எட்டுவழிச்சாலைத் திட்டம்
வந்தால் இந்த மண்ணும், மனிதர்களும்
அழிந்துபோவார்கள் என்பதால்,
இன்னும் எத்தனை உயிர்களை
தியாகம் செய்தாவது இந்த
திட்டத்தை ஓட ஓட விரட்டி
அடிப்போம் என்று விவசாயிகள்
சபதம் எடுத்துள்ளனர்.
பாரத்மாலா பரியோஜனா
திட்டத்தின் கீழ், சேலம் – சென்னை
இடையே எட்டுவழிச்சாலைத்திட்டம்
எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத்
திட்டத்தை மத்திய அரசு கொண்டு
வந்துள்ளது. இதற்குத் தேவையான
நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்கும்
பொறுப்பு, மாநில அரசுக்கானது.
மொத்தம் 277.3 கி.மீ. தூரம்
அமைக்கப்பட உள்ள
இந்த சாலைக்காக 2343
ஹெக்டேர் நிலம்
தேவைப்படுகிறது.
இத்திட்டம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வழியாக அமைக்கப்படுகிறது. இதற்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் பெரும்பகுதி, சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். இதனால், துவக்கத்தில் இருந்தே இத்திட்டத்திற்கு ஐந்து மாவட்ட விவசாயிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே இத்திட்டத்திற்கு விவசாயிகளிடம் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை. ஆனாலும், காவல்துறை துணையுடன் விளை நிலங்களை அளந்து முட்டுக்கற்களை நட்டனர் வருவாய்த்துறையினர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் நிம்மதியை தொலைத்த விவசாயிகள் சிலர் மாரடைப்பில் இறந்தனர். சிலர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அதிகார வர்க்கத்தை எதிர்க்க திராணியில்லாமல் கடந்த ஓராண்டில் மட்டும் ஏழு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
ஆரம்பத்தில், அமைப்பு ரீதியாக
திரளாமல் விவசாயிகள் தனித்தனி
குழுவாக இத்திட்டத்திற்கு எதிராக
போராடி வந்தனர். இந்நிலையில்
கடந்த ஏழெட்டு மாதங்களாகவே
எதிர்ப்பாளர்களின் ஒன்றுகூடலும்,
போராட்ட வடிவமும் நிறையவே மாறி
வந்திருக்கிறது. நாளுக்குநாள்
போராட்டக்களம் கனல் தெறித்து
வந்தாலும், செல்லும் இடங்களிலெல்லாம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
இத்திட்டத்தை வரவேற்றுப் பேசுவதை
வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், எட்டுவழிச்சாலையால்
உயிர் நீத்த ஏழு விவசாயிகளுக்கும்
முதலாம் ஆண்டு அஞ்சலி கூட்டம்
சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை
ஆகிய மாவட்டங்களில்
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28, 2019) நடந்தது.
சேலத்தில் பூலாவரி புஞ்சைக்காடு பகுதியிலும், குள்ளம்பட்டியிலும் அஞ்சலி கூட்டம் நடந்தது. புஞ்சைக்காடு பகுதியில் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம் தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, உயிர்நீத்த விவசாயிகளின் உருவப்படங்களுக்கு மலர்களைத் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
இதுபற்றி நாம் விவசாயி மோகனசுந்தரத்திடம் பேசினோம்.
”சேலம் – சென்னை இடையே எட்டு வழிச்சாலைத்திட்டம் வேண்டாம் என்று போராடி, இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மக்களவை தேர்தல் நேரத்தில், எட்டுவழிச்சாலைத் திட்டம் கொண்டு வர மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நாங்கள் அவரிடம் கேட்டபோதும் அப்படித்தான் கூறினார். ஆனால், மற்ற இடங்களில் பேசும்போது, எட்டுவழிச்சாலையை அமைத்தே தீருவோம் என்று பேசுகிறார்.
இந்த திட்டம் வேண்டாம் என்று 99 சதவீத விவசாயிகள் போராடி வருகின்றனர். ஒரு சதவீத விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆதரவு தெரிவிக்கும் விவசாயிகள் அனைவருமே ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது நிலத்திற்கு பட்டா இல்லாதவர்களாகவோ உள்ளனர்.
இந்த திட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை வேண்டும் என்று தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். விவசாய நிலங்களை விடுத்து மாற்றுப்பாதைகளில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அல்லது, இப்போதுள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். இத்திட்டத்தை ரத்து செய்வதற்காக இன்னும் எத்தனை விவசாயிகள் வேண்டுமானாலும் உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம்,” என்றார் மோகனசுந்தரம்.
எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் மற்றோர் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் தலைமையில், குள்ளம்பட்டியிலும் முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள், உயிர்நீத்த விவசாயிகளின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், அவர்களின் பெயர்களைக் கூறி உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
”விவசாயிகளாகிய நாங்கள்,
எங்கள் நிலத்தையும், எங்கள் மண்ணையும்
நேசிக்கிறோம். அதுமட்டுமின்றி,
தமிழக மண்ணையும் மக்களையும்
நேசிக்கிறோம். எட்டுவழிச்சாலை
வந்தால் எங்கள் மண்ணும், மக்களும்
அழிந்து போய்விடுவார்கள்.
எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின்
தலைமையில் நின்று போராடி
இத்திட்டத்தை ஓட ஓட விரட்டி
அடிப்போம் என்று இத்திட்டத்தை
எதிர்த்து உயிர்த்தியாகம் செய்த
விவசாயிகள் சேகர், மாரிமுத்து,
மாரியப்பன், கங்கையம்மாள்,
நாச்சியா, ராஜம்மாள், பெத்தம்மாள்
ஆகியோர் மீது உறுதி அளிக்கிறோம்.
எங்கள் தியாகிகள் மீது
ஆணையாக எட்டுவழிச்சாலையை
தடுத்து நிறுத்துவோம்.
தமிழகம் காப்போம் என்று
உறுதி ஏற்போம்,” என்று
உறுதிமொழி
எடுத்துக்கொண்டனர்.
இதுகுறித்து விவசாயி பன்னீர்செல்வம் கூறுகையில், ”எட்டுவழிச்சாலைத் திட்டம் தேவை தேவை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் பேசி வருகிறார். சேலத்தில் இருந்து சென்னைக்கு எதற்கு எட்டுவழிச்சாலை? சென்னையில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது? ஏற்கனவே இருக்கும் சாலைகளை அகலப்படுத்த வேண்டும். சேலம் – உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையை நான்குவழிச் சாலையாக அகலப்படுத்தாமல், இன்னும் இருவழிச்சாலையாக வைத்துள்ளனர். அதை அகலப்படுத்தினாலே அடுத்த இருபது ஆண்டுகளுக்கு பயன் அளிக்கும்.
எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக போராடி, மனம் வெம்பி இதுவரை 7 பேர் இறந்துள்ளனர். இன்னும் ஏழாயிரம் விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்தாவது நாங்கள் இத்திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்,” என்றார்.
– பேனாக்காரன்