Wednesday, July 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அதிகரிக்கும் மலட்டுத்தன்மை; கேள்விக்குறியாகும் குழந்தை பாக்கியம்! ஷாக் ரிப்போர்ட்…!!

ஜூலை 25, 1978.

இந்த நாள்,
உலக வரலாற்றை
புரட்டிப்போட்டதுடன்,
மருத்துவ உலகில் அதீத
மகிழ்ச்சியையும், மதவாதிகளிடையே
அதிர்ச்சியையும் ஒருசேர
அதிகரித்த நாள். ஆம்.
அன்றுதான், இங்கிலாந்தில்
உலகின் முதல் சோதனைக்குழாய்
குழந்தையான
லூயிஸ் ஜாய் பிரவுன்
பிறந்த தினம்.

லூயிஸ் ஜாய் பிரவுன்

”சொத்து சுகம் எவ்வளவு
இருந்தாலும் துள்ளி விளையாட
ஒரு குழந்தை இல்லையே”
என ஏங்குவோர் பலர்.
குழந்தை பாக்கியம் இல்லாத
தம்பதிகளுக்கு வரப்பிரசாதமாய்
கிடைத்ததுதான் செயற்கை
கருத்தரித்தல் தொழில்நுட்பம்.

மருத்துவ உலகினர்
இதை மகத்தான பரிசளிப்பு
என்றாலும், ஆணும், பெண்ணும்
இணை சேராமலே குழந்தை
பெற்றுக் கொள்வது என்பது
இயற்கைக்கு முரணானது
என்ற பேச்சும் எழாமல்
இல்லை.

ஆனாலும்,
உலகமயமாக்கலால் மாறி வரும்
கலாசாரம், உணவுப்பழக்கம்,
மது, புகைப்பழக்கம்,
வாழ்வியல் முறை போன்றவைகளால்
ஆண், பெண்களிடையே மலட்டுத்தன்மை
அதிகரித்து வருவதாக கூறுகிறது
மருத்துவ உலகம். இதனால்
குழந்தையின்மை என்பது,
தற்போது பெரும் சமூகப்பிரச்னையாக
உருவெடுத்துள்ளது. எனில்,
குழந்தையின்மைக்கு
என்னதான் தீர்வு?.
ஒரே தீர்வு, செயற்கை
கருவூட்டல் தொழில்நுட்பம்தான்.

குழந்தையின்மை பிரச்னை விசுவரூபம் எடுப்பதை புரிந்து கொண்ட மருத்துவ உலகினர், அதை சந்தைப் பொருளாதாரமாகவும் மாற்றி விட்டனர். இதனால்தான், இந்தியாவில் சொற்ப அளவில் இருந்த செயற்கை கருவூட்டல் மருத்துவமனைகள் இன்றைக்கு 500க்கும் மேலாக பெருகிக் கிடக்கின்றன.

செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இம்மருத்துவமனைகள் குறைந்தபட்சம் 1.50 லட்சம் ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கின்றன. உலகளவில் நம் நாட்டில்தான் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கான கட்டணம், வெளிநாடுகளைக் காட்டிலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு குறைவு. இதற்காகவே மருத்துவ சுற்றுலாக்களும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. சொன்னால் நம்ப மாட்டீர்கள். இந்தியாவில், செயற்கை கருவூட்டல் சிகிச்சை மூலமாக ஆண்டுக்கு ரூ.33 ஆயிரம் கோடி புரள்வதாக ஓர் ஆய்வு சொல்கிறது.

இது ஒருபுறம் இருக்க,
குழந்தையின்மை என்பது
வம்சத்தை வீழ்த்தும் தீவிர
பிரச்னையாக உருவெடுத்து
உள்ளதாக கூறுகிறார்,
செயற்கைக் கருத்தரித்தல் முறையில்
குழந்தை பிறப்பை வெற்றிகரமாக
சாத்தியப்படுத்தி வரும்
பிரபல மருத்துவர்
வனிதா தேவி.

குழந்தையின்மை பிரச்னைக்கான காரணம் மற்றும் தீர்வு குறித்து மருத்துவர் வனிதா தேவியிடம் நாம் கேட்டோம். இனி அவர்…

செயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்களை உண்பது, புரதம், கீரைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளாதது, துரித உணவுகள், மன அழுத்தம், வேலைப்பளு, உடல் பருமன், திருமண வயது அதிகரித்தல், ஹார்மோன் குறைபாடுகள், மாறி வரும் குடும்ப சூழல்கள் ஆகியவை குழந்தையின்மைக்கான முக்கிய காரணங்கள்.

குழந்தையில்லா தம்பதியர், திருமணம் ஆன ஒரு வருடம் கழித்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சொன்ன காலம் மலையேறி விட்டது. இப்போது, திருமணத்திற்கு முன்பே, ஆண் – பெண் இருபாலரும் தாங்கள் திருமண உறவிற்கு முழு தகுதியானவரா என்று பரிசோதனை செய்து கொள்ளும் ‘பிரீ மேரிட்டல் கவுன்சலிங்’ (Pre-marital counselling) நடைமுறைக்கு வந்துவிட்டது.

 

பெண் கருத்தரித்தலில்
உள்ள பிரச்னைகள்:

கர்ப்பப்பையானது கரு,
பதிந்து வளரும் இடமாகும்.
வளர்ச்சி குறைபாடுகளற்ற
கர்ப்பப்பையும், அதன் என்டோமெட்ரியம்
எனப்படும் உள்சுவர்
வளர்ச்சியும் குழந்தை
வளர அதிமுக்கியமானது.

கர்ப்பப்பையில் உள்ள
குறைபாடுகளை,
ஹிஸ்டிரோஸ்கோப், லேபராஸ்கோப்
மூலம் கண்டறியலாம்.
கர்ப்பப்பை உள்சுவர் வளர்ச்சியானது
கருமுட்டை வளர்ச்சியுடன்
கண்காணிக்கப்படும்போது
இயற்கையாக கருத்தரித்தலுக்கான
வாய்ப்பு அதிகமாகும்.

 

கருமுட்டைப்பை:

 

கருமுட்டைப்பை எனப்படும்
சினைப்பையில் இருந்து
மாதம் ஒருமுறை ஒரே ஒரு
கருமுட்டை வெளியாகும்.
அதை ஸ்கேன் மூலம்
கண்காணித்து, வெடிக்கும்
நேரம் உறுதி செய்யப்படும்.
கருமுட்டையானது
விந்தணுவால் துளைக்கப்படும்போது
உருவாகும் கரு,
கர்ப்பப்பையில் பதிந்து
வளரும்.

 

சினைப்பையில்
நீர்க்கட்டிகள் (பிசிஓடி):

 

மருத்துவ உலகில் இதை
நாங்கள், ‘பெண்மையை திருட
வந்த நோய்,’ என்கிறோம்.
பெண்களின் குழந்தையின்மை
பிரச்னைக்கு சினைப்பையில்
நீர்க்கட்டிகள் உருவாவதுதான்
40 சதவீதம் முக்கிய
காரணியாக உள்ளது.

பெண்களுக்கு,
ஆண்களுக்கான ஹார்மோன்கள்
அதிகரித்தல், கருமுட்டை
வெடிக்காதது போன்றவையும்
குழந்தையின்மைக்கு
முக்கிய காரணிகள்.
திருமண வயதைக் கடந்து
திருமணம் செய்யும்போது,
கருமுட்டைப்பையில் உள்ள
முட்டைகளின் அளவும்,
தரமும் பாதிக்கிறது.
இதனாலும் குழந்தையின்மை
ஏற்படுகிறது. எனினும்,
செயற்கை கருவூட்டல் (ஐவிஎப்)
மூலம் குழந்தையின்மை
பிரச்னைக்கு தீர்வு
காண முடியும்.
கருக்குழாயில் நோய் தொற்று,
கருக்குழாய் அடைப்பு
பிரச்னைகளையும் செயற்கை
கருத்தரித்தல் மூலம்
சரி செய்யலாம்.

 

ஆண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்:

 

விந்தணுக்கள் அளவு,
அவற்றின் அசையும் தன்மை,
அமைப்பு ஆகியவை
கரு உருவாக முக்கியமானவை.
ஆணின் ஒரு மி.லி., விந்தணுவில்
60 மில்லியன் முதல் 120 மில்லியன்
வரை உயிரணுக்கள் இருக்க வேண்டும்.
இதில், 20 மில்லியனுக்கும்
குறைவாக உயிரணுக்கள்
இருந்தால், அது கரு
உருவாதலுக்கு உதவாது.

கரு முட்டை தூண்டுதல்
மற்றும் கர்ப்பப்பையில் விந்தணு
செலுத்துதல் போன்ற எளிய
சிகிச்சை மூலமாக 10 – 20 சதவீதம்
வரை கருத்தரிக்கும் வாய்ப்பை
அதிகரிக்கலாம். இதிலும் தீர்வு
இல்லாதபோது, ஐவிஎப் எனப்படும்
‘In vitro fertilization (IVF)’
சோதனைக்குழாய் மூலம்
குழந்தை பெற்றுக்கொள்ளும்
சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
இதன்மூலம், இனிமேல்
வாழ்வில் குழந்தை பாக்கியமே
இல்லை என ஒரு முடிவுக்கு
வந்த தம்பதிகளில் 30 – 40 சதவீதம்
பேர் குழந்தைப்பேறு பெற்றுள்ளனர்.

‘இக்ஸி’
(ICSI – Intracytoplasmic Sperm Injection)
எனப்படும் கருமுட்டைக்குள்
விந்தணுவை செலுத்துதல் மூலம்
குழந்தைப்பேறை உண்டாக்குவது,
குழந்தையில்லா தம்பதிகளுக்கு
கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.

ஐஎம்எஸ்ஐ (IMSI – Intracytoplasmic morphologically selected sperm injection), லேசர் அசிஸ்டடு ஹேட்ச்சிங், டைம் லாப்ஸ் எம்பிரியோ, மானிட்டரிங் சிஸ்டம் என அதிநவீன வசதிகள் கொண்ட பல செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனைகள் இப்போது வந்துவிட்டன.

கருவாக்கல், கரு மாற்றம் எனப்படும் Frozen Embryo Transfer – FET ஆகிய சிகிச்சைகள் குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள உள்நோயாளிகளாக தங்க தேவையில்லை. ‘டே கேர்’ வசதி உள்ளது.

இந்தியாவில்,
திருமணமான தம்பதிகளில்
46 சதவீதம் பேருக்கு
குழந்தையின்மை பிரச்னை
(சோர்ஸ்: ஹெல்பிங் ஃபேமிலீஸ் சர்வே)
உள்ளது. இதில், 31 முதல் 40 வயதுக்கு
உட்பட்ட தம்பதிகளில் 63 சதவீதம்
பேரும், 21 முதல் 30 வயதுக்கு
உட்பட்ட தம்பதிகளில் 34 சதவீதம்
பேரும் குழந்தைப்பேறு அற்றவர்கள்
என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில்
நம் நாட்டில், பெண்கள்
கருத்தரிக்கும் விகிதம்
17 சதவீதம் குறைந்து உள்ளது.
உலகளவில் மக்கள் தொகையில்
இந்தியா இரண்டாவது இடத்தில்
இருந்தாலும், குழந்தையின்மை
பிரச்னையில் நம் நாடுதான்
முதலிடத்தில் உள்ளது என்பது
வேதனையான செய்தி.

தலைமுறை என்பதை பெரியோர்கள் வாழையடி வாழை என்பார்கள். வம்ச விருத்தி எனும் சங்கிலித்தொடரில் ஒரு கண்ணி கூட அறுபடாமல் தொடர வேண்டுமானால், செயற்கை கருத்தரித்தல் மருத்துவமனைகளின் தேவை என்பது காலத்தின் கட்டாயம் ஆகிறது.

அதேநேரம், குழந்தையின்மைக்கான காரணங்கள், எளிய சிகிச்சை முறைகள் குறித்தும் இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். அப்பொழுதுதான் நம்மால் புதிய அகராதிகள் இயற்றப்படும்.

 

//அரசு மருத்துவமனைகளில் வேண்டும்//

ஜோதி ஆனந்த்

உலகளவில் மருத்துவ
சுற்றுலா மூலம் கணிசமாக
இந்தியா வருவாய் ஈட்டி
வரும் அளவுக்கு, மருத்துவ
தொழில்நுட்பம் நம் நாட்டில்
வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆனால், உயர்தர சிறப்பு
சிகிச்சைகளுக்காக ஏழைகள்
இன்னும் தனியார்
மருத்துவமனைகளையே
நாடிச்செல்லும் அவலமும்
நீடிக்கிறது. குழந்தைப்பேறு
அற்றவர்களுக்கு சிகிச்சை
அளிக்கும் வசதி நம் நாட்டில்
இதுவரை எந்த ஒரு அரசு
மருத்துவமனையிலும்
துவக்கப்படவில்லை.

 

சேலத்தில்
ரூ.200 கோடியில்
சூப்பர் ஸ்பெஷாலிட்டி
மருத்துவமனை இருந்தாலும்கூட,
செயற்கை கருத்தரித்தல்
சிகிச்சை வசதிகள் இல்லை.
சேலம் உள்பட தமிழகத்தின்
அனைத்து அரசு
மருதத்துவமனைகளிலும்
செயற்கை கருத்தரித்தல்
மையங்களை அரசு
ஏற்படுத்திட வேண்டும்
என்கிறார், மயக்கவியல்
மருத்துவர் ஜோதி ஆனந்த்.

 

– பேனாக்காரன்