Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

யுடர்ன் – சினிமா விமர்சனம்; ”குற்றத்தின் தண்டனை, மரணம்!”

 

தமிழில் ஹாரர், திரில்லர் வகைமை படங்களுக்கென இதுவரை ஆகிவந்த மரபுகளை முற்றாக தகர்த்து வீசிவிட்டு, வித்தியாசமான திரைமொழியில் வெளிவந்திருக்கிறது யுடர்ன்.

 

நடிகர்கள்: சமந்தா அக்கினேனி, ‘ஈரம்’ ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா சாவ்லா, ‘சித்திரம் பேசுதடி’ நரேன், ‘ஆடுகளம்’ நரேன், சிறுமி ஆர்னா மற்றும் பலர்.

 

தொழில்நுட்ப கலைஞர்கள்: இசை: பூர்ணசந்திரா தேஜஸ்வி, ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி, எடிட்டிங்: சுரேஷ் ஆறுமுகம்

 

தயாரிப்பு: ஸ்ரீனிவாச சிந்தூரி மற்றும் ராம்பாபு பண்டாரு, இயக்கம்: பவன்குமார்

 

கதை என்ன?:

 

குறிப்பிட்ட ஒரு மேம்பாலத்தில் சாலையின் நடுவே இருக்கும் தடுப்புக் கற்களை அகற்றிவிட்டு யுடர்ன் எடுக்கும் வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர். அவ்வாறு ஏன் நடக்கிறது? என்பதை, ரசிகர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வந்து, விரல் நகம் கடிக்க வைத்திருக்கிறது, யுடர்ன்.

 

திரைமொழி:

ரச்சனா என்ற பாத்திரத்தில் வரும் சமந்தா, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் பயிற்சி நிருபர். பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும், படிப்பு சார்ந்த வேலைக்குச் செல்லாமல், தனக்குப் பிடித்த பத்திரிகை துறையில் பணிக்குச் சேர்கிறார் சமந்தா. படித்தோம், திருமணம் செய்தோம், பிள்ளைகள் பெற்றோம் என்றில்லாமல் தான் சார்ந்த இந்த சமூகத்திற்கு தன்னாலான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவர் என்பதை நாயகிக்கும் அவருடைய அம்மாவுக்குமான உரையாடலில் புரிய வைத்து விடுகிறார் இயக்குநர்.

 

சென்னையின் வேளச்சேரியில் குறிப்பிட்ட ஓரிடத்தில் சாலையின் நடுவே இருக்கும் தடுப்பு கற்களை நகர்த்திவிட்டு யுடர்ன் எடுக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது. அவ்வாறு மெனக்கெட்டு சாலை தடுப்பு கற்களை நகர்த்திவிட்டு யுடர்ன் எடுக்கும் வாகன ஓட்டிகளின் மனநிலையை அறிந்து கட்டுரை எழுத திட்டமிடுகிறார் சமந்தா.

 

அந்த மேம்பாலத்தில் சாலையோரம் வசிக்கும் ஒரு பிச்சைக்காரர்தான், குறிப்பிட்ட அந்த இடத்தில் சாலை தடுப்பு கற்களை நகர்த்திவிட்டு யுடர்ன் எடுக்கும் வாகனங்களின் பதிவு எண்களை குறித்து வைத்துக் கொடுக்கிறார். இதற்காக தினமும் அவருக்கு நூறு ரூபாய் கொடுத்து வருகிறார் சமந்தா.

இப்படி பத்து வாகன ஓட்டிகளின் முகவரிகளை சேகரித்து விடும் சமந்தா, அவர்களை பேட்டி எடுக்க முடிவெடுக்கிறார். இந்த நிலையில்தான், அவர் யாரையெல்லாம் பேட்டி எடுக்க வேண்டும் என்று தீர்மானித்து இருந்தாரோ அவர்கள் அனைவருமே வேறு வேறு நாள்களில் மர்மமான முறையில் இறந்து போயிருப்பது தெரிய வருகிறது.

 

குறிப்பிட்ட ஒரு சாலையில், விதிகளை மீறி யுடர்ன் அடிக்கும் வாகன ஓட்டிகள் மட்டும் அடுத்தடுத்து இறந்து போவதன் மர்மம் என்ன? அந்த மரணங்களுக்கும் சமந்தாவுக்கும் உள்ள தொடர்பு என்ன? போலீசாரின் சந்தேகப்பட்டியலில் இருந்து நாயகி விடுபட்டாரா? என்பதை பரபரப்பான திரில்லிங் உடன் விவரிக்கிறது யுடர்ன்.

 

கலைஞர்களின் பங்களிப்பு:

 

குட்டையாக வெட்டப்பட்ட வித்தியாசமான சிகை அலங்காரத்தில் சமந்தா ரசிகர்களை வசீகரிக்கிறார். சக நிருபருடனான காதலை ஒரு காபி சாப்பிடலாமா எனக் கேட்பதிலேயே தன் உணர்வை மிக இயல்பாக, ரசிக்கும் விதமாக வெளிப்படுத்தி விடுகிறார் நாயகி.

 

போலீசார் தன்னைத்தான் குற்றவாளியாக சந்தேகிக்கிறார்கள் எனும்போது ஏற்படும் படபடப்பு… தவிப்பு, விபத்தினால் இரண்டு உயிர்கள் பலியாவதற்கு காதலனே காரணம் ஆகிவிட்டானே என்று அறிந்து, அவனை பலி கொடுக்க வேண்டுமே எனும்போது ஏற்படும் தவிப்பையும், மனப்போராட்டங்களையும் மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறார் சமந்தா. காட்சிக்குக் காட்சி வந்தாலும் சமந்தாவை ரசித்துக் கொண்டே இருக்கலாம். மொத்தப் படத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார்.

கிரைம் ரிப்போர்ட்டராக வரும் ராகுல் ரவீந்திரன் அளவான நடிப்பால் கவர்கிறார். அந்த பாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்திப் போகிறார்.

 

‘மிருகம்’, ‘ஈரம்’ படங்களின் மூலம் கவனம் பெற்ற ஆதி, காவல்துறை உதவி ஆய்வாளர் நாயக் எனும் பாத்திரத்தில் வருகிறார். ‘சொல்லப்போனா இந்த கேஸில் நீதான் மெயின் சஸ்பெக்ட்’ என்று சமந்தாவிடம் சொன்னாலும், அவர் சொல்லும் நிகழ்வுகளின் அடிப்படையில் மர்ம மரணங்களுக்கு சமந்தா காரணம் இல்லை என்பதை உணர்கிறார். அதனால் உயரதிகாரியின் உத்தரவையும் மீறி, சமந்தாவுக்கு ஒரு நண்பராக உதவுகிறார். போலீஸ் அதிகாரியாக மிடுக்காக விசாரிக்கும்போதும், நாயகியின் மனநிலையை புரிந்து கொண்டு உதவும்போதும் சபாஷ் போட வைக்கிறார் ஆதி.

 

‘ஆடுகளம்’ நரேன், வழக்கமாக வரும் கண்டிப்பான போலீஸ் உயரதிகாரி. ‘சித்திரம் பேசுதடி’ நரேன், மனைவி, குழந்தை ஆகியோரின் மரணத்திற்கு தானே காரணம் ஆகிவிட்டோமே என்ற குற்ற உணர்வில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும்போது பார்வையாளர்களின் மனங்களை கனக்க வைக்கிறார்.

 

நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழில் முகம் காட்டியிருக்கும் பூமிகா சாவ்லா, அழகான பேய். சில காட்சிகளே என்றாலும், அவர் வந்து போகும் காட்சிகள் அனைத்தும் திக்… திக்… ரகம். ‘அப்பாவை விட்டுடுமா…’ என கெஞ்சும் அந்த மழலை (சிறுமி அர்னா) எல்லோர் மனங்களையும் கொள்ளை அடித்து விடுகிறாள்.

 

தொழில்நுட்ப கலைஞர்கள் எப்படி?:

 

படத்திற்கு பெரும் பலம் படத்தொகுப்பு. அடுத்து என்ன நிகழக்கூடும் என்பதை கொஞ்சமும் யூகிக்க முடியாதபடி படத்தை மிக மிக கச்சிதமாக, நேர்த்தியாக படத்தொகுப்பை கொடுத்திருக்கிறார் எடிட்டர் சுரேஷ் ஆறுமுகம். ஒரு காட்சியைக்கூட இனி வெட்டி எறிந்துவிட முடியாது. அந்தளவுக்கு ‘Fit as a Fiddle’.

 

விபத்து நடக்கும் இடம், கான்கிரீட் காடுகளாக காட்சியளிக்கும் பெருநகரம், அந்த பிரம்மாண்ட அபார்ட்மென்ட்டை காட்டிய விதம் என வித்தியாயமான கோணங்களால் பரபரப்பை கூட்டுகிறார் ஒளிப்பதிவாளர், நிகேத் பொம்மி. காட்சிக்கேற்ற லைட்டிங்.

போலீசாரை தெறிக்க விடும்படி கெத்து காட்டும் அந்த வக்கீலை சந்தித்துவிட்டு மாடிப்படிகள் வழியாக கீழே இறங்கி வந்து காரில் கிளம்பிச் செல்லும்போது, திடீரென்று அந்த வக்கீல் பலத்த ரத்தக்காயங்களுடன் சடலமாக காரின் முகப்புக் கண்ணாடியில் மோதி விழும்போது பின்னணி இசையால் பார்வையாளர்களை மிரட்டி விடுகிறார், பூர்ணா சந்திரா தேஜஸ்வி. மிரட்டலான பின்னணி இசையால் திரில்லர் அனுபவத்தை பல இடங்களில் கொடுத்து விடுகிறார்.

 

இயக்குநர் எப்படி?:

 

கதையும், வலுவான திரைக்கதை அமைப்பிலும்தான் ஒரு படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது என்பதை புரிந்து வைத்திருக்கிறார் இயக்குநர் பவன்குமார். கன்னடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இதே பெயரில் இந்தப் படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. மேற்சொன்ன இரண்டு காரணங்களால்தான் அவர் அதே பெயரில் தமிழ், தெலுங்கில் இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது ரீமேக் செய்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

 

யூகிக்க முடியாத வகையில் கதையை நகர்த்திச் செல்வதில் பவன்குமார் கவனிக்க வைக்கிறார். சிவப்பு ஜாக்கெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்தான் ஏதுமறியாத குழந்தையின் சாவுக்குக் காரணம் எனும்போது பார்வையாளர்கள் இயல்பாகவே அந்த நபர், நாயகியின் காதலன்தான் என்ற யூகத்திற்கு வந்திருக்கக் கூடும். ஆனால் அந்த யூகமும் தவறானது என அடுத்த காட்சியிலேயே இயக்குநர் உணர்த்தி விடுகிறார். இதுவே அவருடைய ஆகப்பெரிய பலம்.

 

குழந்தையின் கொலைக்குக் காரணமானவன் யார் என்பதை அடையாளம் காட்ட ரச்சனா, ஒரு பிங்க் நிற பலூனை வாங்கி அதில் வண்டியின் பதிவு எண், பெயரை எழுதி, குழந்தை எந்த இடத்தில் இடறி விழுந்து விபத்தில் சிக்கியதோ அதே இடத்தில் சாலையின் தடுப்பில் ஒரு நூலில் கட்டி பறக்கவிட்டுச் செல்வார். குழந்தை விபத்தில் சிக்கிய நாளன்றும் சிறுமி ஒரு பிங்க் நிற பலூனை கையில் பிடித்தபடி அம்மாவின் பின்னால் அமர்ந்து செல்வாள். இதுபோன்ற, உணர்வுப்பூர்வமான காட்சி அமைப்புகளில் இயக்குநர் ரசிகர்களை ரொம்பவே கவர்கிறார்.

 

¢அதற்காக படத்தில் தர்க்க முரண்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அந்தக் குறைகளை வெகுசன ரசிகர்களின் சிந்தனையில் எழாமல் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றதில் இயக்குநர் முழுமயை£க வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம்.

 

குற்றத்தின் தண்டனை மரணம்:

 

சமகாலத்திற்கு தேவையான ஒரு கருத்தை மையப்புள்ளியாகக் கொண்டு திரில்லர் வகை படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர். சக மனிதர்களின் அலட்சியம் பிறருக்கு எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை யுடர்ன் படத்தைவிட அருமையாக எந்தப் படமும் சொல்லி விட முடியாது.

 

‘யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன? நாம் நன்றாக இருந்தால் சரிதான்’ என்ற பொதுப்புத்தியில் உறைந்து கிடக்கும் மனிதர்களுக்கு இந்தப்படம், தக்க பாடம். அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே. அதற்கு ஒரே தண்டனை, மரணம்.

 

யுடர்ன், அரிதான வரவு.

 

– வெண்திரையான்.