இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி, ஒரு நாள் போட்டிகளில் 73 முறை அவுட் ஆகாமல் இருந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெற்றுவிட்ட டோனி, ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார்.
இலங்கைக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று (31/8/17) நடந்தது. இது, டோனிக்கு 300வது ஒரு நாள் போட்டியாகும். இந்தப் போட்டியில் டோனி, அவுட் ஆகாமல் 49 ரன்கள் எடுத்தார். இன்னும் ஒரு ரன் எடுத்திருந்தால் 100வது அரை சதம் என்ற சாதனையை படைத்திருப்பார். ஆனால், 50 ஓவர்களும் முடிந்து விட்டன. எனினும், அவர் மற்றொரு புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறார்.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் 73 முறை ‘நாட்-அவுட்’ வீரராக இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே, தென் ஆப்பிரிக்கா ஆல் ரவுண்டர் பொல்லாக், இலங்கை வீரர் சமிந்தா வாஸ் ஆகியோர் 72 முறை ‘நாட்-அவுட்’ வீரர்களாக சாதனை படைத்துள்ளனர். அவர்களைக் காட்டிலும், வெற்றிகரமான வீரராக டோனி புதிய சாதனை படைத்துள்ளதுடன், ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கும் ‘ஃபினிஷர்’ ஆகவும் தன்னை நிரூபித்துள்ளார்.
மலிங்காவும் அபாரம்: கேப்டன் விராட் கோஹ்லி 29வது சதத்தை அடித்து அசத்தியுள்ள நிலையில், அவரை அவுட் ஆக்கியதன் மூலம் 300வது விக்கெட் என்ற மைல் கல்லை எட்டியுள்ளார் இலங்கை அணி பந்து வீச்சாளர் மலிங்கா. இந்த போட்டியில் இலங்கை தோற்றிருந்தாலும், மலிங்காவுக்கு மறக்க முடியாத போட்டியாக அமைந்திருக்கும் என்றால் மிகையாகாது.