Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நீலகிரி: காட்டு யானையை உயிருடன் எரித்து கொன்ற ‘பகுத்தறிவு மிருகங்கள்’ கைது!

நீலகிரி அருகே,
உணவு தேடி ரிசார்ட் பகுதிக்குள்
நுழைந்த வாயில்லா ஜீவனான
காட்டு யானையை விடுதி
ஊழியர்கள் இருவர் எரியும்
துணியை வீசி, உயிருடன்
எரித்துக் கொன்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக
இருவர் கைது செய்யப்பட்டு
உள்ளனர். மனித தன்மையற்ற
இந்தச்செயலை இயற்கை
ஆர்வலர்கள் பலரும்
கண்டித்துள்ளனர்.

 

நீலகிரி மாவட்டம் மசினகுடியில்
தனியார் ரிசார்ட் பகுதிக்குள்
சில நாள்களுக்கு முன்பு,
உணவும் தண்ணீரும் தேடி
சுமார் 50 வயது மதிக்கத்தக்க
காட்டு யானை ஒன்று
புகுந்துள்ளது.

தற்போது ரிசார்ட்டுகள்
நிறைந்து காணப்படும் மசினகுடி
ஒரு காலத்தில் யானைகள்
வந்து செல்லும் வலசையாக
இருந்துள்ளது. பின்னர்,
வணிக நோக்கில் அங்கு
பலர் விடுதிகளையும்,
குடியிருப்புகளையும் கட்டியதால்
அடிக்கடி யானைகள் உணவு
தேடி ஊருக்குள் நுழைவதும்,
அவற்றை மனிதர்கள் சேர்ந்து
விரட்டி அடிப்பதும்
தொடர்கிறது.

 

இந்நிலையில்,
ரிசார்ட் பகுதிக்குள் இரவு
நேரத்தில் நுழைந்த காட்டு
யானையை விடுதி ஊழியர்கள்
விரட்டி உள்ளனர். ஒருகட்டத்தில்
அவர்கள், எண்ணெய்யில் தோய்த்த
துணியை பற்ற வைத்து, யானை மீது
வீசியெறிந்துள்ளனர். இதனால்
யானையின் முதுகு, தலை, காது
ஆகிய பகுதிகளில் பலத்த
காயம் ஏற்பட்டது. உடலில்
தீ எரிந்து கொண்டிருந்த நிலையில்,
மரண வலியால் துடித்த யானை
அங்கிருந்து பிளிறியபடியே தப்பியது.

சில நாள்களாக பலத்த தீக்காயங்களுடன் காட்டு யானை சுற்றி வருவது வனத்துறையினருக்கு தெரிய வந்தது. ஜன. 19ம் தேதியன்று, அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, லாரியில் ஏற்றி சிகிச்சைக்காக தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலியே பரிதாபமாக அந்த யானை உயிரிழந்தது. முதுகில் ஏற்பட்ட தீக்காயத்தால் யானையின் நுரையீரல் பகுதியில் கார்பன் படித்து, மரணம் நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

இது ஒருபுறம் இருக்க, யானை மீது எரியும் துணி வீசப்பட்ட சம்பவம் குறித்த காணொலி காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதை அடுத்தே, வனத்துறையினர் இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தினர்.

 

விசாரணையில், மசினகுடியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட் ஊழியர்களான பிரசாத் (36), ரேமண்ட் (38) ஆகியோர்தான் யானையை மனிதத்தன்மையற்று உயிருடன் எரித்துக்கொன்றது தெரிய வந்தது. வனத்துறையினர் அவர்களை உடனடியாக வெள்ளியன்று (ஜன. 22) கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள ரிக்கி ராயன் என்பவரை தேடி வருகின்றனர். அவர்கள் பணியாற்றி வந்த விடுதியையும் பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

 

தனியார் விடுதி ஊழியர்களின்
ஈவிரக்கமற்ற இச்செயலுக்கு
இயற்கை ஆர்வலர்கள் பலரும்
கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

 

மனிதனால் மட்டுமே
இன்னொரு உயிரினத்தின் மீது
இப்படியொரு கொடூரத்தை
நிகழ்த்த முடியும். தனியார்
ரிசார்ட்டிற்கு சொந்தமானவர்கள்
இவ்வாறு செய்துள்ளனர். கடும்
வேதனையளிக்கும் இந்தக் காட்சிகளை
காண முடியவில்லை.
சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மசினகுடி என்பதே ‘மசினன்’குடிதான்.
முழுக்க முழுக்க பழங்குடிகளின்
வாழ்விடம். இங்கு யானை
வலசை பாதையானது பல
ஆண்டுகளாக இருக்கிறது.
இத்தனை ஆண்டு காலமும்
யானைகளோடும் பிற வன
உயிரினங்களோடும் அங்குள்ள
பழங்குடிகள் வாழ்ந்து
வந்துள்ளனர்.

 

எப்போது அங்கு பழங்குடிகள்
அல்லாத மனிதர்கள் புகுந்து
வணிக நடவடிக்கையை
தொடங்கினார்களோ அப்போது
இருந்து யானைகள் அவர்களுக்கு
பிரச்னையாக மாறியது.
அதனால்தான் யானை – மனித
மோதல்கள் அடிக்கடி நடக்கின்றன.

 

கடந்த 2020ல் உச்ச நீதிமன்ற
தலைமை நீதிபதி அமர்வு,
ஏற்கனவே 2011ம் ஆண்டு
உயர் நீதிமன்றம், ”இந்த பகுதியில்
அமைந்துள்ள 39 ரிசார்ட்டுகளும்
அதில் உள்ள 309 குடியிருப்பு
பகுதிகளையும் காலி செய்துவிட்டு
நிலத்தை ஒப்படைக்க வேண்டும்,”
என்று வழங்கியிருந்த தீர்ப்பை
உறுதி செய்தது.

 

இந்த தீர்ப்பை
நடைமுறைப்படுத்த
ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன்
தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது.
இனியும் தாமதிக்காமல்
மசினகுடியின் பாதுகாப்பு கருதி
அனைத்து ரிசார்ட்டுகளையும்
அகற்ற வேண்டிய நடவடிக்கையை
அரசு மேற்கொள்ள வேண்டும்.

 

இவ்வாறு பூவுலகின் நண்பர்கள்
அமைப்பு தெரிவித்துள்ளது.

#Video

– பேனாக்காரன்