Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஆத்தூர்: பள்ளி மாணவியை கொன்ற கொடூரன் அந்நியன் விக்ரம் போல மாறி மாறி பேசுவதால் போலீசார் திணறல்!

 

ஆத்தூர் அருகே, இரவு நேரத்தில் வீடு புகுந்து பள்ளி மாணவியை துடிக்க துடிக்க தலை துண்டித்துக் கொலை செய்த கொடூரன், அந்நியன் விக்ரம் போல மாற்றி மாற்றி பேசுவதால் வாக்குமூலம் பெறுவதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

ஆத்தூர் அருகே…

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி சுந்தரபுரம் தெற்குக் காட்டைச் சேர்ந்தவர் குழந்தைவேல். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் மகன் தினேஷ்குமார் (25). இரண்டாவது மகன், சசிகுமார். மூத்த மகன் தினேஷ்குமார், நெல் அறுக்கும் இயந்திர ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவயும், இரண்டரை வயதில் செல்வதரணித் என்ற ஓர் ஆண் குழந்தை உள்ளனர்.

 

இவர்கள் வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் சாமிவேலு – சின்னப்பொண்ணு (45) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராஜலட்சுமி (14) என்ற மகள் இருந்தாள். தளவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள். திங்கள் கிழமை (அக்டோபர் 22, 2018ம் தேதி) இரவு 7.30 மணியளவில் சின்னப்பொண்ணுவும், சிறுமி ராஜலட்சுமியும் (14) வீட்டுக்குள் அமர்ந்து பூக்கட்டிக்கொண்டு இருந்தனர்.

 

அரிவாளுடன்….

 

அப்போது திடீரென்று தினேஷ்குமார் கையில் அரிவாளுடன் அந்த வீட்டுக்குள் நுழைந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். ஆத்திரம் தீராத அவர், சிறுமியின் தலையை தனியாக துண்டித்துக் கையில் பிடித்துக்கொண்டு சிறிது தூரம் சென்றார். சம்பவ இடத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவில் கொண்டு சென்று சாலையில் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் கேசவன் மற்றும் காவலர்கள், நிகழ்விடம் விரைந்து சென்றனர். தலை வேறு, உடல் வேறாக கிடந்த சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

தனக்குத்தானே ஏதேதோ பேசிக்கொண்டே….

 

சிறிது நேரத்தில், ரத்தம் படிந்த உடையுடன் வீட்டுக்குள் வந்த தினேஷ்குமாரைப் பார்த்து அவருடைய மனைவி சாரதா மற்றும் தினேஷ்குமாரின் தம்பி சசிகுமார் ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

 

அப்போது தினேஷ்குமார் சுற்றுமுற்றும் நோட்டமிட்டபடியே, தனக்குத்தானே ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தார். அவர்கள் இருவரும் தினேஷ்குமாரை மோட்டார் சைக்கிளில் அமர வைத்து, ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் இரவு 8.30 மணியளவில் ஒப்படைத்தனர்.

 

மனநலம் பிறழ்ந்ததுபோல…

 

நெல் அறுக்கும் இயந்திர ஓட்டுநரான தினேஷ்குமார், வெளிமாநிலத்தில் வாகனம் ஓட்டிச்சென்று இருந்தார். ஆயுதபூஜை விடுமுறைக்காக கடந்த 19ம் தேதிதான் சொந்த ஊர் திரும்பினார். ஆனால், வேலைக்குச் சென்ற இடத்தில் அடிக்கடி மனநலம் பிறழ்ந்ததுபோல நடந்து கொண்டதால் அவரை வாகன உரிமையாளர், ஆயுதபூஜையுடன் வேலையை விட்டு நின்று விடுமாறு சொல்லி விட்டாராம். இத்தனைக்கும் கடந்த 5 ஆண்டுகளாக அந்த இயந்திர உரிமையாளரிடம்தான் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.

இதனால் மேலும் மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் தனக்குத்தானே பேசி வந்துள்ளார். இந்த நிலையில்தான், சம்பவத்தன்று இரவு, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தன் இரண்டரை வயது ஆண் குழந்தையை திடீரென்று தன் மார்போடு அணைத்தவாறு கழுத்தறுகே அரிவாளை வைத்துக் கொண்டிருந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சாரதா, கணவரிடம் இருந்து குழந்தையை மீட்டதுடன், அவர் கையில் இருந்த அரிவாளைப் பிடுங்கி பீரோவுக்கு அடியில் போட்டுள்ளார்.

 

விறுவிறுவென்று…

 

அடுத்த சில நிமிடங்களில் என்ன நினைத்தாரோ தெரியாது, தினேஷ்குமார் விறுவிறுவென்று வீட்டில் இருந்து கிளம்பினார். சில அடி தூரம் சென்றுவிட்டதால் அவர் கையில் அரிவாள் எடுத்துச்சென்றதை சாரதாவோ, அல்லது அப்போது வீட்டில் இருந்த தினேஷ்குமாரின் தம்பி சசிகுமாரோ கவனிக்கவில்லை.

 

ஆனால் அடுத்த சில நிமிடங்களில், உடைகள் முழுவதும் ரத்தச்சகதியுடனும், அரிவாளில் வழிந்தோடும் ரத்தத்தோடும் தினேஷ்குமார் தன் வீட்டுக்குள் நுழைந்தார். ஏதோ விபரீதமாகிவிட்டதை உணர்ந்த சாரதாவும், தம்பி சசிகுமாரும் அவருடைய கையில் இருந்த அரிவாளை பிடுங்கி முள்புதருக்குள் வீசி எறிந்தனர். பின்னர்தான் அவர், சிறுமி ராஜலட்சுமியை தலையைத் துண்டித்துக் கொடூரமாக கொலை செய்திருப்பதை தெரிந்து கொண்டனர்.

 

தன் குழந்தையையேக்கூட…

 

இதையடுத்து வீட்டில் இருந்தால் தன் குழந்தையையேக்கூட கொன்று விடுவான் என்ற அச்சத்தின் காரணமாகவே, தினேஷ்குமாரை அவருடைய மனைவியும், தம்பியும் பிடித்துச்சென்று ஆத்தூர் நகர காவல்நிலையத்தில் இரவு 8.30 மணியளவில் ஒப்படைத்தனர்.

 

காவல்துறையினர் தினேஷ்குமாரை கை, கால்களில் விலங்கு மாட்டி விசாரித்தனர். எந்தக் கேள்விக்கும் சரியான பதிலைச் சொல்லவில்லை எனத்தெரிகிறது. தினேஷ்குமார் சுயமாக சம்பாதித்துதான் இப்போது குடியிருந்து வரும் வீட்டை கட்டியிருக்கிறார்.

 

அடிச்சுக் கொன்னுடுங்க…

 

ஒருகட்டத்தில் பொறுமை இழந்த காவல்துறையினர், வயர் மூலம் அவரை அடித்து விசாரித்தனர். அப்போது அவர், ‘வலிக்கலையே’ என்று சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிபோல சொன்னாராம். பிறகு ஒருமுறை, ‘வேணும்னா என்னை அடிச்சுக் கொன்னுடுங்க,’ என்று தெளிவாக பேசியுள்ளார்.

 

கைவிலங்கை உடைக்கவும் முயற்சி…

 

இப்படியே, அடிக்கடி ‘அந்நியன்’ படத்தில் ஸ்பிளிட் பர்சனாலிட்டியால் பாதிக்கப்பட்ட நடிகர் விக்ரம் போல, மாறி மாறி பேசியதால், காவல்துறையினரால் அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற முடியவில்லை. இன்று மாலை திடீரென்று கை, கால்களில் பிணைக்கப்பட்ட விலங்கை திறந்து விடுமாறு கூறியுள்ளா. அதற்கு காவல்துறையினர் மறுக்கவே, ‘சாவி இல்லாவிட்டால் நானே திறந்துடுவேன்’ என்றும் சொல்லியதோடு, கைவிலங்கை உடைக்கவும் முயற்சி செய்துள்ளார்.

 

இதையடுத்து பாதுகாப்புக்கருதி கை, கால்கள் பிணைக்கப்பட்ட நிலையில், ஆத்தூர் ஊரக காவல்நிலையத்தில் தங்க வைக்கப்பட்டார். அண்மையில், ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தினேஷ்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர் ஒருவர், அவருக்கு லேசாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

அதையும் காவல்துறையினர் கருத்தில் கொள்ளுமா? அல்லது வழக்கம்போல் ஏதேனும் கதை கட்டி வழக்கை ஜோடித்து விடுமா? என்பது ஓரிரு நாளில் தெரிந்து விடும்.