Friday, June 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சட்டம் அறிவோம்: உயில்…! ‘அவசியமும் நடைமுறைகளும்’ – சுரேஷ், வழக்கறிஞர்

நாம் பயணிக்கும்
இந்த வாழ்க்கையில் விரும்பியோ
விரும்பாமலோ ஒவ்வொரு
நாளும் சட்டமும் அதன்
பயன்களும் நமக்கு இருந்து
கொண்டுதான் இருக்கிறது.
அதில் சிலவற்றையாவது
நாம் அறிந்து வைத்திருப்பது
இன்று காலத்தின் கட்டாயம்.
இந்த பதிவில் உயில்
மற்றும் அதை சார்ந்த சில
தகவல்களைப் பார்க்கலாம்.

வழக்கறிஞர் சுரேஷ்

 

மரணப்படுக்கையில்
இருக்கும் போது
எஸ்.வி.ரங்காராவோ அல்லது
நாகையாவோ உடனே,
“வக்கீல கூப்புடுங்க
உயில் எழுதணும்,” என்று
இருமிக்கொண்டே சொல்லும்
பழைய கருப்பு வெள்ளை
சினிமா காலத்திலிருந்தே
உயில் என்றால் ஒருவருடைய
மரண சாசனம் என்று நாம்
இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

இது முற்றிலும் தவறான
அணுகுமுறை. உயில் என்பது
ஒருவருடைய வாழ்வின்
சாசனம் (Life Testimony).
ஒருவரின் வாழ்வில் நடந்த
அதிமுக்கியமான நிகழ்வுகளும்
அவரின் வாழ்க்கைக்குப்பிறகு
அவர் சொல்ல அல்லது
சொத்து சம்பந்தமாக செய்ய
வேண்டிய அவரின்
விருப்பமே, உயில்.

ஒருவர் ஒருமுறை
உயில் எழுதி விட்டால்
அதன் பிறகு எதுவுமே
செய்ய முடியாது என்று
பலரும் நினைத்துக்
கொண்டிருக்கின்றனர்.
அதுவும் தவறு. ஒருவர்
எத்தனை முறை வேண்டுமானலும்
தான் எழுதிய உயிலை
மாற்றி எழுதலாம்.
கடைசியாக எழுதிய உயிலே
செல்லுபடியாகும் என்பதை
நினைவில் கொள்க.

ஒரு நபர் தான்,
தனது சுய சம்பாத்தியத்தின்
மூலம் பெற்று அனுபவித்து
வரும் சொத்து, மூதாதையர்களின்
கூட்டு அனுபவத்திலிருந்து
தனது பெயரில் மட்டும்
பாகப்பிரிவினை பெற்று அனுபவித்து
வரும் சொத்து அல்லது
தான செட்டில்மென்ட் மூலம்
அவரது பெயருக்கு
பத்திரப்படுத்திய சொத்துகளை
ஒரு நபர் உயிலாக
எழுதலாம்.

ஆனால் சுய சம்பாத்தியத்தில் இருந்து வாங்கப்பட்ட சொத்துகளை உறவினருக்கு மட்டுமே உயில் எழுத வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம். எத்தனையோ செல்வந்தர்கள் அந்த காலத்தில் தமது சொத்துகளை பொது காரியங்களுக்கும் கோயில்களுக்கும் சொத்தாக எழுதி வைத்து இருந்தனர்.

சென்னை பச்சையப்பா கல்லூரியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் அதன் வரலாறு..? அதற்கு நாம் இருநூற்று ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி போக வேண்டும்.

அம்மனுக்கும் ஆடி மாசத்துக்கும் பெயர் போன பெரியபாளையத்தில் 1754ல் காஞ்சி விசுவநாத முதலியார்-பூச்சியம்மாளுக்கு மகனாய் பிறந்தவர்தான் பச்சையப்பன் (எ) பச்சையப்ப முதலியார். இவர் தாயின் வயிற்றில் இருக்கும் போதே பச்சையப்பன் தந்தையை இழந்துவிட்டார்.

குடும்ப நண்பர் ரெட்டி ராயர் ஆதரவில் பெரியபாளையத்தில் இளமை பருவம். அங்கும் விதி விடாமல் துரத்தியது. அவரது ஐந்து வயதில் ஆதரவு தந்தவரையும் இழந்து விட்டார். பிறகு பிழைப்பு தேடி தாயோடும் சகோதரிகளோடும் சென்னை வந்தடைந்தார்.

சென்னையில் நாராயணப்பிள்ளை என்பவரின் ஆதரவில் நன்கு படித்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமைப் பெற்றார். கணக்கும் வணிகமும் அத்துபடி.

படிக்கும் பருவத்திலேயே சிறு வியாபாரங்களை தொடங்கினார். மொத்த வணிகர்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் தரகராக தொழிலை ஆரம்பித்தார். மொழிப்புலமையால் நிக்கோலஸ் என்னும் பெரும் ஏற்றுமதியாளருக்கு மொழிப்பெயர்ப்பாளர் ஆனார்.

வரிவசூல் ஏஜெண்ட், ஒப்பந்த தொழில், குத்த கை தொழில் என்று பல தொழில்களை செய்து பெரும் செல்வந்தரானார். 16 வயதிலேயே வள்ளல் பட்டமும் சேர்ந்து கொண்டது.

தொழிலுக்கு வசதியாக சென்னை கூவம் நதிக்கரையில் கோமளீஸ்வரன் பேட்டை (இன்றைய சிந்தாதரிப் பேட்டை) பெரிய பங்களாவில் வசித்தார். தினமும் கூவத்தில் குளித்து கோமளீஸ்வரனை தரிசித்து விட்டுத் தான் அன்றாட பணிகளை மேற்கொள்ளுவார்.

என்னது கூவத் துல குளிக்கிறதா? என்று நீங்கள் ஆச்சர்யப்பட்டாலும், அன்றைய நிலையில் கூவம்கூட புனிதமாகத்தான் இருந்தது. இதெல்லாம் ஏதோ கி.மு.வில் நடந்தது அல்ல. வெறும் 200 ஆண்டுகளுக்கு முன் சென்னையின் வரலாறு.

சரி.. கதைக்கு வருவோம். பச்சையப்பன், தனது அக்கா மகளையே திருமணம் செய்து கொண்டார். குழந்தை இல்லாததால் வேதாரண்யத்தை சேர்ந்த பழனியாயி என்பவரை இரண்டாம் மனைவியாக திருமணம் செய்தார். பெண் குழந்தையும் பிறந்தது. இங்கும் மீண்டும் விதி விளையாட துவங்கியது.

இரண்டு மனைவிகளுக்கும் ஓயாத சண்டை. ஆனாலும் அவரது ஆன்மீகத் தொண்டும் அவரது வள்ளல் தன்மையும் தொடர்ந்து கொண்டே இருந்தது. உடனே உயில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை மேற்கொண்டார்.

குடும்பத்தினருக்கு சில சொத்துகளை எழுதி வைத்து விட்டு மீதி மொத்தத்தையும் அறக்காரியங்களுக்கு ஒதுக்கி வைத்ததுடன் அதை நாராயணப்பிள்ளை என்பவர் நிர்வகிக்க வேண்டும் என்று உயிலில் குறிப்பிட்டார். 1794 மார்ச் 31ம் நாள் திருவையாறில் இறந்தார்.

இறக்கும்போது அவருக்கு வயது நாற்பது. அன்றைய மதிப்பின்படி அவரது சொத்து மதிப்பு சுமார் ஒரு லட்சம் பகோடாக்கள். (ரிப்பன் பக்கோடா அல்ல) அன்றைய நாணய முறை. தங்கத்தால் செய்யப்பட்ட நாணயங்களுக்கு பகோடா என்று பெயர். கிட்டத்தட்ட ரூபாயில் சுமார் 3.5 லட்சம். இன்றைய மதிப்பில் பல ஆயிரம் கோடிகள் பெறும்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் கிழக்கு நுழைவாயில் அருகே பச்சையப்பர் கல்வி நிறுவனங்கள்பற்றிய கல்வெட்டு ஒன்று இருக்கிறது.

பச்சையப்பருக்கு வாரிசு இல்லாததால் உறவினர்கள் கோர்ட்டுக்கு போனார்கள். இருங்க!! இருங்க!! என்ன வக்கீல் சார் ஒரு பெண் குழந்தை பிறந்தது என்று சொன்னீங்க அப்படின்னு நீங்க கேட்டா, பெண் குழந்தைகளுக்கு சொத்தில் உரிமை இல்லைன்னு அன்றைய சட்டம் சொல்லிச்சு. ஆனா அதெல்லாம் மாறிப் போச்சு. வாரிசுரிமை சட்டம் பகுதி வரும் போது அதை விரிவாக சொல்றேன்.

நீதிமன்ற வழக்கால் நாற்பத்தேழு வருடங்கள் சொத்துகள் முடங்கின. சொத்தின் மதிப்பும் சுமார் எட்டு லட்சங்களானாது. 1841ல் கோர்ட் உத்தரவால் கல்விப்பணிக்கென பெரும் செல்வம் ஒதுக்கப்பட்டது. 1842ல் டிரஸ்ட் அமைக்கப்பட்டு பச்சையப்பன் பெயரில் ஆரம்பப்பள்ளியாக சென்னை பிராட்வேயில் மாதம் ரூ.20 வாடகை கட்டடத்தில் நிறுவப்பட்டது. அதன் பரிணாம வளர்ச்சிதான் இன்றைய பச்சையப்பன் குழும கல்வி நிறுவனங்கள்.

சென்னை கந்தசாமி நாயுடு கல்லூரியும் செல்லம்மாள் மகளிர் கல்லூரியும் உயிலின் மூலம் அமைக்கப்பட்டவையே. இவைகளையும் பச்சையப்பா டிரஸ்டே நடத்துகிறது. இப்போது உயிலின் மகத்துவம் உங்களுக்கு புரிந்திருக்கும்.

சரி… டெக்னிக்கலான
விஷயங்களையும் அறிவோம்.
வெள்ளைத்தாளில் கூட எழுதலாம்.
இரண்டு சாட்சியங்கள்
கட்டாயம் இருக்க வேண்டும்.
உயிலின் மூலம்
பயனடைபவர்கள் (Beneficiary)
சாட்சிகளாக இருக்க கூடாது.

பதிவு செய்ய வேண்டும்
என்ற கட்டாயமில்லை.
பதிவு செய்வதன் மூலம்
அதன் நம்பகத்தன்மை
உறுதியாகி விடும்.
உயில் என்பது, எழுதிய
நபரின் இறப்புக்கு பின்னர் தான்
சட்ட விளைவை உண்டாக்கும்.
அதுவரை சொத்தின் உரிமை
எழுதிய நபரிடம்தான்
இருக்கும்.

உயிலில் கண்டுள்ள நபர்
அந்த சொத்திற்கு உரிமை
கோர முடியாது.
குடிபோதையில் அல்லது
மனநோயினால் பாதிப்பு
அடைந்திருந்த தருணத்தில்
எழுதிய உயில்
செல்லுபடியாகாது.

நம்ம ஊர் உயிலின்
பயன்களை பார்த்தோம்.
ஒரே வரியில் சொல்லப்பட்ட
உயிலையும் உலகப்புகழ்
பெற்ற உயிலையும் அடுத்த
பதிவில் சொல்கிறேன்.

கட்டுரையாளர்: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.
தொடர்புக்கு: advocatesuresh92@gmail.com

(“புதிய அகராதி” இதழ் சந்தா தொடர்புக்கு: 9840961947).