Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தங்கப்பத்திரம் வெளியீடு பிப். 12ம் தேதி தொடங்குகிறது; மலிவு விலையில் தங்கம் வாங்கலாம்…

இந்தியப் பாரம்பரியத்தில் தங்கத்திற்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. சேமிப்பு என்றாலே வெகுமக்களின் சிந்தனையில் முதலிடம் பிடிப்பது தங்கத்தில் முதலீடு செய்வதுதான். அதற்கு அடுத்து வங்கிகளில் டெபாசிட், நிலம், இன்சூரன்ஸ், பங்குகளில் முதலீடு செய்கின்றனர்.

தங்கத்தில் முதலீடு என்றாலே
நகைகளாக வாங்குவதுதான் என்ற
மனவோட்டத்தில் மக்கள் இருக்கின்றனர்.
நகை அல்லது நாணயங்களாக வாங்கும்போது
அவசரத் தேவைக்காக உடனடியாக
அடகு வைத்தோ அல்லது அன்றைய சந்தை
மதிப்பிற்கு விற்றோ எளிதில் பணமாக்கிக்
கொள்ள முடியும். அதேநேரம்,
செய்கூலி, சேதாரம் கணக்கில்
கணிசமான இழப்பையும்
சந்திக்க நேரிடுகிறது.

ஆனால், தங்கப்பத்திரங்களில்
முதலீடு செய்வது அப்படியானது அல்ல.
இங்கு எல்லாமே காகித வடிவம்தான்.
அதாவது, டிஜிட்டல் வர்த்தகம்தான்.
ஆபரணங்களில் முதலீடு செய்வதைக்
காட்டிலும் தங்கப் பத்திரங்களில்
முதலீடு செய்யும்போது,
கணிசமான வட்டி வருமானமும் கிடைக்கிறது.
மேலும், திருடு போய் விடுமோ என்ற
அச்சமும் இல்லை என்பதோடு,
தங்கப் பத்திரங்களை ‘பத்திரமாக’
பாதுகாப்பதும் எளிமையானது.

முதலீட்டு நோக்கத்தில் மட்டுமே
தங்கம் வாங்குவோரை குறி வைத்து
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2015ம் ஆண்டு
தங்கப் பத்திரம் திட்டத்தைத்
(சவரன் கோல்டு பாண்டு ஸ்கீம்)
தொடங்கியது.

தங்கப் பத்திரங்களில் முதலீடு
செய்யும்போது 2.5 சதவீதம் வட்டி
வழங்கப்படுகிறது. ஆறு மாதத்திற்கு
ஒருமுறை இந்த வட்டி வருமானத்தைப் பெறலாம்.
நகைகளாக வாங்கும்போது செய்கூலி,
சேதாரம் வகைகளில் ஏற்படும் பண இழப்பு,
தங்கப் பத்திரங்களில் முதலீடு
செய்யும்போது ஏற்படுவதில்லை.
அப்படியெனில், இழப்பை தவிர்ப்பதும்
ஒருவகையில் சேமிப்புதானே?

நடப்பு நிதியாண்டில் நான்காம் கட்ட தங்கப்பத்திர விற்பனை பிப். 12ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. வரும் 16ம் தேதி வரை தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். முதிர்வுக் காலம் 8 ஆண்டுகள் ஆகும். முதிர்வுக் காலத்தின் முடிவில் அன்றைய தேதியில் 24 காரட் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ அந்த விலைக்கு நிகரான முதிர்வுத் தொகை வழங்கப்படும்.

முதிர்வுக்காலத்திற்கு முன்பே விற்க வேண்டும் எனில், 5 ஆண்டுகள் கழித்தே விற்பனை செய்ய முடியும்.

இந்த முறை தங்கப் பத்திரத்தில் ஒரு கிராம் விலை 6263 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, 24 காரட் தங்கத்தின் விலை ஆகும். ஆன்லைன் மூலம் பெற விரும்புவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி சலுகையும் உண்டு. அதாவது, ஆன்லைனில் கிராம் 6213 ரூபாய்க்கு பெற முடியும்.

எங்கே வாங்குவது?:

தங்கப் பத்திரத்தை அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் என்எஸ்இ, பிஎஸ்இ பங்குச்சந்தைகளில் வாங்கலாம். மொபைல் பேங்கிங், ஆன்லைன் பேங்கிங் வசதியைப் பயன்படுத்துவோர் ஆன்லைன் மூலம் தள்ளுபடி விலையில் தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்யலாம்.

வங்கிகள், தபால் அலுவலகங்களுக்குச் செல்லும்போது ஆதார் அட்டை, பான் கார்டு ஆகிய ஆவணங்களை தவறாமல் கொண்டு செல்ல வேண்டும்.

தனி நபர்கள் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரையில் தங்கப்பத்திரத்தை கொள்முதல் செய்யலாம். நிறுவனங்கள், டிரஸ்ட் பெயரில் முதலீடு செய்வோர் அதிகபட்சமாக 20 கிலோ வரை வாங்க முடியும். தங்கப் பத்திரம் மீதான முதலீட்டை, கடனுக்கு பிணையாகவும் காண்பிக்க முடியும்.

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் தள்ளுபடி விலையில் தங்கத்தைப் பெற இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

– ஷேர்கிங்