Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

-தகவல்-

 

பத்தாம் வகுப்பு பயிலும்
மாணவர்கள் தேசிய
திறனாய்வுத்தேர்வுக்கு
விண்ணப்பிக்க,
தமிழக அரசுத்தேர்வுகள்
இயக்ககம் அழைப்பு
விடுத்துள்ளது.

 

பள்ளி மாணவர்களிடையே அறிவியல், சமூக அறிவியல் படிப்புகளின் மீது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தேசிய திறனாய்வுத்தேர்வு (NTSE – National Talent Search Examination) நடத்தப்பட்டு, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 1963ம் ஆண்டு முதல் இத்திட்டம் அமலில் இருந்து வருகிறது. தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு (NCERT) இத்தேர்வை நடத்தி வருகிறது.

அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசு, தனியார், நிதியுதவி பெறும் பள்ளிகளில் தற்போது பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

இரண்டு நிலைகளில்
இத்தேர்வு நடத்தப்படுகிறது.
முதல்நிலைத் தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்கள்
இரண்டாம் நிலைத் தேர்வுக்கு
தகுதி பெறுவர்.
அத்தேர்வில் நிர்ணயிக்கப்பட்டு
உள்ள கட்-ஆஃப்
மதிப்பெண்களுக்கு மேல்
பெறக்கூடிய மாணவ,
மாணவிகளுக்கு அவர்கள்
பிளஸ்1, பிளஸ்2 படிக்கும்போது
மாதந்தோறும் 1250 ரூபாய்
கல்வி உதவித்தொகை
வழங்கப்படும். மேலும்,
அவர்கள் இளநிலை,
முதுநிலை
பட்டப்படிப்பின்போதும்
மாதம் 2000 ரூபாய்
உதவித்தொகை
வழங்கப்படும்.

 

நாடு முழுவதும் மொத்தம் 2000 மாணவ, மாணவிகளுக்கு இவ்வுதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெற விரும்புவோர் மேல்நிலையில் கண்டிப்பாக அறிவியல் பாடப்பிரிவு எடுத்திருப்பவராக இருக்க வேண்டும். பெரும்பாலும் இத்தேர்வுகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. இத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், அரசுப்பள்ளிகளில் தனிப்பயிற்சி அளித்தால், வரும் காலங்களில் கூடுதலான மாணவர்கள் பயன்பெற வாய்ப்பு உள்ளது.

 

நடப்பு 2019-2020ம்
கல்வி ஆண்டிற்கான
முதல்நிலை தேசிய
திறனாய்வுத்தேர்வு வரும்
நவம்பர் மாதம் 3ம் தேதி
(ஞாயிற்றுக்கிழமை)
நடைபெறுகிறது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க
விரும்பும் மாணவ, மாணவிகள்
www.dge.tn.gov.in என்ற
இணையதளத்தில் இருந்து
விண்ணப்பங்களை பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
இன்று (22.8.2019) முதல்
வரும் செப்டம்பர் 7ம் தேதி வரை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன்
50 ரூபாய் தேர்வுக்கட்டணம்
சேர்த்து, சம்பந்தப்பட்ட
பள்ளித்தலைமை ஆசிரியரிடம்
ஒப்படைக்க வேண்டும்.

 

விண்ணப்பங்களை
சமர்ப்பிக்க வேண்டிய
கடைசி தேதி 7.9.2019.
மேலும் விவரங்களை,
www.dge.tn.gov.in
என்ற இணையதளத்தில்
பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அரசுத்தேர்வுகள்
இயக்ககம் தெரிவித்துள்ளது.

 

– செங்கழுநீர்