Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மாணவர்களை ஈர்த்த சேலம் புத்தகத்திருவிழா! ”கல்கி, சாண்டில்யன் படைப்புகளுக்கு வரவேற்பு” #SalemBookFestival

 

சேலத்தில் நடந்து வரும் புத்தக திருவிழாவுக்கு பெரியவர்களைக் காட்டிலும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, புத்தகங்களை வாங்கிச்செல்வது பதிப்பாளர், புத்தக விற்பனையாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்டுத்தி உள்ளது.

 

முதன்முதலாக

சேலத்தில் ஆண்டுதோறும் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே, புத்தகக் கண்காட்சி நடத்தி வருகிறது. இந்த ஆண்டு முதன்முதலாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியின் முயற்சியால், பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 

21ம் தேதி வரை திருவிழா

 

சேலம் போஸ் மைதானத்தில் கடந்த 9.11.2018ம் தேதி 1வது சேலம் புத்தகத்திருவிழா தொடங்கியது. வரும் 21ம் தேதி வரை இத்திருவிழா நடக்கிறது. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இத்திருவிழா நடக்கிறது. புத்தகத் திருவிழா தொடங்கி 5 நாள்கள் கடந்த நிலையில், இதற்கான வரவேற்பு குறித்து அறிய இன்று (நவம்பர் 14) சென்றிருந்தோம்.

 

கிட்டத்தட்ட 112 அரங்குகளில் என்சிபிஹெச், காலச்சுவடு, கிழக்கு, சிக்ஸ்த்சென்ஸ், கீதம், சிவகுரு, மினர்வா உள்பட பல முன்னணி பதிப்பகங்கள் அரங்குகள் அமைத்துள்ளன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. இலக்கியம், வரலாறு, புரட்சி, பொது அறிவு என பல வகைப்பட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன.

 

அக்னிச்சிறகுகள்

 

புத்தகத்திருவிழா துவங்கியதில் இருந்தே நாள்தோறும் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். பெரும்பாலும் அவர்களின் தேர்வு, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் சுயசரிதையான அக்னிச்சிறகுகள் நூல்தான் முதல் விருப்பமாக இருக்கிறது.

 

ஒவ்வொரு அரங்கிலுமே அந்த நூலைத்தான் தேடித்தேடி ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர். அதற்கு அடுத்து, கையடக்க திருக்குறள் புத்தகங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

 

மலிவு விலை நூல்கள்

மாணவர்களைக் குறிவைத்தே சில பதிப்பகங்கள் பத்து ரூபாய் மலிவு விலையிலும் நூல்களை வெளியிட்டுள்ளன. பத்து ரூபாய் விலையுள்ள பத்து புத்தகங்கள் வாங்கினால், மூன்று புத்தகங்கள் இலவசம் என்ற சலுகையும் அறிவித்துள்ளன.

 

அந்த விலைக்கேற்ப கையடக்க வடிவில் நேரு, காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சர்தார் வல்லபாய் படேல், இந்திராகாந்தி, திலகர், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக வெளியிட்டுள்ளனர். இந்த நூல்களும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

 

பள்ளி மாணவர்கள் ஆர்வம்

 

புத்தகத் திருவிழா தொடங்கிய நாளில் 2110 மாணவர்களும், 10ம் தேதி 49 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும், 11ம் தேதி 34 பள்ளிகளின் மாணவர்களும், 12ம் தேதி 39 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும், 13ம் தேதி 42 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும், 14ம் தேதி 46 பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் புத்தகத்திருவிழாவை ஆர்வத்துடன் கண்டு ரசித்துள்ளனர். இது, இளம் தலைமுறையினரிடையே புத்தக வாசிப்பை அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.

 

கல்கியின் பொன்னியின் செல்வன்

 

கல்கி, புதுமைப்பித்தன் ஆகியோரின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதாலோ என்னவோ சொல்லி வைத்தாற்போல் எல்லா பதிப்பகங்களுமே அவரவர் ரசனைக்கேற்ப கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம், புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர்.

எல்லா அரங்குகளிலுமே பொன்னியின் செல்வன் புத்தகங்கள் அனைத்து தொகுப்புகளும் ஒரே நூலில் அடங்கிய பிரம்மாண்ட நூலாகவும், வழக்கம்போல் 5 தனித்தனி தொகுதிகளாகவும் முதல் வரிசையில் இடம் பிடித்திருக்கின்றன.

 

மூத்த குடிமக்களின் முதல் தேர்வாகவும் கல்கியின் பொன்னியின் செல்வன் நூல் இடம்பிடித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சாண்டியல்யனின் கடல்புறா, யவனராணி ஆகிய நூல்களுக்கும் இன்றும் வரவேற்பு இருப்பதைக் காண முடிந்தது.

 

குறளோவியம்

 

இளம் படைப்பாளிகளின் படைப்புகளும் ஏராளமாக இருந்தாலும், கருணாநிதி, தி.ஜானகிராமன், சாண்டில்யன், கல்கி, சுந்தரராமசாமி, சமுத்திரம், ஜெயகாந்தன், கண்ணதாசன், நாஞ்சில் நாடன், வைரமுத்து ஆகியோரின் நூல்களுக்கே அதிகளவில் வரவேற்பு இருக்கின்றன.

 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி எழுதிய குறளோவியம் தனிக்கவனம் பெற்றுள்ளது. அவர் எழுதிய பொன்னர் சங்கர், தொல்காப்பியப்பூங்கா நூல்களும் கவனம் பெற்றுள்ளன.

 

சுயமுன்னேற்ற நூல்

சுயமுன்னேற்ற நூல்களும் பெருமளவில் வரவேற்பு பெற்றுள்ளன. குறிப்பாக கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீர் ஜாப்ஸ், சமகால அறிவியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரின் நூல்களையும் இளைஞர்கள் தேடித்தேடி வாங்கிச் செல்கின்றனர்.

 

 

பெண்களைப் பொறுத்தவரை சமையல் குறிப்பு புத்தகங்கள், ஜோதிடம், ஆன்மிகம் சார்ந்த நூல்களை வாங்குவதோடு, தங்கள் பிள்ளைகளுக்கு பொது அறிவு சார்ந்த நூல்களை வாங்கித் தருவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு பேச்சாளர்களின் சொற்பொழிவும் நடந்து வருகிறது.

 

 

புத்தகத்திருவிழாவுக்கு இரண்டு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒரு பகுதி உள்ளே நுழையவும், மற்றொரு பகுதி வழியாக வெளியே செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. நுழைவு வாயில் திறந்து இருக்கும் நாளில் நடக்கும் விற்பனையுடன் ஒப்பிடுகையில் மற்ற நாளில் விற்பனை பாதியாகக் குறைந்து விடுவதாக புத்தக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

 

மாவட்டந்தோறும் புத்தகத்திருவிழா

 

இதுகுறித்து புத்தக விற்பனையாளர்கள் கூறுகையில், ”மாணவர்கள் வருகையால் ஓரளவு புத்தக விற்பனை நடக்கிறது. என்றாலும், பொதுமக்கள், பெரியவர்களின் வருகை குறைவாகவே இருக்கின்றன. போதிய அளவில் விளம்பரம் இல்லாததால் புத்தகத்திருவிழா நடப்பதே தெரியவில்லை என்று இங்கு வரும் பெரியவர்கள் கூறுகின்றனர்.

 

சேலம் மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற முயற்சிகள் எடுத்ததுபோல் எல்லா மாவட்ட ஆட்சியர்களும் முயற்சி எடுத்து மாவட்டந்தோறும் புத்தகத்திருவிழா நடத்தினால் தமிழ்நாட்டில் வாசிப்புப்பழக்கத்தை பெரிய அளவில் வளர்த்தெடுக்க முடியும்,” என்றனர்.

 

ஜிஎஸ்டி வரி விதிப்பு

 

மற்றொரு பதிப்பாளர் கூறுகையில், ”ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பின்னர் காகிதம், அச்சு மை, அட்டை உள்ளிட்ட அனைத்து மூலப்பொருள்களின் விலைகளும் உயர்ந்துவிட்டன. ஆனால் நூல்களின் விலையை பெரிதாக உயர்த்தவில்லை.

 

இதுபோன்ற சூழலில் புத்தகத்திருவிழாக்கள்தான் ஓரளவு புத்தக விற்பனையை அதிகரிக்கச்செய்கின்றன. 11 எம்எல்ஏக்கள் கொண்ட பெரிய மாவட்டமாக சேலம் இருந்தும், பொதுமக்களின் வருகை குறைவாகவே இருப்பது வேதனை மட்டுமல்ல ஆச்சர்யமாகவும் இருக்கிறது,” என்றார்.

 

தள்ளுபடி சலுகை

அனைத்து வகை நூல்களுக்கும் 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுவது இத்திருவிழாவின் இன்னொரு சிறப்பு அம்சம்.

 

பொதுத்திருவிழா

 

பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான் இப்படி எந்தப் பண்டிகையாக இருந்தாலும் அதற்கென மத, இன அடையாளங்கள் இருக்கின்றன. ஆனால் எவ்வித அடையாளமும் இல்லாமல் பொதுத்திருவிழாவாக இருப்பது புத்தகத்திருவிழாக்கள் மட்டும்தானே!. வாசிக்கின்ற சமூகமே வளர்கின்ற சமூகமாக உருமாற முடியும் என்பதை அறியதாவர்கள் அல்லர் தமிழர்கள்.

 

– செங்கழுநீர்.