Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஸ்டெர்லைட் ஆலையை மூடு அல்லது கருணைக் கொலை செய்துவிடு!; கொந்தளிக்கும் மக்கள்; செவிகளை மூடிக்கொண்ட அரசாங்கம்!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு நாளுக்குநாள் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஆனால், நடுவண் மற்றும் மாநில அரசுகள் இவ்விவகாரத்தில், செவிகளையும், கண்களையும் மூடிக்கொண்டு பாராமுகமாக இருப்பது மக்களிடையே கொந்தளிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

உலக வல்லரசு நாடுகள் அனைத்தும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், இறக்குமதியை நோக்கி கவனத்தை திருப்பி வருகின்றன. ஆனால், இந்தியாவோ, இந்த மண்ணில் மிச்சமிருக்கும் செல்வங்களையும் சுரண்டுவதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, தனிநபர்களின் லாப வெறிக்காக கண்மூடித்தனமாக சுரண்டலை ஊக்குவித்து வருகிறது.

இந்தியாவில் அண்மைய தேர்தல் கால முழக்கம் என்பது, வளர்ச்சி அரசியல் பற்றியதுதான். ஆனால், யாருக்கான வளர்ச்சி என்பதுதானே கேள்வி?. மக்கள் நஞ்சருந்தி மாண்டாலும் பரவாயில்லை; தனிப்பெரும் முதலாளிகளுக்கு ஜலதோஷம் பிடித்து விடாமல் காத்து வருகிறது இந்திய அரசு. அது பாஜகவாக இருந்தாலும், காங்கிரஸாக இருந்தாலும் அணுகுமுறையில் வித்தியாசப்படுவதில்லை.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை எதிர்த்து அங்குள்ள குமரெட்டியார்புரம் மக்கள் தொடர்ந்து 45 நாள்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். நேற்றுமுன்தினம் (மார்ச் 24, 2018) இந்தப் போராட்டம் உச்சத்தை அடைந்தது.

ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டனர். குமரெட்டியார்புரம், ஸ்ரீவைகுண்டம், சிலுவைப்பட்டி, புதியம்புத்தூர், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 7 ஊர்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

போராட்டம் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் செல்லவில்லை. பொதுக்கூட்டம் நடந்த திடலில் இருந்து 4 கி.மீ. தொலைவுக்கு மக்கள் அணிவகுத்து நின்றனர். இது, இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டமாக உருவெடுக்கும் என்று கூட கருத்துகள் எழுந்தன.

இத்தனைப் பிரச்னைகளுக்கும் காரணம் என்ன?

லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா குழுமத்தின் ஓர் அங்கம்தான் ஸ்டெர்லைட். இதன் நிர்வாக இயக்குநர்களில் ஒருவர் அணில் அகர்வால். பீஹாரில் மிகச்சாதாரணமாக பழைய இரும்புப் பொருள்களை வாங்கி விற்கும் வேலையைச் செய்த அவருடைய வணிக மதிப்பு, கடந்த ஆண்டு 21485 கோடி ரூபாய்க்கு மேலாக உயர்ந்தது.

வேதாந்தா நிறுவனம், முதன்முதலில் இந்தியாவில் மஹாராஷ்¢டிரா மாநிலத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்க முயற்சிகள் மேற்கொண்டது. அதுவும் கடல்புறமான ரத்னகிரி பகுதியில்.

ஆனால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்று அஞ்சிய அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டியதை அடுத்து, அங்கிருந்து வாரிச்சுருட்டிக்கொண்டு குஜராத் பக்கம் ஒதுங்கியது. அங்கும் எதிர்ப்பு. பிறகு, கோவா, கர்நாடகா மாநிலம் என சுற்றிவிட்டு கடைசியாக தமிழ்நாட்டில் கரை ஒதுங்கியது.

1994ம் ஆண்டு, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஸ்டெர்லைட் ஆலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின், 1997ல் ஸ்டெர்லைட் ஆலை இயக்கத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். ஆக, ஸ்டெர்லைட் ஆலை வருகைக்கு அதிமுக, திமுக, அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆகிய மூன்று அரசுகளுக்குமே முக்கிய பங்கிருக்கின்றன.

இந்த நிலையில்தான், சுற்றுச்சூழல் விதிகளை மீறிவிட்டதாகக்கூறி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மதிமுக தலைவர் வைகோ, சென்னை உயர்நீதிமன்றத்தில் 1997ல் வழக்கு தொடர்ந்தார். 13 ஆண்டுகள் கிடப்பில் இருந்த இந்த வழக்கு, 2010ல் விசாரணைக்கு வந்தது. ஆலை கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசடைந்ததாகக் கூறிய உயர்நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் உத்தரவிட்டது.

இந்த அதிரடி எல்லாம் சில காலம்தான். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றது. அதாவது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை ஆணை பெற்றது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதாக கருதினால் அந்தக் குற்றத்திற்காக அபராதம் செலுத்தத் தயாராக இருக்கிறோம் என்ற ஒப்புதலின்பேரிலேயே உச்சநீதிமன்றம் அப்படியொரு தடை ஆணையை பிறப்பித்தது. இதுதான் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய நகைப்பென்றே சொல்லலாம்.

 

இங்கு ஆலையைத் தொடங்க அனுமதி பெற்றபோதே, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இயற்கை உயிரினங்கள் வாழ் பகுதியில் இருந்து 25 கி.மீ. தூரத்திற்கு அப்பால் ஆலையை நிறுவிக்கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது.

1998ல் ஆய்வு செய்த தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமும், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்று அரசுக்கு அறிக்கை அளித்தது. ஆனால் இவற்றின் எதன் பேச்சையும் கேட்காமலேயே ஸ்டெர்லைட் நிர்வாகம், ஆலை பணிகளைச் துவக்கிச் செய்து வந்தது.

தவிர, காற்று மாசுபடுதல், நீர் மாசுபடுதல் தொடர்பாக அந்தந்த துறைகளிடம் பெற வேண்டிய தடையில்லா சான்றிதழைக்கூட பெறாமல் 2007 முதல் 2009ம் ஆண்டு வரை ஆலைய இயக்கி வந்தனர். இப்போதைக்கு இந்த ஆலை நாளொன்றுக்கு 1200 டன்னும், ஆண்டுக்கு 4 லட்சம் டன் வரையிலும் தாமிரக் கம்பிகளை உற்பத்தி செய்து வருகிறது.

இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்து விட்டது. பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது.

அங்கே, ஒரு குடம் குடிநீரை 10 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. இந்நிலையில், தாமிரபரணி ஆற்று நீரை ஆலை பயன்பாட்டுக்கு அனுமதிக்கக் கோரி, அரசிடம் அனுமதி கேட்டு வருகிறது ஆலை நிர்வாகம்.

கடந்த 2003ம் ஆண்டு ஆலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். இப்படி அடுக்கடுக்கான தொல்லைகளை மக்கள் அனுபவித்து வரும் நிலையில், ஆலையை விரிவாக்கம் செய்யவும், உற்பத்தியை அதிகப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது. அதனால்தான் மக்கள் பெருந்திரளாக பொங்கி எழுந்துள்ளனர். இந்த ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று (மார்ச் 26, 2018) வ.உ.சி. கல்லூரி மாணவர்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இந்த போராட்டக்கனல் மாநிலம் முழுவதும் பரவும் என்றும் கருதப்படுகிறது.

நேற்று முன்தினம், தூத்துக்குடி கண்டிராத வகையில் மிகப்பெரிய போராட்டம் நடந்தும், அதை தமிழ் செய்தி சேனல்கள் மிகப்பெரிய அளவில் கொண்டு செல்லாததால், மக்களின் கோபம் ஆலை நிர்வாகத்தின் மீது மட்டுமின்றி டிவி சேனல்கள், பத்திரிகை ஊடகங்கள் மீதும் திரும்பியுள்ளது.

ஆலையை மூடு அல்லது கருணைக்கொலை செய்து விடு, லாபம் உனக்கு கேன்சர் எங்களுக்கா? என மு-ழக்கமிட்டவர்கள் எல்லோருமே காட்சி மற்றும் அச்சு ஊடகங்களையும் ஒரு பிடி பிடிக்கத் தவறவில்லை. கள்ளக்காதல் பற்றிய செய்திகளைக்கூட போஸ்டரில் அச்சிடும் பத்திரிகைகள், தூத்துக்குடி மக்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரவில்லையே என்றும் பொங்கி எழுந்துள்ளனர்.

செய்தி சேனல்களோ, அச்சுப் பத்திரிகைகளோ இதுபற்றி உலகுக்குக் கொண்டு செல்லாவிட்டாலும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

”ஸ்டெர்லைட் ஆலை, காற்றின் திசையில் அமைந்து உள்ளதால், சுற்றுச்சூழல் மாசு அதிகமாக உள்ளது. ஆலையில் இருந்து வெளியேறும் கந்த சல்பைடு வாயுவின் அளவு 3.5 பிபிஎம் அல்லது அதற்கும் குறைவான அளவில்தான் இருக்க வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் இங்கு 12 பிபிஎம் என்ற அளவில் இந்த வாயு தாக்கம் உள்ளது,” என்கிறார் ஆலைக்கு எதிராகக் களமாடும் ஒருவர்.

ஆலை நிர்வாகம் சார்பில் ஒருவர், ”தூத்துக்குடி பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபட ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை. நாள்தோறும் ஏதாவது ஒரு ஆலை சிறிய, பெரிய அளவில் வந்து கொண்டேதான் இருக்கிறது. ஏராளமான கனரக வாகனங்கள், துறைமுகம் என பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் மாசடைகிறது.

இந்த ஆலையில் நேரடியாக 1000 பேரும், ஒப்பந்த அடிப்படையில் 2000 பேரும் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். மறைமுகமாக 25 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். நிலைமை இப்படி இருக்க ஸ்டெர்லைட் ஆலையை மட்டும் உள்நோக்கத்துடன் விமர்சிப்பது சரியாகாது,” என்றும் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களின் வாழ்வாதார போராட்டத்திற்கு நடுவண் பாஜக அரசும் இறங்கி வர வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டி கைகழுவப் பார்க்கக்கூடாது.

முன்பு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தாங்கஷ் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி வந்த நிலையில், இப்போது அதை விரிவாக்கம் செய்ய எத்தனிப்பது முரணாக இருக்கிறது. இதனால் பெரிய அளவில் லாபம் அடையப்போவது தமிழக மக்களோ இந்திய அரசாங்கமோகூட கிடையாது. மாறாக, தனிப்பெரும் முதலாளிகள் சில பேர் மட்டுமே கொலுத்த லாபம் பெறுகின்றனர்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயு, கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ, ஸ்டெர்லைட் என இதுபோன்ற சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மட்டத்தைக் கெடுக்கும் திட்டங்கள் மட்டும் தமிழ்நாட்டிற்குத் திட்டமிட்டு தள்ளிவிடப்படுகின்றனவா என்ற அய்யமும் மக்களிடம் உள்ளது. அவர்களின் அச்சத்தையும் அய்யத்தையும் போக்க வேண்டிய அரசாங்கங்கள், இறுதியில் தடியடி நடத்தி மட்டும் ஒடுக்க முனைவது பேராண்மைக்கு அழகன்று.

வளர்ச்சி என்பது மக்களின் நலனை உள்ளடக்கியதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, அவர்களை சுரண்டி கொழுப்பதல்ல.

 

– பேனாக்காரன்.
பேச: 98409 61947.