Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி! கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!!

காலம் காலமாக சனாதன சடங்குகளின் பெயராலும், மூடநம்பிக்கைகளாலும் விலங்கிடப்பட்டு, இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பெண் குலத்தில் இருந்து தீக்குழம்பாய் பீறிட்டு வந்தவர் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி.

 

ஆண்கள் மட்டுமே நிறைந்திருந்த எல்லா அவைகளிலும் நுழைந்து தன்னை நிரூபித்து, மற்ற பெண்களுக்கும் இன்றளவும் நிரந்தர முன்மாதிரியாக நிலைத்துவிட்டவர், மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி. காலத்தை விஞ்சிய அவருடைய சாதனைகளுள் குறிப்பிடத்தக்க ஒன்று, தேவதாசி முறை ஒழிப்பைச் சொல்லலாம். இன்று அவருடைய 133வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு கூகுள் நிறுவனம் ‘டூடுல்’ வெளியிட்டு கவுரப்படுத்தி இருக்கிறது.

மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் நினைவாக மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று, அவருடைய பிறந்த நாளை, ‘மருத்துவமனை தினமாக’ கொண்டாடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஜூலை 30) தமிழகத்தில் முதல்முதலாக மருத்துவமனை தினம் கொண்டாடப்படுகிறது. ஏனெனில், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் அவர்தான்.

 

பெண்கள் வீட்டைவிட்டு தன்னந்தனியாக சக ஆண்களுக்கு இணையாக தெருவில் நடப்பதே மாபெரும் குற்றமாகக் கருதப்பட்ட காலம் அது. அத்தகைய சூழலில், புதுக்கோட்டையில் 1886ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி பிறந்தார் முத்துலட்சுமி ரெட்டி. அவருடைய தந்தை பிரபல வழக்கறிஞர். இருந்தாலும், பெண் பிள்ளைகளை படிக்க வைக்க விரும்பாத சூழல்தான் அவருடைய வீட்டிலும் நிலவியது. எனினும், மகளின் மனம் கோணாமல் இருக்க அவரை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தார். பள்ளிப்படிப்பை முடித்த கையோடு திருமணத்தை நடத்தி விடும் முடிவில்தான் இருந்தார் தந்தை. அதையும் முறியடித்தார் முத்துலட்சுமி.

 

ஆமாம். படிப்பின் வாசனையை நுகர்ந்தவர் என்று மேலோட்டமாக சொல்லி விட முடியாது. அவர் எந்த வகுப்பில், எந்த பள்ளியில், எந்த கல்லூரியில் படித்தாலும் அவர்தான் முதல் மாணவியாக தேர்ச்சி பெறுவார் என்பதை அவருடைய பள்ளி, கல்லூரிக்காலம் முழுவதும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். சொன்னால் நம்ப மாட்டீர்கள்…. பார்வைக்குறைபாடு, ரத்த சோகை, ஆஸ்துமா என்று பிறந்தது முதலே எப்போதும் ஏதோ ஒரு நோயுடனேயே போராடி வந்திருக்கிறார் முத்துலட்சுமி.

புதுக்கோட்டை மன்னரின் உதவியுடன் கல்லூரி படிப்பை முடித்து, சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க 1907ல் சேர்ந்தார். மருத்துவப் பல்கலை அளவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று, 1912ல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் எனும் அரிய சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகிறார். எழும்பூர் அரசு மருத்துவமனையில் முத்துலட்சுமி ரெட்டிதான் முதல் பெண் பயிற்சி மருத்துவரும்கூட.

 

சமூக ஊடகங்களும், தொழில்நுட்பங்களும்
பெருகிவிட்ட இன்றைய நாளில் அர்த்தமற்ற
அதிகப்பிரசங்கித்தனங்கள்கூட
முற்போக்கு முலாமுடன்
விளம்பரப்படுத்தப்படுகிறது.
அல்லது, தம்பட்டம் அடித்துக்
கொள்ளவாவது செய்கின்றனர்.
ஆனால், பழைமைவாதிகளின்
காலத்தில் ஒரு பெண்,
அதுவரை ஆகிவந்த அத்தனை சனாதன
சடங்குகளையும் மறுதலித்து தனக்கான
இணையை கரம் பிடிப்பது எத்தனை
புரட்சிகரமானது… அதையும்
செய்து காட்டினார் முத்துலட்சுமி.
மருத்துவர் சுந்தர் ரெட்டியை
எவ்வித சடங்குகளிமின்றி தன் 28ம் வயதில்
கரம் பிடித்தார். இரண்டு குழந்தைகள்.
குழந்தைகளுக்கு பாலூட்டும் அளவுக்குக்கூட
அவர் அரோக்கியமாக இல்லை.
மணவாழ்க்கைக்குப் பிறகும்
அவருடைய உடல்நலத்தில்
பெரிய முன்னேற்றம்
வந்துவிடவில்லை.

ஒரு பக்கம் தான் விரும்பியபடியே மருத்துவர் ஆகிவிட்டார். பின்னர் குடும்பம், குழந்தைகள் என்றாகிவிட்ட பிறகும் தன் வீடு தன் குடும்பம் என்ற வட்டத்திற்குள் தன்னை சுருக்கிக்கொள்ள அவர் ஒருபோதும் விரும்பியதே இல்லை. சொல்லப்போனால் இந்த பந்தத்திற்குள் இருந்து கொண்டே சமூக தளத்தில் களமாடும் முடிவை அவர் எடுத்திருந்தார்.

 

சரோஜினி நாயுடு, பாரதியார், பெரியார் ஆகியோருடனான உரையாடல்கள் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதை முதல் நோக்கமாக கொண்டிருந்தார். 1926ல் பாரீஸில் நடந்த அகில உலக பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். நீதிக்கட்சியின் தலைவராக இருந்த பனகல் அரசரின் உதவியுடன், லண்டனில் மேற்படிப்பையும் முடித்தார் முத்துலட்சுமி.

 

அந்தக்காலக்கட்டத்தில்தான், சட்டப்பேரவை, நாடாளுமன்றங்களில் பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கலாம் என்ற பேச்சு பலமாக எழுந்தது. 1926ல் பெண்களும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் முத்துலட்சுமி. எல்லாவற்றிலும் முதன்மையாக இருப்பது அவருக்கு பழகிப்போனதுதானே… அவர்தான் மெட்ராஸ் சட்ட மேலவையின் முதல் பெண் உறுப்பினராகவும் ஆனார்.

அப்போது, முக்கிய கோயில்களுக்கு
இறைபணி என்ற பெயரில் சிறுமிகளை
பொட்டுக்கட்டி விடும் தேவதாசி முறை
அமலில் இருந்தது. அவர்கள் கடவுள்
சிலை முன்பு தாலி கட்டிக்கொள்ள
பணிக்கப்பட்டனர். தேவதாசிகளை
அடையாளம் காண உடலில்
திரிசூலம், ரிஷப காளை, சங்கு, சக்கரம்
போன்ற ஏதாவது ஒரு முத்திரையை
குத்திக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர்.
பெண் பிள்ளைகளின் கனவுகளை
முளையிலேயே சிதைக்கும் பழைமைவாத
கொடுமைகளில் தேவதாசி முறையும் ஒன்று.
எட்டு அல்லது ஒன்பது வயதுகளிலேயே
பெண் குழந்தைகள் கோயில்களுக்கு நேர்ந்து
விடப்பட்டு விடுவர். தஞ்சை பிரகதீஸ்வரர்
கோயிலை கட்டியதற்காக ராஜராஜ சோழனை
நாம் இன்று வரை வியந்து கொண்டாடுகிறோம்.
அவர் காலத்தில்தான் இந்த தேவதாசி
முறையும் உச்சத்தில் இருந்தது.
எல்லாம் ஆரியமயம். ஆரியமாயை.

 

ஆரம்பத்தில், தேவதாசிகள் உயர்வாகத்தான்
பார்க்கப்பட்டார்கள். காலப்போக்கில்
பார்ப்பனர்கள், கோயில் நிர்வாகிகள்,
செல்வந்தர்கள் காமத்தைத் தணித்துக்கொள்ள
தேவதாசிகளை பயன்படுத்தத்
தொடங்கிவிட்டனர். பலான சமாச்சாரங்களுக்கு
அப்பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இத்தகைய போக்குகளை, நம்மை
ஆண்டு கொண்டிருந்த வெள்ளையர்களுக்கும்
பிடிக்கவில்லைதான். என்றாலும்,
உள்ளூர் மத நம்பிக்கைகளில்
தலையிட மாட்டோம் என்ற ஜென்டில்மேன்
ஒப்பந்தம் இருந்ததால் அவர்கள்
இவ்விவகாரத்தில் பெரிதாக
அலட்டிக்கொள்ளவில்லை.

ஆனால், முத்துலட்சுமி சும்மா இருக்கவில்லை. தனக்குக் கிடைத்த எல்லா வாய்ப்புகளிலும் தேவதாசி முறை ஒழிப்புக்கான சட்டத்தைக் கொண்டு வர குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். சட்ட மேலவையில் கர்ஜித்தார். அண்மையில் மக்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்பி மொஹூவா மொய்த்ரா, சிங்கமென சிலிர்த்து எழுந்தாரே… அவருக்கெல்லாம் முன்னோடி நம் முத்துலட்சுமி ரெட்டிதான்.

 

சட்ட மேலவையில் தேவதாசி முறை
ஒழிப்பு குறித்து, 1927, நவம்பர் 5ல்
தனி நபர் தீர்மானமாக கொண்டு
வந்தார் முத்துலட்சுமி. அதை எதிர்த்துப் பேசிய
தீரர் சத்தியமூர்த்தி, ”தேவதாசிகள் என்போர்
கடவுளுக்கு தன்னை அர்ப்பணித்துவிட்டவர்கள்.
அவர்கள் கடவுளுக்கு சேவை
செய்யக்கூடியவர்கள். அது புனிதமானது.
அவர்களுக்கு மறுபிறவியில்
சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்,” என்றார்.
அதைக்கேட்ட முத்துலட்சுமி
ஒரு நொடி கூட தாமதிக்காமல்,
கொஞ்சமும் தயங்காமல்,
”அப்படியெனில் உங்கள் வீட்டுப்பிள்ளைகளை
தேவதாசிகளாக அனுப்பலாமே?”
என்று கேட்டுவிட்டார். அவ்வளவுதான்…
அடுத்த சில நொடிகள்…
அந்த அவையே ஊமையாகிவிட்டது.

ஆனால், அப்போது முதல்வராக இருந்த பழைமைவாதியான ராஜாஜி, தேவதாசி முறைக்கு எதிராக சட்டம் கொண்டு வரவில்லை. அதன்பிறகு, ஓமந்தூர் ராமசாமி சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது, 1947ம் ஆண்டில்தான் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி விலைமாதர் விடுதிகளை மூடவும், நாடாளுமன்றத்தில் சாரதா சட்டம் கொண்டு வரவும் முத்துலட்சுமியின் பங்களிப்பு அளப்பரியது.

 

இன்றைக்கு இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் தமிழகத்தின் முதல் புற்றுநோய் ஆராய்ச்சி மையமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமையவும் அவரே தூண்டுகோலாக விளங்கினார். ஏனெனில், புற்றுநோயால் தன் தங்கை ஒருவரை பறிகொடுத்து இருந்தார். அதன் வலியும், ஏழைகளின் துயரங்களையும் உணர்ந்தவர் முத்துலட்சுமி. 1968, ஜூலை 22ல் அவர் மறைந்தார்.

 

மெய்வருத்தம் பாரார்
பசிநோக்கார்
கண்துஞ்சார்…
அவர், மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி.

 

– அகல்விசும்பு