்படி திரட்டுவது என்பதில்தான்
இன்னொரு வேடிக்கையும்
இருக்கிறது. அதாவது
கார்ப்பரேட் பங்கு பத்திரச்
சந்தைகள் மூலம் நிதி
திரட்டப்படும் என்கிறார்கள்.
கட்டமைப்பு சொத்துகளையும்,
நிலங்களையும் விற்று
காசாக்குவதன் மூலமும்
போதிய நிதி திரட்டப்படும்
என்கிறார் நிர்மலா சீதாராமன்.
திட்டத்தை செயல்படுத்துவதில்
நடுவண் அரசு 39% பங்கும்,
மாநில அரசுகள் 40% பங்கும்
செலவிடும். தனியார் முதலாளிகள்
21% பங்கு முதலீட்டைக்
கொட்டுவார்கள். வெறும்
21 சதவீத பங்கைச் செலுத்தும்
தனியார் முதலாளிகளே
கடைசியில் ஏகபோகமாக
சம்பாதிப்பார்கள் என்பதுதான்
இத்திட்டத்தின் இன்னொரு விந்தை.

 

தேசிய உள்கட்டமைப்பு
மேம்பாட்டுத் திட்டத்தால்
பெரிதும் பாதிக்கப்படுவது
விவசாயிகளும், நிலமற்ற
விளிம்புநிலை மக்களும்தான்.
ஏற்கனவே சேலம் – சென்னை
எட்டுவழிச்சாலைத் திட்டத்தால்
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட
குடும்பங்கள் விவசாயத்தைக்
கைவிட்டு புலம்பெயரும்
அபாயத்தில் உள்ளனர்.
விவசாயத்தை பாதிக்கக்கூடிய,
எதற்குமே லாயக்கற்ற
எட்டுவழிச்சாலைத் திட்டத்தை
நிறுத்தக்கோரி விவசாயிகள்
சட்டப்போராட்டம் நடத்தி
வருகின்றனர். தற்போது
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு,
முக்கிய கட்டத்தை
எட்டி இருக்கிறது.

 

எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களான திருவண்ணாமலை அருள், சேலம் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பேசினோம்.

 

”தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் நாடு முழுவதும் 500 கனிம சுரங்கங்களை தனியாருக்கு விடப்படும் என்று நடுவண் அரசு அறிவித்துள்ளது. இதில், சேலம் மாவட்டம் கஞ்சமலை, திருவண்ணாமலை மாவட்டம் வேடியப்பன் மலை, கவுந்தி மலைகளில் உள்ள கனிம வளங்களும் தனியாருக்குதான் குத்தகைக்கு விடப்படும் என்பது தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. கனிம வளங்களை கொண்டு செல்வதற்காகவே எட்டுவழிச்சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றத் துடிக்கின்றன.

அருள் – பன்னீர்செல்வம்

மேலும் பல ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு அதிவிரைவுச் சாலைகள் போடப்பட உள்ளதாகவும் தேசிய உள்கட்டமைப்பு வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020-2025 காலக்கட்டத்தில் சாலைத் திட்டங்களுக்காக மட்டும் மத்திய, மாநில அரசுகள் 20.33 லட்சம் கோடிகளை செலவழிக்க திட்டமிட்டுள்ளது. சென்னை – பெங்களூரு அதிவிரைவுச்சாலைத் திட்டமும் 20 ஆயிரம் கோடி ரூபாயில் வர இருக்கிறது.

 

கொரோனா நிவாரணத்திற்கே நிதி போதவில்லை என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், எட்டுவழிச்சாலை பணிகளை முடிப்பதில் ஆர்வம் காட்டுவது எப்படி என புரியவில்லை. ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கும் பணிகளை 11 மாதத்தில் முடிப்பதாக ஆரம்பத்தில் அறிவித்துவிட்டு, இப்போது 9 மாதத்தில் முடிக்க கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதன் மூலம் 2000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்திருக்கிறது தமிழக அரசு.

 

எங்கெல்லாம் அதிவிரைவுச்சாலைத் திட்டம் கொண்டு வரப்படுகிறதோ அங்கெல்லாம் முதலில் பாதிக்கப்படப்போவது விவசாயிகளும், அவர்களையே நம்பியிருக்கும் நிலமற்ற விவசாயக் கூலிகளும்தான். இந்த புதிய வரைவுத் திட்டத்தில், சுரங்கப்பணிகள், விரைவுச்சாலை உள்ளிட்ட பல திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறத்தேவையில்லை என்று மிகத்தந்திரமாக ஒரு விதியையும் கொண்டு வந்துள்ளனர்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, கொரோனா ஊரடங்கால் நாடே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், 111 லட்சம் கோடியில் உள்கட்டமைப்புத் திட்டம் தேவையா? இன்றைய நிலையில் உணவு, மருத்துவம், வேலைவாய்ப்பு, பொருளாதார உதவிகள்தான் மக்களுக்கு உடனடித் தேவை. அதைவிட்டுவிட்டு விவசாயத்தையும், இயற்கை வளங்களையும் சூறையாடும் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வருவது நாட்டின் நலனுக்கும் விவசாயத்திற்கும் உகந்தது அல்ல. இதுபோன்ற வரைவுத் திட்டத்தையும் நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதத்திற்கு உட்படுத்திய பிறகே முடிவெடுக்க வேண்டும்.

 

தேசிய உள்கட்டமைப்பு வரைவுத் திட்டம் என்பதே விவசாயத்தை அடியோடு ஒழித்துக்கட்டும் வகையில்தான் இருக்கிறது. ஏற்கனவே விவசாயத்திற்கு ஆள்பற்றாக்குறை, சாகுபடி நிலம் குறைந்து வருவதல், கடன் தொல்லை என விவசாயத்துறை நலிவடைந்து வரும் நிலையில், உள்கட்டமைப்பு திட்டங்களால் விவசாயத்துறையே அழிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. வரும் காலத்தில் உணவு தானியங்களுக்கு இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் அவல நிலை உருவாகும். அதனால் இந்த வரைவுத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்,” என்கிறார்கள் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள்.

 

சேலத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் கூட்டமைப்பு பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது, ”உலகமய பொருளாதாரத்தில் தனியார்மயம் தவிர்க்க முடியாதது. ஏதோ பாஜக அரசுதான் தனியார்மயத்தைப் புகுத்தியதாக விமர்சிக்கக் கூடாது. அதேநேரம், விவசாயிகள் பொருளாதாரம் பெரிய அளவில் மேம்படவில்லை என்பதையும் மறுக்கவில்லை. உலகத்தரத்திலான சாலை, கடல்வழி, வான்வழி உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால்தான் அந்நிய முதலீடுகளை பெரிய அளவில் இந்தியா ஈர்க்க முடியும். அதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பெருகும். இதுபோன்ற திட்டங்களை எதிர்காலத்தில் தவிர்க்கவே முடியாது,” என்றார்.

 

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்ய வேண்டிய அரசுகள், தொழிற்துறையை மட்டுமே கவனத்தில் கொள்கிறது. ஏற்கனவே நகரமயமாதல், வறட்சி, இளம் தலைமுறையினரின் பாராமுகம் என பல்வேறு காரணிகளால் விவசாயம் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், சாலைத்திட்டங்களால் மேலும் இத்துறையை நசுக்கவே பார்க்கின்றன, மத்திய, மாநில அரசுகள்.

 

எல்லாவற்றிலும் லாபநோக்கத்தை மட்டுமே கருதும் தனியாருக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு அளிக்கும் பாஜக அரசிடம், கடன் வலையில் சிக்கி தற்கொலைக்குத் தள்ளப்படும் விவசாயிகளை மீட்க இதுவரை அவர்களிடம் யாதொரு திட்டமும் இல்லை. ஒருவேளை, விளைநிலங்களை அழித்துவிட்டு, ஜப்பானைப் போல கப்பலில் விவசாயம் செய்யும் தொழில்நுட்பத்தை அறிந்து வைத்திருக்கிறார்களோ என்னவோ!

 

– பேனாக்காரன்