Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

டெங்கு காய்ச்சலை ஒழிக்காத அரசு அகல வேண்டும்: கமல்ஹாசன் ஆவேசம்

டெங்கு காய்ச்சலை தடுக்க ஆவன செய்யாத அரசு அகல வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசை காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், விரைவில் அரசியல் களம் காண உள்ளதாகவும், தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். 100 நாள்களில் தேர்தல் வந்தாலும் தான் போட்டியிட தயாராக இருப்பதாகவும், மக்களுக்காக முதல்வர் ஆவதற்கும் தயார் என்றும் கூறியிருந்தார்.

டுவிட்டர் பக்கத்திலும், ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டியிலும், தற்போதுள்ள அதிமுக அரசுக்கு எதிராக அவர் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை பகிரங்கமாக முன்வைத்து வருகிறார். இதற்கிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்தார். சில நாள்களுக்கு முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், கமல்ஹாசனை சென்னைக்கு நேரில் வந்து சந்தித்து விட்டுச் சென்றார்.

அரவிந்த் கேஜரிவாலுடனான சந்திப்புக்குப் பின்னர் அவர் அளித்த பேட்டியில், ஊழலுக்கு எதிரான அனைவரும் என் உறவினர்களே என்று தெரிவித்தார். அரவிந்த் கேஜரிவாலும், ஊழல், மதவாதம் ஆகியவற்றை எதிர்க்கும் ஒத்த சிந்தனையாளர்கள் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசினோம் என்றும் கூறினார். இந்நிலையில் கமல்ஹாசன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்துப்பேச திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுக அரசு மீது அவர் தொடர்ந்து எதிர்க்கருத்துகளை சொல்லி வந்தாலும், நேற்று (செப். 24) அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வழக்கத்தைவிட கடும் காட்டமாகவே கருத்துகளை பதிவிட்டுள்ளார். சென்னை டிஏவி பள்ளி மாணவன், டெங்கு காய்ச்சலுக்கு பலியானதைக் குறிப்பிட்டு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ”செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜூரச் சங்கு வீண். கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யா அரசு அகல வேண்டும்,” என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு பதிவில், ”அரசு தூங்குகிறது. பெற்றோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்,” என்றும் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நான் கல்லாதவன். அதனால் நீட் தேர்வைப் பற்றி தெரியாமல் போகலாம். ஆனால் டெங்கு காய்ச்சல் பற்றி அறிவேன் என்று சொல்லி இருந்தார். அதன் தொடர்ச்சியாகவே நேற்றைய பதிவுகளையும் கருதுகின்றனர். எல்லா துறையிலும் ஊழல் நடப்பதாகச் சொல்லி வந்த கமல்ஹாசன், இப்போது இந்த அரசு அகல வேண்டும் என்று கூறியிருப்பது, அரசுக்கு எதிராக அவர் போர்முரசு கொட்டிவிட்டதாகவே அவருடைய ரசிகர்கள் புரிந்து கொள்கின்றனர்.

இருப்பினும் கமலின் இந்த கருத்துக்கு வழக்கம்போல் ரஜினி ரசிகர்கள் கிண்டலடித்து எதிர்மறையாக விமர்சித்து கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

எனினும் கமல் ரசிகர்கள், ”ஆட்சி அகற்ற கட்சி தொடங்கு ஆண்டவரே. மக்கள் உன் பின்னால் வருவர்,” என்றும், ”அரசு அகால மரணம் அடைந்து விட்டது ஆண்டவரே” என்றும் பதிவிட்டுள்ளனர்.

இனி கமல்ஹாசன், அரசுக்கு எதிரான தாறுமாறான விமர்சனங்களை காரம் குறையாமல் பகிரங்கமாக முன்வைப்பார் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் அரங்கில் நிலவுகிறது.

– இளையராஜா சுப்ரமணியம்.