ரஜினிகாந்த், ‘போர் வரட்டும், அதுவரை காத்திருங்கள்’ என்று எதை நினைத்து சொன்னாரோ… ஆனால், சேலத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கோஷ்டி பூசல் அக்கப்போர்களால் உறுப்பினர் சேர்ப்பு உள்ளிட்ட ஒட்டுமொத்த பணிகளும் அடியோடு முடங்கியுள்ளன.
கோஷ்டி பூசல்
திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற வளர்ந்த கட்சிகளுக்கே உரித்தான கோஷ்டி பூசல்களைக் காட்டிலும், இன்னும் முளை விடவே ஆரம்பிக்காத ரஜினி மக்கள் மன்றத்தில் உள்கட்சி மோதல்கள் உச்சத்தை அடைந்துள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது உறுதி என்று வெளிப்படையாக அறிவித்தார். அதன்பின்னர், தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றம் என மாற்றினார்.
சலசலப்பு
பாபா முத்திரை, இணையம் வழியாக புதிய உறுப்பினர் சேர்க்கை என அடுத்தடுத்த நகர்வுகளால் வேகமெடுத்தது ரஜினி மக்கள் மன்றம். ஆனால், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டபோது, பல தரப்பினரிடமிருந்தும் கடும் சலசலப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தது.
குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் மூழ்கும் கப்பல்போன்ற அபாயக்கட்டத்தில் உள்ளதாக கூறுகின்றனர், ரஜினி ரசிகர் மன்றத்தில் நீண்ட காலமாக பொறுப்பில் இருந்த நிர்வாகிகள்.
சிஸ்டம் கெட்டுப்போச்சு
இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
”’தமிழ்நாட்டில் சிஸ்டம் கெட்டுப்போச்சு’ என்று சொன்ன எங்கள் தலைவர் ரஜினியே, மக்கள் மன்றத்திற்கு பொறுப்பாளர்களை நியமிப்பதில் ஏற்கனவே திராவிட கட்சிகள் பின்பற்றி வரும் உத்தியைத்தான் செயல்படுத்தி வருகிறார்.
திமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவும் விஐபிக்கு, கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட்டு விடும். அதேபோல்தான் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவும் விஐபிக்களுக்கும் சகல மரியாதைகளும் செய்யப்படும். அதையேதான் ரஜினிகாந்தும் இப்போது செய்கிறார்.
தொடர்பு எல்லைக்கு வெளியே…
சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இப்போது நியமிக்கப்பட்டுள்ள செந்தில்குமார், ஏற்கனவே தேமுதிகவில் இருந்தார். அவருடைய அப்பா, அர்ஜூனன் முன்னாள் அதிமுக எம்.பி., எம்எல்ஏ ஆக இருந்தவர். செந்தில்குமார் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியாக ஒரு காலத்தில் இருந்தது உண்மைதான். ஆனால், நீண்ட காலமாக அவர் மன்றத்துடன் எந்த தொடர்பிலும் இல்லை.
இப்படி இடையில் வேறு கட்சிக்குப் போய்விட்டு வந்த செந்தில்குமார், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், தேர்தலில் சீட் கொடுத்தால் செலவு செய்யக்கூடிய அளவுக்கு பணபலம் உள்ளவர் என்பதையும் கணக்குப் போட்டுதான் அவரை செயலாளர் பதவியில் ரஜினி நியமித்துள்ளார்.
பதவியிறக்கம்
கிட்டத்தட்ட 17 வயதில் இருந்து ரஜினி ரசிகர் மன்றத்திற்காக உழைத்து வரும் பாரப்பட்டி கனகராஜ், செந்தில்குமார் நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காகவும், அவர் உடல்நலத்துடன் இருப்பதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் முக்கிய கோயில்களில் யாகம் வளர்த்தார். அதற்கே அவர் பல லட்சம் ரூபாய் செலவழித்தார்.
பாரப்பட்டி கனகராஜ் தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்ததால், மாவட்ட துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து தடாலடியாக பதவியிறக்கம் செய்யப்பட்டு, செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கனகராஜூக்கு ஆதரவாக நின்ற ஜான், என்பவரையும் பதவியிறக்கம் செய்துவிட்டனர்.
ஜீரணிக்க முடியாது
காலங்காலமாக ரசிகர் மன்றத்திற்காக உழைத்தவர்கள் கழற்றி விடப்படும்போது யாரால்தான் ஜீரணிக்க முடியும்? இதனால்தான், ஓராண்டாகியும் இங்கு இன்னும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கும் பணிகள்கூட நிறைவடையவில்லை. உறுப்பினர் சேர்க்கையும் முடங்கியுள்ளது,” என்கிறார்கள் நிர்வாகிகள்.
ரஜினி ரசிகர் மன்ற சேலம் மாவட்டத் தலைவராக இருந்த பழனிவேலுதான், மக்கள் மன்றம் தொடங்கப்பட்டபோது மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். சில மாதங்களில் அவருக்கு கல்தா கொடுக்கப்பட்டு, ரசிகர்களுக்கும் ரஜினிக்குமேகூட சற்றும் பரிச்சயம் இல்லாத நீலா ஜெயக்குமார் என்பவர் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஒரே ஆண்டில் மூன்று நிர்வாகிகள்
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் வீரபாண்டி ராஜாவின் சம்பந்தி என்ற வகையிலும், மாநில பொறுப்பில் உள்ள டாக்டர் இளவரசனும் நீலா ஜெயக்குமாரும் உறவினர்கள் என்ற ரீதியிலும்தான் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டதாக அப்போதே மக்கள் மன்றத்திற்குள் முணுமுணுப்புகள் கிளம்பின.
ஆனால் அவர் பதவியில் நியமிக்கப்பட்டதில் இருந்தே நிர்வாகிகள் யாரையுமே சந்திக்கவில்லை. கட்சி அலுவலகத்தையும் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு மேல் பூட்டி வைத்திருந்தார். மேலும், அவர் கமல்ஹாசனின் கட்சியில் சேரப்போவதாகவும் தகவல்கள் வரவே, கடந்த நவம்பர் மாதம் திடீரென்று நீலா ஜெயக்குமார், செயலாளர் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
அதன்பிறகுதான், இப்போதைய செயலாளர் செந்தில்குமார் நியமிக்கப்பட்டார். இப்படி ஒரே ஆண்டில் மூன்று நிர்வாகிகள் குறுகிய காலத்திற்குள் மாற்றப்பட்டுள்ளனர்.
பணம் இருந்தால்தான் பதவி!
செந்தில்குமார் தலைமையில் கடந்த நவ. 22ம் தேதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடந்தது. கூட்டம் நடந்த திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது. என்றாலும், அதிருப்தி கோஷ்டியினர் யாருமே அந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. மாவட்ட இணை செயலாளராக எஸ்.கே.கணேசன் என்ற தொழில் அதிபரை நியமித்துள்ளனர். அவரும்கூட பணபலத்தின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்.
பணம் இருந்தால்தான் பதவி என்றால், மற்ற கட்சிகளுக்கும், ‘மாற்றத்தைக் கொண்டு வருவேன்’ என முழங்கும் ரஜினிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தமிழ்நாட்டின் பாதி மாவட்டங்களில் இதுபோன்ற அதிருப்தி உண்டு என்கிறார்கள் நடுநிலையான நிர்வாகிகள்.
”சார்… ரஜினி முழுமையாக கட்சிப் பெயரை அறிவித்த பிறகு மீண்டும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதுவரை இப்போதுள்ள பொறுப்புகள் அனைத்துமே தற்காலிகமானதுதான். இதற்கே ஏன் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள வேண்டும்?,” என்கிறார் ரஜினிகாந்த் பட்டதாரிகள் பேரவை தலைவர் ஸ்ரீனிவாசபெருமாள்.
முரட்டு பக்தன்
ரஜினிக்காக சேலத்தில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை சென்றது, நதிகளை இணைப்பதற்காக ரசிகர்கள் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவேன் என்று அறிவித்தது போன்றவற்றால் ரஜினியின் முரட்டு பக்தனாகவே வலம் வரும் பாரப்பட்டி கனகராஜை சந்தித்துப் பேசினோம்.
”ஊடகங்களிடம் பேசவே கூடாது என்பதுதான் எங்கள் மாநிலத் தலைமையின் உத்தரவு. ஆனால், நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்… ரஜினி ரசிகர் மன்றத்திற்குள்ளேயே ‘எல்லா வகையிலும் தகுதியானவர்கள்’ இருக்கும்போது, எதற்காக பல கட்சிகளுக்கு போய்விட்டு வந்தவர்களுக்கெல்லாம் பதவி வழங்க வேண்டும்?.
என்னை, செயற்குழு உறுப்பினராக மாநிலத் தலைமை பதவியிறக்கம் செய்தது. எனக்கு அந்தப் பொறுப்பும் வேண்டாம் என்று கடிதம் எழுதிக் கொடுத்து விட்டேன். எந்தப் பதவியிலும் இல்லாவிட்டாலும்கூட நான் கடைசிவரை எங்கள் தலைவருக்கு ஓர் உண்மையான காவலராக இருப்பேன்,” என்றார்.
வாருங்கள் சேர்ந்து செயல்படலாம்
இதுபற்றி ரஜினி மக்கள் மன்றத்தின் சேலம் மாவட்ட செயலாளர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, ”என்னை மாவட்ட செயலாளராக மாநிலத் தலைமை அறிவித்தவுடன், பாரப்பட்டி கனகராஜ் உள்ளிட்ட அதிருப்தி நிர்வாகிகள் சிலரிடம், வாருங்கள் சேர்ந்து செயல்படலாம் என்றுதான் கூறினேன். இதற்குமேல் இது தொடர்பாக வேறு எதுவும் சொல்வது என்பது, தலைமையின் உத்தரவை மீறியதாகும்,” என்றார்.
ரஜினி மக்கள் மன்றம் கட்சியாக முளைப்பதற்குள்ளாகவே கோஷ்டி பூசல்களால் தடுமாறி வருகிறது.
– பேனாக்காரன்.