Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வளரத் துடிக்கும் கல்லுக்கட்டு மலைக்கிராம பள்ளி!

”வாய்ப்பும், வசதியும் கிடைத்தால் உச்சம் தொடுவார்கள்”

தகவல் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் கல்லுக்கட்டு மலைக்கிராமப் பள்ளிக்கு போதிய தொழில்நுட்ப வசதிகள் கிடைத்தால், கல்வியில் உச்சம் தொடுவார்கள்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில், மலைப்பகுதியில் அமைந்துள்ளது, கல்லுக்கட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தமே 20 மாணவர்கள்தான் படிக்கின்றனர். இவர்களில் 7 பேர் பெண் குழந்தைகள்.

மலைக்கிராமங்களில் குறிப்பாக பழங்குடியினர் படிக்கும் பள்ளிகளில் பணியாற்றவே விருப்ப முன்னுரிமை தெரிவிக்காத இந்த நாளில், பழங்குடியின குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வாசிப்புப் பயிற்சி அளித்து வருகிறார், ஆசிரியர் நடராஜன். அவரை சந்திப்பதற்காக நாம் கல்லுக்கட்டு அரசுப்பள்ளிக்கு நேரில் சென்றிருந்தோம்.

பள்ளி வேலை தொடர்பாக அவர் சேலத்திற்குச் சென்றிருப்பதாக கல்லுக்கட்டு அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தி கூறினார். நானும், என்னை அழைத்துச் சென்ற தோழர் ராஜலிங்கமும் வகுப்பிற்குள் நுழைந்ததுமே, குழந்தைகள் அனைவரும் ஒன்றாக எழுந்துநின்று ‘வணக்கம்’ தெரிவித்தனர்.

வீட்டில் உள்ளவர்களின் குணாதிசயங்களை அந்த வீட்டின் சமையலறையும், கழிப்பறையுமே சொல்லிவிடும் என்பார்கள். குழந்தைகள், மரியாதை செலுத்திய விதமே அந்தப்பள்ளியில் ஏதோ ஒன்று ஆக்கப்பூர்வமாக நடந்து வருகிறது என்பதை உணர முடிந்தது.

வகுப்பறையில் உள்ள கீழ்மட்ட கரும்பலகையில் (Low Level Board), ஆங்கில பாடங்கள் எழுதப்பட்டு இருந்தது. ஆசிரியர்கள் தான் எழுதிப் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன். கையெழுத்தில் ஒழுங்கும், நேர்த்தியும் இருந்ததால் அப்படியோர் எண்ணம். விசாரித்தபோது, அதை மாணவர்கள்தான் எழுதியிருந்தனர் என்பது தெரிந்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.

இரண்டாம் வகுப்பு பயிலும் கிருத்திகா என்ற சிறுமி, பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ‘உறுதிமொழி’யை, மழலை மாறாமல் ஒப்பித்தாள். ஐந்தாம் வகுப்பு பயிலும் கிஷோர் என்ற சிறுவனோ, முழு நீள ஆங்கில பாடத்தையும் தங்கு தடையின்றி வாசித்துக் காண்பித்தான்.

கிஷோர், கீழ்மட்ட கரும்பலகையில் ஆங்கில பாடங்களை நேர்த்தியாக எழுதியும் இருந்தான். நான்காம் வகுப்பு பயிலும் சுபாஷ், கவுதம் ஆகியோரும் ஆங்கில பாடங்களை எழுதியிருந்தனர். ஒன்றாம் வகுப்பு பயிலும் ஜனனியின், கையெழுத்தை கண்களில் ஒத்திக்கொள்ளலாம். ஒவ்வோர் எழுத்தும் கல்வெட்டு.

வழக்கமாக அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை சேர்த்து எழுத வராது; அதற்கான பயிற்சி அவர்களுக்குத் தரப்படுவதில்லை என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், கல்லுக்கட்டு அரசுத் தொடக்கப்பள்ளி, அத்தகைய கருத்துகளை எல்லாம் முறியடித்து விட்டது என்றே தெரிகிறது.

ஒவ்வொரு குழந்தையின் ஆங்கிலம், தமிழ் கையெழுத்துப் பயிற்சி ஏடுகளிலும் அந்த நேர்த்தியைக் காண முடிந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை ஆசிரியர் நடராஜனும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு தலைமை ஆசிரியர் சாந்தியும் பாடம் நடத்துகின்றனர்.

தலைமை ஆசிரியர் சாந்தி கூறுகையில், ”ஆசிரியர் நடராஜன்தான் குழந்தைகளுக்கு ஆங்கில கையெழுத்துப் பயிற்சி, பேச்சுப்பயிற்சி அளித்து வருகிறார். அவர் இந்தக் குழந்தைகளின் வளர்ச்சிக்காக இடமாறுதல்கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்,” என்றார்.

மலைக்கிராமம் என்பதால், பள்ளி அமைந்துள்ள பகுதியில் பிஎஸ்என்எல் உள்பட எந்த ஒரு நிறுவன செல்போன் சிக்னல்களும் கிடைக்கவில்லை. பள்ளியில் இருந்து அரை கி.மீ. தூரம் சென்றால்தான் சிக்னல் கிடைக்கிறது. கல்வித்துறை அதிகாரிகளுடனான தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் எனில், ஆசிரியர் நடராஜன் பள்ளியில் இருந்து அரை கி.மீ. தொலைவுக்கு சென்றுதான் பேசி வருகிறார்.

வாய்ப்புகளும், தொழில் நுட்பங்களும் மறுக்கப்படுவதால்தான் பழங்குடியினர் வாழ்வில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாத நிலை உள்ளது.

சமவெளி பகுதியில் உள்ள பள்ளிகளை, மாதிரி பள்ளியாக உருவாக்குவதைக் காட்டிலும், ஒரு மலைக்கிராமப் பள்ளியை மாதிரி பள்ளியாக உருவாக்க கல்வித்துறை முன்வர வேண்டும். அதற்கான போதிய இடவசதிகளும், வகுப்பறைகளும் இப்பள்ளியில் உள்ளன.

கல்வித்துறையோ, சமூக ஆர்வலர்களோ தாமாக முன்வந்து கல்லுக்கட்டு அரசுத் தொடக்கப்பள்ளிக்கு ‘ஸ்மார்ட் கிளாஸ்’ போன்ற நவீன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால், எதிர்காலத்தில் கல்லுக்கட்டு கிராமத்தில் இருந்தும் கலெக்டர்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம்.

– புதிய அகராதி

ஆசிரியர்களை தொடர்பு கொள்ள: 9786935222 / 9943735658

இணையத்தில் தொடர: http://puthiyaagarathi.com/