Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பாலியல் அத்துமீறல்: குழந்தைகள் மீதான தாக்குதலே அதிகம்!

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களில் குழந்தைகள் மீதான தாக்குதல் நிகழ்வுகளே அதிகளவில் காவல்துறையில் பதிவாகி இருப்பது அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலங்கள் பலர், சிறு வயதில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்த அனுபவங்களை பொதுவெளியில் பகிர்ந்து வருகின்றனர். இதற்காக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் #MeToo என்ற ஹேஷ்டேக் உருவாக்கி, பாலியல் அத்துமீறல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது வெள்ளை மாளிகையில் மோனிகா லெவின்ஸ்கி என்பவர் பணிப்பெண்ணாக இருந்தார். அவருடன் கிளிண்டன் பாலியல் ரீதியில் தகாத உறவு வைத்திருந்தார் என்ற புகார் எழுந்தது. அதை ஆரம்பத்தில் மறுத்த கிளிண்டன், பின்னர் மோனிகா ஆதாரமாக ஒரு நீல நிற துணியை காட்டியபோது பகிரங்கமாக ஒப்புக்கொள்ள நேர்ந்தது.

இதையடுத்து, மோனிகா லெவின்ஸ்கி பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் குறித்து பொதுமேடைகளில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். உலகளவில் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, இந்த மண்ணை பெண்ணாக பாவிக்கும் இந்திய தேசத்தில் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது முரணாகப்படுகிறது.

புனேயில் உள்ள மூன்றாம் நிலை பாதுகாப்பு மையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 890 பாலியல் தாக்குதல் வழக்குகளை ஆய்வு செய்தபோது, பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.

அதாவது, 534 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் வயது 18க்கும் கீழ் உள்ளதாக கூறுகின்றனர் அதிகாரிகள். பாலியல் ரீதியில் அணுகும் ஆண்களின் முதல் இலக்கு, பதின்பருவ பெண் குழந்தைகள்தான் என்பது அதிர்ச்சிகரமான தகவல்.

கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் முதல் 2017ம் ஆண்டு செப்டம்பர் வரை பதிவான வழக்குகளில் 60.23 சதவீத குழந்தைகள் பாலியல் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அதில், 92.88 சதவீதம் பேர் பெண்கள். 7.12 சதவீத ஆண்களும்கூட, தாங்களும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக புகார் அளித்திருப்பது தெரிய வந்தது.

மொத்தம் பதிவான வழக்குகளில் 62.55 சதவீத வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயது 15 முதல் 18க்குள் இருக்கிறது.

மேலும், 93.63 சதவீத புகார்களில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் என்பது வெளி நபர்களால் அல்ல என்பதும், அந்தக் குழந்தைக்கு நெருக்கமான, நன்கு அறிமுகமான நபர்களாலேயே நிகழ்த்தப்பட்டு இருப்பதும் ஆய்வுகள் சொல்கின்றன.

ஆண் நண்பர்கள் போர்வையில் நன்கு பழகியவர்களும்கூட வாய்ப்பு கிடைக்கும்போது அத்துமீறத் தவறுவதில்லை என்பது மற்றொரு வேதனையான செய்தி. எனில், பெண் பிள்ளைகளை யாருடன்தான் பழக அனுமதிப்பது என்பதே இங்கு ஒரு சிக்கலான வினாவாக எழுகிறது.

இந்த ஆய்வில்கூட, 39.51 சதவீத வழக்கில் ஆண் நண்பர்களால் பாலியல் அத்துமீறல் நிகழ்ந்துள்ளதாக புகார்தாரர்கள் தெரிவித்துள்ளனர்.

சொந்த வீடுகளில் வசிப்போரை விட வாடகை வீட்டில் குடியிருக்கும்போது பெண்கள் / பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு கொஞ்சம் அச்சுறுத்தல் இருப்பதும் தெரிய வருகிறது.

மொத்தம் பதிவான புகார்களில், 26.40 சதவீதம் பாலியல் குற்றங்கள் வாடகை வீடுகளில் நிகழ்ந்துள்ளன. என்றாலும், இந்த ஆய்வு முடிவுகளை, எல்லா இடங்களுக்கும் ஒப்புமைப்படுத்த வேண்டாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. அதற்காக வாடகை வீடுகளில் குடியிருப்போர் எல்லாம் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்க வேண்டியது என்ற அர்த்தம் இல்லை.

இந்த ஆய்வில், மேலும் சில வித்தியாசமான முடிவுகளும் நமக்குக் கிடைத்துள்ளன. 21 முதல் 30 வயதுடைய ஆண்களிடம், பெண் பிள்ளைகள் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பது ஒரு விதத்தில் நல்லதுதான். ஏனெனில், பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களில் 61.80 சதவீதம் பேர் மேற்படி வயதுடையவர்கள்தான். 18 சதவீதம் பேர், 11 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர்.

பாலியல் புகார்களின் தன்மைகளை ஆய்வு செய்கையில் மற்றொரு ஆச்சர்யமான ஒற்றுமையும் இருந்தது. ஆனால் அந்தப் புள்ளி விவரத்தை வைத்துக்கொண்டு நிரந்தரமாக எந்த ஒரு முடிவுக்கும் வந்து விட முடியாது. ஆனாலும் சொல்ல வேண்டியதிருக்கிறது.

காம கொடூரன்கள் பெரும்பாலும் தங்கள் அத்துமீறல்களைக் காட்டுவது உச்சி வெயில் நேரத்தில்தானாம். மே முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில்தான் ஒவ்வோர் ஆண்டும் பாலியல் வழக்குகள் அதிகளவில் பதிவாகியிருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, 75 சதவீத வழக்குகள் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

ஒரு பெண், ‘முடியாது’ என்று சொல்லும்போது அதன் அர்த்தம் ‘முடியாது’ என்பதுதான். அதை ஆண் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். அதேநேரம், பாலியல் குற்றங்கள் மீதான தண்டனைகளையும் கடுமைப்படுத்துவதோடு, அதை விரைவில் நிறைவேற்றுவதிலும் முனைப்பு காட்ட வேண்டும்.

– நாடோடி.