ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்களிடம் உள்ள தகவல்களை எழுத்து மூலமாக வரும் 30ம் தேதி முதல் நவம்பர் 22ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என விசாரணை ஆணையத் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப். 22ம் தேதி, உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாள்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த அவர், டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றும் வேறு சிலரும் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

கடந்த செப்டம்பர் 25ம் தேதி இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக சென்னை எழிலகத்தில் உள்ள கலசா மஹாலில் அலுவலகம் ஒதுக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் ஒலி புகாதவாறு, அறைகளில் சில மாற்றங்கள் செய்யும் பணிகள் நடந்து வந்ததால், விசாரணை ஆணையத்தின் பணிகளைத் துவங்குவதில் ஒரு மாதமாக தாமதம் ஏற்பட்டது
இந்நிலையில், விசாரணை ஆணையத் தலைவரான ஆறுமுகசாமி இன்று (அக்டோபர் 27, 2017) எழிலக அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அவர் கூறுகையில், ”ஜெயலலிதா மரணம் தொடர்பாக இந்த விசாரணை ஆணையம் இன்னும் மூன்று மாத காலத்திற்குள் விசாரணையை நடத்தி முடித்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இது குறித்த முறையான விசாரணை, வரும் 30ம் தேதி போயஸ் கார்டனில் இருந்து தொடங்கப்படும்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள், வரும் 30ம் தேதி முதல் நவம்பர் 22ம் தேதிக்குள் எழுத்து மூலமாக உறுதிமொழி பத்திர வடிவில் நேரடியாகவோ, பதிவுத்தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம்,” என்றார்.
பரிந்துரைக்க மட்டுமே முடியும்:
இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவரிடம் கேட்டபோது, ”விசாரணை ஆணையத் தலைவர்களுக்கு சந்தேகத்திற்குரிய ஒரு வழக்கை விசாரித்து, அதுபற்றிய அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க மட்டுமே உரிமை இருக்கிறது. யார் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று பரிந்துரைக்கவும் முடியும்.

ஆனால் அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட அத்தனை பரிந்துரைகளையும் அரசு ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அறிக்கையின்பேரில் யாரையாவது தண்டிக்க வேண்டும் அல்லது அபராதம் விதிக்க வேண்டும் என்பது போன்ற எந்த நடவடிக்கையாக இருந்தாலும், அதை சட்டப்பேரவையில் விவாதத்திற்கு உட்படுத்திய பிறகே செயல்படுத்த முடியும்,” என்றார்.
யார் யாரிடம் விசாரணை?:
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தபோது உடன் இருந்து கவனித்துக் கொண்ட அவருடைய தோழி சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள், அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி, அவருடைய மகள், சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே;
அவர் இட்லியும் கெட்டிச் சட்னியும் சாப்பிட்டதாக சொன்னவர்கள், சிகிச்சையில் இருந்தபோது பார்த்ததாகச் சொல்பவர்கள் என பலரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எனினும், மூன்று மாதத்திற்குள் முழுமையான விசாரணை நடத்த முடியுமா? என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
