மேட்டூர் அணை திறப்பு விழாவில், காவிரிக்காக இறுதிமூச்சு உள்ளவரை போராடியவர் புரட்சித்தலைவி அம்மா என ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரைப்பற்றி குறிப்பிடும்போது நா தழுதழுக்க…கண்களில் நீர் ததும்ப பேசினார்.
கடந்த பத்து நாள்களுக்கு மேலாக கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதையடுத்து பாதுகாப்புக்கருதி அந்த அணைகளில் இருந்து உபரி நீர், தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.
கர்நாடகாவில் இருந்து நாளுக்கு நாள் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக தொடர்ந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், தமி-ழகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பாதுகாப்புக் கருதி குளிக்கவோ, பரிசல் இயக்கவோ கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த 17ம் தேதி இரவு 8.05 மணியளவில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 100 அடியைத் தொட்டது.
இதையடுத்து டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று (ஜூலை 19, 2018) திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணையைத் திறந்து வைத்தார். முதல்கட்டமாக 2000 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. படிப்படியாக இன்று இரவுக்குள் 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அணையைத் திறந்து வைத்த அவர், தண்ணீரில் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து நடந்த விழாவில் அவர் தலைமை உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ”தமிழகத்திற்கு காவிரி நீர் பங்கீட்டு உரிமைக்காக புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், புரட்சித்தலைவி அம்மாவும், விவசாய சங்க பிரதிநிதிகளும் 48 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தியதால்தான், இன்றைக்கு அம்மா வழியிலான இந்த அரசு காவிரியில் நமக்கான உரிமையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
உச்சநீதிமன்றம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது வரலாற்று சாதனை. இது அம்மாவின் கனவாகும்.
பின்னர், அம்மா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட இரண்டாவது நாளில், காவிரி பிரச்னை பற்றி பேசினார். டெல்லியில் நடைபெறும் காவிரி கூட்டுக்குழு கூட்டத்தில் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநில பிரதிநிதிகளிடமும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி ஆலோசனை நடத்துவதாக இருந்தது.
அப்போது நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தேன். அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள பொதுப்பணித்துறை அமைச்சரான எடப்பாடி பழனிசாமியை அனுப்புங்கள் என்றார். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் செல்லும்படி கூறி கடிதம் கொடுத்தார். அதுதான் அம்மா அவர்கள் காவிரிக்காக இறுதியாக பேசிய பேச்சு. அப்படி இறுதிமூச்சு இருக்கும்வரை தமிழக மக்களுக்காக உழைத்தவர் புரட்சித்தலைவி அம்மா என்பதை இந்த நேரத்தில் மனமுருகி சொல்லிக் கொள்கிறேன்,” என்றபோது எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு பேச முடியாமல் நா தழுதழுத்தார். கண்கள் சிவந்து கலங்கியபடி பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், ”காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி முறைப்படுத்தும் குழுவின் உத்தரவின்படி காவிரியில் இருந்து ஜூலை மாதத்திற்கு தமிழகத்திற்கு 31.24 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும். என்றாலும், எல்லாம்வல்ல இறைவன் ஆசியாலும், வருணபகவான் கருணையாலும், புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியாலும் இன்றைக்கு மழை பெய்து, நமக்கு தேவையான தண்ணீர் கிடைத்திருக்கிறது.
காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் நமக்குத் தேவையான நீரை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் சில நாள்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கின்றோம்,” என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
– பேனாக்காரன்.