ஓசூரில் 100 தொழிலாளர்களுடன் இயங்கும் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையின் அதிபர். அலட்டல் இல்லாத கவிஞர். ‘கவிக்கோ’ அப்துல் ரஹ்மான், வைரமுத்து, அறிவுமதி ஆகியோரை வைத்து மூன்று கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவற்றையெல்லாம் விட அவர் பெருமையும், மன நிறைவும் அடைவது தன்னை ஒரு ‘வரலாற்று ஆய்வாளர்’ என்று சொல்லிக்கொள்வதில்தான் என்றால் மிகையாகாது. இப்படி பன்முகத்தன்மையுடன் திகழ்பவர்தான், ‘அறம்’ கிருஷ்ணன். அவருடனான உரையாடலில் இருந்து…
புதிய அகராதி: உங்கள் பெயரின் முன்னொட்டாக ‘அறம்’ ஒட்டிக்கொண்டது எப்படி?
அறம் கிருஷ்ணன்: எனக்குள் இருக்கும் இலக்கிய ஆர்வம் காரணமாக, ‘அறம் இலக்கிய அமைப்பு’ என்ற அமைப்பை தொடங்கினேன். அதன்மூலம், ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தி வருகிறோம். அறம் என்றாலே கொடுப்பதுதானே.
அதனால் விழா நடைபெறும் பள்ளிக்கு கம்ப்யூட்டர், பிரிண்டர் என என்னாலான சிறு உதவிகளையும் செய்கிறேன். ஒரு மாதம் ஒரு பள்ளி என்றளவில் இலக்கியப்பணி தொடர்கிறது. இப்படித்தான் கிருஷ்ணன் என்ற பெயர் முன்பு, ‘அறம்’ ஒட்டிக்கொண்டது.
புதிய அகராதி: திடீரென்று வரலாற்றுத்தேடல் மீதான ஆர்வம் எப்படி வந்தது?
எனக்கு வரலாறு மீதெல்லாம் பெரிய அளவில் ஆர்வமே கிடையாது. ஒரு நாள், கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள எனக்கும் அழைப்பு வந்தது. அதற்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது. எப்படியோ என் பெயருக்கும் ஓர் அழைப்பிதழ் வந்து சேர்ந்தது.
அந்த அழைப்பிதழைப் பார்த்தபோது, அதில் எழுத்தாளர் பாலகுமாரன் சாரும் விழாவிற்கு வருகை தருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அவர்தான் என் கனவு நாயகன். என் வாழ்க்கை நேர்க்கோடாக திசை மாறாமல் செல்ல அவர்தான் காரணம். அவரைக்காண 28 ஆண்டாக முயற்சித்தும் முடியவில்லை. அதனால் பாலகுமாரன் சாரை பார்ப்பதற்காகவே ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது விழாவிற்குப் போனேன்.
மாளிகை மேடு என்ற இடத்தில் விழா நடந்தது. விழா ஏற்பாட்டாளர் கோமகன், எங்களை ஊர்வலமாக அழைத்துச்சென்றார். அங்குதான் முதன்முதலில் பாலகுமாரன் சாரை நேரில் சந்தித்தேன். அவர் காலில் விழுந்து ஆசி பெற்றேன். அதன்பின் நடந்தது எல்லாமே மேஜிக்தான்.
அந்த மாளிகை மேடு எனக்குள் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த நாள், 2014, ஜூன் 25ம் தேதி. சோழர்கள் பற்றி துளியும் தெரியாது. ஆனால் அடுத்த ஒரே வருடத்தில், ‘ராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள் 1001’ என்ற நூலின் முதல் பாகம் எழுதி வெளியிட்டேன். பாலகுமாரன் சார்தான் நூலை வெளியிட்டார்.
புதிய அகராதி: ராஜேந்திர சோழனைப் பற்றி என்னென்ன தகவல்களை கொடுத்துள்ளீர்கள்?
சேரர், சோழர், பாண்டியர்களில் சோழர்கள் மட்டும்தான் பெரிய ஆட்சிப்பரப்பைக் கொண்டிருந்தனர். தமிழகம் மட்டுமின்றி கங்கம்பாடி, மேலை சாளுக்கியம் (கர்நாடகா), கீழை சாளுக்கியம் (ஆந்திரம்) ஆகிய பகுதிகளும், இலங்கையும் ராஜராஜ சோழனின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.
ஆனால், ராஜேந்திர சோழன் மட்டும்தான் இந்தியா முழுமையும் வென்றிருந்தான். வங்கம், மாலத்தீவு, தாய்லாந்து, ஜப்பான், இலங்கை, இந்தோனேஷியா, கம்போடியா என தெற்கு ஆசியா முழுவதுமே பிடித்துவிட்டான்.ராஜேந்திர சோழனுக்கு ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டப்பெயர் உண்டு. இன்றைய மலேசியாதான் அன்றைய கடாரம். அதை வென்றதால் அந்தப்பெயர் வந்தது. உலகில் முதன்முதலில் கப்பல் படை வைத்திருந்தது ராஜேந்திர சோழன்தான்.
மாவீரன் என்றால் நாம் அலெக்சாண்டரையும், நெப்போலியனையும்தான் சொல்கிறோம். அவர்கள் எல்லோருமே அவரவர் நாட்டுக்குள்ளேயே சண்டையிட்டவர்கள். உண்மையில், ராஜேந்திர சோழன்தான் மிகப்பெரிய வீரன். ஆயிரம் கப்பல்கள், 60 ஆயிரம் யானைகள், 1.50 லட்சம் குதிரைகள், 9 லட்சம் சிப்பாய்களுடன் கடல் கடந்து சென்று தெற்கு ஆசியா முழுமையும் வென்றான்.
கிட்டத்தட்ட 11 லட்சம் வீரர்களை கடல் கடந்து கொண்டு சென்றிருப்பானேயானால் எத்தனை நாடுகளை வென்றிருக்க முடியும்? அத்தனை பேருக்கும் எப்படி சாப்பாடு போட்டிருப்பான்? இது மாதிரியான போர்களை உலகத்தில் இதுவரை யாருமே நிகழ்த்தியதே இல்லை. இதற்கெல்லாமே போதிய கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.
இன்றைய நிலையில் அமெரிக்கா, இந்தியா ராணுவத்தையும் சேர்த்தால்கூட 2 லட்சம் துருப்புகளைத் தாண்டாது. ஏதோ ஒரு காரணத்தினால் ராஜேந்திர சோழன் தவறவிட்டதன் விளைவுதான் கஜினி முகமது இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டான்.
மாவீரன் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் விதமாக இந்திய அரசு கடந்த 2015, மார்ச் 15ம் தேதி தபால் தலை வெளியிட்டுள்ளது. அந்த தபால்தலையில், ‘உலகில் கப்பலை முதன்முதலாக உருவாக்கியவனும், பயன்படுத்தியவனும் ராஜேந்திரசோழன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு புதிய தகவல்.
புதிய அகராதி: வரலாறு படிப்பது ஏன் அவசியமாகிறது?
நம்முடைய தலைமுறைகளைச் சொல்லிக் கொடுக்கவும், நாம் தவறவிட்ட வரலாறைச் சொல்லிக்கொடுக்கவும் வரலாறு அவசியம்.
நாம்தான் ராஜேந்திர சோழனைக் கொண்டாடுகிறோம். ஆனால் வட இந்தியாவில், இன்றைக்கும் கப்பலை கண்டுபிடித்தவன் சிவாஜிதான். அதே வட இந்தியன்தான் ராஜேந்திர சோழனுக்கு தபால்தலை வெளியிட்டிருக்கிறான். எனில், நான் ஏன் அவுரங்கசீப்பை படிக்கணும்? நான் ஏன் அக்பரை படிக்கணும்? நான் ஏன் அசோகரைப் படிக்கணும்?
தமிழ் அரசர்கள் மட்டுமின்றி தென்னிந்திய மன்னர்கள் பற்றிய பாடங்கள் எதுவுமே வடஇந்திய பாடப்புத்தகங்களில் இல்லை. இந்தியாவின் 60 சதவீத பகுதிகளை ஆட்சி செய்தவன் அசோகன். காஞ்சியில் உள்ள அசோகர் ஸ்தூபி கல்வெட்டில், ‘என்னால் தெற்கு பகுதியில் மட்டும் நுழைய முடியவில்லை. காரணம், சோழர்கள்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அப்படி இருக்கும்போது நாம் மட்டும் ஏன் இன்னும் அக்பரையும், அசோகனையும், ஷாஜகானையும் படிக்க வேண்டும்? அவர்களைப் பற்றி நம் பாடத்திட்டத்தில் ஏன் வைக்கிறார்கள்? பெரிய கேள்வி எழவில்லையா? முதன்முதலாக இப்போதுதான் ஒரு தமிழ் புத்தகத்தில் பென்னி குயிக் ஃபோட்டோ போட்டுள்ளனர். வள்ளுவனையே நம்மால் அட்டையில் வைத்துக்கொள்ள முடியவில்லை. அப்புறம் எப்படி வரலாறை சொல்லிக்கொடுக்க முடியும்?
உலகையே ஆண்ட ராஜேந்திர சோழனுக்கு இதுவரை அரசு சார்பில் விழாக்கள் நடத்தப்படவில்லை. இப்படி எவ்வளவோ சொல்ல முடியாத ஆதங்கங்கள் இருக்கின்றன.
புதிய அகராதி: மரபு நடைப் பயணங்களை எப்போது தொடங்கினீர்கள்?
சோழர்கள் ஆராய்ச்சியில் இருந்து இப்போது கொஞ்சம் வேறு துறைக்கு நகர்ந்து இருக்கிறேன். என்னுடைய மாவட்டத்தில் (கிருஷ்ணகிரி) சில வரலாற்றுத்தடயங்கள் அழிந்து வருகின்றன. மாவட்டத்திற்குள் உள்ள வரலாற்றுத்தகவல்களை மரபு நடைப்பயணம் மூலமாக ஆவணப்படுத்தி வருகிறோம். கடந்த ஆறு மாதங்களாக இப்பயணத்தை மேற்கொண்டு வருகிறோம்.
புதிய அகராதி: மரபு நடைப்பயணத்தின் முக்கிய தகவல் திரட்டு என்றால் எதைச் சொல்வீர்கள்?
சமண மதம் என்றால் எல்லோரும் மதுரையைத்தான் சொல்வார்கள். ஆனால் சமணத்தின் நுழைவு வாயிலாக ஓசூர்தான் இருந்திருக்கிறது. கர்நாடகாவில் உள்ள சரவணபெலகுளாவில்தான் முதன்முதலில் கி.மு.2-ல் சமணம் தோன்றியது.
தமிழ்நாட்டிற்குள் சமணம் ஓசூர் வழியாகத்தான் நுழைந்துள்ளது. ஓசூர்- தர்மபுரி-கொங்கு பார்டர்-கரூர்- திண்டுக்கல்-மதுரை என சமணம் பயணப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதாரமாக ஓசூர் வெங்கட பெருமாள் கோயிலில் மூன்று பெரிய பாறை கல்வெட்டுகளும், மூன்று பெரிய சமண சிற்பங்களும் கிடைத்துள்ளன. 23வது தீர்த்தங்கரரான பாசுவதர் சிற்பமும் கிடைத்திருக்கிறது.
அதேபோல் சமணப்பள்ளி, சமணப்படுக்கைகளும் கிடைத்திருக்கின்றன. இதுமட்டுமின்றி கன்றும், பசுவும் ஒரே சிற்பமாகவும் கண்டெடுத் திருக்கிறோம்.
தமிழ்நாட்டில் இதுவரை, பெண்கள் குதிரை மீது போர் செய்யும் சான்றுகள் கிடைத்ததாக தகவல் இல்லை. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப்பள்ளியில் ஒரு நடுகல் கண்டெடுத்தோம். அந்த நடுகல்லில், குதிரை மீது ஒரு பெண் போர் செய்யும் சிற்பம் பொறிக்கப்பட்டு இருந்தது. இது எங்கள் குழுவின் தேடலுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இந்த நடுகல் 13 அல்லது 14ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
புதிய அகராதி: வரலாற்றுத் தகவல்களைச் சேகரிப்பது மட்டும்தான் குழுவின் நோக்கமா?
சிதிலமடைந்த கோயில்களை புனரமைக்கும் பணிகளையும் செய்து வருகிறோம். கெலமங்கலத்தில் சோழர் கால சந்திரமவுலீஸ்வரர் கோயில் ஒன்று சிதிலமடைந்து, புதர் மண்டிக்கிடந்தது. அந்தக் கோயிலின் கருவறை தவிர மற்ற பகுதிகளை புனரமைத்திருக்கிறோம்.
புதிய அகராதி: வரலாற்றைப் பாதுகாக்க அரசு ஆர்வமாக உள்ளதாக தெரியவில்லையே?
வரலாற்றைப் பாதுகாக்க கண்டிப்பாக அரசு முன்வர வேண்டும். ஆனால் அரசாங்கம் கண்டுகொள்வதே இல்லை. அதேநேரம், எங்கள் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி உமாசங்கர் ஆர்வத்துடன் எங்களுடன் பயணப்படுகிறார்.
புதிய அகராதி: பாடத்திட்டத்தில் வரலாறுக்கு முக்கியத்துவம் குறைந்து வருகிறதே?
உண்மைதான். பள்ளிகளில் அறம் அமைப்பு சார்பில் இலக்கிய போட்டிகள் மட்டுமின்றி, ‘நம்ம ஊர் வரலாறு’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு பள்ளியிலும் ‘வரலாற்றுப் பேரவை’ உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம். கல்லூரி மாணவர்களிடமும் வரலாறு மீதான ஆர்வத்தை வளர்த்து வருகிறோம்.
(மே-2017, புதிய அகராதி திங்கள் இதழிலிருந்து…)
அறம் கிருஷ்ணனுடன் பேச: 9578468122.
உரையாடல்: இளையராஜா .எஸ்