Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

திரவுபதி – திரை விமர்சனம்! சரக்கு முறுக்கு பசங்க மட்டும்தான் நாடகக்காதல் செய்கிறார்களா?

கிராமத்தில் செல்வாக்குடன்
விளங்கும் ஒரு குடும்பத்தை
பழிவாங்குவதற்காக அந்த
வீட்டுப் பெண்ணுக்கும் இளைஞர்
ஒருவருக்கும் திருமணம் நடந்ததாக
போலியாக பதிவுச்சான்றிதழ் பெற்று
சமூக வலைத்தளங்களில்
உலாவவிடுகிறது ஒரு கும்பல்.
அதைப்பார்த்த பெண்ணின் தந்தை,
அவமானம் தாளாமல் தற்கொலை
செய்து கொள்கிறார்.
அந்தப்பெண்ணையும் அவருடைய
அக்காவையும் அந்த கும்பல்
கொன்றுவிட்டு, கொலைப்பழியை
பெண்ணின் அக்காள் கணவர் மீது
போட்டு விடுகிறது. கொலை
முயற்சியில் தப்பிக்கும் அப்பெண்ணின்
அக்கா திரவுபதி, தன் கணவர் மூலம்
கொலைகாரர்களை பழி வாங்கினாரா?
இல்லையா? என்பதுதான் திரவுபதி
படத்தின் மையக்கதை.

 

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற மகாகவி பாரதியின் வரிகளை மறுதலித்து, ‘சாதிகள் உள்ளதடி பாப்பா’ என்று திரவுபதி படத்தின் டிரைலரில் குறிப்பிட்டு இருந்தார் இயக்குநர் மோகன். டிரைலரில் வந்த சில வசனங்களும், பாத்திரப்படைப்பும் தமிழகத்தில் உள்ள ஒரு சாதிக்கட்சியின் தலைவரை சித்தரிப்பது போலவும், இந்தப்படமே ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட படம் என்றும் பலவாறாக விமர்சனங்கள் கிளம்பின. இந்த பரபரப்புகளுக்கு இடையே பிப். 28ம் தேதி, திரவுபதி வெளியானது.

நாயகன் ரிச்சர்டு, தமிழில் ஏற்கனவே ‘காதல் வைரஸ்’ உள்ளிட்ட சில படங்கள் செய்திருந்தாலும் பிரபலமானவர் அன்று. பெரும்பாலான திரைக்கலைஞர்கள் சினிமாவுக்கே புதியவர்கள் என்பதும்கூட திரவுபதிக்கு ஒருவகையில் சாதகமான அம்சம். தொழில்நுட்பக் குழுவைப் பொருத்தவரை பின்னணி இசை மட்டும் தேறுகிறது. என்றாலும், கதைக்கருவும், அதை செய்நேர்த்தியுடன் சொல்லிய விதமும் திரவுபதி தவிர்க்க முடியாத படமாகி விடுகிறது.

 

விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலம்தான் கதைக்களம். நாயகன் ருத்ர பிரபாகரன் (ரிச்சர்டு), சிலம்ப வாத்தியாராக இருக்கிறார். அவருடைய மனைவி திரவுபதி (ஷீலா ராஜ்குமார்) ஹைட்ரோ கார்பன், கோலா கம்பெனிகளை எதிர்த்துப் போராடும் சமூக சேவகர். சாதிக்கட்சித் தலைவர் ஒருவர், அந்த ஊரில் கோலா கம்பெனி தொடங்க முயற்சிக்க, அதற்கு திரவுபதியும் அவருடைய தந்தையும் குறுக்கே நிற்கிறார்கள். அவர்களை எப்படியாவது வீழ்த்த நினைக்கும் அந்தத் தலைவர், ‘நாம இந்த மண்ணுல கால வைக்கணும்னா அவுங்க வீட்டுப் பொண்ணுமேல கைய வெச்சே தீரணும்’ என்கிறார்.

 

கல்லூரியில் படித்து வரும் திரவுபதியின் தங்கையை, தன் சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலிக்கும்படி நடித்து வலையில் வீழ்த்த அனுப்புகின்றனர். அவர்கள், கல்லூரி மாணவிக்கும் தாங்கள் அனுப்பிய இளைஞருக்கும் பதிவுத்திருமணம் நடந்து விட்டதாக போலியாக ஒரு சான்றிதழைத் தயாரித்து வாட்ஸ்அப்பில் அனுப்புகின்றனர். இதனால் அவமானம் தாங்காமல் கல்லூரி மாணவியின் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். அதையடுத்து, கல்லூரி மாணவியையும், திரவுபதியையும் கொல்ல முயன்ற அந்த கும்பலுக்கு மாணவி பலியாகிறாள். திரவுபதியும் இறந்து விட்டதாகக் கருதி கொலை கும்பல் சென்று விடுகிறது.

 

அதற்குள், வேற்று சாதி இளைஞனை திருமணம் செய்த ஆத்திரத்தில் மனைவியின் தங்கையையும், மனைவியையும் ஆணவக்கொலை செய்து விட்டதாக நாயகன் பிரபாகரன் மீது பழி விழ, அவர் கைது செய்யப்படுகிறார். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட திரவுபதி உயிர் பிழைத்து விடுகிறாள். இந்த விவரம் நாயகனுக்குச் சொல்ல முடியாமல் போய்விடுகிறது. ஆறு மாதத்தில் பிணையில் விடுதலை ஆகும் நாயகன், மனைவியின் சபதத்தை நிறைவேற்ற சென்னைக்குப் புறப்படுகிறார்.

 

கடந்த 2013ல் சென்னையில் வடசென்னை மற்றும் ராயபுரம் ஆகிய இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் மட்டும் 3500 போலி திருமண பதிவுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ள விவகாரம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை மையமாக வைத்துதான் இக்கதை எழுதப்பட்டதாக இயக்குநர் மோகன் குறிப்பிட்டுள்ளார்.

 

மணப்பெண்ணை நேரில் பார்க்காமலேயே எப்படி போலியாக ஒரு திருமணப்பதிவுச் சான்றிதழ் தயாரிக்கப்படுகிறது? என்பதை உண்மைக்கு நெருக்கமாக சித்தரிக்கிறது இப்படம். சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் முதல் வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், தரகர்கள் வரை ஒவ்வொருவருக்கும் உள்ள கண்ணிகளையும் நேர்த்தியான காட்சிகள் மூலம் தோலுரித்துக் காட்டுகிறார் இயக்குநர்.

 

அரசுத்துறைகளில் சிலர்
லஞ்சம் பெற்றுக்கொண்டு
செய்யப்படும் இதுபோன்ற
குற்றங்களின் பின்னால், பல
குடும்பங்கள் சீரழிந்துபோன
விபரீதங்களும் நடந்திருக்கின்றன
என எண்ணும்போது
பார்வையாளனுக்குள்ளும் ஒருவித
பதற்றம் வந்து விடுகிறது.
பணம் உள்ளிட்ட ஆதாயங்களுக்காக
திட்டமிட்டு அரங்கேற்றப்படும்
காதல் நாடகங்களின் பின்னால்
உள்ள அரசியலையும் தீர்க்கமாக
பேசுகிறது இப்படம்.

 

அதேநேரம்,
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்
மட்டுமே நாடக காதல் போன்ற
குற்றங்களில் ஈடுபடுவது போல
சித்தரிக்கிறாரோ என்ற அய்யமும்
இயல்பாகவே பார்வையாளனுக்குள்
எழுகிறது. இந்தப்படம் யாருக்கும்
எதிரானதோ, சாதி சார்புப் படமோ
அல்ல என்று சொல்லப்பட்டாலும்,
படத்தைப் பார்த்தவர்கள் குறிப்பிட்ட
ஒரு சாதிக்கட்சித் தலைவருக்கு
எதிராக காட்சிகளும், வசனங்களும்,
குறியீடுகளும் இருப்பதை
உணர முடியும்.

 

குறிப்பிட்ட அந்த சாதி
கட்சித்தலைவர், ‘சரக்கு மிடுக்கு’,
‘அடங்க மறு; அத்து மீறு’ என்று
பேசியதெல்லாம் ஊடகங்கள்
வாயிலாக மக்களும் அறிந்ததுதான்.
அதற்கேற்ப ஒரு காட்சியில்
பேசும் இளைஞர், ”அடங்குன்னா
அடங்கக்கூடாதுனு எங்கண்ணன்
சொல்லிருக்காப்ல,” ”பெரிய வூட்டுப்
பொண்ண கல்யாணம் பண்ணாதான்
லைப் கெத்தாயிருக்கும்னு
சொல்லிருக்காப்ல,” என
அல்லட்டிக்காமல் சொல்வார்.
இன்னொரு காட்சியில்,
‘அதுக்குதானே அண்ணே…
சரக்கும் முறுக்குமாக
ஊருக்கு நூறு பசங்கள தயார்
பண்ணி வெச்சிருக்கோம்,’ என்ற
வசனமும் இடம் பெறுகிறது.

 

இப்போதும்கூட திரையில்,
பட்டியல் சமூகத்து இளைஞர்களை
சித்தரிக்கும்போது நிறம், உடை,
சிகையலங்காரம், மிகை ஒப்பனை,
வசிப்பிடம் போன்ற குறியீடுகள்
பயன்படுத்தப்படுகின்றன. அது,
யதார்த்தத்தின் பிரதிபலிப்பும்கூட.
அதே உத்தியை திரவுபதி
இயக்குநரும் கையாண்டிருக்கிறார்.
போலி திருமணச் சான்றிதழ் பெற
நாயகனுக்கு உதவும் காதில் கடுக்கண்
அணிந்த அந்த இளைஞர், நீல சட்டையை
இன்ஷர்ட் செய்துகொண்டு தலையை
படிய வாரி சீவியிருக்கும் அந்தக்
கட்சித்தலைவர், போலி திருமணங்களை
நடத்தி பணம் பறிக்கும் அந்த
போலி வழக்கறிஞர், கழுத்தில்
மாட்டியிருக்கும் தங்க சங்கிலி
வெளியே தெரியும்படி சட்டையின்
மேல் பொத்தானை கழற்றியபடி
ரோமியோ போல நாடகக் காதலுக்கு
ஒத்துழைக்கும் இளைஞன்
ஆகியோரெல்லாம் எந்த சமூகத்தைச்
சேர்ந்தவர்கள் என்பதை குறியீடுகள்
வாயிலாகவே உணர்த்தி
விடுகிறார் இயக்குநர்.

 

அதேநேரம், திரவுபதியின் சபதத்தை நிறைவேற்றும் காட்சி ஒன்றில், நாயகன் அணிந்திருக்கும் தலைப்பாகையின் நிறமும், படத்தின் தலைப்பும், கதைக்களமும்கூட எந்த சமூகத்திற்கு ஆதரவான கதை என்று சொல்லாமல் சொல்லி விடுகிறது.

 

யதார்த்தத்திலும்கூட, ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண்ணோ, ஆணோ கொலையாகும்போது அவர்களுக்காக பொங்கியெழும் அச்சமூகத்து போராளிகள், அதே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களால் வேறு சமூகத்துப் பெண்கள் வஞ்சிக்கப்படும்போது கள்ள மவுனம் சாதிப்பதையும் காண முடிகிறது. பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண் கொல்லப்படும்போது, அதற்கு வேறு காரணங்கள் இருந்தாலும், அது சாதிய கொலையாகவே வலுவாக சித்தரிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் ஏற்பட்ட அழுத்தங்கள்கூட இயக்குநரை திரவுபதி படத்தை எடுக்க தூண்டியிருக்கலாம்.

 

‘பரியேறும்பெருமாள்’ படம், ஒரு விவாதத்தை முன்வைக்கிறது. சமரசமற்ற திரைமொழியால் அப்படம் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தனித்து நிற்கும். அப்படத்தின் மறுபக்கமாக திரவுபதியை ஏனோ நாம் கருத முடியாமல் போகிறது. நாம் ஏற்கனவே சொன்னதுபோல், நாடகக்காதல் போன்ற குற்றங்களை குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டுமே அரங்கேற்றுவதுபோல பேசுவதே அபத்தமானதாகத் தெரிகிறது. அல்லது அதில் இயக்குநருக்கு போதிய புரிதல் இல்லையோ என்றும் தோன்றுகிறது.

 

பதிவுத்திருமணத்தின்போது சிசிடிவி கேமராவில் கட்டாயம் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார் இயக்குநர். அது ஏற்புடையது. ஆனால், பதிவுத்திருமணங்களை பெண்ணின் பெற்றோர் முன்னிலையில்தான் பதிவு செய்ய வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும் என்று குரல் கொடுப்பது அறிவுப்பூர்வமானதாகத் தெரியவில்லை. அப்படிச் செய்வது, காதல் உணர்வை அற்றுப்போகச் செய்து விடும் அபாயமும் இருக்கிறது.

 

இப்படம் உண்மையான காதலுக்கு எதிரான படம் அல்ல என்று இயக்குநர் சொல்லி வந்தாலும்கூட, பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களையே உயர்த்திப் பிடிப்பதாக இருக்கிறது. நாடகக்காதலை தோலுரித்துக் காட்டுவதுதான் கதையின் நோக்கமெனில், இயக்குநர் இன்னும் தனது பார்வையை விசாலமாக்கி இருக்க வேண்டும். அந்த இடத்தில் அவர் சறுக்கிவிட்டார் என்றே கருதுகிறேன். ஒவ்வொரு குற்றங்களின் பின்னணியிலும் எல்லா சாதியினரும் இருக்கிறார்கள். குற்றம் புரிவோருக்கு சாதி மட்டுமே ஒரு கருவி அல்ல.

 

– வெண்திரையான்

Leave a Reply