Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் மாநகராட்சி: பாதாள சாக்கடை திட்டமா? பகல் கொள்ளை திட்டமா? விரயமாகிறதா 216 கோடி?

சேலத்தில், சரிவர திட்டமிடப்படாமல் அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தால் இதற்காக ஒதுக்கப்பட்ட மக்களின் வரிப்பணம் 216 கோடி ரூபாய் விழலுக்கு இரைத்த நீராகி விட்டதோ என்ற அய்யம் மக்களிடம் எழுந்துள்ளது.

நகராட்சியாக இருந்த சேலம், கடந்த 1994ம் ஆண்டு மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. சரிவர திட்டமிடப்படாத ஊரமைப்பு என்பதால், இன்றும் திறந்தவெளி சாக்கடை கால்வாய்களே நீக்கமற நிறைந்துள்ளன. இந்த நிலையில்தான், கடந்த 2006 – 2011 திமுக ஆட்சியின்போது, சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இதையடுத்து,
நகராட்சி நிர்வாகம் மற்றும்
குடிநீர் வழங்கல் துறை
23.2.2006ம் தேதி,
இத்திட்டத்திற்கான
அரசாணை (எண்: 63 (டி)
வெளியிட்டது.
முதல்கட்டமாக
149.39 கோடி ரூபாய்
நிதியும் ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியில்
அரசு மானியம்
10 கோடி ரூபாய்;
சேலம் மாநகராட்சி
பொது நிதி 78.85
கோடி ரூபாய்;
உலக வங்கி
கடனுதவி 60.54
கோடி ரூபாய்.
இத்திட்டத்தை
மூன்று சிப்பங்களாக
நிறைவேற்றவும்
தீர்மானிக்கப்பட்டது.

என்றாலும், எதிர்பார்த்த அளவில் ஒப்பந்ததாரர்கள் முன்வராததால், திட்டத்தை தொடங்குவதில் காலதாமதம் ஆனது. இறுதியாக முதல் இரண்டு சிப்பங்களை நிறைவேற்றும் ஒப்பந்தம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கும், மூன்றாவது சிப்பத்தை முடிக்கும் பணிகள் சென்னையைச் சேர்ந்த சுப்பையா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.

 

இத்திட்டத்தை,
திமுக ஆட்சியின்போது
உள்ளாட்சித்துறை
அமைச்சரான இருந்த
மு.க.ஸ்டாலின் 2009ம்
ஆண்டிலேயே துவக்கி
வைத்தாலும், பூர்வாங்க
பணிகள் 2010ம் ஆண்டில்தான்
தொடங்கின. அதன்பிறகு
2011ல் ஆட்சி மாற்றம்
ஏற்பட்டு, அதிமுக அரசு
பொறுப்பேற்றது. அதனால்
திட்டத்தை தொடர்ந்து
செயல்படுத்துவதில்
தேக்க நிலை ஏற்படவே,
மீண்டும் திட்டத்திற்கான
பட்ஜெட் திருத்தி அமைக்பட்டது.
அதன்படி, 149.39 கோடியாக
இருந்த இத்திட்ட மதிப்பீடு,
பின்னர் 216 கோடி ரூபாயாக
அதிகரிக்கப்பட்டது.

அதன்பிறகே, பாதாள சாக்கடைத் திட்டம் தொடரப்பட்டது. இதன்படி, மாநகரில் ஒவ்வொரு தெருவிலும் 20 மீட்டர் இடைவெளியில் 3 அடி ஆழத்தில் பாதாள சாக்கடை தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியுடன் பொருத்தப்பட்ட குழாய்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குழாய்களுடன் இணைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இன்னும் இந்தப்பணிகள் முழுமை அடையவில்லை.

 

இந்தத் திட்டத்தால் இனி மாநகரில் திறந்தவெளி சாக்கடைகளே இருக்காது என்பதால், மக்களிடம் ஒருபுறம் வரவேற்பு இருந்தாலும், நத்தை வேகத்தில் நடந்து வரும் பணிகளால் மக்களும் ரொம்பவே மனம் வெதும்பினர். வீடுகள், தொழிற்சாலைகள், அலுவலகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க வெள்ளைக்குட்டை, வண்டிப்பேட்டை, மான்குட்டை, அணைமேடு ஆகிய நான்கு இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

என்னதான் நல்ல திட்டம் என்றாலும், சரியான திட்டமிடல் இல்லையோ என்ற அய்யம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட சேர்மன் ராமலிங்கம் தெருவில் (பாவடி நகரவை ஆண்கள் பள்ளி செல்லும் சாலை) அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழிகளில் இருந்து, தண்ணீர் ‘குபுகுபு’வென்று சீறிப்பாய்கிறது. எப்போதெல்லாம் கனமழை பெய்கிறதோ, அப்போதெல்லாம் அந்தக்குழிகளில் இருந்து மழைநீர், சாக்கடை கழிவு நீருடன் சேர்ந்து வெளியேறுகிறது.

 

அதாவது, குடிநீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டால் எந்தளவுக்கு தண்ணீர் மேலெழும்புமோ அந்தளவுக்கு பீறிட்டு வெளியேறுகிறது. சாலை முழுவதும் வெள்ளமாக ஓடுகிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாகவே சேர்மன் ராமலிங்கம் தெரு பகுதியில் அப்படித்தான் தண்ணீர் வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஒரு குழி விடாமல் எல்லா குழிகளில் இருந்தும் இவ்வாறு தண்ணீர் வெளியேறுகிறது. சிலவற்றில் கசிவு நீராக வெளியேறுகிறது.

 

அந்த வழியாகத்தான் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் அம்மாபேட்டை மண்டல அலுவலகங்களில் பணியாற்றும் பல உயரதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சென்று வருகின்றனர். ஆனாலும், பாதாள சாக்கடைக் குழிகளில் மேலே போடப்பட்டுள்ள சிமெண்ட் மூடியையும் கடந்து தண்ணீர் வெளியேறுவதை ஒருவரும் சரிசெய்ய முன்வரவில்லை. இது, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளைக்குட்டை சுத்திகரிப்பு நிலையம் அருகில், பாதாள சாக்கடை குழியில் இருந்து நீர் வெளியேறியதால் அங்கு மட்டும் உடனடியாக குழிக்கும், சாக்கடை கால்வாய்க்கும் தனியாக ஒரு குழாயை இணைத்து தற்காலிகமாக சரி செய்தனர். அதனால் சாலையில் கழிவுநீர் தேங்காமல் போனாலும், திட்டத்தின் நோக்கத்திற்கு முரணானது. ஆனாலும் மற்ற இடங்களில் பல்லிளித்துக் கொண்டுதான் இருக்கிறது.

 

பாதாள சாக்கடை குழிகளில் இருந்து கழிவு நீர் பீறிட்டு வெளியேறுவதால், இத்திட்டம் சரியான திட்டமிடலுடன்தான் செயல்படுத்தப்படுகிறதா என்றும், மக்களின் வரிப்பணம் 216 கோடி ரூபாயும் வீணடிக்கப்பட்டு உள்ளதோ என்றும் சேலம் மாநகராட்சி மக்களிடையே அய்யம் வலுத்துள்ளது. அரசியல்வாதிகள்தான் கொள்ளை அடிக்கிறார்கள் என்றால், அதிகாரிகளும் அவர்களுடன் கூட்டுக்கொள்ளையில் ஈடுபடுகிறார்களே என்று அதிருப்தியாக கூறுகின்றனர்.

சதீஸ்

இப்பணிகளை ஒப்பந்தம் எடுத்த சுப்பையா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவன சூப்பர்வைசர் ரபீக் என்பவரிடம் பேசினோம்.

 

”அம்மாபேட்டை
மண்டலத்தில் பாதாள
சாக்கடைத் திட்டப்பணிகள்
90 சதவீதம் முடிந்து விட்டது.
இந்த மண்டலத்தில்
அனைத்து இடங்களில்
இருந்தும் பெறப்படும்
கழிவுநீர், இங்குள்ள
வெள்ளக்குட்டை
சுத்திகரிப்பு நிலையத்திற்குக்
கொண்டு வரப்பட்டு
சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
எதிர்காலத் தேவையைக்
கருத்தில்கொண்டு,
இந்த நிலையத்தின்
சுத்திகரிப்பு திறன்
13 எம்எல்டி ஆக
அமைக்கப்பட்டு உள்ளது.
40 ஹெச்பி மோட்டாரும்
பொருத்தப்பட்டு உள்ளது.

 

ஆனாலும்,
மழைக்காலங்களில்
கழிவுநீருடன், மழைநீரும்
சேர்ந்து வருவதால்,
சுத்திகரிப்பு நிலைய
தொட்டி நிறைந்து விடுகிறது.
அதனால், கிராவிட்டி
ஃபோர்ஸ் தாங்காமல்
பாதாள சாக்கடை
குழிகளின் வழியாக
கழிவுநீரும், மழைநீரும்
வெளியேறுகிறது.
இப்படி ஒரு பிரச்னை
இருப்பதே எங்களுக்கு
இப்போதுதான் தெரிய
வந்துள்ளது. விரைவில்
இப்பிரச்னையை சரி
செய்து விடுவோம்,”
என்றார்.

 

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சதீஸை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் அவர் செல்போனை எடுக்கவில்லை. அவர் எப்போது விளக்கம் அளித்தாலும் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.

 

– பேனாக்காரன்