சென்னை : அதிமுகவில் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இன்று இணைந்தன. கட்சி அலுவலகத்திற்கு வந்த முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து, அணிகள் இணைப்பை உறுதி செய்தனர். இருவரும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
முதல்வர் பழனிசாமியைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தார். முதல்வர் பதவியில் இருந்து விலகி பிறகு, 6 மாதங்களுக்கு பிறகு கட்சி அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வந்தார்.
முதல்வர் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, ஓபிஎஸ் வீட்டிற்கு சென்ற அமைச்சர் தங்கமணி, வேலுமணி மற்றும் எம்.பி., வைத்தியலிங்கம் அவரை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
கட்சி அலுவலகம் வந்த ஓபிஎஸ்.,க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.