தமிழகத்தில், சர்வோதய சங்கங்களில் கைத்தறி நெசவாளர்கள் பெயரில் போலி உறுப்பினர்களைச் சேர்த்து, பல ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உண்மையான கைத்தறி நெசவாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய கூலி, போனஸ் தொகையை காலங்காலமாக ஒரு கும்பல் கூட்டு சேர்ந்து சுரண்டி வந்துள்ளன.
மத்திய அரசின் கதர் மற்றும்
கிராமத் தொழில்கள் ஆணையத்தின்
(கேவிஐசி) கீழ், தமிழ்நாட்டில்
மொத்தம் 70 சர்வோதய சங்கங்கள்
இயங்கி வருகின்றன.
இந்த துறை, மத்திய அமைச்சர்
நிதின் கட்கரியின்
கட்டுப்பாட்டில் உள்ளது.
கையால் நூற்ற நூலை,
கையாலும் காலாலும் நெய்யப்படும்
துணிதான் கதர். அப்படியான
கதர் துணி நெசவாளர்கள்
மற்றும் கிராம கைவினைஞர்களால்
உற்பத்தி செய்யப்படும் பொருள்களை
சந்தைப்படுத்த சர்வோதய சங்கங்கள்
தொடங்கப்பட்டன. மொத்தமுள்ள
சங்கங்களில் நாலைந்து தவிர
ஏனைய சர்வோதய சங்கங்கள்
கதர் துணிமணிகள், கைத்தறி
பட்டுச்சேலைகள் விற்பனை
செய்வதையே பிரதானமாக
மேற்கொண்டு வருகின்றன.
கைத்தறி நெசவாளர்களை பாதுகாக்க
சர்வோதய சங்கங்களே அவர்களுக்கு
நேரடியாக பட்டு பாவு நூல், ஊடை நூல்
வழங்குகின்றன. அதன்மூலம்
பட்டு சேலைகளை நெய்து கொடுக்கும்
நெசவாளர்களுக்கு கூலியும்,
அவர்களின் கூலியின் அடிப்படையில்
காலாண்டிற்கு ஒருமுறை எம்டிஏ
(Marketing Development Assistance)
எனப்படும் 30 சதவீத ஊக்கத்தொகையும்
வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் கேவிஐசி துறையும்,
மாநில அரசும் ஊக்கத்தொகையை
முறையே 20 சதவீதம் மற்றும் 10 சதவீதம்
என பங்களிப்பு செய்கின்றன.
பணப்பலன்கள் முழுவதும்
நெசவாளர்களின் வங்கிக் கணக்கில்
நேரடியாக செலுத்தப்படுகிறது.
நேரடி பணப்பட்டுவாடா மூலம்
முறைகேட்டைத் தடுக்க முடியும்
என நம்பும் மத்திய, மாநில அரசுகள்,
பலன் பெறக்கூடியவர்கள் உண்மையிலேயே
கதர் கைத்தறி நெசவாளர்கள்தானா?
என்பதை ஆய்வு செய்வதில்
கோட்டை விட்டு விடுகின்றன.
அரசின் இந்த அலட்சியத்தை
பயன்படுத்திக் கொண்ட சர்வோதய சங்க
செயலாளர்கள், கேவிஐசி துறை
அதிகாரிகள், புரோக்கர்கள்
கூட்டு சேர்ந்து கொண்டு
பல ஆயிரம் கோடி ரூபாய்களை
வாரிச்சுருட்டியதோடு, அப்பாவி
நெசவாளர்களை சுரண்டி
உண்டு கொழுத்து வருவது
வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சர்வோதய சங்கங்களில் நடந்து வரும்
மோசடிகளுக்கு எதிராக 3 ஆண்டுக்கும்
மேலாக போராடி வரும்,
சேலம் மாவட்டம் தாரமங்கலம்
அருகே உள்ள அத்தராம்பட்டியைச்
சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை
எஸ்எஸ்ஐ மாரிமுத்து நம்மிடம் பேசினார்.
”நூற்போர், நெய்வோரை
பாதுகாப்பதற்காக சர்வோதய
சங்கங்கள் தொடங்கப்பட்டன.
கைத்தறியில் பட்டு சேலை
நெய்து கொடுத்தால் ஒரு சேலைக்கு
அதன் டிசைனை பொறுத்து 3000
ரூபாய் முதல் கூலி வழங்கப்படும்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம்,
அத்தராம்பட்டி, பஞ்சுகாளிப்பட்டி,
ஓமலூர், காடையாம்பட்டி,
பெரியேரிப்பட்டி, மல்லிக்குட்டை,
பள்ளக்காட்டூர் சுற்று வட்டாரங்களைச்
சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர்
கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம்
சர்வோதய சங்கத்தில் உறுப்பினராக
உள்ளனர். இவர்களில் ஒருவர் கூட
கதர் மற்றும் கைத்தறி நெசவாளர்
கிடையாது.
அத்தராம்பட்டியைச் சேர்ந்த
சகோதரர்களான சதாசிவம், இளையராஜா,
கவுதமன் ஆகியோர் கைத்தறி
நெசவாளர் அல்லாதோரை
நெய்வோர், நூற்போர் என்ற பெயரில்
ஆவாரம்பாளையம் சர்வோதய
சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துள்ளனர்.
போலி உறுப்பினர்களைச் சேர்த்து
விடுவதில் இவர்கள் மூவரும் தான்
மெயின் புரோக்கர்கள்.
இவர்களுக்கு ஆவாரம்பாளையம்
சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமார்,
கேவிஐசி உயர் அதிகாரிகள் ஆகியோர்
உடந்தையாக இருந்து வருகின்றனர்.
இதே ஊரைச் சேர்ந்த முத்துசாமி,
முருகன், ஜெயவர்த்தனா உள்ளிட்ட
மேலும் சில புரோக்கர்களும்
போலி உறுப்பினர்களை சேர்த்து
மோசடி செய்துள்ளனர்.
போலி உறுப்பினர்கள் பெயரில்
கைச்சாத்து புத்தகம் தயாரித்து,
அவர்களைப் போலவே கையெழுத்துப்
போட்டு ஆவாரம்பாளையம் சர்வோதய
சங்கத்தில் இருந்து பட்டு பாவு நூல்
வாங்குகின்றனர். அந்த பட்டு
பாவு நூலை வெளிச்சந்தையில்
விற்று பணம் பார்த்துவிடும்
சதாசிவம் சகோதரர்கள்,
விசைத்தறியில் நெய்த தரமற்ற
பட்டுச்சேலைகளை சர்வோதய
சங்கத்திற்குக் கொடுத்து
ஏமாற்றுகிறார்கள்.
கைத்தறியில் பட்டு சேலை
நெய்ததாக ஏற்கனவே உறுப்பினராக
சேர்க்கப்பட்ட போலி நெசவாளர்களின்
வங்கிக் கணக்கில் கூலியும்,
காலாண்டிற்கு ஒருமுறை ஊக்கத்தொகையும்
பெற்று விடுகின்றனர். போலி
உறுப்பினர்கள் அனைவரின்
வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம்
கார்டுகளையும் புரோக்கர்களே
வைத்திருப்பதால், அவர்களுடைய
கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்ட
தகவல் கிடைத்த அடுத்த சில
நிமிடங்களில் ஏடிஎம் மூலம்
மொத்த பணத்தையும்
உருவி விடுவார்கள்.
பணம் கிரெடிட் செய்யப்பட்டது
குறித்து போலி உறுப்பினர்களின்
செல்போனுக்கு வரும் மெசேஜ்களை
வைத்து யாராவது கேள்வி
எழுப்பினால் அவர்களுக்கு
சதாசிவம் சகோதரர்கள்,
மதுபானமோ, பணமோ கொடுத்து
விஷயம் வெளியே கசியாதபடி
சரிக்கட்டி விடுகின்றனர்.
போலி உறுப்பினர்கள் பலருக்கும்
பல ஆண்டுகளாக தங்கள்
கணக்கில் லட்சக்கணக்கில்
வரவு செலவு நடந்து வருவதே
தெரியாது என்பதுதான் உண்மை.
குறிப்பாக,
கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம்
சர்வோதய சங்கத்தில்தான்
அதிகளவில் மோசடிகள் நடந்துள்ளன.
மேலும், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி,
சேலம், திருச்சி, திருப்பத்தூர்
ஆகிய சர்வோதய சங்கங்களிலும்
இதேபோன்ற மோசடிகள்
நடந்துள்ளன. கடந்த 15 ஆண்டுகளில்
போலி நெசவாளர்கள் பெயரில்
பல ஆயிரம் கோடி ரூபாய்
சுருட்டப்பட்டு உள்ளது.
இந்த இமாலய மோசடி குறித்து
பலமுறை உயர் அதிகாரிகளுக்கு
புகார் அளித்தும் யாரும்
கண்டுகொள்ளவில்லை.
விசாரணைக்கு வரும்
அதிகாரிகளுக்கு பணம்,
புட்டி முதல் குட்டி வரை
சப்ளை செய்து அவர்களை
சர்வோதய சங்க செயலாளர்கள்
கவிழ்த்து விடுகின்றனர்.
ஆவாரம்பாளையம் சர்வோதய
சங்கத்தில் கடைசியாக கடந்த
ஆக. 26ம் தேதி 1.25 கோடி ரூபாய்
நெசவாளர்களுக்கு போனஸ்
தொகை வங்கி கணக்கில்
செலுத்தப்பட்டு உள்ளது.
அதுகுறித்த தகவல் கிடைத்த
அடுத்த நாளே புரோக்கர்கள்
அத்தொகையை ஏடிஎம் மூலம்
எடுத்துவிட்டனர். இந்த சங்கத்தின்
செயலாளர் சிவக்குமார்தான்
புரோக்கர்களை கைக்குள்
போட்டுக்கொண்டு இத்தகைய
முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஆவாரம்பாளையம் சங்கத்தின்
கிளை தேனி மாவட்டம்
ஜக்கம்பட்டியிலும் உள்ளது.
அங்கும் போலி உறுப்பினர்கள்
பெயரில் பல கோடி ரூபாய்
சுருட்டி இருக்கிறார்கள்.
அங்குள்ள கிளை மேலாளர் பாலாஜி,
இந்த முறைகேடுகளுக்கு மூளையாக
செயல்படுகிறார். இதே பாலாஜிதான்,
ஆவாரம்பாளையம் சர்வோதய
சங்க செயலாளர் மீது பட்டுக்கூடுகளை
வாங்காமலேயே கொள்முதல்
செய்ததாகவும் முன்பு புகார்
அளித்திருந்தார் என்பது தனிக்கதை.
ஆவாரம்பாளையம் சங்கத்தில்
இருந்து ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர்,
சங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை
உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
இதனால் சங்க செயலாளர் சிவக்குமார்
தூண்டுதலின்பேரில் அவருடைய
ஆதரவாளர்கள் சிலர்,
அந்த ஊழியர் மீது 13 காவல்
நிலையங்களில் புகார் அளித்து
மன உளைச்சலை ஏற்படுத்தி
இருக்கிறார்கள். குண்டர்களை
வீட்டுக்கு அனுப்பியும் மிரட்டியுள்ளனர்.
இதனால் சர்வோதய சங்கத்தில்
நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றி
தெரிந்தும் கூட பலர் புகார்
கொடுக்க அஞ்சுகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள
சர்வோதய சங்கத்தில், காட்டன்
சேலைகளுக்கு ஸ்ரீபிரிண்டர்ஸ் என்ற
நிறுவனத்தில் பிளீச்சிங், டையிங்,
பிரிண்டிங் செய்ததாக போலி பில்
போட்டு பல லட்சங்களை
மோசடி செய்துள்ளனர்.
சர்வோதய சங்கங்களில் நடந்து வரும் மோசடிகள் குறித்து தமிழக காவல்துறை சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிப்பதோடு, நேர்மையான அதிகாரிகள் மூலம் அனைத்து சங்கங்களிலும் தணிக்கை செய்ய வேண்டும். புரோக்கர்கள், சங்க செயலாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் விசாரித்தால் சட்ட விரோதமான சொத்துக்குவிப்பும் அம்பலமாகும்,” என்றார் முன்னாள் எஸ்எஸ்ஐ மாரிமுத்து.
நமக்குக் கிடைத்த தரவுகளைக் கொண்டு நாமும் கள விசாரணையில் இறங்கினோம்.
மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த
கோவிந்தராஜ் என்பவரின் மனைவி
வைதேகி, சாமி சிலைகள் விற்கும்
கடையில் வேலை செய்கிறார்.
அவரை கைத்தறி நெசவாளர்
என்ற பெயரில் தேனி மாவட்டம்
ஜக்கம்பட்டி சர்வோதய சங்கத்தில்
உறுப்பினராக சேர்த்துள்ளனர்.
ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த
பாலசங்கர் என்பவர் விசைத்தறி
வைத்திருக்கிறார். அவர் பெயரிலும்,
பெங்களூருவில் வேலை செய்து வரும்
அவர் மகன் பெயரிலும் கூட
ஜக்கம்பட்டி சர்வோதய சங்கத்தில்
உறுப்பினர் என்று சொல்லி
வங்கி கணக்கு தொடங்கப்பட்டு
உள்ளது. போலி உறுப்பினர்களின்
வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட
ஊக்கத்தொகையை அதன்
கிளை மேலாளர் பாலாஜி மற்றும்
சில புரோக்கர்கள்
சுருட்டியிருக்கிறார்கள்.
இன்னொரு வினோதமான
சம்பவம் நடந்திருப்பதும் தெரிய வந்தது.
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த
தனபாலன் என்பவர் 17.10.2017ம் தேதி
இறந்துவிட்டார். ஆனால் அவருடைய
வங்கி கணக்கிற்கு 31.12.2018 வரை
பட்டுசேலை நெய்ததாக கூலி மற்றும்
ஓராண்டிற்கான ஊக்கத்தொகை
பட்டுவாடா செய்திருப்பதும்
விசாரணையில் தெரிய வந்தது.
இத்தனைக்கும் தனபாலனும்
கதர் உற்பத்தியாளர் கிடையாது.
அவர் போலி நெசவாளர் என்பது
ஒருபுறம் இருக்க, இறந்தபின்
பரிசுத்த ஆவியானவரின் பெயரிலும்
சில லட்சங்களை திருடியிருக்கிறார்கள்
ஜக்கம்பட்டி சர்வோதய சங்க ஊழியர்கள்.
தனபாலன் உயிரோடு இருந்தபோது
அவருக்கு முதியோர் உதவித்தொகை
பெற்றுத்தருவதாகக் கூறி
அவரிடம் இருந்து ஆதார்,
புகைப்படங்களை பெற்றுச்
சென்றதாக ஜக்கம்பட்டி சர்வோதய
சங்க மேலாளர் பாலாஜி மீது
தனபாலனின் மனைவி அன்னபூரணி
புகார் அளித்து, அது இன்னும்
கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது.
சேலம் மாவட்டம் அமரகுந்தியைச்
சேர்ந்த மீன் கடைக்காரர் சுரேஷ்,
மல்லிக்குட்டையைச் சேர்ந்த
கட்டடத் தொழிலாளி சண்முகம்,
100 நாள் வேலைத்திட்ட
தொழிலாளியான பூங்கொடி
ஆகியோர் பெயர்களிலும்
கைத்தறி நெசவாளர் என்ற பெயரில்
கணக்கு தொடங்கி புரோக்கர்கள்
மோசடி செய்துள்ளனர்.
ஓலைப்பட்டி காட்டுவலவைச் சேர்ந்த ஜெகநாதன் (39) என்பவர், ”எங்கள் வீட்டில் கைத்தறி நெசவு எதுவும் இல்லை. நான் டிராக்டர் ஓட்டி பிழைத்து வருகிறேன். அத்தராம்பட்டியைச் சேர்ந்த கவுதமன் என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு ஜவுளித் தொழில் தொடங்க உள்ளதாகவும், அதற்கு சில பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று கூறி, என்னுடைய ஆதார் அட்டை, புகைப்படம் வாங்கிச் சென்றார். அதற்காக அப்போது அவர் எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.
ஓமலூர் கரூர் வைஸ்யா வங்கிக் கிளையில் என் பெயரில் கணக்கு தொடங்கிய அவர், அதற்கு ஏடிஎம் கார்டும் பெற்றுக்கொண்டார். என் உறவினர் என்பதால் அப்போது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நான் கைத்தறி பட்டு சேலை நெய்ததாகச் சொல்லி, அதற்கான கூலி மற்றும் போனஸ் தொகையை கவுதமன் பெற்று வந்திருப்பது கடந்த 2018ம் ஆண்டுதான் தெரிய வந்தது.
உண்மை தெரிய வந்த பிறகு அவரிடம் இருந்து என்னுடைய வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டை பெற்றுக்கொண்டேன். கவுதமன், அவருடைய சகோதரர்கள் சதாசிவம், இளையராஜா ஆகிய மூவரும் இந்த சுற்றுவட்டாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் இவ்வாறு மோசடி செய்துள்ளனர்,” என்றார்.
2017, 2018ம் ஆண்டில் மட்டும் ஜெகநாதன் வங்கிக் கணக்கில் ஆவாரம்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் சர்வோதய சங்கங்கள் மூலம் 2.50 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு இருந்தது. அத்தொகை முழுவதும் புரோக்கர் கவுதமனும், சங்க ஊழியர்களும் ஜெகநாதனுக்கு தெரியாமல் சுருட்டியுள்ளனர்.
அத்தராம்பட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சிவக்குமார் (43) என்பவரிடம் விசாரித்தோம். ”எங்க அப்பா கைத்தறி நெசவு நெய்து வந்தார். நான், மனைவி, என் தாயார், தம்பி ஆகியோர் விசைத்தறி வைத்திருக்கிறோம். சர்வோதய சங்கத்தில் சேர்ந்தால் பட்டு பாவு கொடுத்து, அதை நெய்ய கூலியும் கொடுப்பார்கள் என்று எங்கள் ஊரைச் சேர்ந்த இளையராஜா (சதாசிவம் சகோதர்களில் ஒருவர்) என்பவர் சொன்னார்.
அப்பாவுக்கு வயதாகி விட்டது
என்பதால் என் பெயரிலும்,
மனைவி, தம்பி, தாயார் பெயரிலும்
ஓமலூர் கேவிபி வங்கியில்
கணக்கு தொடங்கி,
ஆவாரம்பாளையம் சர்வோதய
சங்கத்தில் உறுப்பினராக
சேர்த்துவிட்டார். அந்த வங்கி
கணக்கு புத்தகங்கள், ஏடிஎம்
கார்டுகள் எல்லாம்
அவரிடம்தான் இருந்தது.
அதை வைத்து என்ன செய்தார்
என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது.
சொந்தக்காரர் என்பதால்
இளையராஜாவிடம் ஆதார் அட்டை,
போட்டோக்களை கொடுத்தோம்.
ஆனால் அவர், எங்கள் பெயரில்
வங்கி கணக்கு தொடங்கி மோசடி
செய்ததாக ஓய்வு பெற்ற
எஸ்எஸ்ஐ மாரிமுத்து திடீரென்று
பிரச்னை கிளப்ப, ஊருக்குள்
பெரிய களேபரமே ஆகிடுச்சுங்க.
இப்போது இந்த ஊர் முழுவதுமே
மாரிமுத்துவுக்கு எதிராகத்தான்
இருக்கு,” என்றார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு
அருகே உள்ள பெரிய ஊணையைச்
சேர்ந்தவர் பாபு (55). இவர்,
திருப்பத்தூர் சர்வோதய சங்கத்தில்
உறுப்பினராக உள்ளதாக
போலியாக பதிவு செய்யப்பட்டு,
இந்தியன் வங்கியில் கணக்கும்
தொடங்கியுள்ளார் சங்கத்தின்
செயலாளரான லோகேஸ்வரன்.
அவருடைய வங்கி கணக்கு புத்தகம்,
ஏடிஎம் கார்டு ஆகியவை
லோகேஸ்வரன் வசமே இருந்துள்ளது.
பாபுவின் கணக்கில்
நெசவு நெய்த கூலி மற்றும் எம்டிஏ
ஊக்கத்தொகை 2.75 லட்சம் ரூபாய்
வரவு வைக்கப்பட்டு இருந்தது.
அதை, மொத்தமாக விழுங்கியிருக்கிறார்
லோகேஸ்வரன். அவர் மீது பாபு
அளித்த புகார் மீதும் இதுவரை
யாதொரு நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை.
மெயின் புரோக்கர்களாகச்
சொல்லப்படும் அத்தராம்பட்டி
சகோதரர்கள் சதாசிவம், இளையராஜா,
கவுதமன் ஆகியோரிடம்
விளக்கத்தைப் பெற்றோம்.
”புகார்தாரர் மாரிமுத்து
எங்களுக்கு மாமா உறவுமுறை
ஆகிறது. அத்தராம்பட்டியில்
எங்கள் சமூகத்திற்குச் சொந்தமான
மாரியம்மன் கோயில் உள்ளது.
அந்தக் கோயிலில் மாரிமுத்து
காணியாச்சி உரிமை கேட்டார்.
ஊர்க்கவுண்டரான எங்கள் அப்பாவும்,
மற்ற உறவினர்களும் அவருக்கு
காணியாச்சி உரிமை தர
எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதை மனதில் வைத்துக்கொண்டு,
சர்வோதய சங்கத்தில் போலி
உறுப்பினர்களைச் சேர்த்து மோசடி
செய்ததாக எங்கள் மீது பொய்
புகார்களைக் கூறி வருகிறார்.
இந்த ஊரில் உள்ள சிலரை
நாங்கள் ஆவாரம்பாளையம்
சர்வோதய சங்கத்தில் அறிமுகப்படுத்தி
வைத்தோம். பட்டு பாவு நூலை
சும்மா கொடுக்க முடியுமா?
அதற்கு யாராவது ஒருவரின்
அறிமுகம் தேவை என்பதால்
அந்த வேலையைச் செய்தோம்.
இந்தக்காலத்தில் யாராவது
ஏடிஎம் கார்டுகளை மற்றவர்களிடம்
தருவார்களா? இந்த ஊரில்
யாரிடம் வேண்டுமானாலும் வந்து
விசாரித்துக் கொள்ளுங்கள்,” என்றனர்
சதாசிவம் சகோதரர்கள்.
ஜெகநாதன் என்பவர்
உங்களுக்கு எதிராக வாக்குமூலம்
கொடுத்துள்ளாரே என்றோம்.
அதற்கு கவுதமன்,
”அவருக்கு மாரிமுத்து பணம்
கொடுத்து விலைக்கு வாங்கி
விட்டார். அதனால்தான்
எங்களுக்கு எதிராக புகார்
சொல்கிறார்,” என்றார்.
மோசடி புகார் குறித்து ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமாரிடம் பேசினோம்.
”எங்கள் சங்கத்தில் பணியாற்றி
விருப்ப ஓய்வில் சென்ற முருகேசன்
என்பவர், சங்கத்தின் பெயரை
பயன்படுத்தி கதர் மற்றும் கைவினை
பொருள்களை விற்பனை
செய்து வருகிறார். அவர் மீது
நாங்களும் சட்டப்படி நடவடிக்கை
எடுப்போம். அவரும், ஓய்வு பெற்ற
எஸ்ஐ மாரிமுத்து என்பவரும்
எங்கள் சங்கத்தின் மீது ஆதாரமற்ற
புகார்களை சொல்லி வருகின்றனர்.
இந்த புகார்கள் குறித்து
ஏற்கனவே அதிகாரிகள் தணிக்கை
நடத்தி முடித்ததோடு, குற்றச்சாட்டில்
உண்மை இல்லை என்றும் கூறிவிட்டனர்.
மேற்கொண்டு விவரங்கள்
வேண்டுமானால் அலுவலகத்திற்கு
நேரில் வந்தால் சொல்கிறோம்,”
என்றார் சிவக்குமார்.
இதையடுத்து, இந்த மோசடி புகார் குறித்து கேவிஐசி துறையின் தமிழ்நாடு மாநில இயக்குநர் (பொறுப்பு) பாண்டியனிடம் கேட்டோம்.
”கைத்தறி நெசவாளர்களுக்கு
கூலி, ஊக்கத்தொகை உள்ளிட்ட
பட்டியல் தயாரித்துக் கொடுப்பது
மட்டுமே எங்கள் வேலை.
அத்தொகையை உரியவர்களின்
வங்கிக் கணக்குகளில் மும்பையில்
உள்ள தலைமை அலுவலகமே
நேரடியாக செலுத்தி விடுகிறது.
நாங்கள் பணத்தைக் கையாளுவதில்லை.
ஆனாலும் எங்கள் தரப்பில்
100 சதவீதம் எல்லாமே
சரியாகத்தான் இருக்கிறது என்று
சொல்லிவிட முடியாது. சின்னச்சின்ன
குறைகள் இருக்கலாம். நீங்கள்
சொன்ன புகார்கள் குறித்து
முழுமையாக விசாரிக்கிறேன்,” என
சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
தேனி மாவட்டம் ஜக்கம்பட்டி சர்வோதய சங்க மேலாளர் பாலாஜி மீதான புகார்கள் குறித்து விசாரிக்க அவரை பல நாள்களாக தொடர்பு கொண்டும், நம்மிடம் பேசாமல் தவிர்த்தார்.
நம்முடைய விசாரணையின்போது,
புகார்தாரர் மாரிமுத்து குறித்து
அத்தராம்பட்டி சகோதரர்கள்
என்ன சொன்னார்களோ
அதே கோயில் தகராறு கதையையே
ஆவாரம்பாளையம் சர்வோதய
சங்க செயலாளர் சிவக்குமார்,
தூத்துக்குடி சர்வோதய சங்க
செயலாளர் ராஜா, கேவிஐசி மாநில
இயக்குநர் பாண்டியன், ஆத்தூர்
சர்வோதய சங்கம் ஆறுமுகம் வரை
அச்சுப்பிசகாமல் சொன்னார்கள்.
கோயில் தகராறு ஒருபுறம் இருந்தாலும்,
போலி உறுப்பினர்களின் வாக்குமூலம்
குறித்து விளக்கிய பிறகே
மேற்குறிப்பிட்ட நபர்கள்
மீதான புகாரின் தன்மை
குறித்து பெயரளவுக்கேனும்
பேசத் தொடங்கினார்கள்.
மொத்தத்தில் பல ஆயிரம்
கோடி ரூபாய் மோசடி விவகாரத்தை,
கோயில் தகராறு முன்விரோதம்
என்ற பெயரில் மிக எளிதாக
எல்லோருமே ஒரேயடியாக ஊற்றி
மூடிவிட முனைகிறார்கள் என்பது
மட்டும் தெளிவாக தெரிந்தது.
சர்வோதய சங்கங்களில் நடந்துள்ள மோசடிகளை களைந்து, அழிவின் விளிம்பில் உள்ள பாரம்பரியான கைத்தறி, கதர் நெசவுத்தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என்கிறார்கள் உண்மையான நெசவாளர்கள்.
– பேனாக்காரன்
நன்றி: நக்கீரன் இதழ்