பிளஸ்-2க்கு பிறகு, பட்டப்படிப்பில் எதை தேர்வு செய்வது? என்ற குழப்பத்தில் உள்ள மாணவர்களுக்கான குறுந்தொடர் இது. கோர் ஏரியா என்று சொல்லக்கூடிய முதன்மைப் படிப்புகளைத் தவிர்த்த பிற வாய்ப்புள்ள பாடப்பிரிவுகள் குறித்த இந்த தொடரில் பார்க்கலாம்.
சிஎம்ஏ என்பதும்
தொழில் படிப்புதானா?
பட்டய கணக்காளர் படிப்பு எந்தளவுக்கு மிகவும் தனித்துவமான தொழில்படிப்போ அதற்கு சற்றும் குறைவில்லாதது சிஎம்ஏ எனப்படும் ‘செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காயர்’ படிப்பு ஆகும். இதை ஆங்கிலத்தில் Cost and Management Accountant (CMA) எனலாம். இந்தியாவில் மிக உயரிய பாடப்பிரிவுகளுள் சிஎம்ஏ தொழிற்படிப்பும் ஒன்றாகும்.
இன்ஸ்டிடியூட் ஆப்
காஸ்ட் அண்டு மேனேஜ்மென்ட்
அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா
என்பது ஒரு தன்னாட்சி பெற்ற,
சட்ட ரீதியான நிறுவனம்.
சுருக்கமாக ஐசிஎம்ஏஐ.
இந்நிறுவனம் 1959ம் ஆண்டு
மே மாதம் 28ம் தேதி,
இந்திய பாராளுமன்றத்தில்
சட்டம் இயற்றி உருவாக்கப்பட்டது.
அப்போது முதல் இந்த ஐசிஎம்ஏஐ
நிறுவனம் நாட்டின் முன்னேற்றத்திற்கும்,
தொழில்துறை வளர்ச்சிக்கும்
அளப்பரிய சேவைகளை வழங்கி
வருகிறது. இதுவரை 75 ஆயிரத்திற்கும்
சிஎம்ஏக்களை உருவாக்கி உள்ளது.
3 லட்சத்திற்கும் மேற்பட்ட
சிஎம்ஏ மாணவர்களுக்கு
வழிகாட்டியாகவும்
இருந்து வருகிறது.
சிஎம்ஏக்களுக்கு இன்றும்
தேவை இருக்கிறதா?
நம் நாட்டின் தொழில்துறைகளுக்கும்,
அரசாங்கப்பணிகளுக்கும் இன்றைய
தேவையாக இன்னும் 50 லட்சத்திற்கும்
மேற்பட்ட சிஎம்ஏக்கள் தேவைப்படுகின்றனர்.
உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி
சிஎம்ஏக்கள் தேவைப்படுகின்றனர்.
இதன்மூலம், இந்த பாடப்பிரிவுக்கு உள்ள
முக்கியத்துவம் மற்றும் தேவையை
நீங்கள் (மாணவர்கள்) புரிந்து
கொள்ள முடியும்.
சிஎம்ஏ படிப்பில் சேர
கல்வித்தகுதிகள் என்னென்ன?
ஏற்கனவே சிஏ படிப்பு பற்றி
இத்தொடரில் பார்த்துள்ளோம்.
அதற்கு என்னென்ன கல்வித்தகுதியோ
அதேதான் சிஎம்ஏ படிப்புக்கும்.
அதாவது, பிளஸ்-2வில் தேர்ச்சி
பெற்ற யார் வேண்டுமானாலும்
சிஎம்ஏ படிப்பை தேர்வு செய்து படிக்கலாம்.
சொல்லப்போனால், பிளஸ்-2வில்
எந்த பாடப்பிரிவை எடுத்துப்
படித்து இருந்தாலும் இப்படிப்பில்
சேரலாம். பிளஸ்-2 மட்டும் தேர்ச்சி
பெற்றவர்கள் சிஎம்ஏ படிப்பில்
முதலில் அடிப்படை நிலை எனப்படும்
பவுண்டேஷன் தேர்வு எழுத
வேண்டியது அவசியம். பட்டப்படிப்பு
முடித்தவர்கள் சிஎம்ஏ தொழில்படிப்பில்
நேரடியாக இண்டர்மீடியேட் பிரிவில்
சேர்ந்து பயில முடியும்.
அதென்ன
பவுண்டேஷன் நிலை?
நாம் மேலே சொன்னது போல, பிளஸ்-2 முடித்தவர்கள் சிஎம்ஏ படிப்பில் சேர்வதற்கு முன்பு, சிஎம்ஏ பவுண்டேஷன் பிரிவில்தான் சேர முடியும். சிஎம்ஏ பவுண்டேஷன் என்பதுதான் இப்படிப்பின் அடிப்படை நிலை. இவற்றில் மொத்தம் நான்கு தாள்கள் உள்ளன. தலா 100 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி பெற முடியும். நான்கு பாடங்களையும் சேர்த்து சராசரியாக 50 சதவீத மதிப்பெண்கள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
தாள்கள்:
Paper 1: Fundamentals of Economics and Management
Paper 2: Fundamentals of Accounting
Paper 3: Fundamentals of law and Ethics
Paper 4: Fundamentals of business mathematics and statistics
பவுண்டேஷனுக்குப் பிறகு
என்ன செய்ய வேண்டும்?
பவுண்டேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்ததாக இண்டர்மீடியேட் பிரிவில் சேரலாம். பிகாம், எம்காம் போன்ற வணிகவியல் பட்டப்படிப்புகள் மட்டுமின்றி எந்த ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்களும் சிஎம்ஏ தொழில்படிப்பில் நேரடியாக இண்டர்மீடியேட் பிரிவில் சேரலாம்.
சிஎம்ஏ – இடைநிலை (இண்டர்மீடியேட்):
இடைநிலைப் பிரிவில் மொத்தம் 8 பாடங்கள் உள்ளன. அவை குரூப்-1, குரூப்-2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் தலா 4 பாடங்கள் உள்ளன.
குரூப்-1
Paper 1: Financial Accounting (FAC)
Paper 2: Law & Ethics
Paper 3: Direct Taxation
Paper 4: Cost Accounting
குரூப்-2
Paper 1: Operations Management & Strategic Management
Paper 2: Cost & Management Accounting and Financial Management
Paper 3: Indirect Taxation
Paper 4: Company Accounts & Audit
இறுதிநிலை தேர்வுகள்
எப்போது எழுதலாம்?
இண்டர்மீடியேட்டில் தேர்ச்சி பெற்றவர்கள், குறைந்தபட்சம் 6 மாதங்கள் பயிற்சி (மொத்த பயிற்சிக்காலம் 3 ஆண்டுகள்) முடித்தபின், இறுதிநிலைத் தேர்வை எழுதலாம். இறுதிநிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மீதமிருக்கும் இரண்டரை ஆண்டுகால பயிற்சியைத் தொடரலாம்.
இறுதிநிலைத் தேர்வுகள்:
இவற்றிலும் மொத்தம் 8 தாள்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 100 மதிப்பெண்கள் கொண்டது. இந்த 8 பாடங்களும், தலா 4 பாடங்கள் வீதம் குரூப்-1 மற்றும் குரூப்-2 என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
குரூப்-1ல் உள்ள பாடங்கள்:
Paper 1: Corporate laws & Compliance
Paper 2: Strategic Financial Management
Paper 3: Strategic Cost Management – Decision Making
Paper 4: Direct Tax Laws and International Taxation
குரூப்-2ல் உள்ள பாடங்கள்:
Paper 1: Corporate Financial Reporting
Paper 2: Indirect Tax Laws & Practice
Paper 3: Cost & Management Audit
Paper 4: Strategic Performance Management and Business Valuation
ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேவை. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு பகுதியிலும் சராசரியாக 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம்.
இதர பயிற்சிகள்
என்னென்ன?
3 ஆண்டுகள் களப்பயிற்சி மட்டுமின்றி, வேறு கட்டாய பயிற்சிகளும் சிஎம்ஏ பயிலும் மாணவர்களுக்கு உண்டு. அவையாவன…
1. கம்யூனிகேசன் மற்றும் மென்திறன் பயிற்சி (3 நாள்கள்)
2. கட்டாய கணினிப் பயிற்சி (100 மணி நேரம்)
3. இண்டஸ்ட்ரி ஓரியண்டடு பயிற்சி ( 7 நாள்கள்)
4. மாடுலர் டிரெயினிங் பயிற்சி (15 நாள்கள்)
வேலைவாய்ப்புகள் பற்றி
சொல்லுங்களேன்?
சிஎம்ஏ தேர்ச்சி பெற்றவர்கள்,
நேரடியாக அமெரிக்காவில் உள்ள
இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்
அக்கவுன்டண்ட்ஸ் அமைப்பில்
உறுப்பினராகச் சேரலாம். உலகின்
எந்த மூலையிலும் பணியாற்றலாம்.
அல்லது, பட்டய கணக்காளர்,
மருத்துவர், வழக்கறிஞர் போல
சுயமாகவும் பயிற்சி செய்யலாம்.
அரசு மற்றும் தனியார் வங்கிகள்,
இன்சூரன்ஸ் நிறுவனங்கள்,
ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில்
தலைவர், நிர்வாக இயக்குநர்,
தலைமை நிதி அதிகாரி,
தலைமைச் செயல் அதிகாரி,
நிதிகட்டுப்பாட்டு அலுவலர்,
நிதி ஆலோசகர், தலைமை உள்தணிக்கை அதிகாரி,
பங்கு தணிக்கையாளர், தடயவியல் தணிக்கையாளர்,
சமகால தணிக்கையாளர்,
விலை நிர்ணய ஆலோசகர் என பல்வேறு
பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன.
தொழில்துறையிலும், மறைமுக
வரி விதிப்புகளிலும் சிஎம்ஏக்களின்
பங்கு இன்றியமையாதது ஆகும்.
மேலும் கலால் மற்றும் சுங்கத்துறை,
நிதி அமைச்சகம், சுகாதாரம் மற்றும்
குடும்பநல அமைச்சகம், மத்திய போக்குவரத்து
அமைச்சகம், நபார்டு வங்கி, டிராய், டிஏவிபி,
ஐஆர்டிஏ, ரிசர்வ் வங்கி, ஜவுளித்துறை, பத்திரப்பதிவுத்துறை,
மருந்து விலை நிர்ணய ஆணையம் உள்ளிட்ட
துறைகளிலும் சிஎம்ஏக்களின் பங்கு
முக்கியத்துவம் வாய்ந்தது.
சிஎம்ஏ முடித்தவர்களுக்கு ஐசிஎம்ஏஐ
நிறுவனமே வளாகத்தேர்வு மூலம்
வேலைவாய்ப்புகளையும் பெற்றுத்தருகிறது.
இதற்காக தனியாக ஒரு (www.icmai.in)
வலைத்தளம் இயங்குகிறது. குறிப்பிட்ட
கட்டணம் செலுத்தி, அதில் சிஎம்ஏக்கள்
தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்து
தகவல்களும் இத்தளத்தில்
வெளியிடப்படுகின்றன.
மேலதிக விவரங்களை உங்கள் ஊரில் உள்ள ஆடிட்டர்கள், சிஎம்ஏக்களை நேரில் அணுகியும் தெரிந்து கொள்ளலாம்.
-இளையராஜா சுப்ரமணியம்.
பேச: 9840961947