Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பள்ளி சிறுமிகளின் வாழ்வை மாற்றும் காயலான் கடை சைக்கிள்!; ஓசூர் இளைஞர்கள் புதிய முயற்சி!!

எதற்கும் உதவாது என வீட்டில் அடைத்து வைத்திருக்கும் பழைய சைக்கிள்களை, பழுது பார்த்து மலைக்கிராம பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர் ஓசூர் இளைஞர்கள். அவர்களின் புதிய முயற்சிக்கு பரவலாக வரவேற்பு கிடைக்கவே, அதை இதர ஏழை மாணவர்களுக்கும் விரிவு படுத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது நாட்றாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி. 192 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி அமைவிடம் என்னவோ, சமதளப் பரப்பில்தான் இருக்கிறது.

எனினும், பிலிகுண்டு, சிவபுரம், பூமரத்துக்குழி, அட்டப்பள்ளம், பஞ்சல்துணை ஆகிய அடர்ந்த மலைக்கிராமங்களில் இருந்தும் கணிசமான மாணவ, மாணவிகள் வந்து படிக்கின்றனர்.

மலைப்பகுதி என்பதால் நகர்ப்புறம்போல் அடிக்கடி பேருந்துகளும் செல்லாது. அதனால் மாலை 4.15 மணிக்கு பள்ளி முடிந்தால் பல மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு நடந்தே செல்கின்றனர். மாணவிகளின் நிலை இன்னும் மோசம். வீடு போய்ச்சேர இரவு 8.30 ஆகி விடுமாம். தங்கள் குடியிருப்புக்கும் பள்ளிக்கும் இடையே குறைந்தது 10 கி.மீ. முதல் 15 கி.மீ. வரை தினமும் நடக்கின்றனர்.

முதல்கட்டமாக 9 மாணவ, மாணவிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி (மாணவர்களுக்கு நடுவில் இருப்பவர்) இலவச சைக்கிளை வழங்கினார்.

ஓசூரைச் சேர்ந்த கணேஷ், வித்யூ எஜுகேஷனல் சோஷியல் டிரஸ்ட் நிர்வாகிகள், பத்திரிகையாளர் சிவ குரு ஆகியோரின் முயற்சியால் இன்றைக்கு மலைக்கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள் கிடைத்திருக்கிறது.

நடையாய் நடந்து தேய்ந்த பாதங்கள், இன்றைக்கு சைக்கிள் பெடலை மிதிக்க தொடங்கி விட்டன. மலைக்கிராமங்களில் இருந்து வரும் 15 மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக இலவசமாக சைக்கிளை வழங்கியிருக்கின்றனர்.

ரமேஷ் என்கிற கிருஷ்ணமூர்த்தி

நாட்றாம்பாளையம் பள்ளியை தேர்ந்தெடுத்ததிலும் ஒரு சுவாரஸ்ய பின்னணி இருக்கிறது என்கிறார் ரமேஷ் என்கிற கிருஷ்ணமூர்த்தி. இவர் வித்யூ எஜூகேஷனல் சோஷியல் டிரஸ்டின் முக்கிய களப்பணியாளர்.

”கடந்த ஆண்டு (2016), நாட்றாம்பாளையம் அரசுப்பள்ளியில் குழந்தைத் திருமணம் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினோம். அப்போது செய்தி சேகரிப்பதற்காக சிவகுருவும் வந்திருந்தார். அந்தப்பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டடம் ஒன்று பூசப்படாமல் இருந்தது. அந்த கட்டட அறையில் ஒரு மாணவி தரையில் படுத்திருந்தார்.

என்ன ஏது என்று அந்த மாணவியிடம் விசாரித்தபோது, பல கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு வந்த களைப்பில் வகுப்புக்குச் செல்லாமல் படுத்துவிட்டது தெரியவந்தது. அதுபற்றி சிவகுரு பத்திரிகையில் செய்தியாகவும் வெளியிட்டார்.

கணேஷ்

அந்த மாணவியின் நிலையைப் பார்த்ததும், அதற்கு ஏதாவது ஒரு மாற்றுத்தீர்வு காண வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் இருந்து கொண்டே இருந்தது.

நடப்புக் கல்வி ஆண்டில் மீண்டும் பள்ளி திறந்ததும், நானும் சிவகுருவும் சில லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், வணிகர் சங்கங்களிடம் பள்ளி மாணவிகளுக்காக சைக்கிள் வாங்கித் தருவது தொடர்பாக உதவிகள் கேட்டோம். எல்லோருமே செய்யலாம் என்றார்களே தவிர, யாரும் உதவ முன்வரவில்லை.

இதுபற்றி கணேஷிடமும் பேசினோம். அவரும் சமூகதளத்தில் இயங்கி வருவதால், அவரிடம் கேட்டால் தீர்வு கிடைக்கும் என்று நம்பினோம். இன்றைக்கு முதல்கட்டமாக 15 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள்கள் வழங்க முடிந்தததில் பெரும் பங்கு கணேஷூக்கு உண்டு,” என்கிறார் ரமேஷ்.

மாணவ, மாணவிகள் பள்ளி முடிந்து பல கிலோமீட்டர் தொலைவு நடந்து போன சோர்வில் படிப்பது எப்படி?. இரவு உணவை சாப்பிட்டும் சாப்பிடாமலும் அப்படியே உறங்கி விடுகின்றனர்.

சமூக அடுக்குகளில் காணப்படும் சமமற்றப் போக்கு, சாமானியர்களின் வாழ்வில் 360 டிகிரியிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன என்பதற்கு நாட்றாம்பள்ளி மலைக்கிராம மாணவர்களும் விதிவிலக்கு அல்லவே.

இப்படி பல கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்று படிக்க வேண்டுமா என யோசிக்கும் பல பெற்றோர்கள், பெண் பிள்ளைகளுக்கு பூப்பெய்திய ஓரிரு ஆண்டுகளில் திருமணத்தை முடித்து விடுகின்றனர்.

இதன் விளைவு, 20 வயதுக்கு முன்பாகவே கணவனை இழந்த கைம்பெண்கள் நாட்றாம்பாளையம் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் கணிசமாக உள்ளனர் என்கிறார் ரமேஷ். இன்றும் குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

சரி. இந்த 15 சைக்கிள்களும் கிடைத்ததன் பின்னணியைச் சொல்லுங்கள் என்று நாம் கணேஷிடம் கேட்டோம்.

கணேஷூம் ரொம்பவே சுவாரஸ்யமான மனிதர்தான். ஓசூர் டைட்டான் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவர், பணி நேரம் போக மற்ற நேரங்களில் மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொள்கிறார்.

இதற்காக, ”ஹெல்பிங் ஹேண்ட்ஸ் டு ஹியுமானிட்டி டிரஸ்ட்” என்ற பெயரில் ஓர் அமைப்பை நடத்தி வருகிறார். ஆதரவற்ற இல்லங்களுக்கு அரிசி முதலான மளிகை சாமான்களை வழங்குவது, ஹெச்ஐவி குழந்தைகளுக்கு உதவி என பல்வேறு உதவிகளை பலரின் பங்களிப்புடன் செய்து வருகிறார்.

நாட்றாம்பாளையம் மலைக்கிராம மாணவர்களின் நிலை குறித்து ரமேஷ், இவரிடம் ஒரு மாதத்திற்கு முன்புதான் சொல்லி இருக்கிறார். உடனடியாக கணேஷ் அதற்கு பதிலேதும் சொல்லவில்லையே தவிர, தனி ஒருவனாக களத்தில் இறங்கிவிட்டார் எனலாம்.

”ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்திவிட்டு பழுதடைந்த நிலையில் ஒரு சைக்கிளாவது கண்டிப்பாக இருக்கும். அதுபோன்ற சைக்கிளை கேட்டால் பலரும் கொடுத்துவிடுவார்கள்.

கொஞ்சம் செலவு செய்தால் அந்த சை க்கிளை மறு பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து விடலாம். அதனால் எங்களின் நோக்கம் குறித்து பல ‘வாட்ஸ் அப்’ குழுவிலும் பகிர்ந்தேன். அதற்கு உடனடி பலனும் கிடைத்தது.

களத்தில் ஏற்கனவே என் செயல்பாட்டை பார்த்தவர்கள் என் மீது நம்பிக்கை வைத்து தங்களிடம் உள்ள பழைய சைக்கிளை தர முன்வந்தனர். முதலில் 8 சைக்கிள்…அப்புறம் இரண்டு… அதன்பின் 5 சைக்கிள்கள் என மொத்தம் 15 பழைய சைக்கிள்கள் கிடைத்தன.

நாட்றாம்பாளையம் அரசுப்பள்ளியின் புதிய கட்டடம்.

அனைத்தையும் என் வீட்டில் கொண்டு வந்து, சைக்கிள் பழுதுபார்க்கும் ஒருவரை அழைத்து வந்து அனைத்து பழுதுகளையும் சரிசெய்தோம்.

மோசமான நிலையில் இருந்த டயர், டியூப், ரிம், மட்கார்டு, இருக்கை என பல உதிரி பாகங்களையும் புதிதாக வாங்கி பொருத்தினோம். பல சைக்கிள்கள் ‘ஓவர்ஹாலிங்’ செய்யும் நிலையும் இருந்தது. பழுதுபார்ப்பு பணிகளை முடித்துவிட்டுப் பார்த்தால் ஒவ்வொன்றும் புதிய சைக்கிளாக காட்சி தந்தது. இதற்காக கிட்டத்தட்ட ரூ.13500 செலவானது.

பின்னர், நாட்றாம்பாளையம் அரசுப்பள்ளியில் முதல்கட்டமாக 9 சைக்கிள்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி கையால் வழங்கினோம். இரண்டாம் கட்டமாக 6 சைக்கிள்கள் வழங்கினோம். 8 மாணவிகள், 7 மாணவர்களுக்கு வழங்கி இருக்கிறோம். அவர்கள் அனைவருமே இப்போது பத்தாம் வகுப்பு படிக்கின்றனர்.

அவர்களுக்கு அரசு சார்பில் புதிய சைக்கிள் வழங்கிய உடனோ அல்லது படிப்பை முடித்தவுடனோ கண்டிப்பாக இந்த சைக்கிள்களை, அந்த வசதி இல்லாத சக மாணவ, மாணவிகளுக்கு வழங்கிவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த சைக்கிள்களை வழங்கி இருக்கிறோம்.

இந்த சைக்கிள்களை பார்த்ததும் மாணவிகள் ‘ஹை… இது எனக்கு…இது உனக்கு’ என்று ஆர்வமாக எடுத்துக்கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது,” என்கிறார் கணேஷ்.

இதன்மூலம் சில மாணவிகள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடும் போக்கு மாறும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில், 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்படுகிறது. சைக்கிள் பெறும்போது பெரும்பாலும் மாணவர்கள் 12ம் வகுப்பில் பாதி கல்வி ஆண்டை முடித்து விடுகின்றனர்.

பள்ளிப்படிப்புடன் நின்றுவிடும் மாணவர்களுக்கு அந்த சைக்கிள் பெரிதும் பயனளிக்காது. அதனால், இலவச சைக்கிள் திட்டத்தை 6ம் வகுப்பு அல்லது 8ம் வகுப்பு அளவிலிருந்தே தொடங்க வேண்டும் என்கிறார் வித்யூ டிரஸ்ட் ரமேஷ்.

நினைவுச்சின்னமாக வீடுகளில் சிறைப்படுத்தி வைத்திருக்கும் பழைய சைக்கிளை இதுபோல் பலரும் கொடையாக கொடுக்க முன்வந்தால், பல ஏழை மாணவர்களின் கல்வி தடையின்றி தொடர வழிவகுக்குமே!

தொடர்புக்கு:

ரமேஷ்: 95970 08558
கணேஷ்: 86107 09778

– பேனாக்காரன்.