Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு?

சேலம் மாவட்டத்தில்,
இரண்டு கட்டங்களாக நடந்த
ஊரக உள்ளாட்சித் தேர்தலில்
மொத்தம் 81.50 சதவீதம்
வாக்குப்பதிவு நடந்துள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக டிசம்பர் 27, 2019ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக திங்கள்கிழமை (டிச. 30, 2019) வாக்குப்பதிவு நடந்தது.

 

சேலம் மாவட்டத்தைப்
பொருத்தவரை, மொத்தம்
20 ஊராட்சி ஒன்றியங்கள்
உள்ளன. இவற்றில்,
முதல்கட்டமாக 12 ஊராட்சி
ஒன்றியங்களுக்கு உட்பட்ட
உள்ளாட்சி அமைப்புகளுக்கு
கடந்த 27ம் தேதி தேர்தல்
நடந்தது. அதில், 81.68 சதவீதம்
பேர் வாக்களித்து இருந்தனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில்
எஞ்சியுள்ள ஆத்தூர்,
அயோத்தியாப்பட்டணம்,
கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி,
பெத்தநாயக்கன்பாளையம், சேலம்,
தலைவாசல், வாழப்பாடி ஆகிய
எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு
உள்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு
கடந்த டிசம்பர் 30, 2019ம் தேதி
(திங்கள் கிழமை) தேர்தல் நடந்தது.

 

மேற்சொன்ன, எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் 329985 ஆண் வாக்காளர்கள், 338850 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 668852 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 1173 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 2005 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவற்றில், மேற்சொன்ன நான்கு பதவிகளிலும் மொத்தம் 251 பேர் போட்டியின்றி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். இதையடுத்து, 1754 பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. மொத்தம் 5923 வேட்பாளர்கள் இன்று தேர்தல் களத்தைச் சந்தித்தனர்.

 

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. ஐம்பதுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மதியம் 1 மணியளவில், 60 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு நடந்து முடிந்திருந்தது. சேலம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடந்த மேற்சொன்ன எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் 80.92 சதவீதம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

 

இத்தேர்தலில்,
மொத்த வாக்காளர்களில்
264076 ஆண்கள், 277148 பெண்கள்,
மூன்றாம் பாலினத்தவர் 3 பேர்
என மொத்தம் 541227 வாக்காளர்கள்
வாக்களித்துள்ளனர். அதாவது,
ஆண்களைக் காட்டிலும்
11072 பெண்கள் கூடுதலாக
வாக்களித்துள்ளனர்.

 

இரண்டாம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு விகிதம்:

 

ஆத்தூர் – 77.87%
அயோத்தியாப்பட்டணம் – 83.75%
கெங்கவல்லி – 74.06%
பெத்தநாயக்கன்பாளையம் – 80.04%
பனமரத்துப்பட்டி – 83.69%
சேலம் – 83.03%
தலைவாசல் – 78.53%
வாழப்பாடி – 84.14%

 

முதல்கட்ட தேர்தல் நடந்த 12 ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் (சதவீதத்தில்):

 

இடைப்பாடி – 83.10
காடையாம்பட்டி – 78.44
கொளத்தூர் – 73.07
கொங்கணாபுரம் – 85.04
மகுடஞ்சாவடி – 86.12
மேச்சேரி – 80.45
நங்கவள்ளி – 82.55
ஓமலூர் – 83.13
சங்ககிரி – 78.54
தாரமங்கலம் – 86.73
வீரபாண்டி – 84.54
ஏற்காடு – 81.34

ஆக, சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் சராசரியாக 81.50 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராமன் தெரிவித்துள்ளார். இம்மாவட்டத்தில் அதிகபட்சமாக தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 86.73 சதவீத வாக்குகளும், மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் 86.12 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. மிகக் குறைந்தபட்சமாக, கொளத்தூர் ஒன்றியத்தில் 73.07 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 

இரண்டாம் கட்டத் தேர்தலில் 9500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குப்பதிவு பணிகள் அனைத்தும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்தபின், வாக்குப்பெட்டிகளுக்கு அரக்கு சீல் வைத்து பூட்டப்பட்டது. வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதோடு, வெப் கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

 

– பேனாக்காரன்