Wednesday, July 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘செருப்படி’ பேராசிரியருக்கு மீள்பணி! பரபரப்பு பின்னணி அம்பலம்!!

பெரியார் பல்கலையில், பதவி உயர்வுக்காக நடந்த செருப்படி சண்டையில் பரபரப்பு கிளப்பிய பேராசிரியர் குமாரதாஸூக்கு மீள்பணியமர்வு வழங்க சிண்டிகேட் ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்கள் அம்பலமாகி உள்ளன.

சேலம் பெரியார் பல்கலையில் இயற்பியல் துறைத் தலைவரா£க பணியாற்றி வருபவர் குமாரதாஸ். இவர், வரும் ஜூன் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இவரை, ஓய்வுக்குப் பிறகும் ‘ரீ அப்பாயின்ட்மெண்ட்’ எனப்படும் மீள்பணியமர்வு செய்ய சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சிண்டிகேட்டின் இந்த முடிவுதான், பெரியார் பல்கலையை மீண்டும் சர்ச்சை வளையத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

 

ஓய்வு பெற்றவர்களுக்கு மீள் பணியமர்வு கூடாது என்று அரசாணை உள்ளது. ஏற்கனவே இதே பல்கலையில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ராஜேந்திரன், முருகேசன் ஆகியோருக்கு மீள்பணி வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

 

இவ்விரண்டு அம்சங்களையும் சுட்டிக்காட்டி, குமாரதாஸூக்கு மீள்பணியமர்வு வழங்கக்கூடாது என பெரியார் பல்கலை ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் பிரேம்குமார் அரசுத்தரப்பு சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். பிரேம்குமார், சங்க நிர்வாகி மட்டுமல்ல; பெரியார் பல்கலை வரலாற்றுத்துறை உதவி பேராசிரியரும் கூட.

 

சிண்டிகேட் குழு நடப்பதற்கு முன்பே, குமாரதாஸின் மீள்பணியமர்வு குறித்த ரகசியத்தை பத்திரிகையில் வெளியிட்டதாகக் கூறி, பிரேம்குமாரை கடந்த மார்ச் 5ம் தேதி பணியிடைநீக்கம் செய்தார் பதிவாளர் (பொ) தங்கவேல்.

பிரேம்குமார்

பத்திரிகையில் வெளியான செய்தியில்கூட, ‘தாங்கள் கேள்விப்படுகிறோம்’ என்ற அளவிலேதான் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது. இதுமட்டும் முரண் அல்ல. சங்க நிர்வாகிகளுக்கு விமர்சனங்களைச் சொல்ல அடிப்படை உரிமை இருக்கும்போது, ‘பொதுச்செயலாளர்’ பிரேம்குமார் மீதான வன்மத்தை, ‘உதவி பேராசிரியர்’ பிரேம்குமார் மீது காட்டியிருக்கிறது பல்கலை நிர்வாகம்.

 

அத்துடன் நில்லாமல், வரலாற்றுத்துறையில் எம்.ஏ., படித்து வரும் ஒரு பட்டியலின மாணவியை ஏவிவிட்டு, பிரேம்குமார் மீது பாலியல் மற்றும் சாதி வன்கொடுமை புகாரையும் கொடுக்க வைத்திருக்கிறது பல்கலை.

 

இது தொடர்பாக, உயர்கல்வித்துறை செயலர் கார்த்திகேயனிடம் நாம் பேசும்போதுகூட, குமாரதாஸ் மீள்பணியமர்வு விவகாரத்தை இப்போதைக்கு விட்டுவிடுங்கள் என்று பல்கலையிடம் சொல்லிவிட்டதாக பெருந்தன்மையாக சொன்னார். ஆனால், முதலில் ஆறப்போட்டு, பின்னர் விதிகளை மீறிய தீர்மானத்திற்கு இசைவளிக்க உயர்கல்வித்துறையும் உடந்தையாக இருந்துள்ளதோ என்ற சந்தேகம் எல்லோருக்குமே வலுத்துள்ளது.

 

சங்கங்கள் எதிர்ப்பு, விதிமீறல், பேராசிரியர்கள் அதிருப்தி என இத்தனை சர்ச்சைகள் இருந்தும் பேராசிரியர் குமாரதாஸூக்கு பெரியார் பல்கலை முட்டுக்கொடுக்க வேண்டியதன் பரபரப்பு பின்னணியும் வெளியாகி உள்ளன.

 

இது தொடர்பாக, பெயர் கூற விரும்பாத பல்கலை பேராசிரியர்கள் சிலர் நம்மிடம் விரிவாக பேசினார்கள்.

 

”பேராசிரியர்கள் அன்பரசன், குமாரதாஸ் இருவரும் பெரியார் பல்கலை இயற்பியல் துறையில் முதலில் ரீடர் ஆகத்தான் பணியில் சேர்ந்தனர். இவர்களில் அன்பரசன் முதலில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். அவருக்குப் பிறகுதான் குமாரதாஸ் பேராசிரியர் ஆனார்.

குமாரதாஸ்

பதவி உயர்வு சீனியாரிட்டிபடி, அன்பரசனுக்குதான் துறைத்தலைவர் பதவி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்போது இருந்த துணைவேந்தர் குழந்தைவேலு, ஸ்டேஷன் சீனியாரிட்டி அடிப்படையில் குமாரதாஸை துறைத்தலைவராக நியமித்தார்.

 

இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர்களுக்குள் பெரிய அளவில் மனக்கசப்பு ஏற்பட்டு, ஒருகட்டத்தில் துறை அலுவலகத்திற்குள்ளேயே இருவரும் மோதிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் செருப்பை கழற்றி அடித்துக் கொண்டனர்.

 

ஏற்கனவே சாதி பாகுபாடு மலிந்து காணப்படும் இந்தப் பல்கலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அன்பரசன் மீது செருப்படி சம்பவத்திற்குப் பிறகு பல்கலை நிர்வாகத்திற்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டது.

 

அன்பரசன் செருப்பால் தாக்கியதில் தனக்கு நெஞ்சு வலி வந்துவிட்டதாகக் கூறிய குமாரதாஸை, பெரியார் பல்கலை ஃபேகல்டீஸ் சங்க நிர்வாகியும், தமிழ்த்துறைத் தலைவருமான பெரியசாமி, இப்போதைய பொறுப்பு பதிவாளரான பேராசிரியர் தங்கவேல் ஆகியோர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், பெங்களூருவில் உள்ள நாராயணா ஹிருதயாலயாவில் சேர்ந்தது தனிக்கதை.

 

குமாரதாஸ், பேராசிரியர் பெரியசாமியின் சங்கத்தைச் சேர்ந்தவர். பல்கலை முடிவுகளை விமர்சனம் செய்து வருவதாக பேராசிரியர் வைத்தியநாதன் என்பவர் மீது பல்கலையின் மேல்மட்டத்திற்கு அதிருப்தி உள்ளது. அவர்தான், அன்பரசனை மருத்துவமனையில் சேர்த்தார். இந்த வைத்தியநாதன், பல்கலை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்.

 

பெரியசாமியும், பேராசிரியர் தங்கவேலும் பல்கலை நிர்வாக முடிவுகளில் எப்போதும் சாதி ரீதியாக ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள். அவர்கள் சார்ந்த சங்கத்திற்கு எதிரானவர் பேராசிரியர் அன்பரசன். இப்போதும் பெரியசாமி மீது போலிச்சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்ததாக ஒரு புகார் விசாரிக்கப்படாமல் கிடப்பிலேயே கிடக்கிறது.

 

பல்கலை நிர்வாகத்தில் செல்வாக்கோடு உலா வரும் பெரியசாமி, தங்கவேல் ஆகியோரின் அழுத்தம், இரண்டு சங்கங்களுக்கு இடையேயான ஈகோ உள்ளிட்ட காரணங்களால்தான் இப்போது குமாரதாஸூக்கு மீள்பணியமர்வு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் குமாரதாஸ் தரப்பில் இருந்து சில லட்சங்கள் முக்கிய பிரமுகர்களுக்கு கைமாறியதாகவும் சொல்லப்படுகிறது.

 

குமாரதாஸை மீள்பணியமர்வு செய்ய வேண்டும் என்ற முன்முடிவுடனேயே, அதற்குரிய அஜண்டாவில், அவருடைய சேவை பல்கலைக்குத் தேவை, அவர் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறார் என்ற ரீதியில் சொற்களை சேர்த்திருக்கிறார்கள்,” என பரபரப்பு பின்னணியைச் சொன்னார்கள் பேராசிரியர்கள்.

 

இது தொடர்பாக அனைத்துப் பல்கலை ஆசிரியர்கள் சங்க முன்னாள் தலைவர் பாண்டியன் நம்மிடம் பேசினார்.

பாண்டியன்

”ஒரு கல்வி ஆண்டின் இடையில் ஒரு பேராசிரியர் ஓய்வு பெறுகிறார் எனில், இடைப்பட்ட காலத்தில் அந்தக் காலியிடத்தை நிரப்புவதில் தாமதம் ஏற்படும். இதனால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படும் என்பதால், கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியருக்கு மீள்பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மீள்பணியமர்வு செய்யப்படும் ஆசிரியர், அந்தக் கல்வி ஆண்டு முடியும் வரை மட்டுமே பணியில் தொடருவார்.

 

பெரியார் பல்கலையைப் பொருத்தவரை, ஒரு கல்வி ஆண்டு என்பது ஜூலை முதல் ஏப்ரல் வரையிலான 10 மாத காலம் ஆகும். மே, ஜூன் மாதங்கள் கோடை விடுமுறை காலம். பேராசிரியர் குமாரதாஸ், வரும் ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார். அதாவது, அவர் கல்வி ஆண்டுக்கு இடையில் இல்லாமல், கோடை விடுமுறை காலத்தில்தான் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், அவருக்கு மீள்பணியமர்வு வழங்க சிண்டிகேட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது பெரியார் பல்கலை சாசன விதிகளுக்கு முரணானது.

 

இதன் பின்னணியில் சாதி, அரசியல், பணம் என பல்வேறு உள்நோக்கங்கள் இருப்பதாக கருதுகிறேன்.

 

இதே பெரியார் பல்கலை, ஏற்கனவே கடந்த கல்வி ஆண்டுகளில் ஜூன் மாதத்துடன் ஓய்வு பெற்ற மேலாண்மைத்துறை பேராசிரியர் ராஜேந்திரன், தாவரவியல் துறை பேராசிரியர் முருகேசன் ஆகியோருக்கு மீள்பணியர்த்தம் வழங்க மறுத்துவிட்டது.

 

கடந்த 96வது சிண்டிகேட் கூட்டத்தில், ஜூன் மாதத்தில் ஓய்வு பெறும் ஆசிரியருக்கு மீள்பணியமர்வு வழங்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

துணைவேந்தர் ஜெகநாதன்

இந்த நிலையில் கடைசியாக நடந்த 111வது சிண்டிகேட் கூட்டத்தில் ஜூன் மாதத்துடன் ஓய்வு பெறும் குமாரதாஸூக்கு மீள் பணியமர்வு குறித்த அஜண்டாவை விவாதத்திற்கு வைத்ததே விதிகளை மீறிய செயல்தான். இதை தெரிந்தே செய்த துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர்தான் குற்றவாளிகள். அவர்கள் இருவரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்.

 

ஆளைச் சொல்லு; ரூலைச் சொல்கிறேன் என ஆளுக்குத் தகுந்தாற்போல் பெரியார் பல்கலை விதிகளை வளைத்துக் கொள்கிறது.

 

பெரியார் பல்கலை ஏற்கனவே நிறைவேற்றிய தீர்மானத்தை சுட்டிக்காட்டிதான் உதவி பேராசிரியர் பிரேம்குமார் ஒரு சங்கத்தின் நிர்வாகியாக கருத்து தெரிவித்து இருந்தார். அதற்காக அவர் மீது உள்நோக்கத்துடன் பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

பல்வேறு சர்ச்சைகளுடன், விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வரும் பெரியார் பல்கலையில் வேந்தர் என்ற ரீதியில் தமிழக ஆளுநர் நிர்வாக விசாரணை நடத்த வேண்டும்,” என்கிறார் பாண்டியன்.

 

இது ஒருபுறம் இருக்க, மேலாண்மைத்துறை பேராசிரியர் ராஜேந்திரன், தாவரவியல் துறை பேராசிரியர் முருகேசன் ஆகியோருக்கு மீள்பணியமர்வு மறுக்கப்பட்டதற்கான காரணங்களை பெரியார் பல்கலை வெளியிட்டுள்ளது.

 

அதில், பேராசிரியர் ராஜேந்திரன் பல்கலை பணிப்பதிவேட்டில் தனது பிறந்த தேதியை 4.6.1958 என்று குறிப்பிட்டிருக்கிறார் என்றும், அதன்படி அவருக்கு 4.6.2018ம் தேதியுடன் 60 வயது பூர்த்தி அடைந்து, அந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

 

அதேநேரம், ராஜேந்திரனின் எஸ்எஸ்எல்சி சான்றிதழில் அவருடைய பிறந்த தேதி 10.11.1957 என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும், அதன்படி கணக்கிட்டால் 9.11.2017ம் தேதியுடன் 60 வயது பூர்த்தி அடைந்து, அந்த மாத இறுதியில் ஓய்வு பெற்று விடுகிறார் என்றும் கூறியுள்ளது.

 

ஆனால், பல்கலை நிர்வாகமோ, ”பேராசிரியர் ராஜேந்திரன் பல்கலை ஆவணங்களில் போலியான பிறந்த தேதியைக் குறிப்பிட்டு இருந்தபோதும், அவர் மீது எந்த விதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையுடன் நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது.

 

எஸ்எஸ்எல்சி சான்றிதழின் அடிப்படையில் பிறந்த தேதியைக் கணக்கிட்டால், அவரை 30.6.2018 வரை கூடுதலாக 7 மாதங்கள் பணியாற்ற வாய்ப்பு அளித்திருக்கிறது. அதனால் அவருக்கு மீள் பணியமர்வு வாய்ப்பு மறுக்கப்படுகிறது,” என்று விளக்கம் அளித்துள்ளது.

 

பல்கலையின் இந்த பெருந்தன்மையை எண்ணி நகைக்காமல் இருக்க முடியாது. நிர்வாகத்தின் இந்த விளக்கம், தற்போது வேறு புதிய சர்ச்சைக்கும் வித்திட்டுள்ளது.

 

பேராசிரியர் ராஜேந்திரன் போலி பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்து இருந்தால், அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்பப் பெற வேண்டும். அவர் மீது கிரிமினல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யாமல் பல்கலை நிர்வாகம் அவர் மீது கருணை காட்டுவது என்பதே குற்றத்திற்கு துணை போவதாகும். அதை விடுத்து, அவரிடம் பெருந்தன்மையாக நடந்து கொண்டதாக மழுப்பலான பதில் அளித்திருப்பது வேடிக்கையாக இருப்பதாகச் சொல்கிறார்கள் பேராசிரியர்கள்.

 

பெரியார் பல்கலையில் நடந்த ஆசிரியர் நியமனங்களில் நடந்த ஊழல் முதல் தற்போதைய விதிகளை மீறிய மீள்பணியமர்வு வரையிலான விவகாரம் வரை சிறப்பு விசாரணைக்குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பேராசிரியர்கள் தரப்பில் எழுந்துள்ளது.

 

– பேனாக்காரன்