”கட்சியின் வளர்ச்சிக்காக
நான் சர்வாதிகாரியாகவும்
மாறுவேன். தவறு செய்தவர்கள்
தங்களை திருத்திக் கொள்ள
வேண்டும். இல்லாவிட்டால்
திருத்தப்படுவார்கள்,” என்று
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த
கட்சியின் பொதுக்குழுவில் கொஞ்சம்
காட்டமாகவே சொன்னார். கலைஞர்
பாணியிலான அரசியலில் இருந்து
சற்றே விலகி, ஜெ., மாடல்
அரசியலுக்கு தயாராகி விட்டார்
என்பதை, அப்போதே
உடன்பிறப்புகள்
உணர்ந்திருப்பார்கள்.
பொதுக்குழுவில் கர்ஜித்தது,
இப்போது அடுத்தடுத்து நடந்து
வரும் களையெடுப்பு நடவடிக்கைகள்
கழக கண்மணிகளை கொஞ்சம்
அசைத்துப் பார்த்திருக்கிறது. ஊரக
உள்ளாட்சித் தேர்தலில், ஒவ்வொரு
மாவட்டத்திலும் உள்குத்து
வேலைகளில் ஈடுபட்ட கட்சி
நிர்வாகிகள் கட்டம் கட்டப்பட்டு
வருகின்றனர்.
முதல்கட்டமாக,
சேலம் மாவட்டம் ஏற்காடு
ஒன்றிய செயலாளர் ஏ.டி.பாலுவை
கடந்த ஜன. 21ம் தேதி கட்சியின்
அடிமட்ட உறுப்பினர் பொறுப்பில்
இருந்து அதிரடியாக தூக்கிய
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
சேலம் மாவட்டத்தில் கிட்டத்தட்ட
அரை நூற்றாண்டு காலமாக ஆதிக்கம்
செலுத்தி வந்த வீரபாண்டி ஆறுமுகம்
குடும்பத்தின் மீதும் கை
வைத்திருப்பது சொந்தக் கட்சிக்குள்
மட்டுமின்றி ஒட்டுமொத்த
அரசியல் அரங்கிலும் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிப். 3ம் தேதி காலை,
சேலம் கிழக்கு மாவட்ட
திமுக பொறுப்பாளர் பதவியில்
இருந்து வீரபாண்டி ராஜா
அதிரடியாக தூக்கப்பட்டு உள்ளார்.
ஒரேயடியாக வீட்டுக்கு அனுப்பினால்
வீரபாண்டியாரின் முரட்டு பக்தர்களிடையே
சலசலப்புகள் வரக்கூடும் என்பதால்,
பத்தோடு பதினொன்றாக அவரை
தேர்தல் பணிக்குழு செயலாளராக
நியமித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 20 ஒன்றியங்களில் சேலம், அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு, கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி ஆகிய 5 ஒன்றியங்களில் திமுகவுக்கு கிடைத்திருக்க வேண்டிய தலைவர் பதவி, உள்குத்து வேலைகளால் கைநழுவிப் போனது. இந்த ஐந்து ஒன்றியங்களுமே சேலம் கிழக்கு மாவட்ட திமுகவுக்கு உட்பட்டது.
சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா சரியாக தேர்தல் வேலைகளைச் செய்யவில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டாலும், அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு, சேலம் ஒன்றியங்களில் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று திமுக கவுன்சிலர்களுக்கு வீரபாண்டி ராஜாவே நேரடியாக அழுத்தம் கொடுத்ததையும் ஆதாரப்பூர்வமாக தலைமையிடம் பற்ற வைத்துள்ளனர் அவருக்கு எதிர் கோஷ்டியினர்.
இதுகுறித்து விசாரித்த திமுக மேலிடப் பார்வையாளர் ஒருவர், வீரபாண்டி ராஜா மீதான புகார்கள் அனைத்தும் உண்மை என்று கட்சி மேலிடத்திற்கு விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். ஜன. 27ம் தேதி, அறிவாலயத்தில் வைத்து ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ். இளங்கோவன் ஆகியோர் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய பொறுப்பாளர் ஆகியோரிடமும் நேரில் விசாரணை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாகவே, வீரபாண்டி ராஜா மீது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. அவர் வகித்து வந்த பொறுப்பில், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த எஸ்.ஆர்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டு உள்ளார். மேற்கு மாவட்ட பொறுப்பாளராக, தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்த முன்னாள் எம்.பி. டி.எம்.செல்வகணபதி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
கட்சி மேலிடத்தின் நடவடிக்கை குறித்து அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் விஜயகுமாரிடம் கேட்டோம்.
”அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்து கொடுத்த பட்டியலை மேலிடத்திற்கு பரிந்துரை செய்யாமல், வீரபாண்டி ராஜா, தனக்கு வேண்டப்பட்டவர்களை மட்டுமே பரிந்துரை செய்து சீட்டுகளை பெற்றார். அதனால்தான், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் திமுகவுக்கு கிடைக்க வேண்டிய வெற்றி வாய்ப்பு 6 சுயேச்சைகளுக்கு நழுவிச் சென்றது.
ஒன்றியத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலின்போது, திமுக – 6, காங்கிரஸ் – 1, சுயேச்சைகள் – 3 பேர் என 10 பேர் ஆதரவுடன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு, 9 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தோம். அதேநேரம், 9 பேர் ஆதரவுடன் போட்டியிட்ட அதிமுக, பத்து வாக்குகள் பெற்று தலைவர் பதவியைக் கைப்பற்றியது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக திமுகவினரை ஓட்டுப்போடச் சொன்னது வீரபாண்டி ராஜாதான்.
அதேபோல ஏற்காடு ஒன்றியத்தில் திமுக கவுன்சிலர் சேகர், அதிமுக வேட்பாளரை தலைவராக முன்மொழிந்த விந்தையும் நடந்தது. அவரை அப்படிச் செய்யச் சொன்னது வீரபாண்டி ராஜாதான் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தனர். எங்கள் ஒன்றியத்தில் திமுகவின் சறுக்கலுக்கு வீரபாண்டி ராஜா மட்டுமின்றி, முன்னாள் ஒன்றிய செயலாளர் கவுதமனும் முக்கிய காரணம்.
வீரபாண்டி ராஜாவை யார் சந்திக்கச் சென்றாலும் கைக்கட்டி அடிமைபோல நின்று கொண்டுதான் பேச வேண்டும். அவர் தன்னைச் சுற்றி ஒரு கோஷ்டியை உருவாக்கிக் கொண்டு தனி அணியாக செயல்பட்டு வந்தார். இப்போது, கட்சித் தலைமை எடுத்திருக்கும் நடவடிக்கையால் சேலம் கிழக்கு மாவட்டத்தில் இனி கோஷ்டிகள் இருக்காது. எல்லாரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய வகையில் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை நியமித்திருப்பது வரவேற்கக் கூடியது,” என்கிறார்.
இதுபற்றி திமுக முன்னாள் எம்.பி., ஒருவர் நம்மிடம் பேசினார்.
”உள்ளாட்சித் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதை சரி செய்வதிலும் கட்சி மேலிடம் தீவிர கவனம் செலுத்துகிறது. சேலம் மேற்கு மாவட்டத்தில் கொங்கணாபுரம் ஒன்றியத்தில் திமுகவால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. சேலம் மாவட்டத்தில் மோசமான தோல்வி என்றால் அது மேற்கு மாவட்டத்தில்தான். அதனால் அம்மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மீதும் புகார்கள் சென்றன. ஆனாலும், அவருடைய நீண்டகால உழைப்புக்கு மரியாதை கொடுத்து, இப்போதைக்கு சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்களிடம் அவருக்கு நல்ல அறிமுகமும் உண்டு.
அதேபோல, எடப்பாடி பழனிசாமிக்கு
விலை போகாத ஆளாகவும் இருக்க
வேண்டும்; தேர்தல் நேரத்தில்
ஆளுங்கட்சியை துணிச்சலாக
‘எல்லா வகையிலும்’ எதிர்க்கக் கூடிய
நபராகவும் இருக்க வேண்டும்.
அதற்கு சரியான துருப்புச்சீட்டு
டி.எம்.செல்வகணபதி என்பதால்தான்
அவரை சேலம் மேற்கு மாவட்ட
பொறுப்பாளராக நியமித்திருக்கிறது,
கட்சி மேலிடம்.
அதுமட்டுமின்றி,
சேலம் மேற்கு மாவட்டத்தில்
வன்னியர் சமூகத்தினர் வாக்குகளும்
அதிகம். அதனால் வன்னியர்
சமூகத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.பார்த்திபன்
எம்.பி. அல்லது டி.எம்.செல்வகணபதி
ஆகிய இருவரில் ஒருவர்
நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு
இருந்த நிலையில், டி.எம்.எஸ்.க்கு வா
ய்ப்பு கிடைத்திருக்கிறது. தேமுதிகவில்
இருந்து வந்த எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு,
2016ல் எம்எல்ஏ சீட், தேர்தல்
பணிக்குழு செயலாளர், எம்.பி.,
சீட் என அடுத்தடுத்து முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டதால், இப்போதைக்கு
அவருக்கு மாவட்ட பொறுப்பாளர்
பதவி கொடுக்காமல் கட்சி
மேலிடம் தவிர்த்திருக்கலாம்.
தேர்தல் நெருக்கத்தில் அதிமுகவில்
இருக்கும் டி.எம்.செல்வகணபதியின்
பழைய ஆதரவாளர்கள் திமுகவில்
இணைய வாய்ப்பும் இருக்கு.
அதேபோல்தான் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன், மு.க.ஸ்டாலின் ஆதரவாளராக இருந்தாலும், அவரும் தேர்தல் நேரத்தில் ஒழுங்காக வேலை செய்யவில்லை. அதனால்தான் அவரை நீக்கிவிட்டு, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். அடுத்து, பிப். 21ம் தேதி திமுக உட்கட்சித் தேர்தல் தொடங்குகிறது. அப்போது இன்னும் பல அதிரடிகளை பார்க்கப் போகிறீர்கள்,” என்றார் அந்த முன்னாள் திமுக எம்பி.
சேலம் மாவட்டத்தில்
1973ம் ஆண்டு முதன்முதலாக
திமுக மாவட்ட செயலாளராக
வீரபாண்டி ஆறுமுகம் நியமிக்கப்பட்டார்.
2013ம் ஆண்டு அவர் மறையும் வரை
அவர்தான் செயலாளராக இருந்தார்.
வீரபாண்டியார் மறைவுக்குப் பிறகு,
அவருடைய மகன் வீரபாண்டி ராஜா,
சேலம் கிழக்கு மாவட்ட
பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக
திமுகவின் அதிகாரம் மிக்க பதவியில்
இருந்து வந்திருக்கிறது
வீரபாண்டியார் குடும்பம். கிழக்கு
மாவட்ட பொறுப்பாளர் பதவியில்
இருந்து ராஜா நீக்கப்பட்டதன் மூலம்,
வீரபாண்டியார் குடும்பத்தினர் திமுகவின்
ராஜபாதையில் இருந்து விலக்கி
வைக்கப்பட்டதாகவே சொல்கிறார்கள்
அவருடைய ஆதரவாளர்கள்.
இதுபற்றி வீரபாண்டி ராஜாவிடம் பேச முயன்றபோது, செல்போனை எடுத்தவர், பதில் ஏதும் சொல்லாமல் வைத்துவிட்டார்.
அதேநேரம், ”எங்கள் கட்சித் தலைமை என்ன பொறுப்பில் நியமித்தாலும் அதை ஏற்றுக்கொண்டு பணியாற்றுவதுதான் என் கடமை. சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறேன். வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில், சேலம் கிழக்கில் அடங்கியுள்ள வீரபாண்டி, ஏற்காடு, கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்று கட்சித் தலைமையின் காலடியில் சமர்ப்பிப்பேன்,” என்கிறார் எஸ்.ஆர்.சிவலிங்கம்.
அடுத்த ஆண்டு நடைபெற
உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு
வேகமாக தயாராகி வருகிறார்
மு.க.ஸ்டாலின் என்பதை
அவருடைய இத்தகைய
களையெடுப்பு நடவடிக்கைகள்
சொல்லாமல் சொல்கிறது.
– பேனாக்காரன்