கந்துவட்டி கொடுமையால் கடந்த 23ம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்த சம்பவத்தில் எஞ்சியிருந்த நான்காவது நபரும் இன்று (அக். 25, 2017) பலியானார்.
திருநெல்வேலி மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கூலித்தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் கந்து வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தார். அசல், வட்டி திருப்பிச் செலுத்தியும், தொடர்ந்து பணம் கேட்டு கடன்காரர்கள் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
விரக்தி அடைந்த இசக்கிமுத்து, தன் மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 23ம் தேதியன்று காலை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
பலத்த தீக்காயம் அடைந்த நிலையில் அவரை அருகில் இருந்த பொதுமக்கள், போலீசார் மற்றும் ஊடகத்தினர் பத்திரமாக மீட்டு பாளையம்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி, இரு மகள்¢களான மதி சரண்யா, அக்ஷய சரண்யா ஆகிய மூன்று பேரும் அன்று மாலையில் இறந்தனர்.
இந்நிலையில், இசக்கிமுத்துவும் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கந்துவட்டி தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் தீக்கு இரையானது இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு தமிழகத்தின் பெருந்துயரமாகவும் கருதப்படுகிறது.
இசக்கிமுத்துவின் தம்பி கோபி, தனது அண்ணன் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை முறையாக நடத்தப்படாததுதான் தீக்குளிப்பு சம்பவத்திற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
இறந்த இசக்கிமுத்துவின் உடலை வாங்க மறுத்து அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை அமைந்துள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
”திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து அண்ணன், அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் எதிர்பாராதவிதமாக தீக்குளித்தனர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அருண் ஆகியோர் என் அண்ணன் வீடு வாங்கியுள்ளதாகவும், எல்லோரிடமும் கடன்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
இசக்கிமுத்துவுக்கு வீடு இல்லை. அவர்கள் சொல்லும் அந்த வீட்டின் பத்திரத்தை தரும்வரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம்,” என்று போராட்டத்தில் ஈடுபட்ட கோபி தெரிவித்தார்.
ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அரூண் ஆகியோரிடம் கருத்துகேட்டபோது தீக்குளிப்பு சம்பவத்திற்கு இசக்கிமுத்துவை தூண்டியது யார் என்பது விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினர். விசாரணை நடத்தப்பட்ட பிறகுதான் முழுமையான தகவல்களை அளிக்கமுடியும் என்று கூறினார்.
முதல்கட்டமாக இசக்கிமுத்து குடும்பத்திற்கு கடன் கொடுத்த முத்துலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இசக்கிமுத்துவிற்கு கடன் கொடுத்தவர்கள் மற்றும் அவரிடம் இருந்து கடன் வாங்கியவர்கள் என பலரிடம் விசாரணை நடந்துவருகிறது என்றும் தெரிவித்தனர்.