Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கடினமாக உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்! யார்க்கர் நாயகன் நடராஜன் நம்பிக்கை!!

கடினமாக உழைத்தால்
அதற்கான பலன் ஒருநாள்
நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு
நானே உதாரணம் என்றார்
‘யார்க்கர் நாயகன்’
என்றழைக்கப்படும் இந்திய
கிரிக்கெட் அணியின்
இளம் வீரரான
சேலம் நடராஜன்.

சேலத்தைச் சேர்ந்த
இந்திய கிரிக்கெட் வீரர்
நடராஜன், ஆஸ்திரேலியா
சுற்றுப்பயணத்தை
முடித்துக்கொண்டு அண்மையில்
சேலம் வந்தார்.
சொந்த ஊரான
சின்னப்பம்பட்டியில்
அவருக்கு
உள்ளூர் கிராம மக்கள்,
உறவினர்கள், நண்பர்கள்
திரண்டு வந்து உற்சாக
வரவேற்பு அளித்தனர்.
சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு
அவரை குதிரைகள்
பூட்டிய சாரட் வண்டியில்
அமர வைத்து, செண்டை
மேள வாத்தியங்கள்
முழங்க வரவேற்பு அளித்தனர்.
அவரிடம் ஊடகத்தினர்
பேட்டி எடுக்க முயன்றபோது,
பிசிசிஐயின் கட்டுப்பாடுகள்
காரணமாக செய்தியாளர்களிடம்
பேச மறுத்து விட்டார்.

 

இந்நிலையில், அவர்
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை
(ஜன. 24) திடீரென்று
செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது:

 

ஆஸ்திரேலியாவில்
விளையாடிவிட்டு நாடு திரும்பிய
எனக்கு சொந்த ஊரில் இந்த
அளவுக்கு வரவேற்பு கிடைக்கும்
என்று எதிர்பார்க்கவில்லை.
அந்த வரவேற்பு நிகழ்ச்சியை
என் வாழ்க்கையில் எப்போதும்
மறக்க முடியாது. வரவேற்பு
அளித்த ஊர் மக்களுக்கும்
நண்பர்களுக்கும் நன்றி
சொல்லிக் கொள்கிறேன்.

 

தமிழ்நாட்டிற்கும், சேலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அந்த கனவு தற்போது நனவாகி இருக்கிறது. இது கடவுள் கொடுத்த வரம். அளவு கடந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

 

ஐபிஎல் போட்டியில் 4 ஆண்டுகள் விளையாடியதால் எனக்கு இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்களுடன் சகஜமாக பேசி விளையாட உதவிகரமாக இருந்தது.

 

இந்திய அணியின் பயிற்சியாளர்,
கேப்டன், சக வீரர்கள் எனக்கு
பல்வேறு ஆலோசனைகளை
வழங்கினர். ஒருநாள், டி 20,
டெஸ்ட் என மூன்று
விதமான கிரிக்கெட் போட்டிகளிலும்
அறிமுகமாவேன் என
எதிர்பார்க்கவில்லை.
எனது கடின உழைப்பை
மட்டும் தொடர்ந்து செலுத்தினேன்.
அதற்கான பலன்
கிடைத்திருக்கிறது.

 

டி 20 கோப்பையை
வென்றவுடன் கேப்டன்
விராட் கோஹ்லி, கோப்பையை
என்னிடம் வழங்கியதை
நான் எதிர்பார்க்கவில்லை.
அவர் மிகப்பெரிய ஜாம்பவான்.
அவர் கோப்பையைப் பெற்று,
என் கையில் கொடுத்ததும்
என்னை அறியாமலேயே
உணர்ச்சிப் பெருக்கில்
கண்ணீர் வந்துவிட்டது.
நெகிழ்ச்சியாக இருந்தது.

 

இந்திய வீரர்கள் எல்லோருமே ஓய்வு அறையில் எனக்கு ஊக்கம் அளித்து பழகினர். அஷ்வின், ‘என்ன மச்சி…’ என்று சகஜமாக பேசுவார். அவர் இருக்கும் இடத்தை எப்போதும் கலகலப்பாக வைத்திருப்பார்.

 

சன் ரைஸசர்ஸ் அணியின் கேப்டனான ஆஸி வீரர் டேவிட் வார்னர், எனக்கு வாழ்த்து தெரிவித்தார். எனக்கு மகள் பிறந்த ராசியோடு ஜொலிக்கப் போகிறாய் என ட்வீட் செய்திருந்தார். அவருடைய பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது.

 

நான் பிறந்த ஊரான சின்னப்பம்பட்டியில், சின்ன வயதில் தெருக்களில் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். கடின உழைப்பே பலனைத் தரும். அதற்கு நானே உதாரணம். எனவே கிராமப்புற இளைஞர்கள் என்றாலும், கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். கடின உழைப்பிற்கான பலன் ஒருநாள் நிச்சயம் கிடைத்தே தீரும்.

 

எனக்கு மிகவும் பிடித்த
வீரர் சச்சின். என்னை
ரசிகர்கள் ‘யார்க்கர் நாயகன்’
என அழைப்பது மகிழ்ச்சி
அளிக்கிறது. எனது பலத்தின்
மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
அதை எப்போதும் வெளிப்படுத்துவேன்.
ஆஸி. தொடரை வென்றது
என்பது ஒட்டுமொத்த அணிக்கும்
கிடைத்த வெற்றியாகும். சமூக
ஊடகங்களில் ஒவ்வொருவரும்
என்னை அவர்கள் வீட்டுப்
பிள்ளையாக நினைத்து பாராட்டினர்.
அதற்கு நன்றி. இவ்வாறு
நடராஜன் கூறினார்.

 

– பேனாக்காரன்