Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு! சிசிடிவி காட்சிகள் ஆவணமாக பதிவு செய்யப்பட்டதால் திடீர் திருப்பம்!!

சேலம் கோகுல்ராஜ்
ஆணவக்கொலை வழக்கு
விசாரணை பரபரப்பான கட்டத்தை
எட்டியுள்ளது. சிசிடிவி கேமராவில்
பதிவான காட்சிகள் தற்போது
முக்கிய ஆவணமாக
சேர்க்கப்பட்டதாலும்,
சிசிடிவி கேமரா டெக்னீஷியன்
அளித்த சாட்சியத்தாலும்
வழக்கில் திடீர் திருப்பம்
ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம்
ஓமலூரைச் சேர்ந்த
வெங்கடாசலம் – சித்ரா தம்பதியின்
மகன் கோகுல்ராஜ் (23).
பி.இ. பட்டதாரி. பட்டியல் சமூகத்தைச்
சேர்ந்த இவரும், கல்லூரியில் உடன்
படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த
சுவாதி என்ற மாணவியும் நெருங்கி
பழகி வந்தனர். சுவாதி,
கொங்கு வெள்ளாள கவுண்டர்
சமூகத்தைச் சேர்ந்தவர்.

 

கடந்த 23.6.2015ம் தேதியன்று,
வீட்டில் இருந்து கல்லூரிக்குச்
சென்றுவிட்டு வருவதாகக்
கூறிச்சென்றவர் அன்றிரவு
வீடு திரும்பவில்லை.
மறுநாள் மாலை,
நாமக்கல் மாவட்டம்
கிழக்கு தொட்டிபாளையம் அருகே
ரயில் தண்டவாளத்தில்
தலை வேறு உடல் வேறாக
துண்டிக்கப்பட்ட நிலையில்
கோகுல்ராஜின் சடலம்
கைப்பற்றப்பட்டது. அவருடைய
உடலில் காயங்கள் இருந்தன.
நாக்கு துண்டிக்கப்பட்டு
இருந்தது.

கோகுல்ராஜ்,
தங்கள் சமூகத்தைச் சேர்ந்த
சுவாதியுடன் நெருங்கி பழகி
வந்ததை அறிந்த சங்ககிரியைச்
சேர்ந்த தீரன் சின்னமலைக்
கவுண்டர் பேரவை நிறுவனர்
யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் சேர்ந்து,
அவரை ஆணவப்படுகொலை
செய்துவிட்டதாக எழுந்த
புகாரின்பேரில் அவர்கள்
கைது செய்யப்பட்டனர்.

 

இந்த வழக்கின்
விசாரணையை ஆரம்பத்தில்
திருச்செங்கோடு டிஎஸ்பி
விஷ்ணுபிரியா விசாரித்து வந்த
நிலையில், திடீரென்று அவர்
தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பிறகு, வழக்கு விசாரணை
நாமக்கல் சிபிசிஐடி காவல்துறைக்கு
மாற்றப்பட்டது.

 

கோகுல்ராஜ் ஆணவக்கொலை
வழக்கில் அரசுத்தரப்பில் மொத்தம்
116 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளன.
வழக்கு விசாரணை,
கடந்த 2018ம் ஆண்டு
ஆகஸ்ட் 30ம் தேதி நாமக்கல்
மாவட்ட முதன்மை அமர்வு
நீதிமன்றத்தில் தொடங்கியது.
நீதிபதி இளவழகன் முன்னிலையில்
விசாரணை நடந்து வந்தது.
அரசுத்தரப்பில் சேலத்தைச் சேர்ந்த
மூத்த வழக்கறிஞர் கருணாநிதி,
யுவராஜ் தரப்பில் மதுரையைச்
சேர்ந்த வழக்கறிஞர் ஜி.கே.
என்கிற கோபாலகிருஷ்ண
லட்சுமண ராஜூ ஆகியோர்
ஆஜராகினர்.

வழக்கில் முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் தோழி சுவாதி உள்ளிட்ட அரசுத்தரப்பு சாட்சிகள் பலர் அடுத்தடுத்து பிறழ் சாட்சிகளாக மாறினர். வன்கொடுமைக்கு எதிரான வழக்குகளை எடுத்து நடத்துவதில் அனுபவமற்ற வழக்கறிஞரை அரசுத்தரப்பில் நியமிக்கப்பட்டதால், கோகுல்ராஜின் தாயார் சித்ரா தரப்பினர் ரொம்பவே அதிருப்தி அடைந்தனர்.

 

அதனால் சித்ரா தரப்பில் சேலம் சந்தியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபன், தங்கள் தரப்புக்கு பவானி பா.மோகனை (ப.பா.மோகன்) வழக்கறிஞராக நியமிக்கக் கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அப்போது இருந்த மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

அதன்பிறகு உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கோகுல்ராஜ் வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞராக ப.பா.மோகனை நியமித்து உத்தரவிட்டதோடு, அதுவரை ஆஜராகி வந்த வழக்கறிஞர் கருணாநிதியை விடுவித்தும் உத்தரவிட்டது. தமிழக உள்துறை செயலரும் அனுமதி அளித்தார். இந்த உத்தரவு பெறப்படும்போது நாமக்கல் நீதிமன்றத்தில் 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு இருந்தது.

வழக்கறிஞர் ப.பா.மோகன், வழக்கு விசாரணையை சேலம் அல்லது ஈரோடு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் உயர்நீதிமன்றமோ, வழக்கின் தொடர் விசாரணையை மதுரை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

 

அதைத் தொடர்ந்து, கடந்த 8.5.2019ம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 

இந்த வழக்கைப் பொருத்தமட்டில்,
யுவராஜூம் கூட்டாளிகளும்
திருச்செங்கோடு மலைக்கோயிலில்
இருந்து கோகுல்ராஜை மிரட்டி
கடத்திச் சென்றதை நேரில்
பார்த்ததாகச் சொல்லப்படும் சுவாதிதான்
அதிமுக்கிய சாட்சி.
அதேபோல், திருச்செங்கோடு
மலைக் கோயிலில் இருந்து
கைப்பற்றப்பட்ட சிசிடிவி
கேமரா காட்சிகளும் அரசுத்தரப்புக்கு
நம்பகமான ஆதாரம். ஆனால்,
சிஆர்பிசி பிரிவு 164ன் கீழ்,
மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில்
சுவாதி ரகசிய வாக்குமூலம்
அளித்தபோது, சம்பவத்தன்று
கோகுல்ராஜை, யுவராஜூம்
கூட்டாளிகளும் மிரட்டி கடத்திச்
சென்றதாக தெளிவாக கூறியிருந்தார்.
எனினும், நாமக்கல் நீதிமன்றத்தில்
வழக்கு விசாரணைக்கு வந்தபோது
அவர், கோகுல்ராஜை யாரென்றே
தெரியாது என்றும், திருச்செங்கோடு
மலைக்கோயிலில் இருந்து
கைப்பற்றப்பட்ட சிசிடிவி வீடியோவில்
இருப்பது நான் அல்ல என்றும்
கூறி திடீரென்று பிறழ்
சாட்சியாக மாறினார்.

 

இதனால், கோகுல்ராஜ் ஆணவக்கொலையை நிரூபிக்க அரசுத்தரப்புக்கு இருக்கும் ஒரே மற்றும் கடைசி ஆயுதம் சிசிடிவி கேமரா பதிவுகள்தான் என்ற நிலை ஏற்பட்டது. இதை நன்கு உள்வாங்கிக் கொண்ட யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே., சம்பவத்தன்று திருச்செங்கோடு கோயிலில் இருந்து சிசிடிவி கேமரா பதிவுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும், அன்றைய தினம் அங்கு கேமராக்களே இல்லை என்றும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

 

எதன் அடிப்படையில் எதிர் தரப்பு வழக்கறிஞர் இப்படிச் சொல்கிறார் என்று யோசித்தபோதுதான், காவல்துறையினர் சிசிடிவி கேமரா ஆதாரத்தை ஆவண சாட்சியமாக குறியீடு செய்யாமல் கவனக்குறைவாக கையாண்டிருப்பதை வழக்கறிஞர் பவானி பா.மோகன் கண்டுபிடித்தார். இந்த வழக்கில் தெரிந்தோ தெரியாமலோ காவல்துறையினர் மேலும் சில ஓட்டைகளை விட்டிருப்பதையும் அவர் நுட்பமாகக் கண்டறிந்தார்.

 

அதன்பிறகு என்ன நடந்தது என்பதை வழக்கறிஞர் பவானி பா.மோகனிடமே கேட்டோம்.

பவானி பா.மோகன்

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் படி, செல்போன் உரையாடல், சிசிடிவி கேமரா பதிவுகள் ஆகியவற்றை ஆதாரங்களாக சேர்க்கும்போது அவற்றை ‘மெட்டீரியல் ஆப்ஜெக்ட்’ ஆக குறியீடு செய்யாமல், ‘ஆவண சாட்சியமாக’ குறியீடு செய்ய வேண்டும். ஆனால் இந்த வழக்கில் காவல்துறையினர், திருச்செங்கோடு மலைக்கோயிலில் இருந்து கைப்பற்றிய சிசிடிவி கேமரா பதிவுகளை வெறுமனே மெட்டீரியல் ஆப்ஜெக்ட் ஆக மட்டுமே குறியீடு செய்திருந்தனர். காவல்துறையின் இந்த தவறு குறித்து அப்போது இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் நீதிமன்ற நீதிபதி முதல் காவல்துறை அதிகாரிகள் வரை யாருமே ஒரு பொருட்டாக கருதாதது வியப்பாக இருந்தது.

 

இது தொடர்பாக
நீதிமன்றத்தின் கவனத்திற்குக்
கொண்டு சென்றோம். அதன்பிறகு
மேற்சொன்ன சிசிடிவி காட்சிகள்
ஆவண சாட்சியமாக குறியீடு
செய்யப்பட்டது. இதன்மூலம் சுவாதி,
முன்பு சாட்சியம் அளித்தபோது,
கோகுல்ராஜ் யாரென்றே தெரியாது;
சிசிடிவி காட்சிகளில் இருப்பது
நான் அல்ல என்ற அவரின்
வாக்குமூலம் இனி மேல் எடுபடாது.

 

அடுத்து, கோகுல்ராஜ்
ஆணவக்கொலையை ஆரம்பத்தில்
விசாரித்து வந்த டிஎஸ்பி
விஷ்ணுபிரியாதான், திருச்செங்கோடு
கோயிலில் இருந்து சிசிடிவி
கேமரா டிவிஆர், ஹார்டு டிஸ்க்
ஆகியவற்றை கைப்பற்றினார்.
கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்து
கோயில் மகஜரில் தெளிவாக
குறிப்பிட்டு கையெழுத்தும்
போட்டுள்ளார். கோயிலில்
பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி
கேமராக்களை பராமரிக்கும்
பணிகளை திருச்செங்கோட்டைச்
சேர்ந்த மதன்குமார் என்பவர்தான்
செய்து வந்தார். அவர்தான்
அப்போது டிஎஸ்பி விஷ்ணுபிரியாவிடம்
சிசிடிவி கேமராவின் டிவிஆர்,
ஹார்டு டிஸ்க் உபகரணங்களை
எடுத்துக் கொடுத்தவர். ஆனால்
ஏனோ காவல்துறையினர் இவரை
சரியாக விசாரிக்காமல்
விட்டுவிட்டதும் தெரிய வந்தது.

 

23.6.2015ம் தேதியன்று
கோகுல்ராஜூம், சுவாதியும்
திருச்செங்கோடு மலைக்கோயிலில்
பேசிக் கொண்டிருந்த போதுதான்
யுவராஜ் உள்ளிட்டோர் அங்கு வந்து
கோகுல்ராஜை மிரட்டி கடத்திச்
சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை
சுவாதி சொல்ல, கோகுல்ராஜின்
தாயார் கேட்க, அவருடைய உறவினர்
நடேசன் என்பவர் புகாராக கைப்பட
எழுதி காவல்நிலையத்தில் கொடுத்தார்.
இவரிடமும் காவல்துறை
முழுமையாக விசாரிக்கவில்லை.
மேலும், திருச்செங்கோடு
அர்த்தநாரீஸ்வரர் கோயில்
இந்து சமய அறநிலையத்துறை
உதவி ஆணையர் சூரியநாராயணனின்
வாக்குமூலத்தையும் காவல்துறை
பதிவு செய்ய தவறி விட்டது.
இப்படி சின்னச்சின்ன ஓட்டைகள்
இந்த வழக்கில் இருந்தன.

 

இந்த நிலையில்தான், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த நவ. 27ம் தேதி கோகுல்ராஜ் வழக்கின் சாட்சிகள் விசாரணை மீண்டும் வந்தது.

 

அன்று, சிசிடிவி கேமரா டெக்னீஷியன் மதன்குமார் மற்றும் புகார் எழுதிக் கொடுத்த நடேசன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சூரியநாராயணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

 

இவர்களில் மதன்குமார், சம்பவத்தன்று அந்தக் கோயிலில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்றும், தான் கேமராக்களில் டிவிஆர், ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை புதிதாக பொருத்துவதற்காகத்தான் அன்றைய தினம் அழைக்கப்பட்டு இருந்தேன் என்றும் சாட்சியம் அளித்தார். கோகுல்ராஜ் ஆணவக் கொலை சம்பவத்திற்குப் பிறகு கோயில் நிர்வாகம் மதன்குமாருக்கு மீண்டும் சிசிடிவி கேமரா பராமரிப்பு பணிகளை வழங்காததாலும், உள்ளூர்க்காரர் என்பதால் குற்றம்சாட்டப்பட்ட நபர்களால் ஆபத்து நேரிடலாம் என்ற அச்சத்தாலும் அவர் அவ்வாறு சாட்சியம் அளித்திருக்கக் கூடும்.

 

என்றாலும், மற்றொரு அரசுத்தரப்பு சாட்சியான இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சூரியநாராயணன், சிசிடிவி கேமரா இருந்தது என்றும், டிவிஆர், ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை டிஎஸ்பி விஷ்ணுபிரியாவிடம் எடுத்துக் கொடுத்ததும், மீண்டும் புதிதாக பொருத்தியதும் மதன்குமார்தான் என்று உறுதிபட சாட்சியம் அளித்தார்.

 

அப்போது மதன்குமாரை குறுக்கிட்ட நீதிபதி முத்துக்குமார், சிசிடிவி கேமராவில் புதிதாக ஹார்டு டிஸ்க் பொருத்தினீர்கள் என்றால், அதற்கு முன்பே அங்கு சிசிடிவி கேமராக்கள் இருந்தன என்றுதானே அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார். நீதிபதியின் கேள்வியை எதிர்பாராத மதன்குமார், அங்கு ஏற்கனவே சிசிடிவி கேமராக்கள் இருந்தன என்று ஒப்புக்கொண்டார். அவருடைய இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக கருதுகிறோம்,” என்றார் வழக்கறிஞர் ப.பா.மோகன்.

 

கோகுல்ராஜை பறிகொடுத்து விட்டு தவித்து வரும் அவருடைய தாயார் சித்ராவுக்கு வழக்கை தொடர்ந்து நடத்தும் அளவுக்கு பொருளாதாரச் சூழலும் இல்லை. அரசுத்தரப்பு வழக்கறிஞர்களுக்கு நெடுஞ்சாலை டோல்கேட் கட்டண விலக்கு, போக்குவரத்துப்படி ஆகியவை வழங்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை வழக்கறிஞர் பவானி பா.மோகனுக்கு இந்த சலுகைகள் ஏனோ வழங்கப்படவில்லை.

 

இது ஒருபுறம் இருக்க,
கோகுல்ராஜ் வழக்கில்
பவானி பா.மோகன்தான்
ஆஜராக வேண்டும் என்பதில்
ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து
போராடி, அதில் வெற்றியும்
பெற்றவர் வழக்கறிஞர்
சந்தியூர் பார்த்திபன்.
அவரிடமும் பேசினோம்.

வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன்

”கோகுல்ராஜ் வழக்கில்
ஆரம்ப நிலையிலேயே
குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டு விட்டது.
அப்போதே நானும், கோகுல்ராஜின்
அண்ணன் கலைசெல்வன்,
தாயார் சித்ரா ஆகியோர்
இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்
ப.பா.மோகன்தான் ஆஜராக
வேண்டும் என்று கோரி,
9.6.2016ம் தேதி, நாமக்கல்
மாவட்ட ஆட்சியரிடம்
மனு கொடுத்தோம்.
அந்த மனு கடைசி வரை
பரிசீலனைக்கு எடுத்துக்
கொள்ளப்படவில்லை.
இதற்கிடையே, நாமக்கல்
நீதிமன்றத்தில் கோகுல்ராஜ்
வழக்கில் சாட்சி விசாரணையை
தொடங்கிவிட்டனர்.

 

இந்த வழக்கில் அரசுத்தரப்பில்
நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்
கருணாநிதி, அதற்கு முன்பு
சாதாரண சிறு வழக்குகளில்
மட்டுமே ஆஜரான அனுபவம்
உள்ளவர். வன்கொடுமை
வழக்குகளிலோ, ஆணவக்கொலை
வழக்குகளிலோ ஆஜரான
அனுபவம் இல்லாதவர். மேலும்,
சுவாதி பிறழ் சாட்சியாக
மாறியபோது, அவரிடம்
வழக்கறிஞர் கருணாநிதி
சரியாக குறுக்கு விசாரணை
செய்யாததோடு, பிறழ் சாட்சியம்
அளித்த குற்றத்திற்காக அவர் மீது
வழக்கு தொடுக்காமலும் விட்டிருந்தார்.
அவரை மீண்டும் சாட்சியத்திற்கு
அழைத்திருக்க வேண்டும்.
அதையும் அவர் செய்யத்
தவறிவிட்டார்.

இதெல்லாம் யுவராஜ்
தரப்புக்கு சாதகமான சூழலை
ஏற்படுத்தியது. நாமக்கல்
நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு
ஆஜராக வரும்போதே யுவராஜின்
ஆதரவாளர்கள் கும்பலாக வருவதும்,
நீதிமன்ற வளாகத்திலேயே
செல்போனில் செல்பி எடுப்பது,
பிரியாணி பரிமாறுவது என்று
அலப்பறைகள் செய்து வந்தனர்.
இதற்கிடையே நாங்கள்
உயர்நீதிமன்றத்தை நாடிதான்
வழக்கறிஞர் ப.பா.மோகனை
அரசுத்தரப்பு வழக்கறிஞராக
ஆஜராகும் உத்தரவைப் பெற்றோம்.
அவர் இந்த வழக்கிற்கு உள்ளே
வந்த பிறகுதான், கோகுல்ராஜ்
ஆணவக்கொலை வழக்கில்
நியாயம் கிடைக்கும் என்ற
நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,”
என்கிறார் வழக்கறிஞர்
சந்தியூர் பார்த்திபன்.

 

இந்த வழக்கில் இதுவரை 90 சாட்சிகளிடம் விசாரணை, குறுக்கு விசாரணைகள் முடிந்திருக்கின்றன. எஞ்சியுள்ள சாட்சிகளில் சிசிடிவி வீடியோ காட்சிகள், சுவாதியும் கோகுல்ராஜூம் பேசிக்கொண்ட செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்த தடயவியல்துறை உதவி இயக்குநர் தேவகி உள்ளிட்ட 8 சாட்சிகளே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதனால், அடுத்த சில மாதங்களில் கோகுல்ராஜ் வழக்கில் தீர்ப்பை எதிர்பார்க்கலாம் என்கிறார் வழக்கறிஞர் ப.பா.மோகன்.

 

– பேனாக்காரன்