Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

களை கட்டிய குந்தாரப்பள்ளி சந்தை; ஒரே நாளில் 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளுள் ஒன்றான குந்தாரப்பள்ளி சந்தையில், கடந்த வெள்ளியன்று ஒரே நாளில் 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளன. ரம்ஜான் பண்டிகை எதிரொலியாக அதிரிபுதிரியான விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள

குந்தாரப்பள்ளியில் வெள்ளிக்கிழமைதோறும்

வாரச்சந்தை கூடுவது வழக்கம்.

இந்த சந்தையில் காய்கறி,

மசாலா பொருள்கள் விற்றாலும்

இறைச்சிக்கான ஆடு விற்பனைக்கு

மிகவும் புகழ் பெற்றது ஆகும்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 29) அன்றும்

வழக்கம்போல் வாரச்சந்தை கூடியது.

 

முஸ்லிம்களின் முக்கிய விழாக்களுள்

ஒன்றான ரம்ஜான் பண்டிகை,

வரும் 3ம் கொண்டாடப்பட உள்ளது.

இந்த பண்டிகையை குறி வைத்து,

கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளி, ஓசூர்,

சூளகிரி மற்றும் அதன்

சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த

கால்நடை வளர்ப்போர், விவசாயிகள்

அதிகளவில் ஆடுகளை விற்பனைக்குக்

கொண்டு வந்திருந்தனர்.

அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது.

 

உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி

கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கோலார்,

ஆந்திர மாநிலம் குப்பம், சித்தூர் மற்றும்

தமிழகத்தில் வேலூர், சென்னை, கடலூர்,

திருவண்ணாமலை, சேலம், கோவை, திருச்சி,

தர்மபுரி ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆடுகளை

வாங்க வியாபாரிகள், இறைச்சிக்

கடைக்காரர்கள் குவிந்தனர்.

 

அதிகாலை 5 மணி முதலே சந்தை

களைகட்டத் தொடங்கியது. 10 கிலோ

எடை கொண்ட கிடா ஆடு ஒன்று 12 ஆயிரம் முதல்

15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது.

எடை மற்றும் வயதுக்கு ஏற்றபடி

ஆட்டின் விலை குறைந்தபட்சம் 7 ஆயிரம் முதல்

அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய்

வரை விற்பனை ஆனது.

 

பண்ணை முறை வளர்ப்பு

ஆடுகளைக் காட்டிலும், பாரம்பரிய

மேய்ச்சல்முறையில் வளர்க்கப்பட்ட

ஆடுகளுக்கு கூடுதல் விலை கிடைத்தது.

மலை பகுதிகளில் வளர்க்கப்பட்ட

ஆடுகளுக்கு வழக்கத்தை விட 3000

ரூபாய் வரை கூடுதல் விலை

கிடைத்ததாகவும் விவசாயிகள் கூறினர்.

 

வெள்ளை ஆடு, பள்ளை ஆடு,

கருப்பு ஆடு, தலைச்சேரி, செம்மறி ஆடுகள்

என அனைத்து வகை ஆடுகளுக்கும்

கடும் கிராக்கி நிலவியது. குந்தாரப்பள்ளி

வாரச்சந்தையில் ஒரே நாளில் சுமார் 10 கோடி

ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை

ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக

கொரோனா ஊரடங்கு காரணமாக

ரம்ஜான் பண்டிகை பெரிதாக சிறக்கவில்லை.

நடப்பு ஆண்டில் இயல்பு வாழ்க்கை

திரும்பியுள்ள நிலையில்,

ஈகைத் திருநாளான ரம்ஜான் ரொம்பவே

களைகட்டும் என்பதற்கு இறைச்சிக்கான

ஆடுகள் விற்பனை அதிகரித்து உள்ளதன்

மூலம் தெரிய வருகிறது.

 

ஆடுகளுக்கு கூடுதல் விலை

கிடைத்ததால் கால்நடை வளர்ப்போர்,

விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

– வாணிபன்