Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கால்களை கழுவியது கரிசனமா? காவி நாயகனின் நாடகமா?

-சிறப்புக்கட்டுரை-

 

கடந்த ஞாயிறன்று (பிப். 24) பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொலி காட்சியை பதிவிட்டு இருந்தார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், ஐந்து துப்புரவு தொழிலாளர்களின் கால்களை அவரே தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு, வெள்ளைத்துணியால் துடைத்தும் விடுகிறார். அந்த காணொலியில் பதிவாகியிருக்கும் காட்சிகள் இவை.

நரேந்திரமோடி, ‘என் வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியைத் தருவது இந்த தருணம்தாம். தூய்மை இந்தியா இயக்கம் வெற்றி பெறுவது இவர்களால்தான். துப்புரவு தொழிலாளர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்,’ என்று உணர்ச்சிகரமாக கருத்துகளை பதிவு செய்திருந்தார். மூன்றே நாளில், அந்த காணொலிக் காட்சியை 5.38 லட்சம் பேர் பார்த்துத் தள்ளிவிட்டனர். 24 ஆயிரம் பேர் அவருடைய பதிவை மறு ட்வீட் செய்துள்ளனர்.

 

தன்னை ஓர் ஏழைத்தாயின் மகன் என்றபோது அவருக்குக் கிடைத்த பாராட்டைவிட, துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவியபோது பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. அதேநேரம், தேர்தல் நெருக்கத்தில், அரசியல்வாதிகள் செய்யும் மோடி மஸ்தான் வேலைகளில் இதுவும் ஒன்றுதான் என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை.

 

சரி. இப்போது என்னுடைய கேள்வி என்னவெனில், துப்புரவு தொழிலாளர்கள் மீது பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா என்பதுதான். நகரசுத்தி தொழிலாளர்களின் பாதங்களைத் தொட்டுவிட்ட பிறகு, நாமும் நம் மனதில் உள்ள சந்தேகங்களை எழுப்பி நிவர்த்தி செய்து கொள்வதுதானே உத்தமமானதாக இருக்க முடியும்?

துப்புரவு தொழிலாளர்கள் தேசிய ஆணையம், பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம், பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் என தேசிய அளவில் ஐந்து ஆணையங்கள் இருக்கின்றன. இவை ஐந்துக்கும் சேர்த்து பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், 39.87 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது பாஜக அரசு. இந்த நிதி ஒதுக்கீட்டை வைத்துப் பார்க்கும்போது, கடையனுக்கும் கடைத்தேற்றமாய் இருக்கும் துப்புரவு தொழிலாளர்கள் மீது உண்மையிலேயே இந்த அரசு கவலை கொள்கிறது என்றுதான் எனக்கும் தோன்றியது.

 

ஆனால் கள நிலவரம் என்ன சொல்கிறது தெரியுமா? கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் மீது பாஜக அரசுக்கு ஒருபோதும் துளிகூட கரிசனமோ, சக மனிதன் என்ற அக்கறையோ இல்லை என்று அப்பட்டமாகச் சொல்கிறது.

கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கடந்த 2013ம் ஆண்டு, கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்களை (Manual scavangers)பணிக்கு அமர்த்த தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டத்தைக் கொண்டு வந்தது. தனி நபரோ, தனியார் நிறுவனங்களோ, அரசோ, உள்ளாட்சி அமைப்புகளோ இப்படி யார் ஒருவர் / அமைப்பு, மனிதக் கழிவுகளை அப்புறப்படுத்த இன்னொரு மனிதனை பணிக்கிறதோ அவை அனைத்துமே தண்டனைக்குரிய குற்றம் என்கிறது இந்தச் சட்டம். நிரந்தர பணியாளராக இருந்தாலும், ஒப்பந்தப் பணியாளராக இருந்தாலும், கைகளால் மலம் அள்ளுவதை இந்த சட்டம் முற்றாக தடை செய்கிறது.

 

இந்த சட்டம் கொண்டு வரப்படுவதற்கு
முன்பாக அப்போதைய ஐமுகூ அரசு
ஓர் ஆய்வை மேற்கொண்டது. 2011ம் ஆண்டின்
தரவுகளின்படி, நாடு முழுவதும் 26.06 லட்சம்
சுகாதாரமற்ற கழிப்பறைகள் இருப்பதும்,
அவற்றில் 7.94 லட்சம் கழிப்பறைகள் (31 சதவீதம்)
கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்களைக்
கொண்டு சுத்தம் செய்யப்படுவதும் தெரிய வந்தது.
இவற்றில் 51 சதவீத கழிப்பறைகள்
செப்டிக் டேங்க் வசதியின்றி, திறந்தவெளி
வடிகால் அமைப்புடன் இருப்பதும்
தெரிய வந்தது.

நகரம், ஊரகம் என நாடு முழுவதும்
கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்
168066 பேர் இருப்பதாகவும் 2011ம் ஆண்டில்
எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின் தரவுகள் கூறுகின்றன.
எனினும், உண்மை நிலவரம் இதைக்காட்டிலும்
பன்மடங்கு அதிகம். 26.12.2011ல் ராஜ்யசபாவில்
கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த
சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்,
இந்தியாவில் 182505 பேர் கைகளால்
மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக கூறியது.
ஆக, இது தொடர்பான சரியான தரவுகள்
மத்திய அரசிடம் இல்லை என்பதே
கவலைக்குரிய செய்திதான்.

எனினும், இந்த தரவுகளின் அடிப்படையில்தான்,
கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்
தடைச்சட்டத்தை முந்தைய ஐமுகூ அரசு
கொண்டு வந்தது. அத்தோடு நில்லாமல்,
அவர்களின் மறுவாழ்வுக்காக, ஐமுகூ அரசு
55 கோடி ரூபாய் (2013-2014) ஒதுக்கியது.
அதில், 17.79 கோடி ரூபாய் இழப்பீடுக்காக
செலவிடப்பட்டு உள்ளது.

 

ஆனால், அதற்குப் பிறகு 2014ல் பொறுப்பேற்ற
மோடி தலைமையிலான தேஜகூ ஆட்சியில்
கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்களின்
மேம்பாட்டுக்காக இதுவரை ஒற்றை ரூபாய் கூட
நிதி ஒதுக்கப்படவில்லை. 2014 முதல் 2018 வரை
ஒற்றை ரூபாய்கூட பட்ஜெட்டில் ஒதுக்காத
பாஜக அரசு, முந்தைய அரசு ஒதுக்கிய
நிதியைக்கூட செப். 22, 2017 வரை
பயன்படுத்தாமலேயே வைத்திருந்துள்ளது.
ஆர்டிஐ சட்டத்தின் வாயிலாக பெறப்பட்ட
தகவல் மூலம், துப்புரவு தொழிலாளர்கள்
மீதான பக்தாள்களின் உண்மையான
கரிசனம் அம்பலமாகியுள்ளது.

கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் மேம்பாட்டுக்காக ஐமுகூ அரசு 2013-2014ல் 55 கோடி ரூபாய் ஒதுக்கியதை, அதன்பின் பாஜக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படாமல் இருந்ததையும் காட்டும் ஆர்டிஐ தகவல் குறிப்பு.

இது ஒருபுறம் இருக்க, கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர் முறையை இந்த நாட்டில் இருந்து அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் கூறி வந்தது பாஜக. ஆனால், அவர்களே பின்னாளில் இவ்விவகாரத்தில் பல்டி அடிக்கவும் செய்தனர். கடந்த 2018ல் மக்களவையில் பாஜக, ‘ஆமாம். இன்னும் இந்த நாட்டில் கைகளால் மலம் அள்ளும் நிலை நீடிக்கிறது’ என்று ஒப்புக்கொண்டது.

 

இது தொடர்பாக மோடியின் பாஜக அரசு, கடந்த 2014 முதல் 2018 வரை நான்கு ஆண்டுகளில் நாடு முழுவதும் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதில் 323 தொழிலாளர்கள் இறந்து விட்டதாகவும், அவர்களில் 204 குடும்பத்தினர்க்கு அரசு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கிறது.

 

தமிழ்நாட்டில்தான் அதிகபட்சமாக
144 வழக்குகள் பதிவாகியுள்ளன
என்கிறது மத்திய அரசின் தரவுகள்.
அவர்களில் 141 குடும்பத்தினர்க்கு
இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.
இதில் துரதிர்ஷ்டம் என்னவெனில்,
உத்தரபிரதேசத்தில் மட்டும் கடந்த
நான்கு ஆண்டுகளில் 52 துப்புரவு
தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி
இறந்துள்ளனர்.

அவர்களில் ஒரே ஒரு
குடும்பத்திற்கு மட்டுமே அங்குள்ள
பாஜக அரசு இழப்பீடு வழங்கியுள்ளது.
அதேபோல் கேரளாவில் 12 பேர் பலியாகி
உள்ள நிலையில், அங்கும் ஒரே ஒரு
குடும்பத்திற்கு மட்டுமே மத்திய அரசின்
இழப்பீடு கிடைத்திருக்கிறது என்கிறது
சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை.

 

உண்மை நிலை இப்படி இருக்க, இதையெல்லாம் மறைத்துவிட்டு நரேந்திர மோடி, துப்புரவு தொழிலாளர்களின் கால்களைக் கழுவி விடுகிறார். இப்படியெல்லாம் கேள்விகள் எழுந்து விடக்கூடாது என்பதற்காகவே புல்வாமா, சர்ஜிகல் ஸ்டிரைக் என மடைமாற்றம் செய்யும் வித்தைகளிலும் நன்கு தேர்ந்து இருக்கிறது நமோ அரசு.

 

துப்புரவு தொழிலாளர்களின் கால்களை மிகுந்த கரிசனத்தோடு மோடி கழுவி விடும் காட்சிகளை ஆஸ்கர் விருது குழு இன்னும் பார்க்கவில்லை போலும்!

 

– பேனாக்காரன்