Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய் பி.எப். தொகை எங்கே?

சேலம் மாநகராட்சி
ஊழியர்களின் சம்பளத்தில்
இருந்து வருங்கால
வைப்பு நிதி (பி.எப்.)
திட்டத்தின் கீழ் பிடித்தம்
செய்யப்பட்ட 5 கோடி ரூபாய்,
இதுவரை பி.எப். கணக்கில்
செலுத்தப்படாமல் உள்ளதால்,
பணிக்காலத்தில் இறந்த மற்றும்
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு
உரிய காலத்தில் பணப்பலன்கள்
வழங்குவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.

 

சேலம் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் முதல் ஆணையர் / தனி அலுவலர் வரை ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 20 அல்லது அதற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் எந்த ஒரு தொழிலகமும் தொழிலாளர் வருங்கால வைப்பது நிதி கணக்கு எனப்படும் இபிஎப் கணக்கிற்குள் அடங்கும். இபிஎப் கணக்கின்படி, மாதம் 15 ஆயிரத்திற்கும் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து அவர்களின் பங்களிப்பாக மாதம் 12 சதவீத தொகை பிடித்தம் செய்யப்படும். அதற்கு நிகராக வேலை அளிப்பவர் அதாவது இங்கே சேலம் மாநகராட்சி நிர்வாகம் 12 சதவீத தொகை தன் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.

 

இவ்விரண்டு தொகைகளும் இபிஎப் கணக்கில் பிரதி மாதம் 15ம் தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும். வேலை அளிப்பவர் செலுத்தும் பங்களிப்பு தொகையான 12 சதவீதத்தில் இருந்து 8.33 சதவீத தொகை ஊழியர்களின் பென்ஷன் கணக்கிற்கும், மீதமுள்ள 3.67 சதவீத தொகை இபிஎப் கணக்கிலும் வரவு வைக்கப்படும். ஆனால், சேலம் மாநகராட்சி நிர்வாகமோ ஊழியர்களிடம் இருந்து மாதந்தோறும் இபிஎப் கணக்கிற்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை, இபிஎப் கணக்கில் செலுத்தாமல் வேறு வகைகளில் செலவழித்து வரும் அதிர்ச்சி தகவல்கள் அம்பலமாகி உள்ளன.

இன்றைய நிலையில், ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலையில்தான் சேலம் மாநகராட்சி நிர்வாகம் கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள் சிலர். ஆனால், இந்த நிதி நெருக்கடிக்கான சீர்கேடுகள் கடந்த ஓரிரு ஆண்டுகளில் ஏற்பட்டவை அல்ல என்றும் சொல்கிறார்கள்.

 

இது தொடர்பாக சேலம் மாநகராட்சி அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசினார்கள்.

 

”சேலம் மாநகராட்சியில்
ஊழியர்களுக்கான சம்பளம்,
அலுவலக பராமரிப்பு,
மின்கட்டணம் என
அத்தியாவசிய அடிப்படை
செலவினங்களுக்காக மட்டுமே
மாதம் 21 கோடி ரூபாய்
தேவைப்படுகிறது.
உண்மையைச் சொல்ல
வேண்டுமானால் நாங்கள்
எல்லோரும் அரசு
ஊழியர்களைப்போல
அந்தந்த மாத ஊதியத்தை
மாத கடைசி தேதியில்
வாங்கி பல ஆண்டுகளாகி
விட்டது. இப்போதுகூட
ஆகஸ்ட் மாத ஊதியம்
அக்டோபர் முதல் வாரத்தில்தான்
பெற முடிந்தது. அந்தளவுக்கு
நிதி நெருக்கடி.
காரணம், கடன் சுமை.

 

கடந்த 2011 – 2016
வரையிலான உள்ளாட்சி
அமைப்பில் அதிகாரத்தில்
இருந்த ஆளுங்கட்சி
கவுன்சிலர்கள், மண்டல
தலைவர்கள் பலர்
எக்கச்சக்கமான பொதுக்குடிநீர்
குழாய்களை போட
அனுமதித்து விட்டனர்.
இதனால் வீடுகளுக்கான
தனி குடிநீர் இணைப்பு
வழங்குவதும், அதன்மூலம்
கிடைத்து வந்த வருமானமும்
பாதிக்கப்பட்டது. பிறகு
மாநகராட்சிக்குச் சொந்தமான
கடைகள், வணிக வளாகங்கள்,
நாளங்காடிகள் அனைத்தையும்
சிண்டிகேட் அமைத்துக்கொண்டு
ஏலம் எடுப்பதால் வருவாய்
இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

அடிக்கடி முதல்வர்
எடப்பாடி பழனிசாமி
சொந்த ஊருக்கு வருவதால்,
அவருடன் வரும் அதிகாரிகள்,
அமைச்சர்களுக்கான உபசரிப்பு,
போக்குவரத்து செலவுகளையும்
மாநகராட்சி தலையிலேயே
கட்டி விடுகின்றனர்.
அந்த செலவுகளையெல்லாம்
நாங்கள் எந்தக் கணக்கிலும்
எழுத முடியாது. வரி குறைப்பு
பற்றி அமைச்சர் வேலுமணி
ஒரு பேட்டியில் சொன்னதால்,
இப்போது சொத்து வரி
வசூலிப்பிலும் சுணக்கம்
ஏற்பட்டுள்ளது.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, அம்மா உணவகங்களால் மாநகராட்சிக்கு பெரும் நட்டம் ஏற்படுகிறது. அம்மா உணவகத்திற்கென தனி நிதி ஒதுக்கீடு இல்லாததால், கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது சேலம் மாநகராட்சி. இவை தவிர, ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் பெற்ற கடன்களுக்காக மாதந்தோறும் 3.50 கோடி ரூபாய் வரை வட்டி செலுத்தி வருகிறோம்,” என சேலம் மாநகராட்சி நிதி நெருக்கடிக்கான காரணங்களை புட்டு புட்டு வைத்தனர் அந்த அதிகாரிகள்.

 

என்னதான் நிதி நெருக்கடி என்றாலும், ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை இபிஎப் கணக்கில் செலுத்தாமல் இருப்பதால், பணியாளர்கள் நலன்கள் பாதிக்கப்படுவதையும் மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை. இபிஎப் கணக்கில் இருந்து திடீர் மருத்துவ செலவு, குழந்தைகளின் படிப்பு, கல்யாணம், வீடு கட்டுமானம் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்காக முன்பணம் பெற முடியும். ஆனால் இபிஎப் விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய இத்தகைய அடிப்படை உரிமைகள் முடக்கப்படுகிறது.

 

சேலத்தைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலரும், பாஜக முன்னாள் கிளைத்தலைவருமான தாதை சிவரமான் பெற்றுள்ள ஆர்டிஐ தகவல்களின்படி, சேலம் மாநகராட்சியில் அம்மா உணவகம், கொசு ஒழிப்புப்பிரிவு, திடக்கழிவு மேலாண்மை ஆகிய பிரிவுகளில் வேலை செய்து வரும் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 3.36 கோடி ரூபாய் பி.எப். தொகை இதுவரை பி.எப். கணக்கில் செலுத்தாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. சூரமங்கலம் மண்டல ஊ–ழியர்கள் நீங்கலாக மட்டும் இவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது.

 

சூரமங்கலம் மண்டலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையையும் கணக்கில் கொண்டால் 5 கோடி ரூபாய்க்கு மேல் பி.எப். தொகையை உரிய கணக்கில் வரவு வைக்காமல் சேலம் மாநகராட்சி நிர்வாகம் ஏமாற்றி வருவது தெரிய வந்துள்ளது.

 

இது தொடர்பாக தாதை சிவராமனிடம் பேசினோம்.

 

”சேலம் மாநகராட்சியில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய் பி.எப். தொகை இதுவரை பி.எப். கணக்கில் செலுத்தப்படாமல் உள்ளது. அந்த தொகை என்ன ஆனது? என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதுமட்டுமின்றி, சேலம் மாநகராட்சியில் கடந்த 2014 முதல் 2018ம் ஆண்டு வரை துப்புரவு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்த சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம், கொசு ஒழிப்புப் பணிகளை ஒப்பந்தம் எடுத்திருந்த ஐலேக் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஆகியவை ஊழியர்களிடம் பிடித்தம் செய்திருந்த பி.எப். தொகையை முறையாக அவர்களின் கணக்கில் செலுத்தாமல் முறைகேடு செய்துள்ளது.

 

இவ்வாறு இபிஎப் தொகை செலுத்தாமல் உள்ளதால் பணிக்காலத்தில் இறக்கும் தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் பி.எப். பணத்தை எடுக்க முடியாமலும், பென்ஷன் பெற முடியாமலும் அல்லல் படுகின்றனர். இப்படி செயல் திறனற்ற, ஒட்டுமொத்தமாக நிர்வாகம் சீர்கேடு அடைந்துள்ள சேலம் மாநகராட்சிக்குத்தான் தமிழக அரசு சிறந்த மாநகராட்சி விருது வழங்கி கவுரப்படுத்தி இருப்பது வெட்கக்கேடு,” என்று கொதித்தார் தாதை சிவராமன்.

 

சேலம் மண்டல இபிஎப் அலுவலகம் தரப்பிலும் நாம் சில விளக்கங்களைக் கேட்டுப்பெற்றோம்.

 

”வேலை செய்யும் ஊழியர்கள்,
வேலை அளிக்கும் நிறுவனம்
(அதாவது, சேலம் மாநகராட்சி)
பி.எப். பங்களிப்பு தொகையை
பிரதி மாதம் 15ம் தேதிக்குள்
பி.எப். கணக்கில் கண்டிப்பாக
செலுத்திவிட வேண்டும்.
இந்த பங்களிப்பு தொகைக்கு
மத்திய அரசு தற்போது
8.65 சதவீதம் வட்டி
வழங்குகிறது. இந்த
வட்டிவிகிதம் மாறுதலுக்கு
உட்பட்டது. அவ்வாறு
குறிப்பிட்ட நாளுக்குள்
பங்களிப்பு தொகையை
செலுத்தாத பட்சத்தில்,
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின்
மீது இந்திய தண்டனை
சட்டம் பிரிவு 406, 409
ஆகியவற்றின் கீழ்
மோசடி செய்ததாக
புகார் அளிக்கவும்
முடியும்.

 

சேலம் மாநகராட்சி நிர்வாகம்
பி.எப். நிலுவைத் தொகையை
உடனடியாக செலுத்துமாறு
பலமுறை நினைவூட்டல் கடிதம்
அனுப்பியும் அவர்கள்
கண்டுகொள்வதே இல்லை.
அதனால் இபிஎப்
சட்டம் 1952,
பிரிவு 7 (ஏ)-ன் கீழ்
மாநகராட்சி அதிகாரிகளிடம்
விசாரணை நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளோம்.
பலகட்ட எச்சரிக்கைகளுக்குப்
பிறகு மாநகராட்சி தரப்பில்
இருந்து விசாரணைக்கு
ஆஜரான அதிகாரி ஒருவர்,
மாநகராட்சி நிர்வாகம்
செலுத்த வேண்டிய இபிஎப்
நிலுவைத் தொகையை
தள்ளுபடி செய்ய வேண்டும்
என்று கடிதம்
கொடுத்துவிட்டுப் போனார்.

 

பிஎப் பங்களிப்பு தொகை
என்பது தொழிலாளர்களின் பணம்.
அதை எக்காரணம் கொண்டும்,
எவர் நினைத்தாலும்
தள்ளுபடி செய்ய சட்டத்தில்
இடமில்லை.
சேலம் மாநகராட்சி
அதிகாரிகள் சிலர்
இதுபோன்ற அடிப்படை
புரிதல்கூட இல்லாமல்தான்
நடந்து கொள்கின்றனர்.
காலதாமத குற்றத்திற்கு
அபராதமும், அதற்கு
வட்டியும் வசூலிக்கப்படும்.
விசாரணை முடிவில்,
மாநகராட்சி வங்கி கணக்குகள்
இபிஎப் அலுவலக கணக்குடன்
இணைத்துக் கொள்ளப்படும்.
அவர்களிடம் இருந்து
ஒட்டுமொத்தமாக
நிலுவைத் தொகையை
அவர்களின் வங்கிக்
கணக்கில் இருந்து
எடுத்துக் கொள்ளப்படும்,”
என்றனர்.

 

வருங்கால வைப்பு நிதி
என்பது பணியாளர்களின்
பணம் மட்டுமல்ல;
அது அவர்களின் வியர்வையும்
ரத்தமும்தான் என்பதை
சேலம் மாநகராட்சி
உணர வேண்டும்.

 

– பேனாக்காரன்