Saturday, November 9மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘விவேகம்’ விமர்சனம் – ‘மாஸ் லெவல்’!

பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று (24/8/17) வெளியாகி இருக்கிறது ‘விவேகம்’. நடிப்பு: அஜித்குமார், காஜல் அகர்வால், அக்ஷராஹாஸன், விவேக் ஓபராய், கருணாகரன். இசை: அனிருத். இயக்கம்: ‘சிறுத்தை’ சிவா. சர்வதேச உளவுப்பிரிவு போலீஸ் அதிகாரியாக வருகிறார் ஏகே என்ற அஜெய்குமார் என்ற அஜித்குமார். வழக்கம்போல் அவருடைய குழுவில் நான்கு போலீஸ் அதிகாரிகள் வருகின்றனர். அவர்களில் ஒருவர் ஆர்யன் என்ற விவேக் ஓபராய்.

இந்தியாவில் சர்வதேச தீவிரவாதிகள் மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த அணு குண்டுகளை வைத்து விடுகின்றனர். அவற்றில் ஒரு குண்டு வெடித்து, நூற்றுக்கணக்கானோர் மரணமடைகின்றனர். மீதம் உள்ள இரண்டு குண்டுகளையும் வெற்றிகரமாக அகற்றினாரா? கர்ப்பிணியாக இருக்கும் தன் காதல் மனைவி காஜல் அகர்வாலை வில்லன் கும்பலிடம் இருந்து காப்பாற்றினாரா? என்பதை விவரிக்கிறது, ‘விவேகம்’.

இதன் பிறகு, இந்தியாவில் இருந்து செர்பியா நாட்டிற்கு கதை நகர்கிறது. படத்தின் 80 சதவீத காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில்தான் படமாக்கப்பட்டு உள்ளது. இதுவும் தமிழ் சினிமாவுக்கு புதியதுதான்.

இரண்டாவது காட்சியிலேயே, பயங்கரவாதிகளின் கூடாரத்திற்குள் அதிரடியாக நுழைந்து, இரண்டு கைகளாலும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வீழ்த்தும் காட்சியிலேயே அஜித்தின் மாஸ் ஆக்ஷன் ஆரம்பம் ஆகிவிடுகின்றன. அதிலும், பத்து ஹெலிகாப்டர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் சூழ்ந்து அவர் மீது தாக்குதல் நடத்த, அவர்களை சுட்டு வீழ்த்தி ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்து தப்பிக்கும் காட்சிகளில் அஜித்குமார் அதிரடி ஆக்ஷனில் கலக்கி இருக்கிறார். இந்த காட்சிகளில், திரையரங்கில் ரசிகர்களின் ஆரவாரம் காதை கிழிக்கிறது.

தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு குண்டு வைத்தது அக்ஷராஹாஸன்தான் என ஆரம்பத்தில் நம்புவதும், பின்னர் அவர் குற்றமற்றவர் என்று தெரிய வந்ததும் அவரை காப்பாற்ற முயல்வதும், தன் கண் எதிரிலேயே அக்ஷராஹாஸன் கொல்லப்படும் காட்சிகளிலும் அஜித்குமாரின் நடிப்பு அபாரம். குறிப்பாக, கர்ப்பிணி மனைவியான காஜல் அகர்வாலுடனான காதல் காட்சிகள், எமோஷனல் காட்சிகளில் அஜித்குமாருடன், காஜலும் பெரிய அளவில் ஸ்கோர் செய்கிறார். காஜலுக்கு இந்தப்படம் பெரிய திருப்புமுனையாக அமையும்.

”வாழ்க்கையில இழக்கக்கூடாத ரெண்டு விஷயம். ஒண்ணு…அப்பா, அம்மாவின் அன்பையும், இன்னொண்ணு நல்ல நட்பையும் இழக்கவே கூடாது,”, ”இன்னும் இந்த உலகத்துல விலை போகாத உண்மையும், வளையாத நேர்மையும் இருக்குடா நண்பா,” என விவேக் ஓபராயிடம் அஜித்குமார் பேசும் பஞ்ச் வசனங்களுக்கு விசில் சத்தம் பறக்கிறது.

விவேக் ஓபராய் ஓரிடத்தில், ”நண்பா…உண்மையில் இந்த உலகத்தை ஆளுறது ரகசிய அரசாங்கம்,” என்று இலுயூமினாட்டிகள் பற்றியும் மறைமுகமாகச் சொல்கிறார். படத்துக்கு வசனங்களும் பெரிய பலம்.

உளவுப்பிரிவுக்குள் இருந்து கொண்டே தீவிரவாத கும்பலுக்கு துணை போகும் வில்லன் பாத்திரத்தில் விவேக் ஓபராய் பின்னி இருக்கிறார். அவருக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வரலாம். ஆனால், அவருக்கான இரவல் குரல்தான் செட் ஆகவில்லை. அக்ஷராஹாஸனுக்கும் அழகான ஓப்பனிங் காட்சிகள். கமலின் மகள் என்பதற்கு பங்கமில்லாமல் நடித்திருக்கிறார் அக்ஷரா.

படத்தின் மிகப்பெரிய பலம், அனிருத்தின் இசை. வேகமான திரைக்கதை பலம் என்றாலும், அதை இன்னும் வேகப்படுத்தி இருக்கிறது, அனிருத்தின் பின்னணி இசை. வெற்றியின் கேமரா, செர்பியா, பல்கேரியா நாடுகளை அழகாகக் காட்டியிருக்கிறது. இந்திய சினிமாவில் வெற்றிக்கு மிகப்பெரும் வரவேற்பு காத்திருக்கிறது.

எல்லாவற்றையும்விட படத்தின் இறுதியில், ‘மேக்கிங் ஆஃப் விவேகம்’ குறித்து ஐந்து நிமிடக் காட்சிகள் இடம் பெறுகிறது. ஒட்டுமொத்த படத்தையும்விட இந்தக் காட்சிகளுக்கே ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதும் உண்மை.

இயக்குநர் சிவா, அஜீத்தின் ரசிகராக மாறிவிட்டார் என்பதை படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் தெரிந்து விடுகிறது. அந்தளவுக்கு காட்சிக்கு காட்சி அஜித்திற்கு பஞ்ச் வசனங்கள். ஒன்று, அவர் பேசுகிறார். இல்லாவிட்டால் அவரைப் பற்றி விவேக் ஓபராய், காஜல் அகர்வால் பேசுகின்றனர்.

‘தல’ ரசிகர்களுக்கான என்றால் இந்தப் படம் அவர்களை ஏமாற்றவில்லைதான். ஆனால் பொது ரசிகர்கள் பார்வையில் சொல்வதென்றால், தீவிரவாதம், இல்யூமினாட்டி, காதல், சென்டிமென்ட் என பல அம்சங்களை ஒரே கதைக்குள் திணிக்காமல், ஏதாவது ஒன்றை அழுத்தமாகச் சொல்லி இருந்தால் இன்னும் விவேகம் ஆக இருந்திருக்கும். பில்டப்பும் அதிகம்பா. முடியல.

– புதிய அகராதி.
24/8/17.