Saturday, March 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”அமித்ஷா உளறல்கள்!” – ட்விட்டரில் ட்ரெண்டிங்!

கடந்த சில நாள்களாக பழமொழியை மாற்றிப் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை வறுத்தெடுத்து வந்த ட்விட்டர் புலிகள், ‘எடியூரப்பா அரசுதான் ஊழலில் நம்பர்-1’ என்று பகிரங்கமாக தெரிவித்த பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் உளறல்களை இந்தியாவுக்கே இன்று பந்தி வைத்துவிட்டனர்.

கர்நாடகா மாநிலத்தில், வரும் மே மாதம் 12ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே பாஜக தொழில்நுட்பப் பிரிவுத்தலைவர் அமித் மால்வியா, ட்விட்டரில் தேர்தல் தேதியை வெளியிட்டார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, இன்று (மார்ச் 27, 2018) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ”எடியூரப்பா அரசு ஊழலில் நம்பர் ஒன் அரசு,” என்று திடீரென்று ‘சேம் சைடு கோல்’ அடித்தார். அப்போது அவர் அருகில்தான் எடியூரப்பாவும் அமர்ந்திருந்தார்.

அமித் ஷாவின் பேச்சை சற்றும் எதிர்பாராத அவர் கடும் அதிருப்தி அடைந்தார். இத்தோடு விட்டாரா அமித்ஷா? மேலும் அவர், ”ஊழல் அரசுகளிடையே போட்டி வைத்தால் எடியூரப்பா அரசுதான் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கும்,” என்றும் அடுத்த குண்டை வீசினார்.

அருகில் இருந்த பாஜக தலைவர்கள், அவருடைய தவறைச் சுட்டிக்காட்ட முயன்றனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அமித் ஷா, ‘சித்தராமையா அரசு என்றுதான் சொல்ல வந்தேன்’ என்று கூறி சமாளித்தார்.

அரசியல்வாதிகள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசும் கருத்துகள் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் கடும் கேலி, கிண்டலுக்குள்ளாகி வருகின்றன.

கடந்த சில நாள்களாக பழமொழிகளை தவறாகக் கூறிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கேலி செய்து இணையவாசிகள் மீம்ஸ்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், பாஜக தலைவரே தன் கட்சியின் கர்நாடகா மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா பற்றி தவறுதலாகக் குறிப்பிட்டதை கேலி, கிண்டல் செய்து இணையவாசிகள் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.

ட்விட்டரில், ‘#அமித்ஷா உளறல்கள்’ என்று ஹேஷ்டேக் செய்துள்ளனர். இன்று அந்த ஹேஷ்டேக் தான் முதலிடத்தில் இருந்து வந்தது.

 

அமித்ஷா தவறுதலாகக் கூறினாலும், அவர் உண்மையைத்தான் கூறியுள்ளார் என்றும், நரேந்திர மோடி மனதிலிருந்து பேசுவதாகச் (மன் கீ பாத்) சொல்வதெல்லாம் பொய். அமித்ஷாதான் இன்று அவருடைய மனதிலிருந்து பேசியிருக்கிறார் என்றும் கிண்டலாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

பலர் நடிகர் வடிவேலு, ரஜினிகாந்த், கவுண்டமணி ஆகியோர் பேசிய வசனங்களை உல்டா செய்தும் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.

ஒருவர், ”பிஜேபி ஜெயிக்கறதுக்காக இத்தனை நாளா நான்தான் அமித்ஷா வேஷத்துல நடிச்சேன். அமிஷாஜி தன் பையன் கேஸூ விஷயமாக ஊர் ஊராக சுத்திக்கிட்டு இருக்கார்,” என்று நடிகர் சந்தான பாரதி பேசுவதுபோல மீம்ஸ் பதிவிட்டுள்ளார். சந்தானபாரதி (‘கரகாட்ட க்காரன்’, ‘அன்பே சிவம்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர்) உருவமும், அமித்ஷா உருவமும் ஒரே சாயலில் இருப்பதை ஒப்பிட்டு இவ்வாறு கேலியாக கருத்து பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், ‘காவலன்’ படத்தில் நடிகர் வடிவேலு தவறாக பேசிவிட்டு பின்னர் பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு என்று கூறுவார். அதை உல்டா செய்து, ”எடியூரப்பாவா….சித்தராமையாவா…? பாவம் அமித்ஷாவே கன்பியூஷ் ஆயிட்டாரு…” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

‘சூர்யவம்சம்’ படத்தில் நடிகை ராதிகா பேசும் வசனத்தை உல்டா செய்து, ”பழமொழிய மாத்தி சொன்ன ஸ்டாலின் எங்க…. தன் சொந்தக் கட்சியவே ஊழல் கட்சினு சொன்ன அமித்ஷா எங்க….” என்றும் கிண்டலான மீம்ஸ் பதிவிட்டுள்ளார் ஒருவர்.

மித்ரன் என்ற பதிவர், மோடியும் அமித்ஷாவும் உரையாடிக் கொள்வதுபோன்ற ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அவர் ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி பேசும் ஒரு வசனத்தை உல்டா செய்து இந்த மீம்ஸை பதிவிட்டுள்ளார். மோடி, அமித்ஷாவைப் பார்த்து, ”யோவ் பங்கு பிரஸ் மீட்டுல என்னையா சொன்ன? என்று கேட்கிறார். அதற்கு அமித்ஷா, ”உண்மைய சொன்னேன்” என கூறுகிறார்.

இன்னும் பலர், அமித்ஷாவைக் கிண்டலடிக்கும் நோக்கில் பாஜகவை சேர்ந்த ஊழல்வாதிகளை அவரே வெளியுலகுக்கு அம்பலப்படுத்துவது போலவும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.