Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நிலம் உங்களுக்கு… ஆனால் உரிமை எங்களுக்கு! சதிராடும் சேலம் ஆவின்!!

கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழகத்தில் ஒன்பது முறை ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது. ஆனால், ஆவின் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்து, வீட்டு மனை பெற்றவர்களுக்கு இன்னும் கிரய பத்திரம் வழங்காமல் சேலம் ஆவின் நிறுவனம் வஞ்சித்து வருகிறது.

 

சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டியில், கடந்த நாற்பது ஆண்டுகளாக ‘சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட்’ எனப்படும் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பால் கொள்முதல், விற்பனையில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இந்நிறுவனம், சில ஆண்டுகளிலேயே பால் பவுடர் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் ஆலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

ஆலை விரிவாக்கத்திற்காக தளவாய்ப்பட்டி, அதைச் சுற்றியுள்ள சித்தனூர், ரொட்டிக்காரன் வட்டம், பெருமாள் கரடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 25 அப்பாவி குடும்பங்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆர்ஜிதம் செய்தது. சீரங்கம்மாள் என்பவருக்குச் சொந்தமான 0.27 ஏக்கர் முதல் காத்தா கவுண்டர் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட 2.49 ஏக்கர் வரை யாரிடம் எவ்வளவு நிலம் இருந்ததோ அதை அப்படியே ஆர்ஜிதம் செய்து கொண்டது.

 

இவ்வாறு நிலம் ஆர்ஜிதம் செய்தபோது, ஆவின் தரப்பிலும், நில உரிமையாளர்கள் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, ”ஆர்ஜிதம் செய்யப்படும் நிலத்தில் சிலருக்கு காலி மனைகள் இருக்கின்றன. பலர் வீடு கட்டி குடும்பத்துடன் உள்ளனர். நிலத்தை ஆர்ஜிதம் செய்த பின்னர், எங்களுக்கு ஆவின் நிர்வாகம் இலவசமாக வீட்டு மனைகள் வழங்க வேண்டும்,” என்று நிலத்துக்காரர்கள் நிபந்தனை விதிக்க, அதை ஏற்றுக்கொண்டது ஆவின்.

 

அந்த அடிப்படையில்தான், ஆவின் நிர்வாகம் விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் வழங்கிய குடும்பத்தினர்களுக்கு 1979ம் ஆண்டில், இலவசமாக 3 செண்ட் பரப்பளவுக்கு மிகாமல் வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது. ஆவினுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் எத்தனை மனைகள், வீடுகள் இருந்தனவோ அதே எண்ணிக்கைக்கு ஆவின் நிர்வாகம் காலி மனைகளை ஒதுக்கீடு செய்தது. அப்படி, 25 குடும்பங்களுக்கு 38 மனைகள் ஒதுக்கப்பட்டது.

நிலத்துக்காரர்கள் விதித்த நிபந்தனைக்கு கட்டுப்பட்ட ஆவின் நிர்வாகம், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்த மனைகள் மீதான உரிமைகளை மிகத்தந்திரமாக தன் பெயரிலேயே தக்க வைத்துக்கொண்டது. நாளது தேதி வரை மனைதாரர்களுக்கு தனி நபர் கிரயம் செய்து தராமல் ஒரு தலைமுறைக்கு மேலாக ஏமாற்றி வருகிறது.

 

ஆவினுக்கு நிலம் வழங்கியவர்கள் எல்லோருமே அன்றாடங்காய்ச்சிகள். இருந்த நிலத்தையும் தாரை வார்த்துவிட்டு நிலமற்ற கூலிகளாக மாறிக்கிடக்கின்றனர். நிலம் வழங்கியவர்களில் பலர் தற்போது உயிருடன் இல்லை. அவர்களின் மூன்றாவது தலைமுறை வாரிசுகள்கூட தலையெடுத்துவிட்டனர். இந்த நிலையில்தான், ‘ஆவின் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் சங்கம்’ சார்பில், வீட்டு மனைகளுக்கு உடனடியாக கிரய பத்திரம் வழங்கக்கேட்டு, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று (டிசம்பர் 2, 2019) கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

 

ஆவினுக்கு நிலம் வழங்கிய அலங்காரம்மாள் (75), மயில்வேல் (77), சண்முகம் (77) ஆகியோர் நம்மிடம் பேசினர்.

 

”ஆவின் பால் பண்ணை விரிவாக்கம் செய்கிறோம். அதற்காக நிலம் தேவைப்படுதுனு 40 வருஷத்துக்கு முன்னாடி நிறுவனம் தரப்புல எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினாங்க. நம்ம ஊருல ஒரு பால் பவுடர் தொழிற்சாலை வர்றது நல்லதுதானேனு நாங்களும் நிலம் கொடுத்தோம். அப்போது செய்து கொண்ட வாய்மொழி ஒப்பந்தப்படி, ஆவின் நிர்வாகம் நிலம் கொடுத்தவங்க குடியிருக்கறதுக்காக இலவசமாக வீட்டு மனையும் கொடுத்தது.

 

ஆனா வெவரமாக, அவங்க அந்த வீட்டு மனைகளை ஆவின் கம்பெனி பெயரிலேயே பதிவு செய்துக்கிட்டாங்க. இப்ப வரைக்கும் நாங்க எங்க வீட்டுல குடியிருக்கிறோமே தவிர, அந்த வீட்டுக்கு நாங்க சொந்தக்காரங்க இல்லைனுதான் அர்த்தம்.

மயில்வேல், அலங்காரம்மாள், சண்முகம், சிவராமன்

இதனால என்னாச்சுனா, எங்களால எந்த ஒரு வங்கிலயும் வீட்டை அடமானமாக வெச்சி கடன் வாங்க முடியல. அதை வெச்சு புள்ளைங்கள படிக்க வைக்கலாம்னாலோ, கல்யாண் காட்சி பண்ணலாம்னாலோ அதுக்கும் வழியில்லாம போச்சுங்க. அதுதான் கிடக்கட்டும்…. வீட்டை வித்து புள்ளைங்களுக்கு பங்கு பாகம் பிரிச்சுடலாம்னாலும் முடியாமப் போச்சுதுங்க. படிப்பறிவு இல்லாத எங்கள, ஆவின் கம்பெனி இப்படி தந்திரமா ஏமாத்திட்டு இருக்குதுங்க. நாங்களும் எத்தன வருஷம்தான் போராடுறது…,” என்று மனம் நொந்துபோய் கூறினர்.

 

மூதாட்டி அலங்காரம்மாளோ,
”எம்பேர்ல ஒரு சொத்துனு
இருந்தாத்தான் என் மவனும்,
மருமகளும்கூட என்னை
மதிப்பாங்க கண்ணு…
நான் கண்ண மூடறதுக்குள்ள
நான் குடியிருக்கற வீட்ட
என் பேர்ல கிரயம் செய்துட்டா
தேவல… அதுக்கப்புறம்
அந்த சொத்து என்
புள்ளைக்குதானே…,”
என்றார் வெள்ளந்தியாக.

 

நிலம் வழங்கியவர்களின் சார்பில் பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவராமன் (40), ”அண்ணா… நான் பிறக்கறதுக்கு முன்பிருந்தே இப்பிரச்னை இருந்து வருகிறது. நாங்களும் அவ்வப்போது ஆவின் நிறுவனத்திடம் வீட்டு மனைகளுக்கு கிரயப்பத்திரம் செய்து கொடுக்குமாறு கேட்டு வருகிறோம். ஆனால் நிறுவனம் தரப்பில் இப்பிரச்னையில் ஆர்வம் காட்ட மாட்டேன்கிறார்கள்.

 

ஆவின் நிறுவனத்துக்கு 25 குடும்பத்தினர் நிலம் கொடுத்து, அதன்மூலம் 38 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது உண்மைதான். என்றாலும், பால் பண்ணை தரப்பில் மேலும் சில குடும்பங்களுக்கு 10 வீட்டு மனைகள் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் ஒரு தகவல் உள்ளது. அதுகுறித்தும் தெளிவு பெற வேண்டியதிருக்கிறது. இந்த தலைமுறையிலாவது வீட்டு மனைகளுக்கு கிரய பத்திரம் கிடைக்க வேண்டும். அதற்கு ஆவின் நிர்வாகம் சமூக தீர்வு காண வேண்டும்,” என்றார்.

 

இந்த வீட்டுமனைகள் ஒதுக்கீடு, கிரயம் செய்வது தொடர்பாக நமக்கு சில ஆவணங்கள் கிடைத்தன. அவற்றை ஆய்வு செய்தபோது, நிலம் கொடுத்த மக்களுக்கு வீட்டு மனை ஒதுக்கியது போலவும் இருக்க வேண்டும்; அதே சமயம் நிலத்தை ஆவின் நிறுவனம் இழந்து விடவும் கூடாது என்பதில் சர்வ ஜாக்கிரதையுடனும், மிகவும் சூழ்ச்சியுடனும் செயல்பட்டு வந்திருக்கிறார்களோ என்று ஆவினின் கடந்த கால நடவடிக்கைகள் மீது நமக்கும் சில அய்யவுணர்வு ஏற்டவே செய்கிறது.

 

ஏன் நமக்கு அத்தகைய அய்யம் ஏற்படுகிறது என்றால்…

 

ஆவின் நிறுவனத்திற்கு
நிலம் கொடுத்தவர்களுக்கு
ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளை
தங்கள் பெயர்களுக்கு கிரயம்
செய்து கொடுக்குமாறு 1986ம்
ஆண்டுதான் முதன்முதலில்
மெல்ல பேச்சு எழுந்தது.
இதற்காக, 5.5.1987ல் நடந்த
ஆவின் நிர்வாகக்குழு கூட்டத்தில்,
நிலம் கொடுத்தவர்களுக்கு
இலவசமாக வழங்கப்பட்ட
வீட்டு மனைகளை அவர்களின்
பெயர்களுக்கு கிரயம் செய்ய
பால்வளத்துறை ஆணையரிடம்
அனுமதி பெறுவது என
தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

நிர்வாகக்குழு கூட்ட
தீர்மானத்தை அடிப்படையாகக்
கொண்டு இதன்மீது
நடவடிக்கைகளை மேற்கொண்ட
சேலம் பால்வளத்துறை
துணைப்பதிவாளர்,
அடுத்தக்கட்ட
நடவடிக்கைக்காக
27.2.1998ம் தேதியன்று
சென்னையில் உள்ள
பால்வளத்துறை சிறப்பு
ஆணையருக்கு பிரேரணையை
அனுப்பி வைத்தது.
அதாவது, சேலம் ஆவினில்
1987ல் கொண்டு வரப்பட்ட
தீர்மானத்தின் மீதான
பிரேரணை கடிதத்தை,
பத்து ஆண்டுகள் கழித்துதான்
சிறப்பு ஆணையரின்
பார்வைக்கே கொண்டு
செல்லப்பட்டிருக்கிறது.
மேற்சொன்ன பத்து
ஆண்டுகளில்கூட தமிழ்நாட்டில்
மூன்று முறை ஆட்சி மாற்றம்
நடந்திருக்கிறது எனும்போது,
ஆவினின் ஆமை வேக
செயல்பாட்டை புரிந்து
கொள்ள முடியும்.

 

இதுபற்றி 31.10.2000ம்
தேதியன்று சேலம்
துணைப்பதிவாளர் அலுவலகம்,
சிறப்பு ஆணையருக்கு
நினைவூட்டல் கடிதமும்
எழுதுகிறார். ஆனால்,
அதற்குப் பிறகு சிறப்பு
ஆணையர் அளித்த
பதில்தான் ரொம்பவே
விசித்திரமானது.

 

அதாவது,
துணைப்பதிவாளர் அலுவலகம்
அனுப்பிய பிரேரணை கடிதமே
தங்களுக்கு நாளது தேதி வரை
கிடைக்கவில்லை என்று
ரொம்பவே ‘பொறுப்பாக’ பதில்
அளித்துள்ளது, சிறப்பு
ஆணையர் அலுவலகம்.
அதன்பிறகு, துணைப்பதிவாளர்
அனுப்பிய கடித நகல்,
சிறப்பு ஆணையருக்கு
16.11.2000ம் தேதி
அனுப்பப்பட்டது.

 

இதையடுத்து
சிறப்பு ஆணையர் அலுவலகம்,
சேலம் பால்வளத்துறையிடம்
அடுக்கடுக்கான வினாக்களை
தொடுத்தது. அது, அதிகார
மையங்கள் ஒருவருக்கொருவர்
பரஸ்பரம் சுமத்திக்கொள்ளும்
போலி சண்டைகள்.

 

அதாவது, இலவசமாக
ஒதுக்கீடு செய்யப்பட்ட
வீட்டு மனைகளுக்கு
ஏன் ஆவின் நிர்வாகம்
கிரயம் செய்து தர வேண்டும்?,
23.6.1987ல் சேலம் ஆவின்
நிர்வாக இயக்குநர் எழுதிய
கடிதத்தின் மீது செயல்பட
13 ஆண்டுகள் தாமதம் ஏன்?,
1979ல் வீட்டுமனைகளை
இலவசமாக வழங்குவதற்கு
முன் ஆணையரிடம்
ஏன் அனுமதி பெறவில்லை?,
மனைதாரர்களுக்கு
ஆவின் நிறுவனம் கிரயம்
செய்து தர வேண்டும்
என்பதற்கு ஏதேனும்
ஒப்பந்தம் உள்ளதா?
இப்படி நோணாவட்டமான
கேள்விகளை எழுப்பி
இருந்தார் சிறப்பு ஆணையர்.

 

இதற்கெல்லாம் முறையான பதில்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே, 1997ம் ஆண்டில் ஒருமுறை வீட்டுமனைகளை கிரயம் செய்வது தொடர்பாக சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. பின்னர் ஏனோ அந்தப் பணிகளை அப்படியே முடக்கி விட்டனர்.

 

நிலைமை இப்படி இருக்க, கடைசியாக கடந்த 2003ம் ஆண்டு, பால்வளத்துறை ஆணையர் அலுவலகம், பயனாளிகளின் எண்ணிக்கை தொடர்பான சில அய்யங்களை எழுப்பி துணைப்பதிவாளருக்கு கடிதம் எழுதி இருந்தது. அதற்கும் உரிய பதில்களை ஆதாரத்துடன் அனுப்பப்பட்டு விட்டது. ஆனால், 2003ம் ஆண்டுக்குப் பிறகு ஆவினுக்கு நிலம் கொடுத்த குடும்பத்தினர்கள் தரப்பிலான கோரிக்கை மீது யாதொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கிறது.

விஜய்பாபு

இது தொடர்பாக, நாம் ஏற்கனவே நிலம் கொடுத்தோர் சார்பில் ஆவின் பொது மேலாளர் விஜய்பாபுவிடம் பலமுறை பேசியிருக்கிறோம். அவரும், நிலம் கொடுத்தோருக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைகளை கிரயம் செய்வதாக இருந்தால் தலா ஒரு லட்சம் ரூபாய் செலவாகும். இதை ஆவின் நிர்வாகமே ஏற்றுக்கொள்வது தொடர்பாக மேலிடத்திற்கு கடிதம் எழுதுகிறோம் என்று நம்பிக்கை அளித்தார்.

 

பொது மேலாளரின் பதிலால் மகிழ்ந்த நிலம் கொடுத்த மக்கள், அதற்கான சான்றாவணங்களை தயார் செய்துவிட்டு, பொது மேலாளரிடம் கொடுப்பதற்காக காத்திருந்தனர். அந்த நிலையில் நாம் மீண்டும், அவரை சந்தித்து ஆவணங்களை சமர்ப்பிக்க நேரம் ஒதுக்கக் கோரினோம். அப்போது அவர், ‘இது வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பிரச்னை. அதனால் இது தொடர்பான கோரிக்கை மனுவை சேலம் கோட்டாட்சியரிடம் கொடுக்கும்படி’ வழி சொன்னார். அதன்பிறகுதான் மக்களும் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

 

இது தொடர்பாக சில நாள்களுக்கு முன்பு, சேலம் மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ வெங்கடாசலத்திடம் கேட்டபோது, ”சார்….இதெல்லாம் நாற்பது ஆண்டுகளாக நீடித்து வருகிற பிரச்னை. இடையில் திமுகவும் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் அவர்கள் செய்து கொடுக்கவில்லை. தளவாய்ப்பட்டி மக்களுக்கு உடனடியாக என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து தருகிறேன்,” என்று மேலோட்டமாக பதில் சொன்னார்.

 

அதிகார மையத்திற்கு
நெருக்கமாக இருப்போருக்கு,
நீர்நிலைகள் என்றும் பாராமல்
ஏரிகள், குளம், குட்டைகளை
இரவோடு இரவாக மண்ணைக்
கொட்டி நிரவி, பட்டா
போட்டுக் கொடுத்ததும்
இதே ஆட்சியாளர்கள்தான்.
உரிய காலத்தில் கிடைக்காத
தீர்ப்பும்கூட தண்டனையாகி
விடும். இன்றைக்கு 600
ரூபாய் கோடி வணிகம்
செய்யும் அளவுக்கு
வளர்ந்திருக்கும் ஆவின்
நிறுவனத்தின் வளர்ச்சியில்
நிலம் கொடுத்த மக்களுக்கும்
பங்கு இருக்கிறது. அவர்கள்
இழந்த உரிமையைத்தான்
கேட்கிறார்களே தவிர,
ஒருபோதும் உங்களிடம்
இருந்து யாசகம் அல்ல.

 

காலம் தாழ்த்தாமல் மனை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு அவர்களின் பெயரில் கிரயம் செய்வதற்கான பணிகளை ஆவின் நிறுவனம் விரைந்து முன்னெடுக்க வேண்டும்.

 

– பேனாக்காரன்