Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

‘சின்னவீடு’க்கு செருப்படி…! மழைக்காக நூதன சடங்கு ‘சேலம் மக்களின் சுவாரஸ்ய கலாச்சாரம்’

மிழகத்தில் ஓராண்டின் சராசரி மழை அளவு 958 மி.மீ., ஆனால் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது மழைப்பொழிவு குறைந்து, கடும் வறட்சி நிலவுகிறது. இதேபோன்ற வறட்சி, கடைசியாக 1876ல் நிலவியதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
ஆன்மீக நம்பிக்கையாளர்கள் மழை வேண்டி பரவலாக யாகம் நடத்தி வரும் வேளையில், சேலம் பட்டைக்கோயில் அருகே கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள், ‘கொடும்பாவி’ சடங்கு என்ற நூதனமான சடங்கை கடைப்பிடித்து வருகின்றனர்.

“வருண பகவான்தான் நமக்கெல்லாம் மழையைக் கொடுக்கிறார். அவரை, ‘கொடும்பாவி’ என்ற பெண் மயக்கி தன் வசப்படுத்தி வைத்துக் கொள்கிறாள். வருண பகவான் தன் மனைவிக்குத் தெரியாமல், அடிக்கடி கொடும்பாவி வீட்டுக்குச் சென்று விடுகிறார். அங்கிருக்கும் காலங்களில் மழை வருவதில்லை. வறட்சி ஏற்படுகிறது.

அதனால் நாங்கள் கொடும்பாவியை உருவப்பொம்மையாக செய்து, அதை செருப்பால் அடித்து அசிங்கப்படுத்துவோம். அப்படிச் செய்தால்தான் வருண பகவானை அவளிடம் இருந்து விடுவிக்க முடியும். அப்போதுதான் மழை வரும் என்பது அய்தீகம்,” என்கிறார் உஷாராணி.
அவர் சொல்வதைக் கேட்டு, ‘அட! இது கொஞ்சம் புதுஸ்ஸ்ஸா இருக்கே’ என நாமும் புருவங்களை சற்று உயர்த்தினோம்.

கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த சாந்தி சாந்தாராம் கூறுகையில், “எனக்குத் தெரிந்து கடந்த நாற்பது ஆண்டுக்கு முன்பு இதேபோல் கொடும்பாவி சடங்குகளை செய்தோம். அப்போது மழை வந்தது. அதன்பின் இப்போதுதான் கொடும்பாவி சடங்குகளை செய்கிறோம். பிய்ந்த செருப்பு மட்டுமல்ல; பிய்ஞ்சுபோன விளக்குமாறு கொண்டும் கொடும்பாவியை அடிப்போம். அசிங்க அசிங்கமாக திட்டுவோம். ஒப்பாரி பாட்டும் பாடுவோம்,” என்றார்.

அப்பகுதியைச் சேர்ந்த சகுந்தலா என்ற 77 வயது மூதாட்டிதான், கொடும்பாவி சடங்கு செய்தால் மழை பெய்யும் என்ற யோசனையைச் சொன்னதாகவும் கூறினர்.
கொடும்பாவியை மண், செங்கல் கொண்டு வடிவமைக்கின்றனர். இரண்டு முட்டைகளில் கருவிழிகளை வரைந்து, கண்களாக பொருத்துகின்றனர். கொடும்பாவிக்கு சிவப்பு சேலை அணிவிக்கின்றனர். கைகளில் வளையல், வங்கி, கால்களில் காப்பும் அணிவிக்கின்றனர்.
கொடும்பாவியின் உருவம் பார்ப்பதற்கு ‘ஹாரர்’ படங்களில் வருவதுபோல் மிரட்சி ஏற்படுத்தும் உருவத்துடன் ஒத்திருக்கின்றன. (இப்படி ஒரு உருவத்துடன் கூடிய பெண்ணை ‘வைத்திருந்ததற்கு’ வருண பகவானை வேண்டுமானால் ‘கொடும்பாவி’ எனலாம்).

இந்த நூதன சடங்கிற்காக அப்பகுதி மக்கள் வீடு வீடாக நன்கொடை வசூலித்து, இதற்கான செலவுகளை மேற்கொள்கின்றனர். இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணி வரை இந்தக் கொடும்பாவியை வடிவமைத்துள்ளனர்.

அதன்பிறகு, பொதுமக்கள் எல்லாரும் கும்பலாகச் சேர்ந்து கொண்டு, ‘கொடும்பாவி’ உருவத்தை பழைய துடைப்பம், பிய்ந்த செருப்பால் சகட்டுமேனிக்கு அடிக்கின்றனர். ஆபாச வார்த்தைகளால் திட்டுகின்றனர். சிறுவர், சிறுமிகள்கூட குதூகலத்துடன் கொடும்பாவியை செருப்பாலும், துடைப்பத்தாலும் அடித்ததைக் காண முடிந்தது.

முன்பெல்லாம், கொடும்பாவி சிலை செய்து அதை ஒரு வண்டியில் வைத்து, தெருத்தெருவாக ஊர்வலமாக அழைத்துச் சென்று செருப்பு, துடைப்பத்தால் அடிக்க வைக்கும் முறையும் இருந்ததாம்.
இந்த சடங்கின் இறுதியில், வந்திருந்த அனைவருக்கும் கொள்ளு, அரிசி கலந்து தயாரித்த கஞ்சியை பிரசாதமாக வழங்குகின்றனர். இந்த கஞ்சியைக்கூட கொடும்பாவியின் காலுக்கடியில் தீ மூட்டித்தான் சமைக்கின்றனர்.

“கொடும்பாவி உக்கிரமானவள். அவளை மேலும் சூடாக்கினால்தான், கோபத்தில் வருண பகவானை விடுவிப்பாள்,” என்கிறார் சாந்தி சாந்தாராம்.
இன்னொருவரின் கணவனை அபகரிப்பது குற்றம் என்பதை உணர்த்தவும், அவரை விடுவித்தால்தான் மழை பெய்யும் என்பதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர். இந்த சடங்கின் முடிவில், கொடும்பாவி உருவத்தைக் கலைத்து, அந்த மண்ணை நீரோடையில் கரைத்து விடுகின்றனர்.

“கடந்த 1972ல் இப்படித்தான் கடுமையான பஞ்சமும், வறட்சியும் ஏற்பட்டது. அப்போது நாங்கள் இதேபோல கொடும்பாவி சடங்கு செய்தோம். அன்றே மழை, வெள்ளமாய் கொட்டித் தீர்த்து விட்டது. சேலமே வெள்ளத்தில் மூழ்கிவிட்டது,” என பழைய நினைவுகளில் மூழ்கினார், கே.சாந்தாராம்.

விக்னேஸ்வரி, நரசிம்மாச்சாரி ஆகியோர், “மழை இல்லாததால எல்லாப் பொருள்களின் விலைவாசியும் ஏறிப்போச்சு. தண்ணி இல்லாமல் விவசாயிங்க சாகறாங்க. போதாக்குறைக்கு இந்த மோடி வேற, ரூபாய் நோட்டு செல்லாதுனு சொன்னதால தொழி லும் முடங்கிப்போச்சு. அதனாலதான் கொடும்பாவி சடங்கு பன்றோம்,” என்றனர்.
அறிவியலுக்கு ஒவ்வாத இதுபோன்ற சமாச்சாரங்களில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அன்றைக்கு சேலத்தில் பரவலாக லேசான மழை பெய்தது என்னவோ உண்மைதான்.

பதிவு: மே-2017
(“புதிய அகராதி” இதழ் சந்தா தொடர்புக்கு: 9840961947

Leave a Reply