Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஒற்றை சாக்கு மூட்டையும் ஒரு கிரவுண்டு நிலமும்! அடமானம் வைக்கப்பட்ட பெண் ஊரின் அடையாளமானார்!!

சேலம் மாவட்டம்
புத்தூர் அக்ரஹாரம்
சந்தனக்காரன் காடு பகுதியில்,
‘செட்டியாரம்மா’ என்றால்
சின்ன குழந்தைகளும்
சொல்லி விடும். ஆமாம்.
பண்ணாரியம்மன் களஞ்சியம்
குழுவின் மூத்த உறுப்பினரான
ஜெயந்தியை (50) அப்பகுதியில்
‘செட்டியாரம்மா’ என்றே
அழைக்கிறார்கள். சத்தியமங்கலத்தில்
இருந்து மூட்டை முடிச்சுகளுடன்
பிழைப்புத்தேடி கைக்குழந்தைகளுடன்
சேலம் வந்த அவர், சந்தனக்காரன்காடு
கிராமத்தின் அடையாளமாக
வளர்ந்திருக்கிறார். அந்தளவுக்கு
அவர் எட்டிப்பிடித்த உயரங்கள்
அளப்பரியது.

 

”தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்து சோர்விலாள் பெண்”

என்ற அய்யன் வள்ளுவன்
வாக்கிற்கு ஏற்ப, தன்னையும்
உயர்த்திக்கொண்டு கரம் பற்றிய
கணவரையும், பெற்றெடுத்த
பிள்ளைகளையும் கரை
சேர்த்திருக்கிறார் ஜெயந்தி.
பண்ணாரியம்மன் களஞ்சியம் மகளிர் குழுவில்
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக
செயல்பட்டு வருகிறார்.
கணவர் கிருஷ்ணராஜ்.
ஒரு மகன், ஒரு மகள்.
இருவருக்கும் திருமணம்
ஆகிவிட்டது.

 

கைத்தறி நெசவாளர்
குடும்பப் பின்னணியில் இருந்து
வந்தவர் ஜெயந்தி. கைத்தறி
நாடாவின் ஊடாட்ட ஓசைதான்
அவரின் குழந்தை பிராய தாலாட்டு.
‘தெரிந்த தொழிலை விட்டவனும்
கெட்டான்; தெரியாத தொழிலில்
நுழைந்தவனும் கெட்டான்’ என்பதை
உணர்ந்து கொண்ட ஜெயந்தி,
தன் வீட்டிலேயே சொந்தமாக
ஐந்து கைத்தறிகளை போட்டிருக்கிறார்.
கோவை, ஆரணி ரக சேலைகளை
நெய்து வருகின்றனர். தவிர,
வெளியிலும் ஆறு கைத்தறி
நெசவாளர்களிடம் பாவு நூல்
கொடுத்து அவுட்சோர்சிங் முறையில்
சேலைகளை நெய்து வாங்கி
விற்பனை செய்து வருகிறார்.
அத்தனையும் சுத்தப்பட்டு.

டிஸ்கவரி சேனல் ரசிகர்களுக்கு பேர்கிரில்ஸ் ரொம்பவே பரிச்சயம். அடர்ந்த வனத்திற்குள் இருந்து, கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு எப்படி அவர் கொடிய விலங்குகள், பாம்புகளிடம் இருந்து தப்பித்து வெளியே வருகிறார் என்பதுதான் பேர்கிரில்ஸின் தொடரில் சொல்லப்படுவது. ஜெயந்தியும் கிட்டத்தட்ட பேர்கிரில்ஸ் போன்றவர்தான் என்பதை அவருடனான நீண்ட உரையாடல்களில் இருந்து உணர்ந்து கொண்டேன்.

 

”ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்தான் என்னோட பூர்வீகம். சுத்தப்பட்டு சேலைகளை கைத்தறியில் நெய்வதுதான் எங்களோட குடும்பத்தொழில். எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து இந்த தொழிலில் இருக்கிறேன் என்பதால், சுத்தப்பட்டு கைத்தறியில் எல்லாமே எனக்கு அத்துபடி. சேலம் மாவட்டம் ஓமலூர்தான் என் வீட்டுக்காரருடைய பூர்வீகம். அவங்க குடும்பத்தோட சந்தனக்காரன்காடு கிராமத்தில்தான் இருந்தாங்க. அவங்க குடும்பத்தோடு பிழைப்பு தேடி சத்தியமங்கலம் வந்து தறிப்பட்டறைகளில் வேலை செய்துட்டு இருந்தாங்க.

 

தெரிந்தவர் மூலமாக அவருக்கு கல்யாணம் செய்து வைக்க என்னை பெண் கேட்டு வந்தனர். என்னுடைய அத்தை மகனே அப்போது திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தார். ஆனால் அவர் மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கு பெண் கொடுக்க அப்பா, அம்மா ஒத்துக்கல. வசதி இல்லைனாலும் நல்ல பையனாக தெரிகிறாரே என்று என் இவருக்கு (அருகில் இருந்த கணவனை காண்பித்து) என்னை கட்டிக்கொடுத்தனர். ஆனால் கல்யாணத்துக்குப் பிறகுதான், என் வீட்டுக்காரர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்னு தெரிஞ்சது. ஒழுங்காக எந்த வேலைக்குப் போறதில்ல. சினிமா பைத்தியம்னு சொல்ற அளவுக்கு படம் பார்ப்பாரு. அதிலும் சிவாஜி படம்னா எத்தனைமுறைனாலும் பார்த்துடுவாரு. சினிமா பார்க்கறது… தண்ணீ அடிக்கிறது… காசு வெச்சி தாயக்கரம் ஆடறதுமாவே திரிஞ்சாரு.

மளிகை சாமான் வாங்கிட்டு
வரச்சொல்லி பணம்
கொடுத்துவிட்டாலும் அந்த
காசுக்கும் குடிச்சிட்டு வந்துடுவாரு.
அவ்வளவு ஏங்க… துணிப்பையைக் கூட
இரண்டு ரூபாய்க்கு வித்து
ஊறுகா வாங்கிடுவாரு.
இதுக்கிடையில எங்களுக்கு
ஒரு பெண் குழந்தையும்,
ஆண் குழந்தையும் பொறந்தது.
சாராயம் குடிக்கறதுக்காக அவர்,
ஊரைச் சுத்தி கடன் வாங்கிட்டதால
கடன்காரங்க எங்க வீட்டுக்கு
வர்றதும் போறதுமாவே இருந்தாங்க.
எங்களால இனியும் சொந்த
ஊர்ல மானத்தோட வாழ
முடியுமானு தெரியல.
இது பத்தாதுனு, என்னையும்
என் பிள்ளைகளையும் தறிக்காரர்
ஒருத்தர்கிட்ட 3500 ரூபாய்க்கு
அடமானம் வெச்சிட்டு,
சொல்லாமகொள்ளாம
என் வீட்டுக்காரரும் அவங்க
அம்மாவும் சத்தியமங்கலத்துல
இருந்து சேலத்துக்கு
ஓடிவந்துட்டாங்க.

 

ரொம்ப நாள் கழிச்சு
என் மாமியார் மறுபடியும்
சத்தியமங்கலம் வந்தாங்க.
கடன்காரர்களிடம் இருந்து
தப்பிக்க வழிதெரியாததால,
சொந்த ஊரைவிட்டு
வெளியேறிடணும்னு நினைச்சேன்.
அப்போது என் பிள்ளைகள்
ரெண்டு பேரும் கைக்குழந்தைங்க.
அவங்களையும் இழுத்துக்கிட்டு
ரெண்டு செட் துணிமணிகளையும்,
சமையலுக்குத் தேவையான
பண்டபாத்திரங்களையும் ஒரு
சாக்குமூட்டையில போட்டுக்கிட்டு
பஞ்சம் பொழைக்க சேலத்துக்கு
வந்துட்டேன். இருபது வருஷம்
ஓடிப்போச்சு. கூட என்
மாமியாரும் வந்தாங்க.

 

இப்போ நாங்கள் குடியிருக்கிற
இந்த வீட்டுலதான் 70 ரூபாய்
வாடகைக்கு குடி வந்தோம்.
கைத்தறி நெசவு வேலைக்குப்
போவேன். ஒரு சேலை நெய்தால்
175 ரூபாய் கூலி கிடைக்கும்.
அப்போது இந்த வீடு மேற்கூரை
ஓடுகூட போடாமல் அட்டை
மட்டும்தான் போட்டிருந்தது.
என் மாமியார் எனக்கு சப்போர்ட்டாக
இருந்தாங்க. ஆனா என்
வீட்டுக்காரர்கிட்ட பெரிசா எந்த
முன்னேற்றமும் வரல.

 

சேலத்துக்கு வந்த கொஞ்ச
நாள்லயே களஞ்சியம் குழுவில்
சேர்ந்துட்டேன். இந்த நிலையிலதான்
இப்போது நாங்க குடியிருக்கிற
இந்த வீடும், அதோடு சேர்ந்த
காலி நிலமும் என மொத்தம்
ஆறு சென்ட் நிலத்த
(ஒரு கிரவுண்டு பரப்பளவுக்கும்
சற்று அதிகம்) வித்துடப் போறதா
வீட்டு உரிமையாளர் சொன்னாரு.
களஞ்சியத்துல ஒரு லட்சம்
ரூபாய் கடன் எடுத்தேன்.
அதை வைத்து, இந்த வீட்டையும்
நிலத்தையும் சொந்தமாக விலைக்கு
வாங்கினேன்,” என உற்சாகமாக
சொன்னார் ஜெயந்தி.

 

ஒற்றை சாக்கு மூட்டையுடன் இந்த ஊருக்கு வந்து, வாடகைக்கு ஒண்டியிருந்த வீட்டை அடுத்த ஏழே ஆண்டுகளில் விலைக்கு வாங்கி, அதே வீட்டின் உரிமையாளராக உயர்ந்தபோது, ‘எப்படி வந்த செட்டியாரம்மா இன்னிக்கு இப்படி ஒசந்துட்டாங்களே…’ என்று அந்த ஊரே அவரைப்பற்றி வியந்து பேசியிருக்கிறது.

 

வீட்டை விரிவாக்கம் செய்வதற்காக களஞ்சியத்தில் 1.25 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருக்கிறார் ஜெயந்தி. அதையடுத்து, வீட்டிலேயே சொந்தமாக இரண்டு தறிப்பட்டறை வைப்பதற்காக 1.50 லட்சம் கடன் பெற்றிருக்கிறார். இந்த தறிகளில் நெசவாளரின் கால்களுக்கு பெரிதாக வேலைகள் இல்லை. ஏர் கம்ப்ரஷர் மூலம் இயக்கப்படும் வகையில் தறிப்பட்டறை அமைத்திருக்கிறார். இப்போது ஐந்து தறிகளை சொந்தமாக போட்டிருக்கிறார்.

 

அனைத்தும் சுத்தப்பட்டு தறிகள். ஆரணி மற்றும் கோவை ரக பட்டுச்சேலைகளை நெய்கின்றனர். மகன், கணவர் மட்டுமின்றி மூன்று நெசவாளர்களுக்கு வீட்டில் உள்ள தறிக்கூடத்திலும், பட்டுநூல் சுற்றித்தர ஒருவர் என நான்கு பேருக்கு வேலைவாய்ப்பும் அளித்திருக்கும் ஜெயந்தி, அவுட்சோர்சிங் முறையில் வெளியிலும் 6 சுத்தப்பட்டு கைத்தறி நெசவாளர்களுக்கு சேலை நெய்யும் பணிகளை வழங்கி வருகிறார்.

 

கோயம்பத்தூர் ரக பட்டுச்சேலை பாவைக்காட்டிலும், ஆரணி ரக பாவின் நீளம் ஒரு மீட்டர் வரை அதிகம். கோயம்பத்தூர் ரகத்தில் ஒரு சேலைக்கு 1500 – 1600 ரூபாய் வரை கூலி கிடைக்கும் என்றால், ஆரணி ரக சேலைக்கு 2600 ரூபாய் கூலி கிடைக்கும். கூலித்தொகையில் நான்கில் ஒரு பங்கு, நெசவாளர்களுக்கு வேலை கொடுப்பவர்கள் பங்குத்தொகையாக பெற்றுக்கொள்வார்கள் என்கிறார் ஜெயந்தி. சிறு குறைபாடுள்ள பட்டுப்புடவைகளை வெளிச்சந்தையில் நேரடியாக விற்று விடுவதால் அதன்மூலமும் கணிசமான வருவாய் கிடைக்கிறது என்கிறார்.

 

நெசவாளர்களுக்கு கூலி கொடுப்பது முதல் பட்டுச்சேலைகளை கடைகளுக்குக் கொண்டு சென்று கொடுப்பது வரை எல்லா வேலைகளையும் ஆண்களுக்கு நிகராக ஜெயந்தியே செய்து விடுகிறார்.

 

இப்போதும் தன் கணவரின் போக்கில் பெரிதாக மாற்றங்கள் இல்லை எனக்கூறும் அவர், கணவருக்கும் தினமும் 150 ரூபாய் கூலி கொடுத்து விடுவாராம். குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்ட ஒருவருக்கு கையில் பணம் கொடுத்தால் மேலும் மதுப்பழக்கத்திற்கு தூண்டுவதுபோல் ஆகாதா? எனக் கேட்டோம்.

”கையில காசு இல்லேனா
வீட்டுல இருக்கற பொருள
எடுத்துட்டுப்போய் வித்துக்
குடிச்சிடுவாரு. அதுமட்டுமில்லீங்க…
குடிச்சிட்டு ரோட்டுல எங்காவது
விழுந்து கிடந்தா நமக்குதானேங்க
அவமானம்? நாம நாலு
பேருக்கு புத்தி சொல்ற இடத்துல
இருக்கும்போது நமக்கு
நாலு பேரு புத்தி சொல்ற
மாதிரி இருந்தா நல்லாருக்குமா?
அதனாலதான், நானே அவருக்கு
தினமும் கைச்செலவுக்குனு
150 ரூபாய் கொடுத்துடுவேன்.
அவரு முன்னாடி மாதிரி இல்ல.
எவ்வளவு போதையானாலும்
வீட்டுலதான் வந்து கிடப்பாரே
தவிர ரோட்டுல விழுந்து
கிடக்கறதில்ல…,” என்ற ஜெயந்தி,
தன் மனதிலிருந்த பாரத்தை
கொஞ்சம் இறக்கி வைத்தார்.

 

பத்தாண்டுக்கும் மேலாக வெற்றிகரமாக அரிசி சீட்டு நடத்தி வருகிறார் ஜெயந்தி. அரிசி சீட்டு திட்டத்தில் சேரும் உறுப்பினர், மாதம் 200 ரூபாய் செலுத்த வேண்டும். 13 மாத திட்டம் இது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது சீட்டுப்பணம் செலுத்திய உறுப்பினர்களுக்கு 75 கிலோ கொண்ட ஒரு மூட்டை வெள்ளை பொன்னி அரிசி வழங்கி விடுகிறார்.

 

”பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி என் பொண்ணுக்கு கல்யாணம் செய்தேன். வீட்டுக்காரர் மற்றும் சொந்தக்காரர்களிடம் இருந்து எந்த ஒரு சப்போர்ட்டும் இல்லாத நிலையில், தனி மனுஷியாக போராட வேண்டிய நிலை இருந்தது. வட்டிக்குக்கூட கடன் கொடுக்க பல பேரு தயங்கினாங்க. களஞ்சியத்துல ஏற்கனவே 15 ஆயிரம் ரூபாய் கடன் நிலுவை இருந்ததால அங்கே மறுபடியும் கடன் கேட்க தயக்கமும் இருந்தது. பணத்துக்கு வழி தெரியாததால நான் ரோட்டுல நின்னு அழுதுட்டு இருந்தேன்.

 

உங்க கடன் பாக்கியை கழிச்சுட்டு புதிதாக கடன் வாங்கலாம்னு களஞ்சியம் பணியாளர்கள் சொல்லவும்தான் நம்பிக்கையே வந்தது. அதன்படியே களஞ்சியத்துல மறுபடியும் 90 ஆயிரம் ரூபாய் கடன் கிடைச்சது. பழைய பாக்கி 15 ஆயிரத்தை கழித்துக்கொண்டு 75000 ரூபாய் கொடுத்தனர். அதை வைத்து என் மகளின் கல்யாணத்தை எளிமையாக நடத்தி முடிச்சிட்டேன். மாப்பிள்ளை தரப்பில் ஏதும் கேட்கலைனாலும்கூட, அந்த நிலைமையிலயும் என் பொண்ணுக்கு ரெண்டு பவுன் நகை போட்டேன்.

 

என் மகன் கல்யாணத்தின்போதும் களஞ்சியத்தில் 2.25 லட்சம் ரூபாய் கடன் எடுத்தேன். மகனுக்காக வீட்ட கொஞ்சம் ஆல்டர் பண்ணும்போதும் கடன் வாங்கினேன். வெத்து மனுஷங்களா இந்த ஊருக்கு வந்தபோது ஒருவேளை சோத்துக்குக்கூட கஷ்டப்பட்டிருக்கோம். அந்த நேரத்துல எங்களுக்கு இந்த ஊருல பக்கபலமாக பல பேர் இருந்தாங்க. எல்லாத்துக்கும் மேலாக களஞ்சியம், குடும்பத்துல ஒருத்தர் போல இருந்தது. அதனாலதான் எந்த இடத்திலும் யாருக்காகவும் களஞ்சியத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்னு பலமுறை சொல்லி இருக்கேன். உங்ககிட்டயும் சொல்றேன்,” எனும்போது ஜெயந்தியின் கண்களில் இருந்து அவரையும் அறியாமலேயே கண்ணீர் கசிந்தது.

 

இத்தனைக்கும் ஜெயந்தி, மழைக்குக்கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர் எனும்போது அவரின் அபார உழைப்பைக் கண்டு நாம் வியக்காமல் இருக்க முடியாது.

 

– பேனாக்காரன்