Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஆளுங்கட்சியினர் என்னிடம் 80 லட்சம் ரூபாய் பேரம் பேசினாங்க! முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா தடாலடி!!

தமிழகத்தில்,
அண்மையில் நடந்த ஊரக
உள்ளாட்சித் தேர்தலில் பணம்
பெருமளவில் ஆதிக்கம்
செலுத்தினாலும், உள்ளூரில்
செல்வாக்கு படைத்த
சாமானியர்களும் பரவலாக
வெற்றி பெற்றிருப்பதையும்
காண முடிந்தது. அதேநேரம்,
முதன்முறையாக மாநில
கட்சிகள் அளவில்,
திருநங்கை ஒருவரும்
ஒன்றிய கவுன்சிலராக
அதிரி புதிரியாக வெற்றி பெற்று
மக்களின் கவனத்தை
பெரிதும் ஈர்த்து இருக்கிறார்.

நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோடு ஒன்றியம்,
இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட
கருவேப்பம்பட்டி ஊராட்சி,
கடந்த இருபது ஆண்டுக்கும்
மேலாக அதிமுகவின் கோட்டையாக
இருந்து வந்திருக்கிறது. போட்டியிட்ட
முதல் தேர்தலிலேயே
திருநங்கையான ரியா (29),
அதிமுக கோட்டையை தகர்த்தெறிந்து
திமுக வசமாக்கி இருக்கிறார்.
ஆண் பாதி, பெண் பாதியாக
காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர்
மண்ணில் திருநங்கையான ரியா
வெற்றி பெற்றிருப்பது தர்க்க
ரீதியிலும் பொருந்தி போகிறது.

 

திருச்செங்கோடு 2வது வார்டு
ஒன்றிய கவுன்சிலராக இதுவரை
வெற்றி பெற்றவர்களின் வாக்கு
வித்தியாசம் அதிகபட்சம் 150
வாக்குகளை தாண்டியதில்லை.
ஆனால் ரியா, 950 வாக்குகள்
வித்தியாசத்தில் ஆளுங்கட்சி
வேட்பாளரை வீழ்த்தியிருக்கிறார்.
பட்டியல் சமூகத்தினருக்கான
ரிசர்வ் வார்டுதான்
இந்த கருவேப்பம்பட்டி.

 

தேர்தல் பரப்புரை, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, மறைமுகத் தேர்தல் களேபரங்கள் எல்லாம் முடிந்து, சற்றே பரபரப்பு தணிந்திருக்கும் ஓர் அந்திப்பொழுதில் ரியாவை அவருடைய வீட்டில் சந்தித்தோம்.

 

வீட்டின் முகப்பில்,
அரசு மானியத்தில் கட்டப்பட்ட
தனிநபர் கழிப்பறை இருக்கிறது.
அதற்கு கதவுகூட போட இயலாத
நிலையில், தகரத்தை வைத்து
மறைத்து இருக்கிறார்கள்.
ரியா குடும்பத்தின் பொருளாதார
வலிமையை அந்த தகரக் கதவே
சொல்லாமல் சொல்லி விடுகிறது.
வீட்டின் நடுக்கூடத்தில் அலமாரியில்,
‘நிறைந்து வாழும் கலைஞர்
நினைவு மலர் 2019’ என்ற
நூல் இருந்தது. அப்பா, அன்பரசன்.
போர்வெல் லாரி புரோக்கர்.
அம்மா, சின்ன பாப்பா.
விவசாயக்கூலி. ரியாதான்
மூத்த மக(ன்)ள்.
தம்பி, சிலம்பரசன்,
டெம்போ ஓட்டுநர்.

 

திமுகவின்பால் ஈர்க்கப்பட்டது, ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றதைப் பற்றியெல்லாம் விரிவாக பேசினார் ரியா.

”மூன்றாம் பாலினத்தவரை
இந்த சமுதாயம் எப்படி எல்லாம்
கேலியான பெயர்களைச் சொல்லி
அழைக்கும் என்பது உங்க
எல்லாருக்குமே தெரியும். ஆனா,
மறைந்த திமுக தலைவர்
கலைஞர் அய்யா, எங்களைப்
போன்ற மூன்றாம் பாலினத்தவர்களை
‘திருநங்கை’, ‘திருநம்பி’ என
அழகான தமிழில் பெயரிட்டு
அழைத்தார். அந்த நிமிஷத்துல
இருந்தே எனக்கு கலைஞர்
அய்யா மீதும், திமுக மீதும்
பற்று வந்துடுச்சு.

 

எங்களோட கருவேப்பம்பட்டி
பஞ்சாயத்துல ஆளுங்கட்சியினர்
எந்த நலத்திட்டங்களையும்
செய்யறது இல்ல. சில ஊழல்
முறைகேடுகளும் நடந்தது.
அதையெல்லாம் பஞ்சாயத்து
தலைவர்கிட்ட தைரியமாக
கேள்வி கேட்பேன்.
எங்க அப்பாவும் எனக்கு
தூண்டுதலாக இருந்தார்.
அப்படித்தான் எனக்குள்ள
அரசியல் ஆசை வந்தது.
திருநங்கைகளையும் எல்லா
மனுஷங்க போல சமமாக
நடத்தும் ஒரே கட்சி திமுகதான்.
அதனால, என்னுடைய அரசியல்
பயணத்துக்கு திமுகதான்
சிறந்த களமாக இருக்கும்னும்
தோணுச்சு. உள்ளூர் திமுக
பிரமுகர்கள் மூலமாக
அஞ்சு வருஷத்துக்கு
முன்னாடி கட்சியில
இணைஞ்சுட்டேன்.

 

கனிமொழி அக்கா எம்.பி.
தேர்தலில் தூத்துக்குடியில்
போட்டியிட்டப்ப, அவருக்காக
பிரச்சாரம் செய்ததுதான்
என்னுடைய முதல் அரசியல்
மேடை. என்னைப் போன்ற,
சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட
திருநங்கைகளுக்காகக்கூட
திமுக பாதுகாப்பாக இருக்கு.
திமுகவால்தான், நிச்சயமாக
ஒட்டுமொத்த மக்களுக்கும்
நன்மைகளைச் செய்ய முடியும்னு
பேசினேன். மக்களும் கைத்தட்டி
உற்சாகம் அளித்தனர்.

இந்த நிலையில்தான்,
திமுக தலைவர் தளபதி
(மு.க.ஸ்டாலின்) திருநங்கைகளும்
தேர்தல் அரசியலில்
பங்கெடுத்துக்கணும்னு
ஒரு கூட்டத்துல பேசி,
தீர்மானமும் கொண்டு வந்தாரு.
அப்போதே அவரை நான்
ரோல்மாடலாக ஏத்துக்கிட்டேன்.
அதன்பிறகு உள்ளாட்சித்
தேர்தல் அறிவிப்பு வந்தபோது,
திருச்செங்கோடு 2வது
ஒன்றியத்தில் கவுன்சிலர்
சீட் கேட்டு விண்ணப்பிச்சேன்.
மேலும் சிலரும் சீட்
கேட்டிருந்தாங்க. ஆனா,
கட்சித்தலைமை என் மீது
நம்பிக்கை வைத்து
வாய்ப்பு அளித்தது.
அந்த நம்பிக்கையை,
என்னுடைய வெற்றியின்
மூலமாக காப்பாத்தியிருக்கேன்,”
என வெற்றியின் பூரிப்பு
குறையாமல் பேசினார் ரியா.

 

”வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது சம்பிரதாயமாகவே ஆகிவிட்ட சூழலில், தேர்தல் செலவுகளை எப்படிச் சமாளித்தீர்கள்?” என்றோம்.

 

”சார், சொன்னால் நம்ப மாட்டீங்க…
ஓட்டுக்காக எங்க மக்களுக்கு
நான் ஒத்த ரூபாய் கூட கொடுக்கல.
அதுதான் நிஜம். ஆனால்,
என்னுடன் பிரச்சாரத்திற்கு
வந்தவர்களுக்கு மட்டும் தினமும்
மூன்று வேளை உணவு,
போக்குவரத்து வசதிகள்
செய்து கொடுத்தது மட்டும்தான்
என்னோட அதிகபட்ச
தேர்தல் செலவாக இருந்தது.

 

காய்கறி வாங்கி குழம்பு
வைக்கிற காச மிச்சம் பிடிச்சா,
தேர்தல் செலவுக்கு ஆகும்னு,
பிரச்சாரம் நடந்த நாள்களில்
வெறும் சோத்துல தண்ணீய ஊத்தி
கரைச்சு குடிச்சிட்டு நான், அம்மா,
அப்பாலாம் ஓட்டுக் கேட்க
போயிருக்கோம். பால் வாங்கினாலும்
செலவாகும்னு பால் கலக்காத
டீ தான் குடிப்போம். அதுக்காக,
எங்க கூட வந்தவங்க யாரோட
வயித்தையும் காயப்போட்டுடல.
அவர்களுக்கு தேவையானதை
செய்து கொடுத்தோம்.

 

கருவேப்பம்பட்டி ஊராட்சியில மொத்தம் 12 வார்டு இருக்கு. 24 சின்னச்சின்ன ஊர்கள் இருக்கு. எல்லா இடத்துக்கும் ஒரு வீடு விடாமல் ஓட்டு கேட்டுப் போயிருந்தோம். உள்ளூர் திமுக நிர்வாகிகள் மட்டுமில்லாம, சின்ராஜ் எம்.பி.யும் எனக்காக ஓட்டு கேட்டு வந்தாரு. அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் மேல மக்களுக்கு எப்பவும் நம்பிக்கை இருந்ததில்ல. ஏன்னா, அவங்க கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றியதில்ல. அதனால நான் மக்களிடம் எந்த வாக்குறுதியும் கொடுக்கல. திருநங்கையான எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. வெற்றி பெற்றால், இந்த ஊருக்கு என்னென்ன தேவையோ அதை செய்து தருகிறேன் என்று மட்டும்தான் சொல்லி ஓட்டு கேட்டேன். ஜெயிக்க வைச்சுட்டாங்க. அதுதான் திமுக மீதும், உதய சூரியன் சின்னத்தின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கைனு நினைக்கிறேன்.

 

உள்ளாட்சித் தேர்தலில் நான் வெற்றி பெற்றதை அறிந்து கனிமொழி அக்காவே போன் செய்து வாழ்த்து தெரிவிச்சாங்க. தளபதி, வாழ்த்துச் சொன்னாரு. ட்விட்டர்லகூட கருத்து பதிவு செய்திருந்தாரு.

நான் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தபோதே, ‘இதெல்லாம் தேர்தலில் நிற்க ரூல்ஸ்ல இடமில்லை. எப்படியும் கடைசி நாளில் வேட்புமனுவை நிராகரிச்சுடுவாங்க. இதெல்லாம் பஸ்ஸ்டாண்டுல கடை கடையா கைத்தட்டி காசு வாங்க ஓடிப்போய்டும்னுலாம்,’ ஆளுங்கட்சிக்காரங்க பிரச்சாரமே பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ச்சே! என்ன… இவ்வளவு கேவலமாக பிரச்சாரம் செய்கிறார்களேனு கஷ்டமாக இருந்தது. இதுதான் அரசியலானு கூட தோணுச்சு. இதுல என்ன வேடிக்கைனா, என்ன தரக்குறைவாக விமர்சனம் செய்த அதே ஆளுங்கட்சிக்காரங்கதான், நான் ஜெயிச்சவுடன் என்னுடைய ஆதரவு கேட்டு, 80 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசினாங்க. நான் எதற்கும் மசியல,” என பட்டாம்பூச்சியாய் தடதடத்தார் ரியா.

 

எந்த வயதில் உங்களுக்குள் ஒரு பெண் இருப்பதை உணர்ந்தீர்கள் என்று கேட்டோம். எந்தவித ஒளிவு மறைவுமின்றியும் பகிர்ந்து கொண்டார்.

 

”எனக்கு 12 வயசு இருக்கும். அப்போதுதான், நான் ஆணல்ல…. ஆண் தோற்றத்தில் இருக்கும் ஒரு பெண் என உணரத் தொடங்கின கட்டம். என்னுடைய நடவடிக்கைகளைப் பார்த்துட்டு பள்ளிக்கூடம், அப்புறம் ஊர்ல எல்லாம் வழக்கமான கேலி கிண்டல் எல்லாம் பண்ணுவாங்க. பெரிய தலைவலியாக இருக்கும். மனதளவில் பெண்ணாக உணரத் தொடங்கியபிறகு, உடல் அளவிலும் அதற்கான தோற்றம் முக்கியம்னு பட்டுச்சு.

 

என்னைப்போன்ற திருநங்கைகள் சிலரின் உதவியுடன் மும்பை சென்றேன். அங்கே, சிலிகான் மார்பக சிகிச்சையும் செய்து கொண்டேன். அங்குள்ள திருநங்கைகள் எனக்கு உதவி செஞ்சாங்க. என் தோற்றமே பெண்ணாக மாறிய பிறகு, மும்பையில் இருந்து சேலம் வந்தேன். சேலம் வந்தபோது பெற்றோரை சந்திக்க ஆசைப்பட்டு அவர்களுக்கு தகவல் கொடுத்தேன். என்னைத்தேடி சேலத்திற்கு வந்த அம்மாவுக்கு என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் என் தம்பி ‘டக்’குனு ‘இதோ அண்ணன்மா’னு கண்டுபிடிச்சிட்டான்.

 

என்னைப் பார்க்கப் போனால் வெட்டி போட்டுடுவேன்னு அம்மாவை, அப்பா மிரட்டினார். வீட்டுக்கு வந்தால் என்னையும் வெட்டிடுவேன்னு சொன்னாரு. ஆனால் நான் வீட்டுக்கு வந்தபோது அப்பாவுக்கு என் மீது வருத்தம் இருந்தாலும், கோபம் இல்லை. எங்க வீட்டுக்கு பலர் வந்து என்ன அதிசயமாக பார்த்துட்டுப் போனார்கள். கொஞ்ச நாளாக இந்த வீட்டில் மக்கள் வந்து, போய்ட்டே இருப்பார்கள். ஆனால் அப்போது வந்த கூட்டத்தை விட, இப்போது நான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, என் வீட்டுக்கு வந்து இந்த ஊரே என்னை வாழ்த்திட்டுப் போறாங்க. என் மனசுல இருந்த வலி எல்லாம் போன மாதிரி இருக்கு. அம்மா, அப்பாவுக்கும் ஒரே சந்தோஷம். காலப்போக்கில் அவங்களும் என்னை மூத்த மகளாகவே பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க,” என்கிறார் ரியா.

 

”அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?” என்றோம் நாம்.

 

”எங்க ஊர்ல பசங்க,
பொண்ணுங்க எல்லாமே
ஒரு டிகிரி, ரெண்டு டிகிரினு
முடிச்சுட்டு சரியான வேலைவாய்ப்பு
இல்லாம கஷ்டப்படுறவங்கதான் அதிகம்.
அவங்களுக்கு சுயவேலைவாய்ப்பு,
படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பு
கிடைப்பதற்காக சில தனியார்
நிறுவனங்களிடம் பேசி இருக்கிறோம்.
பெண்களுக்கு அழகுக்கலை,
தையல் பயிற்சி அளிக்கவும்
திட்டமிருக்கு. அவற்றை
செயல்படுத்துவதுதான்
என்னுடைய முதல் வேலை,”
என நம்பிக்கை மிளிரச்
சொன்னார் ரியா.

 

– பேனாக்காரன்