Monday, February 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஊழல் தாண்டவமாடும் உணவு பாதுகாப்புத்துறை – ஆதாரத்துடன் அம்பலம்

வசூல் வேட்டையில் திளைக்கும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளால், மக்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எந்த அளவுக்கு ஒரு சட்டம் கடுமையாக நிறுவப்படுகிறதோ அதே அளவுக்கு அதில் ஊழலும் மலிந்து கிடப்பது ஆகப்பெரிய முரண். அப்படி லஞ்சம், ஊழலில் அதிகாரிகள் திளைக்கும் துறையாக உணவுப் பாதுகாப்புத்துறை மாறிவிட்டது. ஆதாரத்துடன் இங்கே அம்பலப்படுத்துகிறோம்.

அதற்குமுன், இந்த சட்டத்தைப் பற்றிய சில முன்தகவல்கள்…

நுகர்வோருக்கு தரமான உணவுப்பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதுதான்,உணவுப்பாதுகாப்புத் துறையின் மைய நோக்கம். குடிநீர் முதல் உப்பு வரை உட்கொள்ளத்தக்க எந்த ஒரு பொருளும் இதனுள் அடங்கும். இதற்காகவே உணவுப்பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம்-2006 இயற்றப்பட்டு, நாடு முழுவதும் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

சாலையோர தள்ளுவண்டிக் கடைக்காரர்கள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை உணவு வர்த்தகத்தில் ஈடுபடும் எவர் ஒருவரும் இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து, உரிமம் பெறுவது கட்டாயம்.

தனியார்கள் மட்டுமின்றி கூட்டுறவு ரேஷன் கடைகள், ஆவின் பால் நிறுவனம், டாஸ்மாக் மதுபானக் கடைகள், ‘பார்’கள், குடிமைப் பொருள் கிடங்குகள், இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் / பிரசாதக் கூடங்கள் என எதுவும் விதிவிலக்கு இல்லை. அத்தனையுமே இந்தத்துறையின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.

எந்த ஓர் உணவு வியாபாரத்தளம், ஆண்டு விற்றுக்கொள்முதல் ரூ.12 லட்சத்திற்குக் குறைவாக வணிகம் செய்கிறதோ அந்த நிறுவனங்கள் / கடைகள் அந்தந்தப் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள உணவுப்பாதுகாப்பு அலுவலரிடம் 100 ரூபாயை எஸ்பிஐ வங்கி சலான் மூலம் செலுத்தி, ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

டாக்டர் அனுராதா

ரூ.12 லட்சத்திற்கும் மேல் விற்றுகொள்முதல் உள்ள (அதாவது நாளொன்றுக்கு ரூ.3500) உணவுத் தயாரிப்புக்கூடங்கள், உணவகங்கள் ரூ.2000 முதல் ரூ.5000 வரை கட்டணம் செலுத்தி, உரிமம் பெற வேண்டும். பதிவு மற்றும் உரிமம் இல்லாமல் வணிகத்தில் ஈடுபடுவதை குற்றமாகச் சொல்கிறது, இந்தச்சட்டம். இதற்காக ஆறு மாதம் வரை சிறைத்தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கிறது. கலப்படம் செய்தால் இன்னும் தண்டனைகள் கடுமையாக இருக்கும்.

இதற்காக எம்பிபிஎஸ் படித்த ஒரு மருத்துவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமன அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் மாநகராட்சி, வட்டார அளவில் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவைதான் உணவுப் பாதுகாப்புத்தர நிர்ணயச் சட்டம்-2006 சொல்லும் முக்கிய சேதிகள்.

ஆரம்பத்தில் இருந்தே இந்த சட்டத்திற்கு உணவு வணிகர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்புக் காட்டப்பட்டு வந்தது. ஆனால், லஞ்சம் பெறும் கருப்பு ஆடுகள் இருக்கும்வரை எத்தகைய சட்டமும் நீர்த்துப் போய்விடும் அல்லவா? அதுதான் இப்போதும் நடந்திருக்கிறது.

இந்த ஊழலில் மஞ்சள் குளிப்பது பெரும்பாலும் அரசியல்வாதிகளைவிட அதிகாரிகள்தான். கீழ்மட்ட ஊழியரில் இருந்து ஐஏஎஸ் அதிகாரிகள் வரை இந்த ஊழலில் பங்கிருக்கிறது என்கிறார், நேர்மையான ஓர் அலுவலர். ஒரு அதிகாரி மட்டும் நேர்மையாக இருந்தால் போதாது; அனைத்து அதிகாரிகளும் நேர்மையாக இருந்தால் மட்டுமே கலப்படத்தை தடுப்பதோடு, உணவுப்பொருட்களின் தரத்தையும் உறுதிப்படுத்த முடியும் என்கிறார் அந்த அதிகாரி.

ஊழல் எப்படி அரங்கேறுகிறது என்கிறீர்களா?. சொல்கிறோம்.

அதாவது, ஆண்டு விற்றுக்கொள்முதலைக் குறைத்துக் காட்டி, வெறும் பதிவுக்கட்டணம் மட்டுமே பெற்றுக்கொண்டு உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அமுதா ஐ.ஏ.எஸ்.

உதாரணமாக, சேலத்தில் பிரபல தொழில் அதிபர் ஒருவர் நடத்தி வரும் காபி பார்களுக்கு பதிவுக்கட்டணமாக ரூ.100 மட்டும் பெற்றுக்கொண்டு உணவுப்பாதுகாப்புத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த கடையின் உரிமையாளருக்கு சேலம் மாநகர் முழுவதும் 30க்கும் மேற்பட்ட காபி பார்கள் உள்ளன.

அந்தக் கடைகள் அனைத்திற்கும் தினமும் ரூ.3500க்கும் குறைவாகத்தான் விற்பனை ஆகிறது என்று போலியாக கணக்கிட்டு, பதிவுக்கட்டணம் மட்டும் பெறப்பட்டுள்ளது.
இத்தனைக்கும் இந்த காபி பார்களில் நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள், பால் பொருட்கள், சாக்லெட்டுகள், பேக்கரி பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இன்னும் சிலரும் சங்கிலித்தொடர் காபி கடைகளை நடத்தி வருகின்றனர். அவர்களின் கடைகளுக்கும் இதேபோல் பதிவுக் கட்டணம் மட்டுமே பெற்றுக் கொண்டு அனு மதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், சேலம் குரங்குசாவடி பகுதியில் செயல்பட்டு வரும் ஆட்டிறைச்சிக் கூடம் ஒன்றில், வாரத்திற்கு 100 ஆடுகள் வரை இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. தவிர, தினசரி இறைச்சி விற்பனையும் நடந்து வருகிறது. இந்தக் கடைக்கும் ரூ.100 மட்டுமே பெற்றுக்கொண்டு கடை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சேலத்தில் நாளொன்றுக்கு ரூ.15 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையாகும் காபி பாருக்கு சட்டத்திற்குப் புறம்பாக ரூ.100 மட்டுமே பெற்றுக்கொண்டு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்.

இவை பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். எனினும், தமிழ்நாடு முழுவதுமே உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டு வசூலில் ஊறி திளைக்கின்றனர். ஒரே இடத்தில் / மாவட்டத்தில் மூன்று ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி வருவதும் இதுபோன்ற வசூல் வேட்டைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் சில ஊழியர்கள்.

சேலம் மாநகரில் உணவுப் பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வரும் ‘பாலான’ ஒருவரும், பெயரிலேயே மரியாதையை வைத்திருக்கும் ஒருவரும்தான் தீவிர வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன.

இதில் வேடிக்கை என்னவென்றால், தடாலடி சோதனைகளுக்குப் பெயர்பெற்ற நியமன அலுவலரான மருத்துவர் அனுராதாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இவர்களே உணவு வர்த்தக நிறுவனங்களின் வர்த்தக மதிப்பைக் குறைத்துக் காட்டி ஊழலில் ஈடுபட்டு வருவதுதான்.

இந்த முறைகேடு புகார் குறித்து விளக்கம் கேட்பதற்காக மாவட்ட நியமன அலுவலர் அனுராதாவை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம். ஆய்வுக்கூட்ட ஏற்பாடுகளில் இருப்பதாகவும், பின்னர் கள ஆய்வில் இருப்பதாகவும் சொன்னவர் அதன்பின் அலைபேசி அழைப்பையே எடுக்கவில்லை.

இதையடுத்து உணவுப்பாதுகாப்புத்துறை மாநில ஆணையரான அமுதாவிடம் தொடர்பு கொண்டோம். அவரும், ‘அவசர பயணத்தில் இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்’ என்றார்.,

எஸ்எம்எஸ் அனுப்பியதற்கு அவரிடம் இருந்து, ‘உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று மட்டும் பதில் வந்தது.

ஆதாரத்தைக் கொடுத்துவிட்டோம். (பார்க்க: படம்) நடவடிக்கை எடுப்பார்களா?

-இளையராஜா.எஸ்

(‘புதிய அகராதி’, இதழ் சந்தா பெற: 9840961947)