Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: கர்ஜித்த நீதிபதி…! பம்மிய வழக்கறிஞர்கள்!! #Gokulraj #Day11

 

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணையின்போது, எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் அடிக்கடி குறுக்கீடு செய்ததால் நீதிபதி அவர்களை பலமுறை கடுமையாக எச்சரித்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த எதிர்தரப்பினர், குறுக்கு விசாரணை நடத்தாமல் வாய்தா வாங்கினர்.

தண்டவாளத்தில் சடலம்

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் சித்ரா. ஏழைக்கூலித்தொழிலாளி. இவருடைய இளைய மகன் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிப்பை நிறைவு செய்திருந்தார்.

 

கடந்த 23.6.2015ம் தேதியன்று தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த தோழி சுவாதியை பார்க்கச் சென்றார். அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை.

கோகுல்ராஜின் சடலம்

மறுநாள் (24.6.2015) மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே காவேரி ஆர்எஸ் – ஆனங்கூர் இடையே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜின் சடலம் கிடப்பது தெரிய வந்தது.

 

ஆணவப்படுகொலை

 

இந்த வழக்கை ஆரம்பத்தில் திருச்செங்கோடு போலீசார் விசாரித்து வந்தனர். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியுடன் நெருக்கமாக பழகியதால், இருவரும் காதலிப்பதாக கருதிய மர்ம நபர்கள் கோகுல்ராஜை சாதி ஆணவப்படுகொலை செய்திருக்கலாம் என அப்போது தகவல்கள் பரவின.

 

17 பேரை கைது செய்தனர்
உணவு இடைவேளையில் டி-ஷர்ட்டில் யுவராஜ்.

இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, கார் ஓட்டுநர் அருண், சங்கர் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

கைதானவர்களில் ஒருவரான ஜோதிமணி என்ற பெண், குடும்பத்தகராறின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த அமுதரசு என்பவர் தலைமறைவாகிவிட்டார்.

 

சாட்சிகள் விசாரணை

 

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை ஆகஸ்ட் 30, 2018ம் தேதி முதல், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச். இளவழகன் முன்னிலையில் நடந்து வருகிறது. விசாரணையின்போது, அமுதரசு, கொல்லப்பட்ட ஜோதிமணி ஆகியோர் தவிர கொலை குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 15 பேரும் தொடர்ந்து ஆஜராகி வருகின்றனர்.

 

வழக்கறிஞர் பார்த்திபன்
வழக்கறிஞர்கள் பார்த்திபன் மற்றும் ஜி.கே.

இந்நிலையில், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் திங்கள் கிழமையன்று (நவம்பர் 19, 2018) சாட்சிகள் விசாரணை நடந்தது. பகல் 12.45 மணிக்கு விசாரணை தொடங்கியது. கடந்த 9ம் தேதியன்று அரசுத்தரப்பு சாட்சியாக கூண்டில் ஏற்றப்பட்ட சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், பகுஜன் சமாஜ் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளருமான பார்த்திபன், தொடர்ந்து சாட்சியம் அளித்தார்.

 

கடந்த 24.6.2015ம் தேதியன்று வேறு ஒரு வழக்கு தொடர்பாக பார்த்திபன், திருச்செங்கோடு காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தார். அன்று, கோகுல்ராஜ் மாயமானது தொடர்பாக புகார் கொடுப்பதற்காக அவருடைய தாயார் சித்ரா, அண்ணன் கலைச்செல்வன், கோகுல்ராஜின் தோழி சுவாதி, சுவாதியின் நண்பர் கார்த்திக்ராஜா ஆகியோரும் அதே காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர்.

 

திருச்செங்கோடு மலைக்கோயிலில்…

 

காவல் ஆய்வாளர் விசாரணையின்போது சுவாதி, கார்த்திக்ராஜா ஆகியோர் கூறிய தகவல்களை, ஒரு வழக்கறிஞராகவும், கோகுல்ராஜின் நண்பர் என்ற அடிப்படையிலும் அருகில் இருந்து பார்த்திபனும் விவரங்களைக் கேட்டுக்கொண்டார்.

 

திருச்செங்கோடு மலைக்கோயிலில் சுவாதியும், கோகுல்ராஜூம் சாமி கும்பிட்டு விட்டு பேசிக்கொண்டிருந்தபோது, யுவராஜ் அழைத்ததாகச் சொல்லி ஒருவர் வந்து கோகுல்ராஜை அழைத்ததாகவும், பின்னர், பச்சை, சிவப்பு நிறக்கொடி கட்டப்பட்ட, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்று எழுதப்பட்டிருந்த ஒரு வெள்ளை நிற டாடா சபாரி காரில் கோகுல்ராஜை ஒரு கும்பல் கடத்திச்சென்றதாகவும் விசாரணையின்போது சுவாதி கூறியதாக பார்த்திபன் சாட்சியம் அளித்தார்.

 

மிரட்டிய கும்பல்

 

சுவாதியை மிரட்டிய அந்த கும்பல், அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டனர் என்றும் செல்போனை சாயங்காலம் வீட்டில் வந்து கொடுப்பதாகவும் அந்த கும்பல் தன்னிடம் சொன்னதாகவும் சுவாதி கூறியதாகச் சொன்னார்.

 

சுவாதி வீட்டிற்கு வந்தபிறகு, ஒரு ரூபாய் காயின் போன் மூலமாக யுவராஜ் தொடர்பு கொண்டு, தனது செல்போனை கொடுத்துவிடும்படி கேட்டார். அதற்கு யுவராஜ், இரவுக்குள் உங்கள் வீடு தேடி செல்போன் வந்துசேரும் என்று யுவராஜ் சொன்னதாக சுவாதி, காவல் ஆய்வாளரிடம் கூறினார் என்று பார்த்திபன் தெரிவித்தார்.

 

இரண்டு 500 ரூபாய் நோட்டு

 

”அப்போது காவல் ஆய்வாளர், திருச்செங்கோடு கோயிலுக்கு எதற்காகச் சென்றீர்கள்? என்று சுவாதியிடம் கேட்டார். அதற்கு சுவாதி, கோகுல்ராஜ் புதிதாக செல்போன் வாங்க பணம் வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் அவருக்கு இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தேன்.

 

பிறகு இருவரும் சாமி கும்பிடுவதற்காக திருச்செங்கோடு மலைக்கோயிலுக்குச் சென்றோம்,” என்று சுவாதி கூறினார் என்றார் பார்த்திபன்.

 

முற்றிலும் செவிவழி தகவல்

 

இதையடுத்து திருச்செங்கோடு காவல் ஆய்வாளர், யுவராஜை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, சுவாதியிடம் இருந்து எதற்காக செல்போனை வாங்கிச் சென்றீர்கள்? என்று விசாரித்தார். அப்போது யுவராஜ், ‘செல்போனை மட்டும்தான் வாங்கிச்சென்றேன். கோகுல்ராஜையும், சுவாதியையும் அப்போதே அனுப்பி விட்டேன் என்று கூறினார்,’ என்றார் பார்த்திபன்.

 

இதற்கு எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ, ‘இது முற்றிலும் செவிவழி தகவல். செவிவழி சாட்சியத்தை பதிவு செய்யக்கூடாது,’ என்று ஆட்சேபித்தார்.

 

அதற்கு நீதிபதி கே.ஹெச். இளவழகன், ‘இப்படி எல்லாவற்றுக்கும் ஆட்சேபனை தெரிவித்தால் என்ன செய்வது? எதுவாக இருந்தாலும் நீங்கள் குறுக்கு விசாரணையில் பார்த்துக் கொள்ளுங்கள்,’ என்று பதில் அளித்தார்.

 

யுவராஜிடம் பேசிய காவல் ஆய்வாளர் 

 

திருச்செங்கோடு காவல் ஆய்வாளர் யுவராஜிடம், உடனடியாக சுவாதியின் செல்போனை காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து ஒப்படைக்கும்படி கூறினார். அதற்கு யுவராஜ் சிறிது நேரத்தில் காவல் நிலையம் வருவதாக பதில் அளித்தார்.

 

அதன்பின் காவல் ஆய்வாளர், இன்னும் கொஞ்ச நேரத்தில் யுவராஜ் செல்போனை இங்கே வந்து கொடுப்பதாகக் கூறினார். செல்போனை மட்டும் வாங்கிக்கொண்டு உங்களையும் (சுவாதி), கோகுல்ராஜையும் அனுப்பி வைத்துவிட்டதாகவும் சுவாதியிடம் சொன்னார் என்று பார்த்திபன் கூறினார்.

 

Warn சொல்லால் சலசலப்பு
வழக்கறிஞர்கள் பிரேம்குமார், ஸ்டீபன்

அதற்கு சுவாதி, ‘யுவராஜ் என்னை மட்டும்தான் ‘Warn’ பண்ணி, அங்கே இருந்த ஒரு ஆண், பெண்ணுடன் அனுப்பி வைத்தார். கோகுல்ராஜை யுவராஜூம் அவருடன் வந்த ஆள்களும் வைத்துக்கொண்டனர் என்று காவல் ஆய்வாளரிடம் சொன்னார் என்று பார்த்திபன் தெரிவித்தார்.

 

பார்த்திபன் சொன்ன ‘Warn’ என்ற சொல்லை நீதிபதி, தன் உதவியாளரிடம் ‘எச்சரிக்கை செய்து’ என்று தட்டச்சு செய்யும்படி கூறினார்.

 

அப்போது குறுக்கிட்ட யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜி.கே., யுவராஜ் தரப்புக்கு ஆஜரான மற்ற இரு வழக்கறிஞர்களான பிரேம்குமார், ஸ்டீபன் ஆகியோர், ‘பார்த்திபன், ‘எச்சரிக்கை’ என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ஒரு ஆண், பெண்ணுடன் அனுப்பியதாகத்தான் சொன்னார். ஆனால் நீங்கள் ‘எச்சரிக்கை’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள் என்று ஆட்சேபித்தனர்.

 

குறிப்பாக வழக்கறிஞர்கள் பிரேம்குமார், ஸ்டீபன் ஆகிய இருவரும், நீதிபதியைப் பார்த்து, ‘எச்சரிக்கை’ என்ற சொல்லை பார்த்திபன் பயன்படுத்தவே இல்லை என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருந்தனர். நீதிமன்ற விசாரணையின்போது எப்போதும் லேசான புன்முறுவலுடன் வாத, பிரதிவாதங்களை கவனித்து வரும் நீதிபதி கே.ஹெச். இளவழகன், எதிர்தரப்பு வழக்கறிஞர்களின் செயல்களால் கோபம் அடைந்தார்.

 

இங்கே எல்லாமே ரெக்கார்டு

 

மேலும் அவர், ”சுவாதியை ‘Warn’ பண்ணி, ஒரு ஆண், பெண்ணுடன் அனுப்பி வைத்தார்” என்று அரசுத்தரப்பு சாட்சி சொன்னதை, தமிழில் ‘எச்சரிக்கை செய்து’ என்று பதிவு செய்திருக்கிறேன். ஆனால் நீங்கள் அப்படி ஒரு சொல்லையே அவர் கூறவில்லை என்று ஆட்சேபித்தால் எப்படி?. இங்கே எல்லாமே ரெக்கார்டு ஆகிக்கொண்டு இருக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால் ஆடியோ ரெக்கார்டிங்கை போட்டுக் காட்டட்டுமா? என்றார்.

Please be seated
நீதிபதி கே.ஹெச். இளவழகன்

அதற்கு பிரேம்குமார், ஸ்டீபன் ஆகியோர், ‘எங்களுக்கு அந்த சொல் காதில் விழவில்லை’ என்று சமாளித்தனர். அதற்கு நீதிபதி, ‘அரசுத்தரப்பு சாட்சி, சத்தமாகத்தான் பேசுகிறார். அவர் சொல்வது எனக்கும், இங்கே எல்லோருக்கும் நன்றாகத்தான் கேட்கிறது. உங்களுக்கு கேட்கவில்லை என்று சொன்னால் நான் என்ன செய்ய முடியும்? போய் இருக்கையில் அமருங்கள்,’ என்பதை அவர் ‘Please be seated’ என்று ஆங்கிலத்தில் கடுமையாகக் கூறினார்.

 

அதன்பிறகும் சாட்சிக்கூண்டு அருகிலேயே அவ்விரு வழக்கறிஞர்களும் நின்று கொண்டே இருந்ததால், கோபம் அடைந்த நீதிபதி, ”இது உங்கள் இடம் இல்லை… ‘Be seated…’ என்று ஆவேசமாக கூறினார். ‘சார் நீங்களும்தான்…’ என்று யுவராஜ் தரப்புக்காக வந்திருந்த அனைத்து வழக்கறிஞர்களையும் பார்த்து உத்தரவிட்டார். அதன்பிறகு அவர்கள் வேறு வழியின்றி இருக்கையில் அமர்ந்தனர்.

 

இந்த சம்பவத்தால் விசாரணை அரங்கத்தில் சிறிது நேரம் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கூச்சலால், பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாரும் பார்வையாளர் பகுதியில் குவிந்தனர்.

 

புகாரில் யுவராஜ் பெயரை ஏன் குறிப்பிடவில்லை?

 

திருச்செங்கோடு காவல் ஆய்வாளர் கோகுல்ராஜின் தாயார் சித்ராவிடம், ‘யுவராஜ்தான் உங்கள் மகனை கடத்திச் சென்றதாக ஏன் புகாரில் பெயரைக் குறிப்பிடவில்லை?’ என்று கேட்டார்.

 

அதற்கு சித்ரா, ‘யுவராஜ், கட்சியில் பெரிய ஆள். கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். யுவராஜ் பெயரில் புகார் கொடுத்தால் அவர்கள கோகுல்ராஜை ஏதாவது செய்து விடுவார்கள். நானும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

 

எஸ்.ஸி., பையனான கோகுல்ராஜூடன்…

 

நான் எஸ்.ஸி., பையனான கோகுல்ராஜூடன் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டது தெரிந்தால் எனக்கும், குடும்பத்தினருக்கும் அவப்பெயர் ஏற்படும் என்று சுவாதி கேட்டுக்கொண்டார். அதனால் புகாரில் யுவராஜ் பெயரைக் குறிப்பிடவில்லை,’ என்று பதில் கூறியதாக பார்த்திபன் சாட்சியம் அளித்தார்.

 

மேலும், குற்ற விசாரணைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) பிரிவு 164 வாக்குமூலத்தில் பார்த்திபன் என்ன தகவல்களைச் சொன்னாரோ அவை அனைத்தையும் சாட்சியமாக அளித்தார். மதியம் 1.20 மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளைக்குப் பிறகு 2.30 மணிக்கு சாட்சி விசாரணை மீண்டும் தொடங்கியது.

 

அப்போது, 23.6.2015ம் தேதியன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சுவாதி, கோகுல்ராஜ் ஆகியோர் இருந்த காட்சிகள், யுவராஜ் மற்றும் அவருடன் சில பேரும் வந்து கோகுல்ராஜிடமும், சுவாதியிடமும் பேசும் காட்சிகளும், அவர்களை அழைத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. கேமரா-1, கேமரா-5 ஆகியவற்றில் அடங்கிய அந்தக் காட்சிகளை நீதிமன்றத்தில் திரையிட்டுக் காட்டப்பட்டது.

 

அவன்தான் கோகுல்ராஜ்…

 

அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்து சுவாதி, கோகுல்ராஜ் ஆகியோரை பார்த்திபன் அடையாளம் காட்டினார். கத்திரிப்பூ நிறத்தில் முழுக்கை சட்டையும், வெளிர் நீல நிறத்தில் ஜீன் பேன்டும் அணிந்திருக்கும் நபர்தான் கோகுல்ராஜ் என்று துல்லியமாகச் சொன்னார்.

 

மேலும், சுவாதியை ஒரு பெண்ணும், ஒரு ஆணும் அழைத்துச்செல்லும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. சுவாதியை அழைத்துச் செல்லும் நபர்கள் யாரென்று தெரிகிறதா? அவர்களில் யாராவது இங்கே நீதிமன்றத்தில் இருக்கிறார்களா? என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, அவருடைய உதவியாளர் வழக்கறிஞர் நாராயணன் ஆகியோர் கேட்டனர்.

 

மீண்டும் ஆட்சேபனை

 

அதற்கு எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜி.கே., தன் இருக்கையில் அமர்ந்தபடியே திடீரென்று சத்தமாக, ‘Iam sorry your honour!’ என்று உரத்த குரலில் ஆட்சேபனை தெரிவித்தார். திடுக்கிட்ட நீதிபதி, ‘எதற்காக ஆட்சேபிக்கிறீர்கள்?’. அதற்கான காரணத்தைச் சொல்லாமல் இருந்தால் எப்படி? என்றார்.

 

அதற்கு ஜி.கே. எழுந்து நின்று, ‘அழைத்துச் சென்றதாக’ என்று கேட்பது தவறு. ஆயிரம் பேர் கோயிலுக்கு சாமி கும்பிட வருவார்கள்… போவார்கள்…’ என்று சலிப்புடன் கூறியவாறே இருக்கையில் அமர்ந்தார்.

 

மீண்டும் நீதிபதி அவரிடம், எதற்காக ஆட்சேபிக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, அதற்கு வழக்கறிஞர் ஜி.கே., ‘இது பதிலுடைய கேள்வி’ (Leading question) என்று குறிப்பிட்டார். பின்னர் அரசுத்தரப்பு வழக்கறிஞர், சுவாதியை யார் அழைத்துச்சென்றார்கள்? என்று கேள்வி கேட்பதற்கு நீதிபதி ஆட்சேபனை தெரிவித்தார். அப்போதும் நீதிமன்ற விசாரணை அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

சிசிடிவி வீடியோ காட்சிகளைப் பார்த்து வழக்கறிஞர் பார்த்திபன் மேலும் சிலரை அடையாளம் காட்டினார். வீடியோவில் இருப்பவர் யுவராஜ் என்றும், அந்த வீடியோவில் அவர் வெள்ளை சட்டையும், காக்கி நிற பேன்டும் அணிந்திருக்கிறார் என்றும் பார்த்திபன் அடையாளம் காட்டினார். குற்றவாளி கூண்டில் நீங்கள் சொல்லும் நபர் இருக்கிறாரா என்று பார்த்துச் சொல்லுங்கள் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி கேட்டார்.

 

யுவராஜ் புன்முறுவல்
செல்வராஜ், அருண், குமார்

அதற்கு அவர், குற்றவாளி கூண்டில் (நீதிபதி அமர்ந்த திசையில்) இடமிருந்து 6வதாக நிற்பவர்தான் யுவராஜ் என்று அடையாளம் காட்டினார். அதைக் கேட்ட யுவராஜ், கைகளைக் கட்டியபடி, லேசான புன்முறுவல் செய்தார். வீடியோ காட்சியில் இருப்பது போலவே இன்றைக்கும் காக்கி நிற பேன்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்து வந்திருக்கிறார் என்று பார்த்திபன் குறிப்பிட்டுச் சொன்னார்.

 

சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் அருண், செல்வராஜ், சந்திரசேகர், சதீஸ்குமார், குமார் ஆகியோரையும் பார்த்திபன் அடையாளம் காட்டினார். குற்றவாளி கூண்டில் அந்த நபர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும் அவர்களைப் பார்த்து அடையாளம் சொன்னார்.

 

அப்போது நீதிபதி, அடையாளம் காட்டப்படும் நபர்கள் கையை உயர்த்திக் காட்டும்படி கூறியதால், குற்றம்சாட்டப்பட்டவர்களும் அப்படியே செய்தனர். பார்த்திபன் அடையாளம் காட்டும்போது யுவராஜ் மீசையை தடவியபடியும், பக்கத்தில் இருந்த அருண், கிரி ஆகியோரிடமும் ‘குசுகுசு’ வென்று பேசியபடியும் இருந்தார்.

 

கோகுல்ராஜ் வழக்கு பரபரப்பாக பேசப்பட்ட காலக்கட்டத்தில், அவரே பேசியதாக 30 வினாடிகள் கொண்ட ஒரு வீடியோ, சமூக ஊடகங்களில் வெளியானது.

 

பொய்யான உலகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்

 

அந்த வீடியோவில் கோகுல்ராஜ், ”எல்லா பொண்ணுங்களும் பொய்யாதான் இருக்காங்க. பொய்யான உலகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம். எங்கப்பா போன இடத்துக்கே நானும் போயிடறேன். பொய்யான பொண்ணால வாழ்க்கையே வேஸ்ட் ஆயிடுச்சு. பொய்யான பொண்ணுங்கள நம்பினா என்ன மாதிரிதான் உங்க வாழ்க்கையும் வீணாகும். என்னால் முடியல. அம்மாவும் தம்பியும் நல்லாருங்க…” என்று பேசியிருந்தார்.

சதீஸ்குமார், சந்திரசேகர்

அந்தக் காட்சிகளைப் பார்த்த பார்த்திபன், ‘கோகுல்ராஜை யாரோ மிரட்டி இப்படி பேச வைத்திருக்கிறார்கள். அவருக்கு அம்மாவும், அண்ணனும் மட்டும்தான் இருக்கின்றனர். ஆனால் இந்த வீடியோவில் அம்மாவும், தம்பியும் நல்லாருங்க என்று சொல்லி இருக்கிறார்,’ என்றார். அதையடுத்து அந்த வீடியோ காட்சி, முக்கிய ஆதாரமாக குறியீடு செய்யப்பட்டது.

 

புதிய தலைமுறை வீடியோ 

 

இதையடுத்து, 4.10.2015ம் தேதியன்று ‘புதிய தலைமுறை’ சேனலில் ஒளிபரப்பான யுவராஜின் சிறப்புப் பேட்டி அடங்கிய வீடியோ காட்சிகளும் பார்த்திபனுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டன. அவர்தான் யுவராஜ் என்று மீண்டும் பார்த்திபன் உறுதிப்படுத்தினார். அந்தப் பேட்டியில் யுவராஜ் தெரிவித்த தகவல்களில் இருந்த சில முரண்களையும் பார்த்திபன் சுட்டிக்காட்டினார்.

 

அதனால் அந்த குறிப்பிட்ட வீடியோ பதிவை குறியீடு செய்ய வேண்டும் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் கூறினார். அதற்கு நீதிபதி, முழு வீடியோவையும் குறியீடு செய்யப்படுவதால், அந்தக் குறிப்பிட்ட பகுதியை குறியீடு செய்யத் தேவையில்லை என்றார்.

 

இவ்வாறு வழக்கறிஞர் பார்த்திபன் சாட்சியம் அளித்தார். அப்போது, மாலை 4 மணி ஆகியிருந்தது.

 

குறுக்கு விசாரணை

 

அதையடுத்து, பார்த்திபனிடம் குறுக்கு விசாரணையை தொடங்கும்படி, யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜி.கே. பார்த்து அழைத்தார் நீதிபதி. ஆனால் என்ன நினைத்தாரோ அவர், ‘இப்போதே 4 மணி ஆகிவிட்டது. அவரிடம் நிறைய குறுக்கு விசாரணை செய்ய வேண்டியதிருக்கிறது. ஆகையால் நேரம் போதாது. வேறு ஒரு நாளில் குறுக்கு விசாரணையை வைத்துக்கொள்கிறோம்,’ என்றார்.

 

அதற்கு நீதிபதி, ‘இப்போது நான்கு மணிதான் ஆகிறது. இன்னும் ஒன்றரை மணி நேரம் நீங்கள் குறுக்கு விசாரணை செய்யலாம். மீதியை அடுத்த வாய்தாவில் பார்த்துக்கொள்ளலாம். நேரத்தை வீணாக்க வேண்டாம்,’ என்றார்.

 

டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

 

ஆனாலும், எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜி.கே., கண்டிப்பாக வேறு ஒரு தேதியில்தான் குறுக்கு விசாரணை வைக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, வழக்கறிஞர் பார்த்திபனிடம் வரும் 3.12.2018ம் தேதியன்று குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார். அன்றைய தினம், நீதிமன்றம் கூடியதுமே குறுக்கு விசாரணையைத் தொடங்கிவிட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

– செங்கழுநீர்.