Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலத்தின் ஜோதிட கிராமம்…!

”குலத்தொழிலை மறக்காத இளம் தலைமுறையினர்”

சேலத்திற்கென்று இருக்கும் சில தனித்த அடையாளங்களில், வீராணம் கிராமத்திற்கும் இடம் உண்டு. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது வீராணம். இந்த ஊரில், சுமார் 25 குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளைக் கடந்தும் இன்றும் ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாக ஒரே பொருளை விற்கும் கடைகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இருந்தாலே தொழில் போட்டி வந்து விடும் அல்லது வியாபாரம் படுத்து விடும். ஆனால் இங்குள்ள ஜோதிடர்களுக்கு அப்படி அல்ல. வீராணத்தில் அடுத்தடுத்து ‘ஜோதிட நிலையம்’ பெயர் பலகை இருப்பதைக் காண முடியும்.

வள்ளுவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல தலைமுறை களாக ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஒரே குடும்ப வகையறாவைச் சேர்ந்தவர்கள்தான் இங்கு வசிக்கின்றனர்.  சமீப காலங்களாக வேறு சமூகத்தைச் சேர்ந்த சிலரும் இப்பகுதியில் ஜோதிடத் தொழிலில் புதிதாகக் களமிறங்கியுள்ளனர்.

”எங்க அப்பா குழந்தைவேல் நாயனாரிடம்தான் தொழில் கற்றுக்கொண்டேன். சித்தப்பா, பெரியப்பா எல்லோருக்குமே ஜோதிடம் தான் முழு நேரத்தொழில். இப்போதும் இந்தத் தொழிலுக்கு மவுசு இருக்கத்தான் செய்கிறது.

மக்களுக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இருப்பதால்தான் பல தலைமுறைகளாக நாங்கள் இத்தொழிலில் இருக்கிறோம். இதில் சம்பாதித்துதான் பிள்ளைகளைப் படிக்க வைத்தேன்; வீடு வாசல் எல்லாமே ஜோதிடம் கொடுத்ததுதான்,” என்கிறார் பழனிவேல் (51).

பழனிவேல்

ஒருவருக்கு ஜாதகம் பார்க்க 100 ரூபாய் வசூலிப்பதாகவும் சொன்னார். அதேநேரம் தோஷ நிவர்த்தி, பரிகாரங்கள் செய்வதற்காக 5000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இதற்காகவே பழனிவேல் அவருடைய வீட்டிலேயே தனி அறையில் முருகன், விநாயகர், சரஸ்வதி, லட்சுமி ஆகிய கடவுளர்களின் படங்களுடன் பரிகாரத்தலமும் அமைத்துள்ளார்.

பெரும்பாலும் திருமணம் தொடர்பாகவும், தொழில் முடக்கம், கணவன்ம – மனைவி பிரச்னை, தார தோஷம், நாக தோஷம் போன்ற பிரச்னைகளுக்கு ஜாதக ரீதியிலான தீர்வு கேட்டு மக்கள் வருவதாகச் சொல்கிறார் பழனிவேல்.

இன்னொரு ஜோதிடரான ஜெயராஜ் (36), ”எங்கள் பாட்டன் காலத்தில் இருந்தே ஜாதகம் கணிப்பதுதான் தொழில். எங்கள் குலத்தொழிலை விட்டு நான் எதற்கு வேறு தொழிலுக்குச் செல்ல வேண்டும்?,” எனக்கேட்கிறார். இதை ஒரு தெய்வீகத் தொழிலாகக் கருதுவதாகவும் சொன்னார்.

ஜெயராஜ்

ஒரே ராசி, ஒரே நட்சத்திரம், ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் ஒரே மாதிரி இருப்பதில்லையே எனக்கேட்டோம். அதற்கு அவர், தசா புத்தியைப் பொருத்து குணாதிசயங்கள் மாறும் என்றார். மேலும், பறவையின் குலத்தில் பிறந்தால் பறந்துதானே ஆக வேண்டும்? அதுபோல் ஒவ்வொரு குழந்தைக்கும் அவரவர் பெற்றோரின் மரபணுக்களைப் பொருத்தும் குணநலன்கள் மாறுபடும் என்று அறிவியல்பூர்வமாகவும் பதிலளித்தார்.

எப்பேர்பட்ட ஜோதிட விற்பன்னராக இருந்தாலும், அவரவர் சுய ஜாதகத்தை தாங்களே கணித்துக்கொள்ளக் கூடாது என்றும் சொன்னார்கள்.

மனிதர்களுக்கு தன்னம்பிக்கை அற்றுப் போகும்போதோ, குறையும்போது கடைசி புகலிடம், ஒன்று கோயில்… இல்லாவிட்டால் ஜோதிட நிலையம்தானோ…?

– நாடோடி.

தொடர்புக்கு: selaya80@gmail.com

இணையத்தில் வாசிக்க: www.puthiyaagarathi.com